Published:Updated:

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கடவுள் தேசம்! – முழு ரிப்போர்ட்

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கடவுள் தேசம்! – முழு ரிப்போர்ட்
News
வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கடவுள் தேசம்! – முழு ரிப்போர்ட்

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கடவுள் தேசம்.! – கம்ப்ளீட் ரிப்போர்ட்.

ங்கு பார்த்தாலும் தண்ணீர், சாலையில் சாய்ந்த மரங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் எனக் கடவுள் தேசமே மழையால் சூறையாடப்பட்டிருக்கிறது. வட கேரளாவில் பெரும்பாலான பகுதிகள் தொடர் மழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன.

நிலச்சரிவின் பிடியில் இடுக்கி மாவட்டம்:

கொச்சின், பாலக்காடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால், பொதுமக்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். உணவு, குடி தண்ணீர், மின்சாரமின்றி தவித்துவருகின்றனர். இது ஒருபுறம் என்றால், தமிழகக் கேரள எல்லையில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம், தொடர் மழையால் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. அடிமாலி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மூணாறு – உடுமலைப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் மரங்கள், பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதேபோல் பெய்த கனமழையிலும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோழிக்கோடு மாவட்டமும் நிலச்சரிவிலிருந்து தப்பவில்லை. அதன் ஊரகப் பகுதிகளில், நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வயநாட்டுக்கு வரும் விமானப்படை ஹெலிகாப்டர்:

இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டது. இதனால், செருதாணி, பெரியாறு ஆறுகளில் கடுமையான வெள்ளம் பாய்ந்துகொண்டிருக்கிறது. கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தண்ணீர் புகுந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. கொச்சினுக்கு அருகில் இருக்கும் ஆலுவா என்ற நகரத்துக்குள் பாயும் பெரியாறில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால், ஆலுவா நகரமே தற்போது தண்ணீரில் மிதந்துவருகிறது. இதனால் வெளி உலகத் தொடர்பிலிருந்து தனித்துவிடப்பட்டிருக்கிறது ஆலுவா நகரம். வீட்டு மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர் மக்கள். இதே போன்றதொரு நிலைதான் வயநாடு மாவட்டத்துக்கும். தவிக்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டிருப்பதாக அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளையும் கேட்டிருக்கிறது கேரள அரசு. இதையடுத்து கேரளா விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், நேராக வயநாடு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்றும் வயநாடு விரைந்திருக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் மற்றொரு குழுவினர், இடுக்கி மாவட்டத்துக்கு விரைந்துள்ளனர்.

இதுவரை இல்லாத மழை பொழிவு:

கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8 ம் தேதி வரை மொத்த கேரள மாநிலத்திலும் பெய்த கனமழை சராசரி அளவைவிட 15 விழுக்காடு அதிகம் என்றும், இடுக்கி மாவட்டம் சராசரியை விட 41 விழுக்காடு அதிக மழைப் பொழிவைச் சந்தித்திருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகிறார்கள். இதனால் கேரள அணைகள் வேகமாக உயர்ந்தன. கேரளாவில், மொத்தம் 22 அணைகள் உள்ளன. இவற்றில், பெரும்பான்மையான அணைகள் வட கேரளாவிலேயே உள்ளன. மொத்தக் கொள்ளளவையும் ஒரே வாரத்தில் எட்டிவிட்டதால், அணைகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அனைத்து அணைகளின்‌ ஷட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையிலுள்ள ஊர்கள், அணை திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் மேலும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டன என்பதே கள நிலவரம்.

கவலையடைந்த முதல்வர்:

இன்று காலை அவசரச் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், ``எதிர்பாராத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இப்படி நடக்கும் என நான் நினைக்கவில்லை” என்று பேசியது நாடு முழுவதும் கவனம் பெற்றது. 

உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசியமான அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு, தமிழகத்தின் சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.