Published:Updated:

கொலம்பஸ் அமெரிக்காவுக்குப் போக வழிகாட்டிய மேப் இதுதான்..! #Historyfacts

1492-ம் ஆண்டு ஆசியாவுக்கு விரைவாகச் சென்றடையும் வகையில் ஒரு பாதையைக் கண்டுபிடிக்கப் பயணத்தை மேற்கொண்டார் கிறிஸ்டோபர் கொலம்பஸ். ஆனால், அவர் தவறுதலாகப் போய் சேர்ந்தது அமெரிக்க கண்டம். இதே போன்று மீண்டும் மீண்டும் நான்கு முறை பயணம் செய்தும் அவர் ஆசியாவை அடையவே இல்லை.

கொலம்பஸ் அமெரிக்காவுக்குப் போக வழிகாட்டிய மேப் இதுதான்..! #Historyfacts
கொலம்பஸ் அமெரிக்காவுக்குப் போக வழிகாட்டிய மேப் இதுதான்..! #Historyfacts

யணங்கள் இப்போதும் எப்போதும் பலருக்கும் உவப்பான ஒன்றாகத்தான் இருக்கிறது. தனது வாழ்நாளில் தனக்குத் தெரிந்த எல்லைகளை இன்னும் இன்னும் விரிவாக்கி பல்வேறு வகையான நிலங்களையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் சந்திப்பது என்பது பயணங்கள் மட்டுமே தரக்கூடிய போதை. இன்றைய நிலையில் பயணம் என்பது மிக எளிதான விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால் 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு. 14, 15 நூற்றாண்டில் பயணம் மேற்கொண்டவர்கள் எவற்றையெல்லாம் சமாளித்திருப்பார்கள். பணத்தைவிடப் பயணத்திற்கான அடிப்படை விஷயங்கள் வரைபடமும் (மேப்) திசைகாட்டியும்தான் (காம்பஸ்). இப்போது எல்லோருடைய கைகளிலும் இருக்கும் ஸ்மார்ட்போன் இந்த இரண்டையும் ஒன்றாக்கி உள்ளங்கையில் கொடுத்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மெகஸ்தனிஸும் மார்கோபோலோவும் யுவான் சுவாங்கும் உலகம் முழுக்கச் சுற்றித் திரிந்தபோது அவர்களது கைகளில் இருந்த மேப் எப்படி இருந்திருக்கும்? அன்றைய காலகட்டத்தில் பயணங்களின் வழியேதான் உலகம் அறிந்திராத பல புதிய புதிய நிலப்பரப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய நிலப்பரப்புகளையும் வளங்களையும் கண்டுபிடிப்பதற்காகவே பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி ஒரு பயணத்தில்தான் தவறுதலாக அமெரிக்க கண்டத்தை கண்டறிந்தார் கொலம்பஸ். இன்று வரை உலக வரலாற்றில் அது ஒரு முக்கியக் கண்டுபிடிப்பு.

15-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஐரோப்பாவைச் சார்ந்த பல்வேறு நாட்டினரும் உலகின் பல்வேறு மூலைக்கும் வழி கண்டுபிடிப்பதை முக்கியச் செயலாகச் செய்து வந்தனர். அதுவரை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்த பயணிகளின் குறிப்புகளின்படி வளமான பகுதிகளுக்குச் செல்வதை குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அந்தப் பயணிகளின் குறிப்புகளைத் தாண்டியும் பல்வேறு நிலப்பரப்புகள் ஐரோப்பியர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. அப்போதைய பயணிகளின் குறிப்புகளின்படி ஆசியாதான் உலகிலேயே வளமான பகுதியாக நம்பப்பட்டது. 1492-ம் ஆண்டு ஆசியாவுக்கு விரைவாகச் சென்றடையும் வகையில் ஒரு பாதையைக் கண்டுபிடிக்கப் பயணத்தை மேற்கொண்டார் கிறிஸ்டோபர் கொலம்பஸ். ஆனால், அவர் தவறுதலாகப் போய் சேர்ந்தது அமெரிக்க கண்டம். இதே போன்று மீண்டும் மீண்டும் நான்கு முறை பயணம் செய்தும் அவர் ஆசியாவை அடையவே இல்லை. அமெரிக்க கண்டத்தின் பல்வேறு பகுதிகளைக் கண்டறிந்து ஐரோப்பாவுக்குக் காட்டினார். அதுவரை அப்படி ஒரு நிலப்பரப்பு இருப்பதே பலருக்கும் தெரியாது. இதனால், கொலம்பஸ் அமெரிக்காவை மட்டும் கண்டறியவில்லை; புதிய உலகத்தையே கண்டறிந்தார் எனப் புகழ்வதுண்டு.

