Published:Updated:

இனிமேல் 15 நிமிட மழைக்கே வெள்ளம் உருவாகும்..! சந்திக்க நாம் தயாரா?

இனிமேல் 15 நிமிட மழைக்கே வெள்ளம் உருவாகும்..! சந்திக்க நாம் தயாரா?
இனிமேல் 15 நிமிட மழைக்கே வெள்ளம் உருவாகும்..! சந்திக்க நாம் தயாரா?

``குறுகிய நேரத்தில் அதிகம் மழை பெய்யும்" (Short duration rainfall extremes) தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாதிரிகளை (Climate models) கொண்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்

டந்த பல ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் கேரளாவைப் புரட்டிப் போட்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின்படி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை மட்டும், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையைவிட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியைவிட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையைப் பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியைவிட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

நிலைமையைக் கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 35 அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் ஒருவார காலம் மூடப்பட்டு இப்போதுதான் செயல்பட ஆரம்பித்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முந்நூற்றைத் தாண்டுகிறது, முகாம்களில் சில லட்சக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சரியாக எவ்வளவு மாதங்கள் என்பதைக் கணக்கிடமுடியாது என்றும் ஏற்பட்டுள்ள பொருட்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதை  புரிந்துகொள்ள முடிகிறது. இது பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் ’பூவுலகு’ சுந்தராஜனிடம் பேசினோம்.

கேரள பெருமழையைப் பற்றி?
கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால், இதற்கான எச்சரிக்கைகளை இயற்கை வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரம் அடிக்கடி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017- ம் ஆண்டு பெங்களூரு நகரமும், 2015-ல் சென்னையும், ஸ்ரீநகர் 2014-ம் ஆண்டும் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வரக்கூடிய காலங்களில் `தீவிர காலநிலை நிகழ்வுகள்' (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்துவந்தன. மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதை உறுதிப்படுத்தியது.

அதிக மழைப்பொழிவு பற்றி வேறு ஏதேனும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதா?

 ஆம், இருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் காந்தி நகரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT, Gandhinagar) முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவுக்கு உயரும்போது இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும் அதுவும் குறிப்பாக `குறுகிய நேரத்தில் அதிகம் மழை பெய்யும்' (Short duration rainfall extremes) தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும்  அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாதிரிகளை (Climate models) கொண்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர், மூன்று மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் 25% அதிகரிக்கும் என்றும் இவற்றைத் தாங்கக்கூடிய வகையில் நம்முடைய நகர வடிவமைப்புகள் இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது ஆய்வு.

சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில் கருத்து பற்றி?

`` கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கைச் சீற்றம் எதிர்பார்த்ததுதான்” என்கிறார் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். இவர்தான் மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் பாதுகாப்பதற்கான அறிக்கையைத் தயாரித்த குழுவின் தலைவர். காட்கில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த அளவுக்குச் சேதம் ஏற்பட்டிருக்காது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இப்போது கேரளாவிலுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இது முழுமையாக மழையினால் ஏற்பட்டது அல்ல என்றும் அதிகமானது மனித தவறுகளால்தான் என்கிறார் காட்கில். அறிவியல் பூர்வமற்ற முறையில் நிலமும், மண்வளமும் பயன் படுத்தப்பட்டதும், நீர்நிலைகளையும், சதுப்புநிலங்களையும் ஆக்கிரமித்து அந்நிலங்களின் பயன்பாட்டை மாற்றியதும்தான் முக்கிய காரணம் என்கிறார்.  அது சரியென்றே நினைக்கிறேன்

 இதில் தமிழகத்துக்கு என்ன பாடம்?

