Published:Updated:

``5,500 சர்ச்களில் இனி இயற்கைதான் சக்தி!" - மாறும் இங்கிலாந்து தேவாலயங்கள்

இங்கிலாந்து 2050-ம் ஆண்டு ஒரு பசுமையான நிலமாக மாறுவதுடன், இங்கிலாந்தின் எரிபொருள் உமிழ்வுகளை பூஜ்ஜியத்திற்குக் குறைப்பதற்கான இலக்கை அமைக்க அரசாங்கம் பல புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

``5,500 சர்ச்களில் இனி இயற்கைதான் சக்தி!" - மாறும் இங்கிலாந்து தேவாலயங்கள்
``5,500 சர்ச்களில் இனி இயற்கைதான் சக்தி!" - மாறும் இங்கிலாந்து தேவாலயங்கள்

லகமெங்கும் காலநிலை மாற்றம் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் காலநிலைக்கான மாற்றங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் 5,500-க்கும் மேற்பட்ட சர்ச்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தி மின்சாரம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மிகவும் பிரபலமான தலைமை தேவாலயங்களும் அடங்கும். இத்திட்டம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்து வழிபாட்டுத் தேவாலயங்களான கத்தோலிக், பாப்டிஸ்ட், மெதோடிஸ்ட், குவாக்கர், பிராட்டஸ்டன்ட் ஆகியவை கட்டாயமாகப் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கு 100 சதவிகிதம் கட்டாயம் மாற வேண்டும் என தேவாலயங்களின் பொறுப்பாளர்கள் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். 

சாலிஸ்பரி (Salisbury), சவுத்வெர்க் (Southwark), ஸ்ட் அல்பான்ஸ் (St Albans), லிவர்பூல் (Liverpool), கோவென்ட்ரி (Coventry) மற்றும் யார்க் (York ) உள்ளிட்ட பதினைந்து ஆங்கிலிக்கன் (Anglican) தேவாலயங்கள் முன்னரே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுக்குக் கையெழுத்திட்டு விட்டன. விரைவில் அந்த தேவாலயங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வள மையம் ஒன்றும் அமையவிருக்கிறது. 

இதற்கெல்லாம் தேவாலய தலைவர்கள் முன்வைக்கும் ஒரே காரணம், `காலநிலை மாற்றம் நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதை மாற்றுவது நமது கைகளில்தான் உள்ளது. அதனால் அனைவரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்துக்கு மாறுவது அவசியமான ஒன்று. இந்த நிலை தொடர்ந்தால் பூமி மோசமான விளைவுகளைச் சந்திக்கும்' என்பதுதான். 

ஒவ்வொரு தேவாலயமும் வருடத்துக்குப் பல ஆயிரம் யூரோக்களை மின்சாரத்துக்குக் கட்டணமாகச் செலுத்தி வந்தது. மொத்தமாக அனைத்து தேவாலயங்களுக்கும் சேர்த்து 5 மில்லியன் யூரோக்களை செலவிட்டு வந்தது. மிகப்பெரிய தேவாலயங்கள் முதல் சிறிய தேவாலயங்கள் வரை சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த முறை பாரீசில் நடைபெற்ற உலக மாநாட்டில் கையெழுத்திட்டிருக்கிறது, இங்கிலாந்திலுள்ள தலைமை தேவாலயக் குழு. அதன்படி, பாரீசில் உள்ள அனைத்துத் தேவாலயங்களும் இணைந்து குறைந்த விலையில் மரபு சாரா ஆற்றல் மையங்களை அமைக்கலாம். இதனை அமைக்கக் குறைவான பணம் மட்டுமே செலவாகும். முன்னர் மாதம்தோறும் செலுத்திய கட்டணத்தை விட, மரபு சாரா ஆற்றல் வளங்களில் கிடைக்கும் மின்சாரத்துக்குச் செலவாகும் பணம் குறைந்த அளவில் இருக்கும். 

இங்கிலாந்தில் உள்ள சாலிஸ்பரியைச் சேர்ந்த தலைமை பிஷப், நிக்கோலஸ் ஹோல்டம் பேசும்போது, ``சுற்றுச்சூழலில் நேரும் தாக்கத்தைக் குறைக்க இப்போது முடிவெடுத்திருப்பது சரியானதுதான். அவை சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் தூய்மையான ஆற்றலைப் பெறுவதற்கும் பாலமாக இருக்கின்றன. முக்கியமாக இது தீங்கு விளைவிக்கும் கார்பன் உமிழ்வைக் குறைக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் இது மிகவும் அவசியமான ஒன்று. காலநிலை மாற்றம் ஏழைகளைத்தான் முதலில் தாக்கி, அவர்களுக்கு மோசமான பாதிப்பை உண்டாக்கும். புதைபடிவ எரிபொருள் ஆற்றல் மூலங்களிலிருந்து மரபு சாரா ஆற்றல் வளங்களுக்கு மாறுவது சிறிய விஷயத்தைப் போலத்தான் தோன்றும். ஆனால், பல தேவாலயங்கள் இவ்விஷயத்தில் ஒன்றாக இணைந்தால் அது ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருக்கும்" என்கிறார்.

கோவென்ட்ரியின் முன்னாள் பேராயர் மற்றும் கிரிஸ்டியன் எய்டின் தலைமை குருவான ரோவன் வில்லியம்ஸ், ``காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் பாரிஸ் உலக மாநாட்டின் கோட்பாடுகளுக்கு உடன்படுகிறோம். அதன்படி, இதுவரைக்கும் புதை படிவ எரிபொருள் நிறுவனங்களில் இருக்கும் தேவாலயப் பங்குகளை அந்தந்த நிறுவனங்களுக்கே விற்பனை செய்து விடுகிறோம். மேலும் உலகெங்கும் வறட்சி, வெள்ளம் மற்றும் மோசமான வானிலை காரணமாக மக்கள் அனைவரும் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர்" என்று அவர் கூறினார். 

இங்கிலாந்து 2050-ம் ஆண்டு ஒரு பசுமையான நிலமாக மாறுவதுடன், இங்கிலாந்தின் எரிபொருள் உமிழ்வுகளை பூஜ்ஜியத்திற்குக் குறைப்பதற்கான இலக்கை அமைக்க அரசாங்கம் பல புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

நாம்?