Published:Updated:

’கப்பல் அதன் ஆயுள் முடிந்தபின் என்னவாகும்?’- நம்பமுடியாத ஓர் அத்தியாயம் #ShipBreakingStories

5 வருசமா அவர்கூட வேல பார்க்கிறேன். என்னால் அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை. அவரது பல்லை வைத்துத்தான் என்னுடைய நண்பன் என்றே அடையாளம்  கண்டுபிடித்தேன்”

’கப்பல் அதன் ஆயுள் முடிந்தபின் என்னவாகும்?’- நம்பமுடியாத ஓர் அத்தியாயம் #ShipBreakingStories
’கப்பல் அதன் ஆயுள் முடிந்தபின் என்னவாகும்?’- நம்பமுடியாத ஓர் அத்தியாயம் #ShipBreakingStories

கடலுக்குப் பக்கத்தில் இருந்தாலும் துளியும் ஈரமோ கருணையோ இல்லாத ஒரு நிலப்பரப்பு.  மிகப் பிரமாண்டமாக இருக்கிற கப்பல்தான் அங்கிருக்கிற மக்களுக்குப் பணியிடம். எந்தப் பணியை  வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. சொல்ல மறந்த கதைகளில் சொல்லப்பட வேண்டிய முக்கியமான கதை இது.

2000 ஆம் ஆண்டு. பிரேசில் நாட்டைச் சார்ந்த கப்பல் வெல்மா. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கெமிக்கல் டேங்கராக பல நாடுகளுக்கும் பயணித்தது. பல வருடங்களாகப் பணியிலிருந்த கப்பல் இந்தியாவின் குஜராத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கியதும் அதிலிருந்த ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். குஜராத்தின் அலாங் கடற்கரையை நெருங்க நெருங்க ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவரும் கப்பலோடு கண்ணீர் மல்கப் பேச ஆரம்பிக்கிறார்கள். கேப்டன் கப்பலின் இயந்திர அறையைத் தொட்டுத் தடவி கப்பலின் மேல் தளத்திற்கு வருகிறார்.  கேப்டன் மிகப் பெரிய கண்ணீர் அஞ்சலியுடன் வெளியேறுகிறார். கப்பலுக்கும் அதனோடு 30 ஆண்டுகள் பயணித்த மனிதர்களுக்குமான பிணைப்பு இன்னும் சில நொடிகளில் உடையப் போகிறது. மேற்கூறிய எல்லாவற்றிற்கும் ஒரு காரணமிருந்தது. பல ஆயிரம் டன் எடை கொண்ட வெல்மா கப்பல் உடைப்பதற்காக அலாங் நகருக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உணர்ச்சிமயமான காட்சிகள் மறைந்து,  இரும்பும் தகரமுமான ஒரு வாழ்வியல் பற்றிய கதை இங்கிருந்துதான் தொடங்குகிறது. 

’கப்பல் அதன் ஆயுள் முடிந்தபின் என்னவாகும்?’- நம்பமுடியாத ஓர் அத்தியாயம் #ShipBreakingStories

அலாங் (ALANG) பல நாடுகளிலும் இருந்து உடைப்பதற்காகக் கப்பல்கள் வந்து கொண்டேயிருக்கிற இடம். மறுசுழற்சியில் கப்பல் மீண்டும் இரும்பாக மாறுகிற இடம். கப்பல்களை நம்பி சுமார் 40 ஆயிரம் மக்கள் அந்தப் பகுதியில் வசிக்கிறார்கள்.  அலாங் நகர வீதிகள் இரும்பும் இரும்பு சார்ந்தப் பகுதியாகவும் காட்சியளிக்கிறது. அலாங் கடற்கரையை ஒட்டிய 10 கிலோ மீட்டர்  நிலப்பரப்பு இரும்புகளாலும், தகரங்களாலும் சூழப்பட்டிருக்கிறது. இரும்பின் வாசம்தான் எல்லோருக்கும் சுவாசம். தினமும் காலை காளி தெய்வத்திற்கு படையலிட்டு வணங்கிய பிறகு கப்பல் உடைக்கிற பணியைத் தொடங்குகிறார்கள். அதற்கான பிரத்யேக உடைகளெல்லாம் இல்லை. சாதாரண சட்டையும் பேண்டும்தான்.  வந்திருக்கிற  கப்பலின் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு  இருக்கிற தேவையற்ற பொருட்களை முதலில் அப்புறப்படுத்த வேண்டும். கப்பல் உடைப்பதில் முதல் பணியாக இருப்பது  இரும்பு மற்றும் இரும்பு இல்லாத பொருட்களை காந்தத்தின் உதவியுடன் பிரித்தெடுப்பதுதான். 

