Published:Updated:

ஜப்பான் அணு உலையின் கதிரியக்கம் கலிபோர்னியா ஒயினில் கலந்த கதை..!

ஃபுகுஷிமா அணு விபத்துக்குப் பிறகு கதிரியக்கம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் வெளியேற்றியது ஜப்பான் அரசு.

ஜப்பான் அணு உலையின் கதிரியக்கம் கலிபோர்னியா ஒயினில் கலந்த கதை..!
ஜப்பான் அணு உலையின் கதிரியக்கம் கலிபோர்னியா ஒயினில் கலந்த கதை..!

1945 ம் ஆண்டின் ஆகஸ்ட் 6, 9 ஆகிய தேதிகளையும், 2011 ம் ஆண்டு மார்ச் 11 ம் தேதியையும் ஜப்பானியர்கள் மறக்க மாட்டார்கள். அந்த மூன்று தினங்களில் நிகழ்ந்தவை அனைத்தும் மறக்க முடியாத துயரத்தை அவர்களுக்குக் கொடுத்தன. 1945 ம் ஆண்டு அமெரிக்காவால் ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டதென்றால் 2011 ம் ஆண்டு இயற்கைச் சீற்றம் அணுஉலையை உருக்குலைத்து விட்டது. அதன் விளைவாக அணுக்கதிர்வீச்சு மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என யாரையும் எதையும் விட்டு வைக்கவில்லை. மார்ச் 11 ம் தேதி அன்றைய நாள் மதியம் 2.46 மணி அளவில் 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் வடகிழக்குக் கடற்கரையில் 72 கிமீ (45 மைல்) ஏற்பட்டது. நிலநடுக்கம் வந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே சுனாமி கரையைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. அதிகபட்சமாக 39 மீட்டர் உயரம் வரை எழுந்த சுனாமி அலைகள் கடற்கரை ஓரங்களில் இருந்த எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி முன்னேறியது. தொடர்ந்து அடித்த இராட்சச அலைகள் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு மின் நிலையத்தைத் (Fukushima Dai-ichi Nuclear Power Plant) தாக்கியது. அணு உலையானது கட்டுப்பாட்டை இழந்து வெடிக்க ஆரம்பித்தது. சுனாமியில் பிழைத்த மக்கள்கூட தங்கள் வசிப்பிடங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்கள். ஏழு வருடங்கள் கடந்தும் அவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியவில்லை. காற்றில் பரவிய கதிரியக்கம் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது.

ஃபுகுஷிமா அணு உலை விபத்தின் கதிரியக்கம் ஜப்பானைத் தாண்டி கொஞ்சமும் தொடர்பில்லாத அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் தயாரிக்கப்படும் ஒயினில் காணப்படுகிறது. கதிரியக்கத் தடயங்கள் குறித்து ஆய்வு செய்த பிரான்ஸ் அணுஇயற்பியல் வல்லுநர்கள் இதனை உறுதி செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் அறிவியல் ஆராய்ச்சிக்கான தேசிய மையமும்(French National Center for Scientific Research) போர்டோக்ஸ் பல்கலைக்கழகமும்(University of Bordeaux) அணு இயற்பியல் வல்லுநரான பிலிப் ஹியூபெர்ட்டுடன்(Philippe Hubert) இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டனர். 2011 ஃபுகுஷிமா பேரழிவுக்குப் பிறகு கதிரியக்க அளவையும் தாக்கத்தையும் அளவீடு செய்ய நினைத்தனர். அதன்படி முறையே 2009, 2012 ஆண்டுகளில் கலிபோர்னியாவில் தயாரிக்கப்பட்ட ஒயினை சோதனைக்குள்ளாக்கினர். இந்தச் சோதனையின் முடிவுகள் கடந்த ஜூலை 11 ம் தேதி வெளியிடப்பட்டது. அவற்றில் சில ஒயின் வழக்கத்துக்கு மாறாக இரண்டு மடங்கு கதிரியக்க அளவைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவை மனிதர்களைப் பாதிக்கும் அளவை விடக் குறைந்தவைதாம். அதனால் கவலைப்படத் தேவையில்லை என ஆய்வாளர்களே ஆறுதல் சொல்கின்றனர். 

