Published:Updated:

``பென்டகன் கட்டுப்பாட்டில் பிரேசில் நீர்த்தேக்கம்!" - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 11

இந்த எதிர்ப்பு எனக்கு மட்டுமோ என் கட்சிக்கு மட்டுமோ இல்லை. முற்போக்கு ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் அனைவருக்கும் எதிரானது. சமூக அமைப்புகளுக்கு, தொழிலாளர்களுக்கு, உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு

``பென்டகன் கட்டுப்பாட்டில் பிரேசில் நீர்த்தேக்கம்!" - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 11
``பென்டகன் கட்டுப்பாட்டில் பிரேசில் நீர்த்தேக்கம்!" - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 11

2016-ம் ஆண்டு பிரேசிலின் முதல் பெண் அதிபரான டில்மா ரூசெஃப் (Dilma Rousseff) தற்போதைய அதிபரான மைக்கெல் டெமெரால் அரசியல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டில்மா ரூசெஃப் பிரேசில் மீது படிந்திருந்த ஊழலைக் களையெடுக்கக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்தார். அவர், வெளிநாட்டு முதலீடுகள் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்தார். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அதனால் அவருக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பை அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் உதவியுடன் அந்தத் தனியார் முதலீட்டாளர்கள் வெற்றிகரமாகச் செய்துமுடித்தார்கள். கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தனது ஆட்சியைக் கலைத்த நாளன்று முன்னாள் அதிபர் பேசியது கவனிக்கவேண்டியது.

``இந்த எதிர்ப்பு எனக்கு மட்டுமோ என் கட்சிக்கு மட்டுமோ இல்லை. முற்போக்கு ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் அனைவருக்கும் எதிரானது. சமூக அமைப்புகளுக்கு, தொழிலாளர்களுக்கு, உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு, கலாசாரப் பாதுகாவலர்களுக்கு, கறுப்பின மக்களின் உரிமைகள், பூர்வகுடிகளின், பெண்களின் உரிமைகளுக்குப் போராடுபவர்கள் என்று அனைவருக்கும் எதிரானது."

அவர் சொல்வது உண்மைதானா இல்லை வழக்கமான வெற்று அரசியல் குற்றச்சாட்டுகளா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் மொத்த தென்னமெரிக்க அரசியல் சூழ்நிலையையும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்குமுன் கௌரானி நீர்த்தேக்கத்தைப் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

2016-ம் ஆண்டு மே மாதம் அர்ஜென்டினா அதிபர் மௌரிசியோ மாக்ரி (Mauricio Macri) அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனுக்கு ஓர் ஒப்புதல் வழங்கினார். டிரிப்பிள் பார்டர் (Triple border) என்றழைக்கப்படும் அர்ஜென்டினா, பிரேசில், பாராகுவே ஆகிய மூன்று நாடுகளின் எல்லைப் பகுதியான அமேசான் காட்டுக்குள் அமெரிக்கா தனது ராணுவத் தளவாடங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்பதே அந்த ஒப்புதல். அதன்படி அவர்கள் அமைத்திருக்கும் ராணுவத் தளம் அந்த மூன்று நாடுகளின் நீராதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கௌரானி நீர்த்தேக்கத்துக்கு அருகில்தான். அந்தப் பகுதி பல நாள்களாகப் போதை மருந்துக் கடத்தல்களுக்கும், லெபனானின் ஹெஸ்பொல்லாஹ் (Hezbollah) என்ற தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டவும் பயன்படுவதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்த அங்கு அமெரிக்க ராணுவத்தின் பங்கு முக்கியமென்றும் இதற்குப் பெண்டகனால் காரணம் சொல்லப்பட்டது.

இதற்கான முயற்சிகள் இப்போதில்லை 2004-ம் ஆண்டிலிருந்தே நடைபெற்று வருகிறது. முதலில் செமிடா (CEMIDA) என்ற முற்போக்குப் போராட்டக்காரர்களைத் தீவிரவாதக் கும்பல்கள் என்று குற்றம்சாட்டி அங்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றது. அது முடியாமல் போகவே இப்போது ஹெஸ்பொல்லாஹ் தீவிரவாத அமைப்பென்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. ராணுவ ஆதிக்கத்தின்மூலம் எளிமையாக கௌரானியை தங்கள் வசமாக்கிக்கொள்ளலாம். அது மிகவும் எளிமையானது. இப்போது அங்கு அமெரிக்க ராணுவ ஆதிக்கம் நிலவி வருவது அங்கு வாழும் பூர்வகுடி மக்களைப் பாதித்துள்ளது. கௌரானியிலிருக்கும் நீரைப் பயன்படுத்துதல், அதில் மீன் பிடித்தல், பயணித்தல் போன்றவற்றில் அவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்க ராணுவம்.

