Published:Updated:

``ஆப்பிரிக்கா நாடுகள் உண்மையிலே வறுமையானவையா?” - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 7

ஆப்பிரிக்காவிடம் இல்லாத வளங்களே இல்லை. உதாரணத்துக்குத் தென் ஆப்பிரிக்காவின் மொத்த வளங்களின் மதிப்பு 2.5 டிரில்லியன் டாலர். காங்கோ குடியரசின் மொத்த வளங்களின் மதிப்பு

``ஆப்பிரிக்கா நாடுகள் உண்மையிலே வறுமையானவையா?” - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 7
``ஆப்பிரிக்கா நாடுகள் உண்மையிலே வறுமையானவையா?” - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 7

``தனியார்மயமாக்குவதை ஆப்பிரிக்க அரசுகள் தாமதமாக்குகிறார்கள். ஆப்பிரிக்கா இதில் விருப்பமில்லாமலே செயல்படுகிறது. ஆனால், அவர்களின் வறுமையைப் போக்குவதற்கு தனியார்மயம் மட்டுமே ஒரே தீர்வு. துணை சஹாரா நாடுகளில் விரைவாகவும் உறுதியாகவும் இதைச் செய்தாக வேண்டும். அதில் உள்நாட்டு முதலீடுகளுக்குச் சமமாக வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். அதுவே அவர்களை ஏழ்மையிலிருந்து காப்பாற்றும்."

உலகளாவிய வளர்ச்சி மையம் (Center for Global development) 2003-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் தனியார்மயம் குறித்த திட்டமொன்றைத் தயாரிக்க ஒரு குழுவை நியமித்தது. அதன் துணை இயக்குநரான ஜான் நெல்லீஸ் (John Nellis) என்பவரது அறிக்கையின் ஒரு சாராம்சம்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டது, மறைநீர் கொள்ளை அந்நாட்டின் தண்ணீர் பிரச்னை குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் மொத்த ஆப்பிரிக்க கண்டத்தின் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் அதன் வளங்கள் எப்படி அயல்நாடுகளுக்குக் கடத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், பத்திரிகை செய்திகள், பொதுநலத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் ஓயாமல் ஒன்றைச் செய்துவருகின்றன. அதுதான் ஆப்பிரிக்காவை ஏழைக் கண்டமாகக் காட்டுவது. இன்று உலகளவில் ஆப்பிரிக்கா என்று கேட்டாலே பெரும்பாலானவர்கள் மனதில் வறண்ட நிலங்களும் வறுமையில் வாடும் மக்களுமே தோன்றுவார்கள். அப்படிச் சிந்திப்பது நமது தவறல்ல. அவ்வாறு தோன்றும் வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆம், ஆப்பிரிக்கா ஏழைதான். மத்திய கால வரலாறு வரையிலுமே உலகின் பாதி செல்வத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த ஆப்பிரிக்கா எப்படி இவ்வளவு ஏழையானது? உண்மையில் ஆப்பிரிக்கா ஏழையல்ல. அவர்கள் ஏழைகளாக்கப்பட்டுள்ளார்கள், மேலும் ஆக்கப்படுகிறார்கள். வளர்ந்த நாடுகள் அவற்றின் வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் அஃபுஆ ஹிர்ஸ்ச் (Afua Hirsch) என்ற எழுத்தாளர் தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்,

"தற்போது ஆப்பிரிக்காவுக்குத் தேவை உதவியல்ல, டிரம்ப். ஆம், தனது மக்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ஒரு ஆப்பிரிக்க டிரம்ப்".

அந்த அளவுக்கு ஆப்பிரிக்க அரசுகள் வெளிநாட்டு நிறுவனங்களின் லாபத்துக்குப் பணிபுரிந்துகொண்டிருக்கிறது.

ஆப்பிரிக்காவிடம் இல்லாத வளங்களே இல்லை. உதாரணத்துக்கு தென் ஆப்பிரிக்காவின் மொத்த வளங்களின் மதிப்பு 2.5 டிரில்லியன் டாலர். காங்கோ குடியரசின் மொத்த வளங்களின் மதிப்பு 24 டிரில்லியன் டாலர். இந்த வளங்கள் அவர்களுக்குப் பயன்படுவதைவிட பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பயன்படுவதே இந்த நாடுகள் பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்திக்கக் காரணம். அங்கிருக்கும் அரசுகளிடம் அவர்களின் வளங்களைப் பயன்படுத்தப் போதுமான தொழில்நுட்ப வசதிகளோ பொருளாதார வசதியோ இல்லை. மேற்குலகம் அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டது. 

பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் ஆப்பிரிக்க மக்கள் சாமர்த்தியமாகக் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். இந்தக் கொள்ளையில் பலனடைவது பன்னாட்டு நிறுவனங்களும், சில ஆப்பிரிக்க முதலாளிகளுமே. ஆப்பிரிக்காவில் தனியார் முதலீடுகள் அதிகமாவதால் அதிக மக்களுக்கு வேலை கிடைக்கும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேன்மையடையும் என்பது போன்ற எண்ணங்கள் உலக மக்களிடம் விதைக்கப்பட்டன. அவர்களுக்கு உதவ வரும் `தயாள குணம்கொண்ட' தனியார் நிறுவனங்களுக்கு ஆப்பிரிக்க நாடுகள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று மட்டுமே. அவர்கள் அங்கு தொழில் தொடங்குவதை எளிமையாக்க வேண்டும். அவர்களுக்கு வரி விலக்கு, வரி குறைப்பு போன்ற வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். 2014-ம் ஆண்டு மட்டும் 500 பில்லியன் டாலர்களுக்கு இதுபோன்ற காரணங்களால் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு உலக நீதி அமைப்பு (Global Justice Now), ஹெல்த் பாவர்ட்டி ஆக்‌ஷன்  (Health poverty action) போன்ற பத்து உலகளாவிய அமைப்புகள் சேர்ந்து ஆப்பிரிக்காவின் பொருளாதாரம் குறித்த ஆய்வொன்றை நடத்தினார்கள். ஆப்பிரிக்க கண்டத்துக்கு கொடுக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன், வெளிநாடுகளில் வேலைசெய்யும் ஆப்பிரிக்க மக்கள் அனுப்பியது, இவர்கள் வழங்கிய கடன்களுக்குக் கிடைத்த வட்டி, உதவித் தொகை போன்றவற்றால் கிடைத்த வருவாய் 162 பில்லியன் டாலர்கள். ஆனால், வாங்கிய கடனுக்கான வட்டி, வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கிருந்து எடுத்துச்சென்ற லாபம், வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாகச் செல்லும் பணம், சட்டவிரோத மீன்பிடித்தல், சட்டவிரோத விலங்கு வேட்டை மற்றும் கடத்தல், சூழலியல் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்தல் போன்றவற்றால் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு $202.9 பில்லியன் டாலர்கள் சென்றுள்ளது. ஆப்பிரிக்காவுக்கு உதவித் தொகையாக வந்தது வெறும் 19 பில்லியன் டாலர்கள். ஆனால், வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்புழக்கங்களின் மூலமாக வெளிநாடுகளுக்குச் சென்றது 68 பில்லியன் டாலர்கள். வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் விலங்குகள் மற்றும் மீன்களால் மட்டும் வருடத்துக்கு $29 பில்லியன் நஷ்டம் ஏற்படுகின்றது. கடந்த ஆண்டு ஆப்பிரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை மட்டும் 4100 கோடி. 2015-ம் ஆண்டு ஆப்பிரிக்கா வெளிநாடுகளில் வாங்கிய கடன் $32 பில்லியன். அதற்கு அவர்கள் கட்டிய வட்டி $18 பில்லியன். கடனின் அசல் தொகையில் பாதிக்கும் மேலான தொகையை வட்டியாக மட்டுமே செலுத்தியுள்ளார்கள். இதில் ஏழை நாடுகள் மீதான கரிசனமும், அவர்களுக்கு வழங்கும் உதவியும் தெரியவில்லை. அவர்களின் நிலைமையைப் பயன்படுத்தி முடிந்தவரை லாபம் பார்ப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

ஆப்பிரிக்காவின் ஏழை நாடுகள் முன்னேறிக் கொண்டுதானிருக்கின்றன. ஏனென்றால், அவற்றில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களால் அதன் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. பாதிக்கும் மேலான மக்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்க, சிலர் இதன்மூலம் லாபமடைந்து கொண்டிருக்கின்றனர். வெறும் 165,000 ஆப்பிரிக்கர்களிடம் மட்டும் 86000 கோடி டாலர்கள் குவிந்துள்ளது. இதன்மூலம் அங்கு வாழும் ஏழை மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருப்பது தெரிகிறது. தனியார்மயமாக்குவதால் ஆப்பிரிக்க ஏழை மக்களின் வாழ்க்கைநிலை முன்னேறியிருக்க வேண்டும். ஆனால், 2012-ம் ஆண்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே 330 மில்லியன் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அந்த எண்ணிக்கை 2017-ம் ஆண்டின் கணக்குப்படி 767 மில்லியன்களாக உயர்ந்துள்ளது. இன்னமும் அவர்கள் தங்களுக்கான சுகாதாரமான வாழிடம், தண்ணீர் போன்றவை கிடைக்காமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தனியார் முதலீடுகளின் மூலமாக ஆப்பிரிக்காவுக்கு வருமானம் வந்துகொண்டிருப்பது உண்மைதான். அவர்களால் அதைவிட அதிகப் பணம் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. அதுவும் உண்மைதான். ஆப்பிரிக்கர்களின் ஏழ்மையையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் போக்குவதே அங்கு 'உதவ'ச் செல்லும் மேலை நாடுகளின் நோக்கமாக இருந்தால் அவர்களிடமிருந்து நழுவிப் போகும் செல்வத்தை அவர்களிடமே திருப்பியனுப்ப வேண்டும். கடன்களுக்கு விதிக்கும் அநியாய வட்டி, தாங்கள் பெறும் வரி விலக்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வரி ஏய்ப்பு செய்வது, ஊழலை ஊக்குவிப்பது ஆகிய செயல்களை நிறுத்த வேண்டும்.

``ஆப்பிரிக்காவைக் காப்பாற்றவே வளர்ந்த நாடுகள் உதவி செய்கின்றன" என்பதெல்லாம் திசை திருப்புவதும், சுரண்டல்களை மறைப்பதுமே தவிர வேறில்லை. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் மூன்றாம் உலக நாடுகளில் 1980-ம் ஆண்டு ஏற்பட்ட கடன் நெருக்கடியைவிட மோசமான நெருக்கடி ஏற்படும்; வரலாறு மீண்டும் திரும்பும். இந்த முறை அதைவிடக் கடுமையான விளைவுகளைச் சுமந்துகொண்டு.