Published:Updated:

திருடனின் கையிலேயே கென்யாவின் கொத்துச்சாவி! - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 8

இரவின் இருள் மறைவதற்கு முன்பே உரக்கத்தைத் துறந்து தினமும் தங்கள் தார்பாய்களும், பழைய இரும்புத் தகரங்களும் மூடிய வீடு போன்ற குடியிருப்புகளைவிட்டு வெளியேறியாக வேண்டும்.

திருடனின் கையிலேயே கென்யாவின் கொத்துச்சாவி! - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 8
திருடனின் கையிலேயே கென்யாவின் கொத்துச்சாவி! - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 8

இலவசமாகவோ அல்லது குறைந்தபட்சம் நேர்மையான விலையிலோ நீங்கள் தண்ணீரை விநியோகிக்க ஆசைப்படுகிறீர்களா?

அதை ஆசையாகவே வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், இங்கு அதைச் செய்தால் உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமில்லை. சராசரி விலையைவிட 25 மடங்கு அதிகமான விலைக்குத்தான் விற்பார்கள். ஏனென்றால் அதிகாரம் அவர்களின் கையில். அவர்களை மீறி ஒன்றும் செய்யமுடியாது. இதைச் சரிசெய்யவேண்டுமென்று பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முயற்சி செய்தன. இலவச விநியோகக் குழாய்களை அமைத்து மக்களுக்குக் குடிநீர் வழங்கினர். அந்த முயற்சி நீடிக்கவில்லை. அவர்கள் அந்த இணைப்புகளை உடைத்துவிட்டு, அதைச் செய்தவர்களை மிரட்டி அனுப்பிவிட்டார்கள். மீண்டும் இதைச் செய்தால் அவர்கள் இது போல் மிரட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

கிபேரா (Kibera). கென்யாவின் நைரோபியிலிருக்கும் நகர்ப்புறக் குடிசைப் பகுதி. சுமார் இரண்டு லட்சம் மக்கள் அங்கு வாழ்கிறார்கள். அனைவருமே சட்டவிரோதமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். ஒதுங்க இடமில்லாமல் தவிக்கும் நைரோபிவாசிகளுக்கு நிழல் கொடுக்கும் இடம் கிபேரா. இடம் கொடுத்த அதனால் அவர்களுக்குத் தேவையான குடிநீரைக் கொடுக்க முடியவில்லை. மனிதர்கள் வாழவே தகுதியில்லாத மோசமான சூழலில்தான் கிபேராவாசிகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்கிருப்பவர்களின் ஒரு நாளைய வருமானம் அதிகபட்சம் 1.25 டாலர்கள். அதிலும் மூன்றிலொரு பங்கை தினசரி தண்ணீர்த் தேவையைப் பூர்த்திசெய்யவே செலவழிக்கிறார்கள்.

இரவின் இருள் மறைவதற்கு முன்பே உறக்கத்தைத் துறந்து தினமும் தங்கள் தார்ப்பாய்களும், பழைய இரும்புத் தகரங்களும் மூடிய வீடு போன்ற குடியிருப்புகளைவிட்டு வெளியேறியாக வேண்டும். மழை பெய்தாலும் வரிசையைவிட்டு விலகக்கூடாது. விலகினால் தண்ணீர் கிடைக்காது. அந்தப் பகுதி முழுவதும் நிறைந்திருக்கும் கழிவுகள் நிறைந்த சேற்று நிலத்தை மிதித்தவாறு வரிசையில் தண்ணீருக்காகக் காத்திருக்கவேண்டும். அதை மிதிப்பதால் என்னென்ன நோய்கள் தாக்குமென்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. தெரிந்துகொண்டால் அந்தச் சகதிகளுக்குள் வாழமுடியாது. அதைவிட்டுச் சென்றால் வாழ வேறு இடமும் கிடையாது.