 ஏற்கெனவே 2015 -ம் ஆண்டு சென்னை சந்தித்த வெள்ளத்துக்குப் பிறகும் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை, இப்போது கேரளாவும்

நமக்கு பாடங்கள் சொல்லித்தருகிறது. இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்கென `காலநிலை குறித்த' கொள்கைகளை வகுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். 1,076 கி.மீ நீள கடற்கரை கொண்ட தமிழகம் காலநிலை மாற்றத்தால், அதிக தீவிரமான காலநிலை நிகழ்வுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வு, அதன் தாக்கத்தை எப்படி நாம் குறைக்கமுடியும், காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதைக் கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது நகரங்கள்தான், ஏனென்றால் குறைந்த நேரத்தில் அதிக மழைப்பொழிவை தாங்கக்கூடிய வகையில் நம் நகரங்கள் கட்டமைக்கப்படவில்லை, குறிப்பாக நகரத்திலுள்ள வடிகால்கள் தினம் பெய்யக்கூடிய மழையின் அளவைக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இனிமேல் குறைந்த நேரத்தில், குறிப்பாக மூன்று மணிநேரத்தில் அதிக மழை பொழிவைத் தாங்கக்கூடிய வகையில் நாம் தயாராக வேண்டும். மாதாந்திர அல்லது தினசரி சராசரி அளவுகள் எல்லாம் பழங்கதை, இனிமேல் மூன்று மணி நேரத்தில் தீவிர மழைப்பொழிவு சராசரிகள்தான் நம்முடைய செயல்பாடுகளைத் தீர்மானிக்கும். `நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகளும்' (urban heat island effect) நகரங்களில் பெய்யும் மழையின் தன்மையை மாற்றக்கூடியது, தமிழகம் அதிகமாக நகர்மயமான மாநிலம் என்பதை இங்கே நாம் நினைவில்கொள்ள வேண்டும். காலநிலை நிகழ்வுகள் கொண்டுவரப்போகும் பொருளாதார இழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், சில செ.மீ. கடல்மட்டம் உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுவிடும் என்கிறார் ஸ்டெபானி ஹல்லேகட்டே, இவர் உலகவங்கியின் `பேரழிவு குறைப்பு மற்றும் மீட்பு' அமைப்பின் பொருளாதார நிபுணர். சென்னை தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழக பொருளாதாரத்தின் அச்சாணி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் முகம் (face of employment).  சென்னை கடற்கரை நகரம் என்பதை நாம் குறித்துக்கொண்டு அதற்கென தனிப்பட்ட முறையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 தொழில்நுட்ப உதவிகளின் மூலம் இன்னும் துல்லியமாக கணிக்கக்கூடிய காலநிலை மாதிரிகளை உருவாக்க வேண்டும். பொதுவாக விஞ்ஞானிகள் `பொது சுழற்சி மாதிரிகளை' வைத்துதான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தோராயமான தரவுகளை மட்டுமே தரக்கூடியவை, வெப்பசலனங்களால் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் எடுப்பது கிடையாது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் புவியின் வெப்பம் உயர உயர இந்த வெப்பச்சலனங்கள் மேல் எழுந்து, குளிர்ந்து, மழைப்பொழிவு அதிக அளவில் நடைபெறும். இவற்றைத் கணக்கிலெடுக்கும் வகையில் நம்முடைய ஆய்வு மாதிரிகள் உருவாக்கப்பட வேண்டும், மற்றொரு ஆய்வு `இரு தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு' இடையே உள்ள இடைவெளியைப் பற்றியதாக இருக்க வேண்டும்.

'நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்' ஆய்வறிக்கை பற்றி உங்கள் கருத்து?

 சமீபத்தில் அமெரிக்காவின் 'நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்' காலநிலை மாற்றம் குறித்து  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மேலும் கவலைகொள்ளக்கூடிய விஷயங்களைக் கொண்டுள்ளது. எதிர்பார்த்ததைவிடக் காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கிறது. தற்சமயம் ஐரோப்பிய நாடுகள் மிகக்கடுமையான வெப்பநிலையைச் சந்தித்துக்கொண்டிருப்பது இந்த ஆய்வுகளின் கூற்றுக்களை உண்மையாக்கிக்கொண்டிருக்கிறது.

`காலநிலை மாற்றம்' மிக முக்கியமான பிரச்னையாகும், மானுடத்தின் இருத்தியல் (existence) குறித்ததாகும். அதன் தாக்கத்தை குறைப்பதும் எதிர்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்வது மட்டுமே நம்முடைய இருப்பை உறுதிப்படுத்தும். மேலும், இது நாளைய பிரச்னை அல்ல இன்றைய பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு