Published:Updated:

டைனோசர் பயன்படுத்திய நீரைதான் இன்றும் குடிக்கிறோம்! -தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 6

டைனோசர் பயன்படுத்திய நீரைதான் இன்றும் குடிக்கிறோம்! -தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 6
டைனோசர் பயன்படுத்திய நீரைதான் இன்றும் குடிக்கிறோம்! -தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 6

நீங்கள் இன்று பயன்படுத்தும் நீரின் வயது சில நாள்களோ, சில ஆண்டுகளோ அல்ல. பல மில்லியன் ஆண்டுகளுக்குமுன் டைனோசர்கள் பயன்படுத்திய நீரையேதான் இன்று நாமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். புவி ஆதியிலிருந்தே அதன் நீர் அளவைச் சமநிலையில்தான் வைத்திருக்கிறது.

பூமியிலிருக்கும் நீரில் ஆறு, ஏரி, குளங்கள், நிலத்தடி நீர் போன்ற நம்மால் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் நீர் 10,634,590 கன கிலோமீட்டர். பனிப்பாறைகள், வளி மண்டலத்தில், காற்றில், மண்ணின் ஈரப்பதத்தில் என்று மற்ற நீராதாரங்கள் உட்பட மொத்தமாக 35,029,110 கன கிலோமீட்டர். தண்ணீர் நமது பயன்பாட்டுக்குத் தகுந்தவகையில் இருந்துகொண்டேயிருக்க ஏன் உலகின் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது?

1858-ம் ஆண்டு ``துர்நாற்றத்தின் வருடமாக" லண்டன் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. அன்று தேம்ஸ் நதியில் கலக்கப்பட்ட சாக்கடைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகளால் லண்டன் நகரமே நாற்றமடித்துக்கொண்டிருந்தது. அன்றிலிருந்து உலகம் முழுக்கப் பல ஆறுகள் அழுகிக்கொண்டும் அழிந்துகொண்டுமிருக்கின்றன. உலகளவிலான இந்த மாதிரியான பிரச்னைகளால் பற்றாக்குறைகளும் தண்ணீர்க் குற்றங்களும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. இந்தக் குற்றங்கள் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் தண்ணீர் மாஃபியாக்களால் செய்யப்படுவதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அந்தச் சட்டவிரோத தண்ணீர்த் திருட்டுகளும் அதற்கான அநியாய விலைகள் குறித்தும் புரிந்துகொள்வதற்குமுன் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்ட வரலாற்றையும், அதைப் பயன்படுத்தித் தண்ணீரை வியாபாரமாக்கிய தனியார் நிறுவனங்களின் யுக்திகளையும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் மறைநீர் தத்துவத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

மறைநீர். தண்ணீர்ப் பயன்பாட்டில் அதிகம் கவனிக்கப்படாமலும், கண்டுகொள்ளாமலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோட்பாடு. வெளிப்படையாக மக்களால் பயன்படுத்தப்படும் நீரையும், அதனால் ஏற்படும் பற்றாக்குறை பற்றியும் கணக்கிடும்போது நெடுங்காலமாக இரண்டுக்கும் இடையிலான வித்தியாசங்கள் முரண்பட்டுக் கொண்டேயிருந்தது. பெரும்பான்மையான தண்ணீர் கண்ணுக்குத் தெரியாமலே களவு போய்க்கொண்டிருந்தது, போய்க்கொண்டிருக்கிறது. அப்போதுதான் லண்டனைச் சேர்ந்த ஜான் அந்தோனி ஆலன் ( John Anthony Allan) என்பவரால் ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் மறைநீர் தத்துவம் வெளிக்கொண்டுவரப்பட்டது. உண்மையில் ஜான் முயன்றதென்னவோ வளர்ந்த நாடுகள், வளரும் மற்றும் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து மேன்மேலும் நீர்வளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்குத்தான். 

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் மறைநீர் தத்துவத்தைப் பரிந்துரைத்ததற்காக அவருக்கு 2008-ம் ஆண்டில் ஸ்டாக்ஹோம் வாட்டர் பிரைஸ் ( Stockholm water prize) என்ற விருது வழங்கப்பட்டது. அவரது துருதிர்ஷ்டம் என்னவென்றால், அவர் வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளக் கண்டுபிடித்த தத்துவமே அவற்றின் போலி முகங்களைத் தோலுரித்துவிட்டது.

மறைநீர் - ``ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக அதைத் தயாரிக்கும் நிலப்பகுதியிலிருந்து பயன்படுத்தப்படும் தண்ணீர்".