பிரேசில் அதிபர் டெமெருக்கு அமெரிக்காவுடனான ராணுவ உடன்படிக்கை தனது ஆட்சியைத் தக்கவைக்கத் தேவைப்படுகிறது. அதனால் வாஷிங்டனுக்கும் சாவோ பாலோவுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்த அவர் தீவிரம் காட்டிவருகின்றார். இதைப் பயன்படுத்தித் தங்கள் லாபத்தைப் பெருக்கிக்கொள்ள அமெரிக்காவும், அதன் தனியார் நிறுவனங்களும் முயல்கின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த நவம்பர் மாதம் பிரேசில், பெரு, கொலம்பியா இணைந்து பிரேசிலில் நடத்திய ராணுவப் பயிற்சி முகாம்களில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 50 அதிகாரிகள் கலந்துகொண்டனர். வலதுசாரி அரசுகள் ஆட்சியிலிருக்கும் நாடுகள் இணைந்து கார்ப்பரேட் கொள்கைகளைப் பின்பற்றத் துடிப்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள் அந்நாடுகளின் சூழலியல் ஆர்வலர்கள்.

தண்ணீர் தனியார்மயம் இந்த ஒரு நீர்நிலையில் மட்டும் நடைபெறவில்லை. 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தென்னமெரிக்காவின் தண்ணீர் அரசியல் உலக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துவருகிறது.

2000-ம் ஆண்டில் நடந்த பொலிவியன் தண்ணீர் போரிலிருந்து தொடங்குகிறது அவர்களின் தண்ணீர் அரசியல். சுயமரியாதை மற்றும் அறைகூவல்: உலகமயமாக்கலில் பொலிவியா எதிர்கொண்ட சவால்கள் (Dignity and Defiance: Stories from Bolivia's Challeges to globalisation) என்ற புத்தகத்தில் ஜிம் ஷல்ட்ஸ் (Jim Shultz) இப்படிக் குறிப்பிட்டிருப்பார்,

``இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் பெக்டெல், இத்தாலியின் எடிஸன், ஸ்பெயினின் அபெங்கோவா போன்ற நிறுவனங்களுக்குப் பொலிவிய அரசு கொச்சபம்பாவின் தண்ணீர்மீது அதிகாரத்தை வழங்கியது. அவர்களுக்கு நாற்பது ஆண்டுகள் ஒப்பந்தமும் அதுவரை ஒவ்வோர் ஆண்டும் 16% லாபத்தை மக்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாமென்றும் அவர்கள் ஒப்பந்தம் போட்டார்கள். அதில் கையெழுத்திட்ட எந்த அரசு அதிகாரியும் அது மக்களை எந்த அளவுக்குப் பாதிக்குமென்பது பற்றிச் சிறிதளவும் சிந்திக்கவில்லை."