கழிவுகளால் பசையேறிய அந்த மண்ணில் நின்று அந்தப் பெண்கள் வாங்கிவருவது 200 லிட்டர் தண்ணீர். அதை வைத்துதான் அவர்களின் குடும்பம் குளிப்பதிலிருந்து சமைப்பது வரையான அன்றாட வேலைகளைச் செய்யவேண்டும்.

"தண்ணீர்தான் வாழ்க்கை. அதில்லாமல் உங்களால் வாழமுடியாது"

கிபேராவைப் போன்ற சூழ்நிலையில் வசிக்கும் உலகின் 86.3 கோடி மக்களைக் கேட்டால் அவர்கள் இதைத்தான் சொல்லுவார்கள். நைரோபியின் மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு மட்டுமே மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் கிடைக்கிறது. மீதியிருப்பவர்களுக்குக் கிபேராவின் கதைதான். 

நைரோபியின் தண்ணீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை வாரியக் கணக்குப்படி அங்கு ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் தேவைப்படும் தண்ணீரே 690,000 கன மீட்டர். ஆனால், வாரியம் விநியோகிப்பதோ 550,000 கன மீட்டர். அதில் குழாய் சேதங்களில் வடிவதிலும், குழாய்களை உடைத்துத் திருடுவதிலும் 40% கழிந்ததுபோக மீதம்தான் இறுதி முனையைச் சென்றடைகிறது. இதற்குக் காரணம் நைரோபியின் தண்ணீர் மாஃபியாக்கள்.

தண்ணீர் விநியோகம் பெறுவதற்கே வசதியில்லாத மக்களிடம் இவர்கள் தண்ணீரை வைத்துக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் போட்டிருக்கும் குழாய் வசதிகளைப் பாதுகாக்கவே தனிக்குழுக்களை அமைத்திருக்கிறார்கள். அது ஒரு கட்டுக்கோப்பான ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு. அதன்மூலம் அவர்கள் தண்ணீரைத் திருடுவதிலிருந்து பொதுமக்களுக்கு அநியாய விலைக்கு விற்பதுவரை அனைத்தையும் திட்டமிட்டுச் சரியாக நடைமுறைப் படுத்துகிறார்கள். அதனால்தான் மக்கள் அவர்களைத் தண்ணீர் மாஃபியாக்களென்று அழைக்கிறார்கள்.

Photo Courtesy: Alphonce Gari

இந்த மாஃபியா கும்பல்களைச் சார்ந்திருக்கவேண்டிய பாரம் எப்போதும் பெண்கள் தலையிலேயே விழுகின்றது. கலாச்சாரப்படி வீட்டிற்குத் தேவையான தண்ணீரைக் கொண்டுவர வேண்டியது அவர்கள் பொறுப்பாயிற்றே. அந்தப் பொறுப்பை நிறைவேற்றத் தினமும் 20கிலோ எடையைத் தொடர்ச்சியாக ஐந்துமுறை இடுப்பில் சுமந்து நடக்கிறார்கள். அது சிலருக்கோ சில மீட்டர் தூரம், சிலருக்கோ சில கிலோமீட்டர் தூரம். இதனால் அவர்களின் உடல் நலிவடைவதும், இடுப்பு எலும்பு இடம் மாறுவதும் அதனால் ஏற்படும் குழந்தைப்பேறின்மையும் கணக்கில் வராத தவிர்க்கமுடியாத சேதாரங்கள். ஐ.நா-வின் ஆய்வுப்படி நான்கில் மூன்று பெண்கள் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கக் கென்யாவில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொண்டபடி வாழ்கிறார்கள்.