கப்பலில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது இரும்புகளும் பைப் லைன்களும்  கேபிள்களும்தான். இவற்றைப்  பிரித்து உடைத்து எடுக்க கேஸ் கட்டிங் செய்தாக வேண்டும். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் ஒவ்வொரு தளத்திலும் 100 பேருக்கு மேல் கட்டிங்  பணியை செய்து கொண்டிருப்பார்கள். கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றியிருக்கிற பகுதியில் சுமார் 50 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும். கப்பல் எப்படிக் கட்டப்பட்டிருக்கும்  என்பது தெரிந்தால் மட்டுமே அதைப் பிரித்து உடைக்க முடியும். அவற்றைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றைத் தகர்ப்பதிலும் கேஸ் கட்டர்கள் திறமையானவர்கள்.  எங்கே கட்டிங் செய்தால் எது உடையும் என்பது கேஸ் கட்டர்களுக்கு மட்டுமே தெரியும். இந்தத் தொழிலின் கதாநாயகர்கள் கேஸ் கட்டர்களாக இருக்கிறார்கள். இந்தத் தொழிலுக்கு வரும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒருநாள் கேஸ் கட்டராக வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும்.

கப்பல் முழுமைக்கும் வெப்பம் சூழ்ந்திருக்க கட்டிங் பணி  நடைபெறும் பொழுது எங்கே எப்போது அசம்பாவிதம் நிகழும் என்றே சொல்லிவிட முடியாது. கட்டிங் செய்கிற ஸ்டீல் கம்பிகள் எங்கு எதைத் தாங்கி நிற்கிறது எனக் கணித்து விட இயலாது. திடீரென ஒரு ஸ்டீல் விழுந்தால் அதனைத் தொடர்ந்து இன்னொரு ஸ்டீல் உடைந்து விழும். நூற்றுக்கணக்கில் வேலை செய்து கொண்டிருக்கும் மனிதர்களில் யாராவது ஒருவரின் மீது அந்த ஸ்டீல் விழும். ஸ்டீல் ஏற்படுத்துகிற காயங்கள் அபாயகரமானவை. உடனடியாக மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல இயலாது. ஏனெனில் கப்பல் உடைக்கும் இடத்திலிருந்து ஒரு மணி நேரப்  பயணத்தில்தான் மருத்துவமனை. இங்குப் பணிபுரிகின்ற யாரும் உடலில் ஏற்படுகிற காயங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கப்பலின் மிகப் பெரிய பாகங்கள் ஒவ்வொன்றும் பல டன் கொண்டவை. பிடிப்புகளை இழக்கிற  பொருட்கள் எதிர்பாராத நேரத்தில் திடீரென உடைந்து கீழே  விழும். அதில் மரணங்களும் எதிர்பாராததுதான். 

’கப்பல் அதன் ஆயுள் முடிந்தபின் என்னவாகும்?’- நம்பமுடியாத ஓர் அத்தியாயம் #ShipBreakingStories