Photo Courtesy: Reuters

2011-ம் ஆண்டு நியூமோண்ட் என்ற கார்ப்பரேட் சுரங்கத் தொழிற்சாலை வடக்குப் பெருவில் தங்கம், செம்பு போன்ற உலோகங்களை வெட்டியெடுக்க ஒப்பந்தம் போட்டது. அந்தப் பகுதியிலிருந்த நீர்நிலைகளைப் பயன்படுத்த முடியாத வகையில் மாசாக்கியதால் மக்கள் வெகுண்டெழுந்தனர். பொலிவியாவைப் போல் மற்றுமொரு தண்ணீர் போர் மக்களால் முன்னெடுக்கப்பட்டது. தண்ணீருக்குத் தனியார் நிறுவனம் உரிமை கொண்டாடுவதென்பது கொலம்பியாவிலும் நடைபெற்றது. கனடாவைச் சேர்ந்த கிரேஸ்டார்ஸ் ரிசோர்சஸ் லிமிடெட் (Greystores resource ltd) என்ற நிறுவனம் அங்கோஸ்டுரா (Angostura) என்ற இடத்தில் சுரங்கம் அமைத்துத் தங்கம் வெட்டியெடுக்கிறது. அதற்கு அருகில் )பாரமோஸ் (paramos) என்ற வகைத் தென்னமெரிக்காவின் ஈரநிலம் நிறைந்த பகுதியுள்ளது. அதன் நீர்வளம் முழுவதையும் இந்தச் சுரங்கத் தொழிற்சாலைகள் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் இன்னொரு கனடிய நிறுவனம் சிலி நாட்டில் மபுஷே பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரமான பாங்கி (Panqui River) நதியில் அணை கட்டி நீர்மின் நிலையம் அமைக்க முயன்றுவருகிறது. மெக்சிகோவின் பூர்வகுடிகளான யாக்கி (Yaqui) இன மக்களின் வாழ்வாதாரமான இண்டிபென்டென்சியா (Independencia) என்ற கால்வாய் தொழிற்சாலைகளும் பன்னாட்டு நிறுவனங்களும் நிறைந்த ஹெர்மொசில்லோ (Hermosillo) என்ற தொழில் நகரத்துக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது. அவர்கள் அதிகம் வாழும் ஸொனோரா என்ற பகுதியில் போடப்பட்ட மீத்தேன் வாயுக் குழாய்கள் அவர்களின் விவசாயப் பயன்பாட்டுக்கான நீர்நிலைகளைப் விஷமாக்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு தனியார் நிறுவனத்துக்கு இந்த அளவுக்குச் சக்தியிருக்கிறதா. அதனால் எப்படி இத்தனை நாடுகளின் மக்களைச் சுரண்ட முடிகிறது. இதில் ஒரு நாட்டில் கூடவா அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. தென்னமெரிக்காவில் ஆட்சிக் கவிழ்ப்புகள் வெகுசாதாரணமாக நடைபெறும். இன்று ஒருவர் பதவியேற்பார் அடுத்த மாதமே மற்றொருவர் ஆட்சிக்கு வந்து நான்தான் அதிபரென்று அறிவிப்பார். பொலிவியாவின் தண்ணீர் போருக்குப் பிறகு பதவிக்கு வந்து வெளிநாட்டு முதலீடுகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்த இவோ மொராலெஸ் (Evo Morales) என்ற அதிபருக்கு எதிராகவும் இதுபோல் பலமுறை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அவருக்கு மக்களிடமிருந்த செல்வாக்கு அதைத் தடுத்து நிறுத்தியது. இப்போது பொலிவியாவின் கடுமையான தண்ணீர்ப் பஞ்சமும் அதற்கு அவர் முறையாக நடவடிக்கைகளை எடுக்காததும் மக்களிடமிருந்த செல்வாக்கைக் குறைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி தனியார் தலையீடுகளால் பஞ்சத்தைச் சரிசெய்யப் போவதாகச் சில தனியார் நிறுவனங்கள் பேசிவருகின்றன. அதேபோல் அதிகமான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் சிக்கியவர் வெனிசுவேலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் (Hugo Chavez). ஹைடியில் ஜான் பெர்டிராண்டு ஆரிஸ்டைட் (Jean-Bertrand Aristide) என்ற அதிபருக்கு எதிராக நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு, ஹோண்டியூரா அதிபர் மேனுவேல் ஸெலாயா (Manuel Zelaya) கோஸ்டா ரிகாவில் இரவு நேரத்தில் போட்டிருந்த பைஜாமாவோடு வெளியேற்றப்பட்டது, ஈக்வடாரில் ராணுவத்தையும், போலீஸையும் விலைக்கு வாங்கி அவர்களை வைத்து ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி அதிபர் ரஃபேல் கோரியா (Rafael Correa) மீதே தடியடி நடத்தியது என்று தென்னமெரிக்காவின் உலகமயமாக்கல் வரலாற்றில் அவர்களின் தண்ணீருக்காகவும் இயற்கை வளங்களுக்காகவும் தனியார் கொள்கை ஆதரவாளர்களால் தூண்டப்பட்ட வன்முறைகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் நெடுநாளைய தேவைகளைப் பாதுகாக்காமல் விரைவான லாபத்துக்காகச் சுற்றுச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். விலைமதிப்பற்ற அனைவராலும் பங்கிடப்பட வேண்டிய நமது சுற்றுச்சூழலும் இயற்கை வளங்களும் கனிந்து கையில் விழும் பழங்களைப்போல் பன்னாட்டு நிறுவனங்களிடம் விழுந்துகொண்டிருக்கின்றன. உலகம் இதுவரையில்லாத மிக மோசமான அபாயங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

- தொடரும்