Published:Updated:

"நிழல் தர மட்டுமா சாலையோர மரங்கள்?!”- மரங்களின் சூழலியல் தேவைகளும் சில உண்மைகளும்

"நிழல் தர மட்டுமா சாலையோர மரங்கள்?!”- மரங்களின் சூழலியல் தேவைகளும் சில உண்மைகளும்
"நிழல் தர மட்டுமா சாலையோர மரங்கள்?!”- மரங்களின் சூழலியல் தேவைகளும் சில உண்மைகளும்

இருப்பதிலேயே எளிமையான முறைகளைக்கூடச் செய்யாமல் இருக்கும் மரங்களையும் வெட்டிச் சாலைபோடுவதில் என்ன பயனைப் பெற்றுவிட முடியும்?

ட்டு வழிச் சாலைக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எந்தத் தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசாங்க நலத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது அரசியலமைப்புச் சட்டப்படி சரியென்ற கோணத்தில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நலத்திட்டத்துக்காகப் பலநூறு மரங்கள் வெட்டப்பட்டுச் சாலைகளைப் போடுவதாகத் திட்டமிடுகிறார்கள். ஆனால், மரங்களை வெட்டிச் சாலை போடக் கூடாது, சாலைக்கும் அருகில்கூட மரங்களை வளர்க்கத்தான் வேண்டுமென்று கற்றுக் கொடுக்கப்பட்ட தலைமுறைகள் நாம். அதன் பயனை மறந்து செயல்படுபவர்களுக்குச் சாலையோரத்தில் அவை இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அறிவியலோடு புரியவைக்க வேண்டியது அவசியமாகிறது.

சாலையோர மரங்கள் இல்லையென்றால்...

வாகனங்களிலிருந்து வெளியாகும் கரிம வாயுதான் காற்று மாசு மற்றும் உலக வெப்பமயமாதலின் மிக முக்கியக் காரணியென்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதோடு நைட்ரஸ் ஆக்சைடு என்ற வாயுவையும் வெளியேற்றுகிறது. இதுதான் புகைமூட்டம் போன்றதொரு தோற்றத்தை சுற்றுச்சூழலில் ஏற்படுத்துகின்றது. இதை அதிக அளவில் எடுக்கும்போது சுவாசக் கோளாறில் தொடங்கிப் பல்வேறு சுவாசம் சார்ந்த பிரச்னைகளுக்கு நாம் ஆளாக நேரிடும். இவை இரண்டையும்விடப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருள்களை கார்களும் அதைவிடப் பெரிய வாகனங்களும் ஏற்படுத்துகின்றன. பாலிசைக்லிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன் (Polycyclic Aromatic Hydrocarbon) என்ற வகைத் துகள்பொருள்களை அவை வெளியிடுகின்றன. அது விஷத்தன்மை வாய்ந்தது. புற்றுநோய் போன்ற தீவிரமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது. ஈயம் போன்ற ஆபத்தான தாதுகளையும் குறிப்பிட்ட அளவில் அவை நுண்துகள்களாக வெளியேற்றிக் கொண்டேயிருக்கின்றன. அது நமது சுவாசத்தில் கலப்பதால் மூளைச் செயல்பாடுகள் வரை பாதிப்புகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதீதப் போக்குவரத்து நெரிசலில் நாம் சிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதைக் கடந்துவந்த பிறகும்கூடச் சில நிமிடங்களுக்கு நாம் மனதளவில் கொஞ்சம் இறுக்கமடைந்து கடுகடுப்பாகவே இருப்போம். இதைப் பலரும் சுயமாகவே உணர்ந்திருப்போம். அதற்குக் காரணம் இந்த ஈயத் துகள்களை நாம் நுகர்வதுதான். இவற்றோடு செம்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுகளின் துகள்கள் வாகனத்தின் டையர்களிலும் பிரேக்குகளிலுமிருந்து வெளியேறுவதால் அவையும் காற்றின் மூலம் நமது சுவாசத்தில் கலக்கின்றன.

சாலையோர மரங்கள் இருந்தால்...