இந்த மாஃபியாக்களை சார்ந்திருப்பதால் சுகாதாரமும் குடிசைவாசிகளுக்குக் கேள்விக்குறியாகிறது. பொதுவிநியோகத் தண்ணீர் குழாய்களை உடைத்து அதிலிருந்து திருடுவதற்கென்றே தனிக்குழாய்களை அமைக்கிறார்கள். அவர்கள் அதில் தண்ணீர் எடுப்பதை அதிகாரிகளுக்குச் சந்தேகம் வராமல் செய்யவேண்டுமல்லவா! அதனால் அக்குழாய்களைக் கழிவுநீர்க் குழாய்களின் வழியாகவே கொண்டுசெல்கிறார்கள். குழாய் அமைப்பதற்கு ஆகும் அதிகபட்ச செலவு 3000டாலர்கள் மட்டுமே. அந்தச் செலவிலேயே பல கிலோமீட்டர் தூரங்களுக்கு நீரைக் கொண்டுசேர்க்கிறார்கள். மாஃபியாக்கள் அமைக்கும் குழாய்கள் மோசமான தரத்தோடு இருப்பதால் பல இடங்களில் குழாய்கள் சேதமடைந்து கழிவுநீரும் கலந்துவிடுகிறது. சுகாதாரத்தைக் கனவிலும் நினைக்கமுடியாத சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்குத் தண்ணீர் கிடைப்பதே போராட்டம். அதில் சுத்தமான தண்ணீரைக் கேட்டால் கிடைக்கும் தண்ணீரையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். வேறு வழியின்றி அதே நீரைப் பயன்படுத்தவேண்டிய அவலத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் காலரா, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, டைஃபாய்டு போன்ற பிரச்னைகளால் அங்கு வாழும் பெரும்பாலான குழந்தைகள் இறக்கிறார்கள்.

வேண்டுமானால் இந்த மாஃபியாக்களைச் சட்டபூர்வ விநியோகஸ்தர்களாக்கலாம். அதன்மூலம் திருட்டைக் குறைப்பதோடு மக்களுக்கும் முறையாக விநியோகிக்கலாம். ஆனால், இவர்கள் விலையைக் குறைக்கமாட்டார்கள். அவர்கள் அறியாமையில் செய்யவில்லை. அறிந்தே செய்கிறார்கள். இன்னும் விவரமாகச் சொல்லவேண்டுமென்றால் இதைச் செய்பவர்கள் சமுதாயத்தின் முக்கியப் பொறுப்புகளில் அமர்ந்திருப்பவர்களே. அதற்குச் சிறந்த உதாரணம் 2007-ம் ஆண்டு கென்யா பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நின்ற நிக்கோலஸ் ரஜுலா (Nicholas Rajula). ஒருமுறை அவரும் அவரது உதவியாளர் ஜேன் அதியம்போவும் (Jane Adhiambo) தண்ணீரைச் சட்டவிரோதமாக அநியாய விலைக்கு விற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் இருவரும் 10,000 ஷில்லிங்குகள் அபராதத்தோடு விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்குத் தேவையெல்லாம் லாபம். இது தங்கத்தைப் போல் வருமானத்தைக் கொட்டிக் கொடுக்கும் நீலத் தங்கம். மக்களின் பற்றாக்குறை அதைக் கொடுக்கிறது. அதனால் அதைச் சரிசெய்யும் எந்த முயற்சியையும் ஆதரிக்கமாட்டார்கள்.