கிபி 1491-ல் ஃபுளோரன்ஸைச் சேர்ந்த ஹென்றிகஸ் மார்டெல்லஸ் (Henricus Martellus) உருவாக்கிய மேப்தான் கொலம்பஸின் பயணத்துக்கு வழிகாட்டியாகவும் உந்துதலாகவும் இருந்திருக்கக்கூடும் எனச் சொல்கின்றனர். 527 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்த மேப், தற்போது ஆய்வாளர்களால் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதனை டிஜிட்டலுக்கும் மாற்றியுள்ளனர். 1491-ல் உருவாக்கப்பட்ட அந்த மேப் 1962-ம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்துக்கு வந்தடைந்தது. அதன்பிறகு தற்போதுதான் அதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெய்னெகே ரேர் பு & மூலப்பிரதி நூலகத்தைச் (Beinecke Rare Book & Manuscript Library) சார்ந்த ஐந்து ஆய்வாளர்கள் மார்டெல்லஸின் மேப்பை ஆய்வு செய்துள்ளனர். மேப்பில் பல்வேறு தகவல்களும் படங்களும் தெளிவற்ற முறையில் அழிந்துபோய் இருந்துள்ளன. மல்டிஸ்பெக்ட்ரல் இமேஜிங் எனும் முறையின் மூலம் மேப்பின் பெரும்பான்மையான தகவல்களை மீட்டெடுத்துள்ளனர். மார்டெல்லாஸின் மேப் 1491 ம் ஆண்டில் மேற்கில் அட்லான்டிக்கிலிருந்து கிழக்கில் ஜப்பான் வரை விரிந்துள்ளது. இதற்கிடையில் இருக்கும் நிலப்பரப்பையும் கடற்பரப்பையும் ஓரளவு சரியாகவே சித்திரித்துள்ளார். ஆசியாவைச் சித்திரித்தது மட்டுமல்லாமல் அதன் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களையும் குறித்துள்ளனர்.  

மேலும் இந்த மேப்பில் சுவாரஸ்யமான விஷயமாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆறுகளின் அமைப்புகள், இடங்களின் பெயர்கள் மிகத்துல்லியமாக இருக்கின்றன. ஒருவேளை இதனை தாலமியின் புவியியல் புத்தகத்தில் உள்ள எகிப்டஸ் என் ஒவெலோ மேப்பில் (Egyptus N[MC1] ovelo [BL2] map) இருந்து பெற்றிருக்கலாம் என்கின்றனர். மேலும், எத்தியோப்பாவைச் சேர்ந்த மூன்று பிரதிநிதிகள் ஃபுளோரன்ஸ் கவுன்சிலுக்கு 1441 ம் ஆண்டு வந்துள்ளனர். அவர்களிடமிருந்தும் தகவல்கள் பெறப்பட்டிருக்கலாம். மார்டெல்லசின் மேப்தான் அவருக்குப் பின் வந்த  உலகின் மற்ற வரைபடத் தயாரிப்பாளர்களுக்கு முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் இருந்திருக்கும் என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைவரான வன் துசர்வ் (Van Duzer). உதாரணமாக கி.பி. 1507-ல் உலக வரைபடம் உருவாக்கிய ஜெர்மன் வரைபடத் தயாரிப்பாளரான மார்டின் வால்ட்சீமுல்லரின் (Martin Waldseemüller) மேப்பும் தற்போதைய வரைபடத்துடன் ஒற்றுப்போகிறது.

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க கண்டங்களை மேப்பில் குறித்தது வால்ட்சீமூல்லரின் மேப்தான். மார்டெல்லஸின் மேப்பில் அமெரிக்க கண்டம் பற்றிய சித்திரிப்பு இல்லை. ஆனாலும் உலக வரைபடத்திற்கான கூறுகள் அனைத்தும் உண்டு. மேலும் பல இடங்கள் இதில் வரக்கூடும் என அதனை விரிவாக்கம் செய்யக்கூடியதாக உருவாக்கியிருக்கிறார் வன் மார்டெல்லஸ் என்கிறார் வன் துசர். வால்ட்சீமுல்லர் மட்டுமல்ல கொலம்பஸும் மார்டெல்லஸின் மேப்பினால் தாக்கம் பெற்றவர்தான். இருவரும் இத்தாலியைச் சார்ந்தவர்கள் என்பதால் கொலம்பஸ் கண்டிப்பாக மார்டெல்லஸின் மேப் பற்றி கேள்விப்பட்டிருப்பார். இந்த மேப் தயாரிக்கப்பட்டதற்கு அடுத்த ஆண்டே கொலம்பஸ் தனது பயணத்தில் அமெரிக்க கண்டத்தை கண்டறிந்தார். அட்லான்டிக் பெருங்கடலின் வழியே மேற்கில் செல்வதன் வழியே ஜப்பானையும் அதற்கடுத்த ஆசியாவையும் அடைவதே இவர்கள் குறிக்கோளாக இருந்தது. அதற்கு மார்டெல்லஸின் மேப்பும் ஒரு காரணம். கொலம்பஸின் முதல் பயணத்தில் ஒரு தீவில் இறங்கியதும் பலரும்  ஜப்பான் என்றே நினைத்துள்ளனர்.

இதனிடையே, கொலம்பஸ் வட அமெரிக்காவில் கால் பதிக்கவே இல்லை. அவரின் பயணம் கீழே உள்ள கரீபியன் தீவுகளோடு முடிந்துவிட்டது என்றும் வரலாற்று ஆதாரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. எது எப்படியோ, அப்போதைய உலக வரைபடங்களின் மூலம் வரலாற்றின் முரண்களையும் பயணங்களின் விளைவுகளையும் பயணத்துக்கான உந்துதலையும் பெற முடியும். பயணங்களுக்கான வழிகாட்டியாக எப்போதும் இருப்பது மேப்தான். அதற்கான வரலாறும் முக்கியமானதுதான்.