உதாரணத்துக்கு நாம் குடிக்கும் ஒரு கப் காபியின் அளவு தோராயமாக 150 மில்லி லிட்டர்தான். ஆனால், அந்த ஒரு கப் காபி நமக்குக் கிடைப்பதற்கு அதற்கான காபிக் கொட்டைகளை விளைய வைப்பதிலிருந்து, அதற்குப் பிறகான செயற்பாடுகள் முடிந்து நமது கைக்கு வரும் வரை சுமார் 140 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் அவர்களின் பயன்பாட்டாலும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படவில்லை என்பதைச் சில சூழலியல் பொருளாதார அறிஞர்கள் பலகட்ட ஆய்வுகளின்மூலம் கண்டறிந்தனர். அதை அடிப்படையாக வைத்து அவர்கள் மேற்கொண்டு நடத்திய ஆய்வுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு மிகுந்த நாடுகளில் அந்நிய முதலீடுகளையும் அவர்கள் பயன்படுத்திய நீரின் அளவையும் அப்பகுதிகளின் கடந்தகால தண்ணீர் இருப்போடு சம்பந்தப்படுத்திப் பார்த்தார்கள். அதன்மூலம் மக்களின் பயன்பாட்டைவிடப் பலமடங்கு அதிகமான நீரைத் தொழிற்சாலைகள் பயன்படுத்தியிருப்பதும், அப்படிப் பயன்படுத்திய தண்ணீரால் மீதியும் மாசடைந்ததே பற்றாக்குறைக்குக் காரணமென்று தெரியவந்தது.

மறைநீர் பொருளாதாரம்:

ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் வேறொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அது ஏற்றுமதி செய்யப்படும்போது அத்தோடு அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட தண்ணீரும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு தண்ணீர் இருப்பு குறைவாக உள்ள நாடுகள் அவர்களுக்கான உணவு உற்பத்தியைத் தண்ணீர்ப் பற்றாக்குறையில்லாத நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வதன் மூலமாகத் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கலாம் என்று ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதையே வளர்ந்த நாடுகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். மறைநீர் தத்துவத்தைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் நாட்டின் நீர்வளம் தொழிற்சாலைகளாலும் அவற்றின் கழிவுகளாலும் அழியாமல் தற்காத்துக்கொண்டனர்.

உலகப் பொருளாதாரத்தில் தவிர்க்கமுடியாதது தண்ணீர். அதன் பயன்பாடும் மிக நெருக்கடியானது. காரணம் தற்போதைய தொழிற்சாலைமயச்சூழலில் அது அனைத்துப் பகுதிகளிலும் ஒரே அளவில் கிடைப்பதில்லை. எண்ணெய் வளத்தைப்போல் தண்ணீரைக் குழாய்களிலோ டிரக்குகளிலோ அல்லது ரயில்களிலோ ஏற்றுமதி இறக்குமதி செய்யமுடியாது. குறுகிய தூரங்களுக்கு அவற்றைச் செய்துகொண்டிருந்தாலும் உலகளவில் அது சாத்தியமில்லை. அதனால் அதை மறைநீராக, சரக்குகளாக ஏற்றுமதி செய்கிறார்கள். அப்படி ஏற்றுமதி செய்யப்படும் மறைநீருக்கு உலகளாவிய சந்தையோ துல்லியமான மதிப்போ கிடையாது. அப்படி வரையறுப்பதும் மிகவும் சிக்கலானது.

ஒரு நாளைக்கு 82 கிராம் கொழுப்புச்சத்து, 81 கிராம் புரதச்சத்து மனித உடலுக்கு வேண்டும். அதைப்போல் ஒரு மனிதருக்குச் சராசரியாக 2 லிட்டர் பெட்ரோல்/டீசல் வேண்டும். அதைப்போலவே அவர் உயிர்வாழ்வதற்கெனக் குறிப்பிட்ட அளவு தண்ணீரும் தேவைப்படுகிறது. அதன் அளவு குறைந்தபட்சம் 50 முதல் 100 லிட்டர் வரை தேவைப்படுகிறது. அந்த அடிப்படைத் தேவை அனைவருக்கும் சமமாகக் கிடைக்காமல் போவதற்கு மறைநீர் ஏற்றுமதி ஒரு முக்கியக் காரணியாக விளங்குகிறது. ஒரு வளர்ந்த நாடு தனது முதலீடுகள் மூலமாகப் பலருக்கு வேலைவாய்ப்பு உட்பட இன்னபிற வளர்ச்சிகளைத் தருவதாகக் கூறும்போது அவர்களுக்கு இவ்வளவு உற்பத்தியை அதற்குக் கைம்மாறாக உதவிகளை வாங்கிக்கொள்ளும் நாடு ஏற்றுமதி செய்யவேண்டும். அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படும் தண்ணீரின்றிச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தியைச் சாத்தியமாக்கி ஏற்றுமதி செய்தாக வேண்டும். அதனால், நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி இலக்கை அடைந்திடத் தேவையான தண்ணீரை தொழிற்சாலைகளுக்குத் திருப்பிவிடுகிறார்கள். அதன்மூலம் ``உதவி" வழங்கிய வளர்ந்த நாடுகள் தங்களுக்குத் தேவையான உற்பத்தியைத் தங்கள் தண்ணீரைப் பயன்படுத்தாமலே பெற்றுக்கொள்கிறார்கள். தங்கள் நாட்டு மக்கள் எந்த மாசுபாட்டையும் அனுபவிக்க வேண்டியதில்லை. எந்தப் பற்றாக்குறைக்கும் ஆளாக வேண்டியதில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்களது அரசாங்கங்களின் சிபாரிசுகள் மூலமாகப் பெருநிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகள் அவை அத்தனையையும் அனுபவித்துக்கொள்ளும்.

