Published:Updated:

``இதெல்லாம் செய்யக் கூடாதுன்னா எங்க வாழ்வாதாரம் என்ன?” - கேரள விவசாயியின் ஆதங்கம்

``இதெல்லாம் செய்யக் கூடாதுன்னா எங்க வாழ்வாதாரம் என்ன?” - கேரள விவசாயியின் ஆதங்கம்
``இதெல்லாம் செய்யக் கூடாதுன்னா எங்க வாழ்வாதாரம் என்ன?” - கேரள விவசாயியின் ஆதங்கம்

விவசாயத்துக்காக காட்டு நிலங்களை ஆக்கிரமிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இங்கு ஐம்பது சதவிகித மக்கள் விவசாயத்தையே சார்ந்து வாழ்கிறார்கள்.

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பேரிடரைக் கேரளா சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதற்குப் பல்வேறு காரணங்களை பல அறிஞர்கள் முன்வைக்கிறார்கள். வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நாம் நேரில் சந்திக்கச் சென்றிருந்தோம். அங்கு சந்தித்த ஒரு விவசாயியோடு பேசிக்கொண்டிருக்கும்போது வெள்ளத்துக்கான காரணங்களாகச் சொல்லப்படுபவை குறித்து அவரிடம் பேசினோம். சூழலியல் பாதிப்புகளென்று நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதைச் சரிசெய்வதற்கான மாற்றுவழியை முன்வைப்பது குறித்து அப்போது அவர் கேட்ட சில கேள்விகள் சிந்திக்க வைப்பவையாக இருந்தன. அவற்றின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

கடந்த  பத்தாண்டுகளில் பார்த்திராத பெருவெள்ளத்தை நாங்கள் சந்தித்துள்ளோம். வீடுகளை இழந்துள்ளோம். உடைமைகளை இழந்துள்ளோம். நிறைய உயிர்களையும்கூட இழந்துள்ளோம். இதற்குக் காரணம் நாங்கள் சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிக்காததே என்கிறார்கள். கேரளா இயற்கை மீதும் காடுகள் மீதும் கவனம் செலுத்தாததே காரணமென்கிறார்கள். காடுகளை நாங்கள் ஆக்கிரமித்துவிட்டதே மண் சரிவுக்குக் காரணமென்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.

அவர்கள் நிறைய படித்தவர்கள். பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்துதான் இந்த மாதிரியான முடிவுகளைச் சொல்லியிருப்பார்கள். ஆனால், கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு சாதாரண குடிமகனாக எனக்குச் சில கேள்விகள் எழுந்தன. ஆக்கிரமிப்புகளென்று நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள். நாங்கள் குடியிருக்கும் வீடுகளையா. கேரளா, மலைகள் நிரம்பிய தேசம். இங்கு வாழும் நாங்கள் மலைவாழ் மக்கள். எங்களுக்கென்று தனியாக இடம் ஒதுக்கிக்கொள்வதில்லை. காடுதான் எங்களுக்கு வீடு. அதற்குள் மரங்களைக் குறைக்காமல் வீடுகளைக் கட்டி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு மரத்துக்கு நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா. பல்லாண்டு காலமாக எங்கள் வாழ்க்கைமுறை வனங்களோடு கலந்துவிட்ட ஒன்று. அதை மாற்றிக்கொள்ள முடியுமா!

ஆம், நாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். பலரும் வெள்ளம் மண்சரிவு அபாயத்தை உண்டாக்கும் தொழில்களை குறைத்துக்கொள்ள வேண்டுமென்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் செய்யும் முக்கியமான சில தொழில்கள் சிலவற்றைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். எங்கள் மாநிலம் சுற்றுலாவுக்குப் பெயர்போனது. நிறைய சுற்றுலாத்தலங்கள் இருப்பதால் தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம். சுற்றுலா இங்கு வாழும் அனைவருக்கும் முக்கியமானதொரு தொழிலாக உள்ளது. சுற்றுலாத் துறையைச் சார்ந்து கணிசமான அளவு மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலிருக்கும் சுற்றுலாத்தலங்களைக் குறைக்கச் சொல்லுகிறார்கள். அது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.