கரிம வாயுதான் தாவரங்களின்  ஒளிச்சேர்க்கைக்குத் துணைபுரிகின்றன. அவை நமக்குக் கேடு விளைவித்தாலும், தாவரங்களுக்கு அவை நல்லதுதான். கரிம வாயுவை உறிஞ்சிக்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்கும். அதனால் கரிம வாயுவை வெளியேற்றும் வாகனங்களால் யாருக்கும் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. நைட்ரஸ் ஆக்சைடு வாயு வாகனங்களிலிருந்து அதிகமாக வெளியாகின்றன. அது நமக்கு ஆபத்துதான். ஆனால், அதைத்தான் நாம் விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாகத் தாவரங்களின்மீது பிரயோகிக்கிறோம். அதை இங்கு மரங்கள் தாமாகவே ஈர்த்துக்கொண்டு நம்மை உடல்நிலைக் கேடுகளிலிருந்து காப்பாற்றுகின்றன. அதேசமயம் விவசாய உரங்களில் நைட்ரஜனைப் பயன்படுத்துவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த வாயுவின் மூலக்கூறுகள் உடைந்து மண்ணோடு கலப்பதால் மண்ணின் உரமாகவும் மாறிவிடுகிறது. அது அப்பகுதியின் பசுமையை மேலும் செழிப்பாக்கும். அது இன்னும் அதிகமான ஆக்சிஜன் உற்பத்திக்கு வழிவகுக்கும். இன்ஜினிலிருந்து வெளியாகும் பாலிசைக்லிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன் தாவரங்களுக்கோ நிலத்துக்கோ எந்தப் பயனையும் நல்குவதில்லை. இருப்பினும் அவற்றை மரங்கள் ஈர்த்துத் தன் வழியாக நிலத்துக்குக் கடத்துகிறது. அதுபோக வாகனத்திலிருந்து வெளியாகும் ஈயம், செம்பு, துத்தநாகம் போன்ற தாதுத் துகள்களை மண் உள்ளிழுத்துக்கொள்ள மரங்கள் துணைபுரிகின்றன. இதனால் அத்தகைய ஆபத்தான வாயுக்களையும் தாதுத் துகள்களையும் நம்மைச் சுவாசிக்கவிடாமல் கவசமாகச் செயல்படுகின்றன சாலையோர மரங்கள். தாதுத் துகள்களைச் சுவாசிப்பது தாவரங்களுக்கும் நல்லதில்லைதான். இருந்தாலும் அவற்றை நமக்காகச் சுவாசிக்கின்றன மரங்கள்.

கூட்டநெரிசலான சாலைகளில் வெளியாகும் தூசுப் படலங்கள் படியாமல் காற்றில் சுழன்றுகொண்டேயிருக்கும். அவை சாலையோரங்களில் பயணிக்கும் சிறுவாகன ஓட்டிகளின் சுவாசத்தை எரிச்சலைடையச் செய்யும். அதோடு வாகனங்கள் மீதும் நம்மீதும் அந்தத் தூசுகள் படியத் தொடங்கும். மரங்களும் புதர்களும் சாலையோரத்தில் இருந்தால் மரத்தண்டுகளும் இலைகளும், செடிகளும் இந்தத் தூசுகளைத் தம்மீது படியவைத்துச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும். ஓய்வற்ற சாலையோரத்தில் இருக்கும் மரங்களுக்கும் சாலையிலிருந்து வெகுதொலைவிலிருக்கும் மரங்களுக்கும் வித்தியாசங்களைக் கவனித்தால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

அழுக்கைத் தன்மீது பூசி, விஷத்தைத் தானுண்டு தன் சுற்றத்தைக் காக்கின்றன மரங்களென்ற சமூக ஆர்வலர்கள். சூழலைப் பாதுகாக்க நினைத்தால் சாலையோர மரங்களை அதிகப்படுத்த வேண்டும். இருப்பதிலேயே எளிமையான முறைகளைக்கூடச் செய்யாமல் இருக்கும் மரங்களையும் வெட்டிச் சாலைபோடுவதில் என்ன பயனைப் பெற்றுவிட முடியும்?

அடுத்த கட்டுரைக்கு