கென்யாவின் 46லட்சம் மக்கள் தொகையில் 19லட்சம் மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையில் அவதிப்படுகின்றனர். அவர்கள் உட்பட 27 லட்சம் மக்கள் சுகாதாரமான வாழ்விடமின்றி அவதிப்படுகின்றனர். கென்யாவில் 55பேரில் 9 பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீரும் சுகாதாரமான வாழ்விடமும் கிடைத்துவருகிறது. அதிலும் பலருக்கு ரேஷன் முறையில். நாட்டின் குடிமக்கள் அடிப்படைத் தேவைகள் முழுமையாகக் கிடைக்காமல் வாழ்ந்துகொண்டிருக்க, அந்நாட்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு டன் கணக்கிலான மறைநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து கென்யா இறக்குமதி செய்யும் உணவுப்பொருட்கள் கடந்த பத்தாண்டுகளில் நான்கரை மடங்கு அதிகமாகியுள்ளது. அதேசமயம், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மறைநீரும் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அதிகமான உணவு இறக்குமதி அந்நாட்டுப் பொருளாதாரத்தில் தொடர்ச்சியாக நிதிப் பற்றாக்குறைக்கு வித்திட்டு வருகிறது. கென்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் 2.8பில்லியன் அளவுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதியாகிறது. அதில் 1.9பில்லியன் டன் நெதர்லாந்து மட்டுமே வாங்குகிறது. ஐரோப்பியர்கள் காதலர் தினத்தைச் சந்தோஷமாகக் கொண்டாடுவதற்காகக் கென்ய மக்கள் ஆண்டு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கின்றனர். அது அவர்களை அவதிக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல் அதன் விளைவாக உருவாகிவரும் தண்ணீர் மாஃபியாக்களும் அவர்களை துன்புறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடைபெற்றுவரும் தண்ணீர் திருட்டைக் கட்டுப்படுத்த அதை உருவாக்கியவர்களிடமே உதவிநாடிச் சென்றுள்ளது கென்யா. கடந்த 2014-ம் கென்யாவிலிருக்கும் மொம்பாஸா (Mombasa) என்ற மாவட்டத்தில் தண்ணீர் மாஃபியாக்களைக் கட்டுப்படுத்த நெதர்லாந்து அரசின் உதவியை நாடியது. ஆனால், அவர்கள் இன்னும் தண்ணீர் திருட்டுகளைக் கட்டுப்படுத்தவில்லை. மாறாக பற்றாக்குறை அதிகமாகி அங்கிருக்கும் பள்ளிகள், மருத்துவமனைகளில்கூடத் திருடும் அவல நிலைக்கு அம்மக்கள் சென்றுவிட்டனர். இருந்தும், நெதர்லாந்தின் உதவியோடு இந்தத் திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்க முடிவெடுத்துள்ளனர். அதன் முதல்கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம், நகூரு (Nakuru) என்ற மாவட்டத்தில் நிலவி வரும் பற்றாக்குறையைச் சரிசெய்ய நெதர்லாந்தின் தனியார் கம்பெனியொன்று நிதியுதவி செய்துள்ளது.

விடென்ஸ் எவிடெஸ் இண்டர்நேஷனல் (Vitens Evides International) என்ற அந்த டச்சு நிறுவனம் இதற்காக 3,482,000டாலர்களை வழங்கியுள்ளது. அந்நிகழ்ச்சியின்போது பேசிய அந்த நிறுவனத்தின் எம்.டி நவாஸ்கோ (Nawasko), "இதன்மூலம் நகூருவின் தண்ணீர்ப் பற்றாக்குறை தீரும். அது மேலும் அதிகமான முதலீடுகளை இங்கே கொண்டுவந்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்" என்றார். அதோடு அவரே நெதர்லாந்து கம்பெனிகள் சிலவற்றை இங்கு முதலீடு செய்யப் பரிந்துரைப்பதாக உறுதியளித்தார். தங்களுக்குத் தேவையான சரக்குகளை உற்பத்தி செய்யவே டச்சு நிறுவனங்கள் கென்யாவைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை நவாஸ்கோவே வாக்குமூலமாகச் சொல்லிவிட்டார். இருந்தும் கென்ய அரசு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் அந்தப் பொறுப்பைச் சுரண்டுபவர்களிடமே தந்துகொண்டிருக்கிறது. மொம்பாஸா, நைரோபியைப் போலவே நகூருவிலும் பல்வேறு பன்னாட்டு ரோஜா உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில் நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் அடக்கம்.

ஒரு நாட்டுக்குப் பொருளாதார முன்னேற்றம் மிக முக்கியமே. அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை என்னவென்பதில் தான் தெரியவரும் அந்த முன்னேற்றம் யாருக்கானதென்று.

அந்தவகையில் கென்யாவின் பொருளாதார வளர்ச்சி அவர்களுக்கானதன்று.