விவசாயத்துக்காக காட்டு நிலங்களை ஆக்கிரமிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இங்கு ஐம்பது சதவிகித மக்கள் விவசாயத்தையே சார்ந்து வாழ்கிறார்கள். அதைக் குறைத்துக்கொண்டால் விவசாயத்தைச் சார்ந்து வாழும் மக்களின் நிலை என்னவாவது. காடுகள் மணல் அரிப்பைக் கட்டுப்படுத்தும் திறனைக் குவாரிகள் குறைக்கின்றன. எம்.சாண்ட் என்றவகை மணல் எங்கள் நிலத்தில் கிடைப்பது எங்களுக்கு வேலைவாய்ப்பை நல்கியுள்ளது. அதை நாங்கள் இழக்க வேண்டுமென்றால் அதற்கு மாற்றாக இருக்கும் மற்ற தொழில்கள் வளர்ச்சியடைய வேண்டும். ஐ.டி துறை, விவசாயம், ரியல் எஸ்டேட், போக்குவரத்து, வங்கித் துறை போன்றவை தற்போது அதற்கு மாற்றாக உள்ளது. அதில், ஐ.டி துறை மலைப்பகுதிகளில் சாத்தியமில்லை. விவசாயத்துக்காக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகச் சொல்லுகிறீர்கள். சாலைகளை மேம்படுத்தினால் வனங்கள் அழியுமென்கிறீர்கள். அதனால், போக்குவரத்துத் துறையிலும் மேம்பட முடியாமல் போகலாம். மீதமிருப்பது வங்கித் துறை. வங்கித் துறை முன்னேற வேண்டுமெனில் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி வேண்டும்.

இவை எல்லாவற்றையும்விட மாநிலத்தின் மக்கள் தொகை அதிகமாகிவிட்டது. தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட இங்கு மக்கள்தொகை அடர்த்தி அதிகம். எனக்குத் தெரிந்தவரை ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 800 பேர் வரை இருப்பதாகக் கேள்விப்பட்டேன். எங்களுக்குத் தேவையான வாழிடம் மற்றும் வாழ்வாதாரத்துக்கான தொழில்களுக்கு நாங்கள் என்ன செய்வது. அதற்கான மாற்றுகளை யாரேனும் வைக்கமுடிந்தால் இவற்றை விட்டுவிடத் தயாராக உள்ளோம்.

எங்கள் வேலைவாய்ப்புகளை இழந்துவிட்டு, வாழும் இடங்கள் காடுகளை ஆக்கிரமித்து இருப்பதாகக் கூறி கைவிட்டுவிட்டு வேறு எங்கே செல்வது. எத்தனை மண்சரிவுகளானாலும், வெள்ளம் வந்தாலும் இது நாங்கள் வாழும் இடமென்று நிவாரண முகாம்களுக்குக் கூட வராமல் அங்கேயே இருப்பவர்களை நாங்கள் பார்த்துள்ளோம். போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டாலும், நிவாரணப் பொருள்களைக் கொண்டு சேர்க்கமுடியாவிட்டாலும்கூட அவர்கள் அங்கிருந்து வர மறுக்கிறார்கள். இதற்குக் காரணம், அது பல்லாண்டு காலமாக அவர்கள் வாழ்ந்த இடம். அதை எப்படிக் கைவிட முடியும். அங்குதான் அவர்களின் வாழ்க்கை. அவர்களின் வாழ்வாதாரம். பல்வேறு அறிஞர்கள் இங்கு நடந்திருக்கும் சீற்றங்களுக்கு மனிதர்களும் காரணமென்கிறார்கள். ஒப்புக்கொள்கிறேன். நாங்களும் காரணம்தாம். அறிவிப்பின்றி அணைகளைத் திறந்துவிட்டவர்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். வாழ்வதற்கு விவசாயம் செய்யும் நாங்கள் என்ன செய்தோம். விவசாயத்தைக் குறைத்துவிட்டால் எங்களுக்கான உணவு எங்கிருந்து கிடைக்கும். சுற்றுலாத் துறையைக் குறைத்துவிட்டால் அதை நம்பி வாழும் மக்களின் நிலை என்னவாகும். தொழில் வளர்ச்சியைக் குறைத்துவிட்டால் மேற்கூறிய இரண்டைத் தவிர எங்களுக்கான வேலை வாய்ப்புகளை நாங்கள் எங்கே தேடுவது?

சேவைத் துறையே எங்களிடம் தற்போது அதிகமுள்ளது. உற்பத்தித் துறைகளில் நாங்கள் அதிக கவனம் செலுத்தியதில்லை. அது இயற்கையைப் பாழ்படுத்திவிடலாமென்ற காரணத்தால். தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இயற்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களென்று பெயரெடுத்தவர்கள் நாங்கள். காடுகளையும் நீர்நிலைகளையும் நாங்கள் சிரமேற்கொண்டு பேணிவருகிறோம். கேரள மக்கள் நடத்திய சைலன்ட் பள்ளத்தாக்கைக் காப்பாற்ற முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வரலாற்றில் பொறிக்கப்பட்டவை. இயற்கை மீதான கேரள மக்களின் காதலும் அதைக் காப்பாற்ற நாங்கள் முன்னெடுத்த போராட்டங்கள் அனைத்துமே காவியங்கள். ஆரன்முலா விமான நிலையக் கட்டுமானத்தைச் சூழலியல் காரணங்களுக்காகத் தவிர்த்தவர்கள் நாங்கள். குட்டநாட்டின் சூழலியல் சுற்றுலாத் தலத் திட்டமான மேத்ரான் கயல் திட்டத்தைத் தவிர்த்தவர்கள் நாங்கள். ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் வாயு போன்ற மத்திய அரசுத் திட்டங்களைக்கூட இயற்கைக்குக் கேடு விளைவிப்பவை என்ற காரணத்தால் தவிர்த்துள்ளோம். அணு உலைத் திட்டங்களைக்கூட இயற்கைக்கு விரோதமானதென்ற காரணத்தால் இதுவரை கையிலெடுக்கவில்லை. நீர்மேலாண்மை  மற்றும் உணவு உற்பத்தியில் எங்கள் அரசாங்கம் முக்கியத்துவம் அளிப்பதையும், இயற்கை விவசாயத்தை முயற்சி செய்ய ஊக்குவிப்பதும் ஒரு குடிமகனாக நாங்கள் பார்க்கும் நன்மைகள். மரங்கள் மண்சரிவைத் தடுக்கும் தடுப்பரண்கள். இந்த மழையில் மரங்கள்கூட வேரோடு பிடுங்கப்பட்டுள்ளன.

இதற்குமுன் 1924-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பற்றி எங்கள் தாத்தாக்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். கரிந்திரி என்ற ஒரு மலையே அதில் துடைத்தெறியப்பட்டது. அப்போதுகூட இந்த அளவுக்கான வளர்ச்சிகள் இருந்ததில்லை. அது இயற்கை நடத்திய கோரத்தாண்டவம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இது மீண்டும் நடந்துள்ளது. நதிகளை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறுகிறார்கள். இடுக்கி, எர்ணாகுலம், பத்தினதிட்டா போன்ற பகுதிகள் முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கின எனில் அது முழுவதுமே நீர்நிலைகள் ஆக்கிரமிப்புதானா! 

எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதைப்போன்ற சேதங்களை இதுவரை நாங்கள் அனுபவித்ததில்லை. இயற்கைமீது எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது. அதன்படிதான் நாங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தவிர்க்கமுடியாமல் நாங்கள் செய்யவேண்டியதைத் தவிர வேறு எந்தவிதமான செயல்களையும் இயற்கைக்கு விரோதமாக நாங்கள் செய்யவில்லை. அதைக்கூடச் செய்யாமல் இயற்கையைப் பாதுகாக்க நாங்கள் தயார். எங்கள் வாழ்வாதாரத்துக்கு விவசாயத்தைக் குறைத்து, குவாரிகளைத் தவிர்த்து, போக்குவரத்துக்கு வழிசெய்து மாற்று ஏற்படுத்திக்கொடுங்கள். எங்கள் வாழ்வாதாரத்துக்கு முறையான மாற்றுவழியைக் கண்டுபிடிப்பதே நாங்கள் செய்வதாகச் சொல்லப்படும் சில இயற்கைவிரோதச் செயல்களையும் நாங்கள் தவிர்ப்பதற்கான வழியாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. நாங்கள் சேதங்களிலிருந்து எழுந்துவருவோம். புத்துயிர் பெறுவோம். புத்துயிர் பெரும்போது இந்தச் சேதம் மீண்டும் விளையாமலிருக்க எங்களுக்கு மாற்று வழியைத் தேர்வுசெய்து தாருங்கள். பிறகு, இயற்கையின் மீதான இந்தக் கேரளத்தின் காதலை இன்னும் அதிகமாகவே நாங்கள் காட்டுவோம்.
 

அடுத்த கட்டுரைக்கு