இருக்கிற வறுமைக்கு இந்தப் பணியை செய்தாக வேண்டும். நெருப்பிலும் அபாயத்திலும் பணிபுரிகின்ற மக்களுக்கு அடுத்து இன்னொரு அபாயம் இருக்கிறது. வந்திருக்கிற கப்பல் 30 ஆண்டுகளாக கெமிக்கல் டேங்கராக பயன்படுத்தப்பட்டது. கப்பலில் தேங்கியிருந்த கெமிக்கல்கள் வெப்பத்திற்குச் சூடாகி  வெளியேற ஆரம்பிக்கும். சில நேரங்களில் வெடிக்கவும் செய்யும். மனிதர்கள்  இருக்கத் தகுதியே இல்லாத இடத்தில் 100 மேற்பட்டோர் பணி செய்து கொண்டிருப்பார்கள். உண்மையில் கப்பல் வேலை அபாயங்களைக் கொண்டவை என்பதற்கு நடந்திருக்கிற சில சம்பவங்களை விவரிக்க வேண்டும். கப்பலில் கேஸ் கட்டிங் செய்கிற ஒருவர் டேங்கரின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியதால் மிகுந்த காயத்திற்கு உள்ளாகிறார். உடனடியாக அவர் பாவான்நகரில் இருக்கிற ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்றமுடியாமல் போய் விடுகிறது. மருத்துவமனையில் இருக்கும் அவரைப் பார்க்க அவரோடு பணி  புரிந்த நண்பர் ஒருவர் போகிறார். நண்பரின் உடலைப் பார்த்து விட்டு வெளியே வந்தவர் இப்படிச் சொல்கிறார். “5 வருசமா அவர்கூட வேல பார்க்கிறேன். என்னால் அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை. அவரது பல்லை வைத்துத்தான் என்னுடைய நண்பன் என்றே அடையாளம்  கண்டுபிடித்தேன்” என்கிறார். அந்த அளவிற்குத் தீ அவரது நண்பரைச் சிதைத்திருக்கிறது.   

கப்பல் பல தளங்களைக் கொண்டது. மூன்றாவது தளத்தில் கட்டிங் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் திடீரென காணாமல் போகிறார். இரண்டு நாள் என அவரைத் தேடியவர்கள் அதன் பிறகு அவரை அப்படி விட்டுவிட்டார்கள். நான்கு நாட்கள் கழித்து அவர் அணிந்திருந்த சட்டை கடலில் மிதந்து கரைக்கு வந்திருக்கிறது. அதன் பிறகே அவர் கப்பலில் இருந்து காயங்களுடன் கடலில் விழுந்த தகவல் கிடைத்திருக்கிறது.  இது போன்ற பல வழக்குகள் அலாங் நகரில் இருக்கிற காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.  முறையாகப் பயிற்சி பெறாத, தொழில் தெரியாத மனிதர்களே இந்தத் தொழில் அதிகம் ஈடுபடுகின்றனர். பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் வேலை சீக்கிரம் முடிய வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் வேலையை வாங்குவதால் அதிக விபத்துகளைப் பணியாளர்கள் சந்திக்கிறார்கள்.  கப்பல் உடைக்கிற பணியில் இருக்கிற பலருடைய முதுமை பருவம் பார்வை இல்லாமலே இருப்பதுதான் மிகப் பெரிய கொடுமை. கேஸ், நெருப்பு, எனத் தீ ஜுவாலைகளில் பணி செய்கிற ஒவ்வொருடைய உடலிலும் ஒரு பாதிப்பு இருக்கிறது. அதில் கண் பார்வை முதல் இடத்தில் இருக்கிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் 2004 ஆம் ஆண்டுக் கணக்கின்படி ஒரு நாளைக்கு ஒரு இறப்பு என ஆண்டுக்கு 300 மேலான இறப்புகள் கப்பல் உடைக்கும் நகரில் கணக்கிடப்பட்டிருக்கிறது. “ஒரு நாளைக்கு ஒரு கப்பல், ஒரு நாளைக்கு ஒரு சாவு” என்கிற ரீதியில்தான் கப்பல் உடைக்கும் இடங்கள் செயல்பட்டன.  இந்தத் தொழிலில் அதி நவீன பொருட்கள் எதுவும் 2005 ஆண்டு  ஆண்டிற்கு முன்பு வரை நிறுவப்படவில்லை. எல்லா வேலைகளையும் மனித இனம் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது. 

’கப்பல் அதன் ஆயுள் முடிந்தபின் என்னவாகும்?’- நம்பமுடியாத ஓர் அத்தியாயம் #ShipBreakingStories