``ஃபுகுஷிமா அணுவிபத்தில் வெளியான கதிரியக்கம்தான் இதற்குக் காரணம் என எப்படிச் சொல்ல முடியும்?" என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இயல்பாகவே எழும். இந்த மாதிரி அணு விபத்துகளோ அல்லது அணு வெடிப்போ நிகழும்போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்பான சீசியம் - 137 வெளிப்படும். உலகின் எந்த மூலையிலும் அதன் அளவை அளக்க முடியும். அதன் மூலம் கதிரியக்கம் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்பதை அறியலாம். ஒயின் பாட்டில்களைத் திறக்காமலேயே காமா கதிர்கள் மூலம் ஒயினில் இருக்கும் கதிரியக்கத்தைக் சோதனை செய்துள்ளனர். அவற்றில் 2011 ம் ஆண்டு அணு பேரழிவுக்குப் பின்பு தயாரிக்கப்பட்ட ஒயினில் சீசியம் - 137(Cesium-137) இன் அளவு அதிகரிப்பதை இன்னும் துல்லியமாகக் கண்டறிய அதனைச் சாம்பலுடன் கலந்து இன்னொரு சோதனையையும் செய்துள்ளனர் ஆய்வாளர்கள். இதன் மூலமே இதனை உறுதியாகக் கூறுகின்றனர். இதுபோன்ற சோதனை 1986 ல் சோவியத் ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்து(Chernobyl accident) நடந்தபோதும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அணு இயற்பியல் வல்லுநரான பிலிப் ஹியூபெர்ட் இந்தச் சோதனையை 20 வருடங்களாக மேம்படுத்தி வருகிறார். 

2011 ம் ஆண்டு ஃபுகுஷிமா அணு உலை விபத்தின்போது 16,000 பேர் இறந்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்த வீட்டையும் நிலத்தையும் விட்டு இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். 2500 க்கும் அதிகமான மக்கள் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையில் சேர்ந்தனர். ஃபுகுஷிமா டாய்ச்சி அணு மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி உலைகள் முற்றிலும் சேதமடைந்துதான் கதிரியக்கம் வெளியானதற்கும் விபத்துக்கும் முக்கியக் காரணம். விபத்துக்குப் பிறகு கதிரியக்கம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் வெளியேற்றியது ஜப்பான் அரசு. விபத்து நடந்து ஒரு வருடத்துக்குப் பிறகும் ஜப்பானின் கடற்கரையில் கதிரியக்கத்தின் அளவு அதிகமாகவே இருந்தது. அதனால் ஜப்பான் அரசு கடலிலிருந்து பெறப்படும் உணவுகளைத் தடை செய்தது. அந்தப் பகுதியில் இப்போதுவரை மக்கள் யாரும் குடியேறவில்லை. 

ஃபுகுஷிமா பகுதியின் கதிரியக்கமானது கடல்நீரிலிருந்து ஆவியாதல் மூலமாக மேகங்களுக்குச் சென்று அந்த மேகங்கள் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள நாபா பள்ளத்தாக்கில்(Napa Valley) மழையைப் பொழிந்துள்ளன. அவற்றின் மூலம் விளைந்த திராட்சையில் கதிரியக்கம் கூடியிருக்கும். இவைதான் ஒயினில் கதிரியக்க அளவு அதிகரிக்கக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சீசியம் -137 மாதிரியான கதிரியக்க ஐசோடோப்பு நமது உடலுக்குள் செல்வதால் கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பே கூறியுள்ளது. ஜப்பான் போன்ற வளர்ந்த நாடே எதிர்பாராத அணு உலையின் விபத்தை இன்னும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அதற்குள் அதன் விளைவு உலகின் மற்ற பகுதிகளையும் துரத்த ஆரம்பித்திருக்கிறது. இப்போது அதன் அளவு குறைவாக இருக்கலாம், தொடர்ச்சியாக இப்படியான நிகழ்வுகள் நடந்தால் இதுவும் கேள்விக்குறிதான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பேரிடர் மேலாண்மை என்பதே இன்னும் பல மடங்கு முன்னேற வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்போது கூடங்குளம் அணு உலையும் இந்தியாவின் மற்ற அணு உலைகளும் பாதுகாப்பு பற்றி அரசு வெளிப்படையாகவும் இன்னும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.