மறைநீர் இறக்குமதியில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் அதிகமான பங்கு வகித்துவருகின்றன. அதில் 40 சதவிகிதம் ஐரோப்பிய நாடுகளுடையது. தங்கள் நிலப்பகுதியிலிருக்கும் நீராதாரங்களையும் அவற்றின்மூலம் கிடைக்கும் நீர் மாசுபடாமல் பாதுகாப்பதையும் முதன்மையான காரியமாகக் கொண்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். உலகளவில் அதிகமான மறைநீர் ஏற்றுமதியைச் செய்துவரும் நாடுகளில் முக்கியமானவை கனடா, அர்ஜென்டினா, இந்தியா, ஆஸ்திரேலியா, கௌதமாலா, பிரேசில், சீனா, எகிப்து ஆகியவை. இவற்றில் கனடாவைத் தவிர மற்ற அனைத்திலுமே சமீப காலங்களில் அதிகமான மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மறைநீரை இறக்குமதி செய்யும் நாடுகள் பொருளாதார ஸ்திரத்தன்மை பெறும் அதேவேளையில், அதை அவர்களுக்கு ஏற்றுமதி செய்தாக வேண்டிய கட்டாயத்திலுள்ள நாடுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகின்றது.

2017-ம் ஆண்டு சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கடிதங்கள் ( Environmental research letters) என்ற ஆய்வின் 12 வது பாகத்தில் மறைநீரின் பொருளாதாரப் பார்வை குறித்துப் பேசப்பட்டிருக்கும். அதில் மறைநீரை ஏற்றுமதி செய்வதன்மூலம் அந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகமாகியிருப்பதாகப் பேசியிருப்பார்கள். அத்தோடு மறைநீர்ப் பொருளாதாரத்தால் பயனடைவது யாரென்ற கேள்விக்கு ஏற்றுமதி செய்பவர்களே என்றும் கூறியிருப்பார்கள். ஆனால், மக்களின் அடிப்படைத் தண்ணீர்ப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் தண்ணீரைக் கொடுக்காமல் அது மறைநீராக ஏற்றுமதி செய்யப்படுவதால் அங்குள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருகுவதையும் அதனால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியையும் பொருளாதாரத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த மக்களைச் சென்றடைவதேயில்லை. அதனால், மறைநீர் உற்பத்தியால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் அவர்களே.

ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் மொத்த ரோஜாப் பூக்களில் 35சதவிகிதம் கென்யாவிலிருந்து வருகிறது. ``ஐரோப்பிய யூனியனின் பூந்தோட்டம்" என்று அழைக்கப்படுவது கென்யா. நைரோபியில் நைவாஷா ( Lake Naivasha) ஏரியைச் சுற்றி 127 ரோஜாத் தோட்டங்கள் 90 கிலோமீட்டர்களுக்கு அமைந்திருக்கின்றன. இதைப்போல் அந்நாட்டில் ஆயிரக்கணக்கான ரோஜாத் தோட்டங்கள் அமைந்திருக்கின்றன. இவற்றில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கென்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25.3 சதவிகிதம் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பூக்களால் மட்டுமே கிடைக்கின்றது. வருடத்திற்கு சுமார் 125,000 டன் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன் மதிப்பு 50.7 கோடி. இது உண்மையில் சிறந்த முன்னேற்றம்தான்.

ஒரு ரோஜாவை உற்பத்திசெய்ய 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நைவாஷா மற்றும் எலிமெண்டைடா ( Lake Elementaita) ஏரிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதால் அதைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு ரேஷனில் தண்ணீரை அளந்து வழங்கும் முடிவுக்கு வந்தார்கள். ஆனால், அதைச் சுற்றியிருந்த ரோஜாத் தோட்டங்கள் தொடர்ச்சியாக அவற்றுக்குத் தேவையான தண்ணீரை ஏரிகளிலிருந்து பயன்படுத்திக் கொண்டுதானிருந்தன. ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த வேண்டியது முக்கியமானதுதான். அதற்காக அவர்கள் கொடுத்த விலை?

- தொடரும்.