கப்பல் உடைக்கும் தொழிலில், கப்பலிலிருக்கிற எல்லா இடங்களும் ஆபத்துதான். கெமிக்கல் கப்பலில் இருக்கிற இரும்புகள் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களுமே விஷக் கழிவுகள்தான். கப்பல், உடைக்க அனுப்பப்படுகிறது என்றது கப்பல் உரிமையாளர்கள் கப்பலில் இருக்கிற எந்தக் கழிவுகளையும் அப்புறப்படுத்தாமல் அப்படியே இந்தியாவிற்கு அனுப்பிவிடுகிறார். அதனுடைய கழிவுகள் கடற்கரையில் கொட்டப்பட்டு கடற்கரை மட்டுமன்றி மக்களையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் சீரழித்துவிடுகிறது.பழைய கப்பல்களில் ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் கன உலோகங்கள் தொழிலாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. வெடிப்பு, நெருப்பு, மூச்சுத்திணறல், வீக்கம், புற்று நோய், மற்றும் நச்சுத்தன்மையிலிருந்து நோய்கள்  ஏற்படுகின்றன. 1980 களின் நடுப்பகுதியில் வளர்ந்த நாடுகளில் இறுதியாகத் தடை செய்யப்பட்ட வரை, அஸ்பெஸ்டோஸ் கப்பல் கட்டுமானத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. ஒரு கப்பலிலிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிற அஸ்பெஸ்ட்டாஸ் எடை மட்டுமே 20 டன். 600 கப்பல்கள் ஆண்டுக்கு அலாங் கடற்கரையில் உடைக்கப்படுகின்றன. 12 மில்லியன் கிலோ அஸ்பெஸ்ட்டாஸ் கடற்கரையில் கொட்டப்படுகின்றன. 

1300 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் இரும்புகள் சூடாகும்  பொழுது வெளியாகிற வாயுக்களும், புகையும் நேரடியாக நுரையீரலைப் பாதிக்கின்றன. இங்குப் பணி  புரிகிற நான்கில் ஒருவருக்கு புற்றுநோய் இருந்தது  கண்டறியப்பட்டது.  உலகின் பல நாடுகளிலும் கப்பல் உடைக்கும் பணி தடை செய்யப்பட்டது.  வளர்ந்த நாடுகள் பலவும் உடைக்க இருக்கிற கப்பல்களை விஷ கழிவுகளுடன்  ஏழ்மையான நாடுகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். உலகத்தில் கப்பல் உடைக்கும் தொழிலில் இருப்பது ஆசிய நாடுகள்தான். இந்தியா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான். அலாங் தான் உலகின் மிகப் பெரிய கப்பல் உடைக்கும் இடம்.  கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருக்கிற Gadani கப்பல் உடைக்கும் இடத்தில் ஆயில் டேங்கர் வெடித்து  26 பேர் இறந்தனர். அதனை அடுத்துக் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எல்பீஜி டேங்கர் வெடித்து 7 பேர் இறந்தனர். பாகிஸ்தான் அரசு உடனடியாக கப்பல் உடைக்கும் தொழிலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என  அறிவித்தது. 

’கப்பல் அதன் ஆயுள் முடிந்தபின் என்னவாகும்?’- நம்பமுடியாத ஓர் அத்தியாயம் #ShipBreakingStories

இப்போது உலக நாடுகள் பலவும் கப்பல் உடைப்பதில் பல விதி முறைகளைக் கொண்டு வந்திருக்கின்றன. கனடா போன்ற நாடுகள் விஷக் கழிவுகளை ஏற்றுமதி செய்வதை தடை செய்திருக்கிறது. சர்வதேச கடல் எல்லைகளைக் கடக்கிற கப்பல்கள் பலவும் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே அந்தந்த நாட்டின் எல்லைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. விஷக் கழிவுகள் இருக்கிற கப்பல்கள் உடனடியாக திருப்பிவிடப்படுகின்றன. இந்தியா 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு கப்பல் உடைக்கும் தொழிலில் பல கட்டுப்பாடுகளை விதித்தது.  டிசம்பர் 31, 2005 அன்று பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த  Clemenceau என்னும் கப்பல் உடைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் கப்பலில் அதிக விஷக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 தேதி உச்ச நீதிமன்றம்  Clemenceau கப்பலைத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.  தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றிற்கு இந்திய அரசு  முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது.  இந்தியாவில் இந்தத் தொழிலுக்கு மிகப் பெரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஆண்டுக்கு 20 கப்பல்கள் என்கிற விகிதத்தில் கப்பல் உடைக்கும் பணி இப்போது  நடைபெறுகிறது.  2017 ஆம் ஆண்டுக் கணக்கின்படி அலாங் நகரில்  11 பேர் இறந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. 

பல பேருடைய உயிரையும் வாழ்வையும் பறித்த கப்பல் உடைக்கும் தளம் இப்போதும் செயல்படுகிறது.