Published:Updated:

நுகரும் தன்மையை இழந்து உணவைத் தேடி அலையும் மீன்கள்... காரணம் நாம்!

மனிதனுக்கு வலிப்பு, கோமா மற்றும் மரணத்தைக் கூட ஏற்படுத்தும். அதுபோலத்தான் கடல் நீரில் நிகழும் சிறிய அமில மாற்றமாக இருந்தாலும் அது கடலின் மொத்த சூழ்நிலையை சீர்குலைக்கும்.

நுகரும் தன்மையை இழந்து  உணவைத் தேடி அலையும் மீன்கள்... காரணம் நாம்!
நுகரும் தன்மையை இழந்து உணவைத் தேடி அலையும் மீன்கள்... காரணம் நாம்!

னித நடவடிக்கைகளால் வெளியிடப்படும் கார்பன் - டை - ஆக்சைடு (CO2) உலகில் அதிக பரப்பளவு கொண்ட கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இதனால் கடல் பெரிய கார்பன் உள்வாங்கியாக செயல்படுகிறது. அவ்வாறு கடல் உள்வாங்கும்போது தண்ணீரை அமிலமாக மாற்றுகிறது. கடலில் ஏற்படும் பல சிக்கல்களில் இது முக்கியமானது. கடலில் அமிலம் அதிகமாக உருவெடுப்பதால், மீன்கள் தங்கள் நுகர்வுத் திறனை இழந்து வருவதாக புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 

மனித மூக்கைப் போல மீன்கள் நுகர்வுத் திறனை வைத்து மணத்தை அறிந்து உணவை எடுத்துக் கொள்ளும். உணவு தவிர பாதுகாப்பான வாழ்விடங்களைக் கண்டறியவும், பிற உயிரினத் தாக்குதலை தவிர்ப்பதற்காகவும் நுகர்வும் திறனைப் பயன்படுத்தி வருகிறது. கடலில் அதிகமாகயிருக்கும் அமிலத்தால் மீனின் நுகர்வுத்திறன் பாதிக்கப்படுவதால் உணவுகளை எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும். இதனால் பல மீன்கள் இறப்பைச் சந்திக்க நேரிடலாம். மீனின் தலைப்பகுதியில் கண்களுக்குப் பக்கத்தில் நுகரும் உறுப்பு (Olfaction) இருக்கும். 

இங்கிலாந்திலுள்ள, எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான டாக்டர் கோசிமா போர்டீயஸ் தனது சக ஆராய்ச்சியாளர்களுடன் , உலக அளவில் மீன்களின் நுகர்வு திறன் குறித்தான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பெருங்கடலில் வசிக்கும் மீன்களுக்கு, கடலில் அதிகமாகிவரும் கார்பன் - டை - ஆக்ஸைடு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்தனர். அதன்பின்னர், கடல்சார் அறிவியல் நிலையம் (CCMar, Faro, Portugal) மற்றும் சுற்றுச்சூழல், மீன்வளர்ப்பு மற்றும் மீன்வள அறிவியல் (Cefas) ஆகிய மையங்களின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொண்டனர். குழு மதிப்பீடு, அமிலத்தின் தாக்கம் உட்பட பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக நீரோட்டத்தில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதை உறுதி செய்தனர். தற்போது இருக்கும் நிலை தொடர்ந்தால் மீன்களுடன் சேர்ந்து பல கடல் உயிரினங்கள் அழிவுக்குள்ளாகும் என்று கணித்துள்ளனர். 

மேலும், இதற்கு 18 -ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்துறை புரட்சியே காரணம். அப்போது படிய ஆரம்பித்த கார்பன் டை ஆக்சைடு, இப்போது 43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில், கார்பன் டை ஆக்சைடு அளவானது 250 சதவிகிதம் வரை உயரும் என்றும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்கள். 

அவர்களின் சோதனையின் முடிவுகளின்படி, அமில நீரில் உள்ள மீன் வேட்டையாடும் தன்மையை எளிதில் இழக்கும். உணவுகளைத் தேடி அலையும். இந்த வகை பாதிப்படைந்த மீனானது உறையும் நிலையை அடையும். இது மிகவும் கவலை தரக்கூடிய விஷயம்தான். நுகரும் திறனுடைய உறுப்பு நேரடியாக நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். நேரடியாக நரம்,பு மண்டலத்தை ஆய்வு செய்தபோதுதான் இத்தகைய தகவல்கள் கிடைத்தன. அதேபோல மீனின் மூக்குப் பகுதியில் கார்பன் - டை - ஆக்ஸைடின் படிவுகளும், அமிலத்தன்மை கலந்த படிவுகளும் இருந்தன. அதிலிருந்து எடுத்த படிவுகள் இந்த ஆய்வின் முடிவினை உறுதி செய்தது. 

வாசனை நுகரும் திறனை இழக்கச் செய்து அமிலம் மேலும் அதிகரிப்பது மீன்களின் இனப்பெருக்கத்திலும் அதிகமான பாதிப்புகளையும் உண்டாக்கும். இது கடலிலும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். சில நேரங்களில் காலநிலை மாற்றத்தாலும், தீய சம்பவங்கள் நிகழ்ந்தாலும் கடலில் அமிலத்தன்மை அதிகமாகும். உதாரணமாக, மனிதனின் இரத்தத்தின் பி.எச் அளவு 7.35 முதல் 7.45 வரை இருக்கும். அதில் திடீரென 0.2 - 0.3 அளவு பி.எச் அளவு குறைவதாக வைத்துக் கொள்வோம். இது நடந்தால் மனிதனுக்கு வலிப்பு, கோமா மற்றும் மரணத்தைக் கூட ஏற்படுத்தும். அதுபோலத்தான் கடல் நீரில் நிகழும் சிறிய அமில மாற்றமாக இருந்தாலும் அது கடலின் மொத்த சூழ்நிலையைச் சீர்குலைக்கும். அதில் வாழும் மீன் போன்ற உயிரினங்களின் வாழ்வை நிச்சயமாகப் பாதிக்கும். இப்பாதிப்பு இனப்பெருக்க தடை, நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் மீன்களின் வளர்ச்சி ஆகியவற்றை நிச்சயமாகப் பாதிக்கும். 

கடலில் அதிகரித்துவரும் அமிலத்தன்மை காரணமாக, கார்பனேட் அயனிகள் ஒன்றோடு கலந்து விடுகின்றன. இதனால் பவளப்பாறைகள், சிப்பிகள் மற்றும் சிறிய உயிரினங்களுக்கும் தீங்கை ஏற்படுத்துகிறது. கடல் சார் அமிலம் தாக்குவதால் பவளப்பாறைகள் போன்ற உயிரினங்களில் இருக்கும் சிம்பியோடிக் ஆல்கா வெளியேறுகிறது. இதனால் உயிரினங்கள் வெண்மையாக மாறி இறப்பைச் சந்திக்க நேரிடுகிறது. ஒருவேளை, மீன்களானது இந்நூற்றாண்டின் இறுதியில் அமிலத்தின் தக்கத்தை ஏற்றுக் கொண்டு பரிணாம வளர்ச்சியை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. அதிர்ஷ்டத்தால் நடந்தால்தானே தவிர நடைமுறையில் இது சாத்தியம் இல்லை.