Published:Updated:

``உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கு!" - சொல்வது பாம்பே ஐ.ஐ.டி

``உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கு!" - சொல்வது பாம்பே ஐ.ஐ.டி
``உங்க உப்புல பிளாஸ்டிக் இருக்கு!" - சொல்வது பாம்பே ஐ.ஐ.டி

"உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா" டிவி-யில் வரும் அந்த விளம்பரத்தைப் பார்க்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. பேஸ்ட்ல உப்பு இருக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும்; நீங்க தினமும் பயன்படுத்துற உப்புல பிளாஸ்டிக் இருக்குறது உங்களுக்குத் தெரியுமா. இதை ஓர் ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறது பாம்பே ஐ.ஐ.டி. 

சுத்தமான உப்பு கிடைப்பது சந்தேகம்தான்

உலகம் முழுவதிலுமே உப்பு என்பது சமையலில் அத்தியாவசியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உப்பை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. ஒரு வருடத்தில் அளவிற்கு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் அளவு 26 மில்லியன் மெட்ரிக் டன்கள். இதுதான் உணவுக்காகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அப்படித் தினமும் பயன்படுத்தும் பொருள் ஒன்றில் பிளாஸ்டிக் கலந்திருப்பது நிச்சயமாகக் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ கடலை மிகப்பெரும் குப்பைத்தொட்டியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நாம் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களில் மிகக் குறைந்த அளவு மட்டுமே மறுசுழற்சிக்குச் செல்கிறது. அதில் பெரும்பகுதி கடலையும், நிலத்தையுமே சென்றடைகிறது. அப்படிக் கடலில் போய்ச் சேரும் பிளாஸ்டிக் பொருள்கள் காலப்போக்கில் மிக நுண்ணிய துகள்களாக மாற்றம் பெறுகின்றன. கண்களுக்குத் தட்டுப்படும் பெரிய பிளாஸ்டிக் பொருள்களைக் கூட ஒரு வழியாக அகற்ற முடியும். ஆனால் இந்த நுண்ணிய துகள்களை நீரிலிருந்து பிரித்தெடுப்பது இயலாத ஒன்று. இப்படிக் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பொருள்களால் கடல்வாழ் உயிரினங்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஆனால், இதனால் மனிதர்களுக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லையே... பின்னர் எதற்காக நாம் கவலைப்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்குப் பதில்தான் இந்த ஆய்வின் முடிவு.

பாம்பே ஐ.ஐ.டி-யின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பல்வேறு நிறுவனங்களின் உப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வின் மூலமாக ஒரு கிலோ உப்பில் 63.76 மைக்ரோகிராம் (0.063 மி.கி) அளவுக்கு நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

எட்டு முன்னணி நிறுவனங்களின் உப்புகள்

கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் எட்டு முன்னணி நிறுவனங்கள் விற்பனை செய்யும் உப்புகளில், ஒவ்வொரு நிறுவனத்திலிருந்து மூன்று பாக்கெட்டுகள் சூப்பர் மார்க்கெட்களில் இருந்தும், உள்ளூர் கடைகளில் இருந்தும் பெறப்பட்டன. அவையனைத்துமே வெவ்வேறு தயாரிப்புத் தேதி மற்றும் தயாரிப்பு எண்களைக் கொண்டவை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நிறுவனங்களில் ஆறு குஜராத்தைச் சேர்ந்தவை; மீதமுள்ள இரண்டும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. இவற்றைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அந்த மாதிரிகளில் மைக்ரோபிளாஸ்டிக் பைபர்கள், PET, பாலிஎத்திலீன் எனப் பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் PET என்பது பிளாஸ்டிக் பாட்டில்கள், வாட்டர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுபவை. பாலியெஸ்டர் மற்றும் பாலிமைட் என்பவை துணிகள் தயாரிப்பு துறையில் பயன்படுத்தப்படுபவை. பாலிஎத்திலீன் போன்றவை பேக்கேஜிங்கிற்காகப் பயன்படுபவை.

உப்பில் எப்படி பிளாஸ்டிக் துகள்கள் கலக்கின்றன?

கடல் நீரை உப்பளங்களில் தேக்கி வைத்து ஆவியாக்குதல் மூலமாக உப்பை உருவாக்குவது என்பது உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் ஒன்று. இதன் மூலமாக உப்பை அதிகமாக உற்பத்தி செய்ய முடியும் என்பதால் பல நூறு ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த முறையில் கடல் நீரை உப்பளங்களில் தேக்கி வைப்பார்கள், சூரிய ஒளியினால் நீர் ஆவியாகி உப்பு மட்டும் இறுதியாகக் கிடைக்கும். தற்பொழுது கடல் நீர் மாசுபட்டிருப்பதால் நீரில் கலந்திருக்கும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களும் உப்போடு கூடவே தங்கி விடுகின்றன. அதன் பிறகு உப்பு பெரிதாகச் சுத்திகரிப்பு செய்யப்படுவதில்லை அப்படியே பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் ஒருவர் சராசரியாக 5 கிராம்கள் உப்பை ஒருவர் எடுத்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொண்டால் ஒரு வருடத்தில் அவர் உட்கொள்ளும் நுண்ணிய பிளாஸ்டிக் பொருள்களின் அளவு 117 மைக்ரோகிராம்கள் (0.117 மி.கி) என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒரு மனிதன் வருடத்துக்கு 117 மைக்ரோகிராம்கள் அளவுக்கு பிளாஸ்டிக்கை உட்கொள்வதால் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை எனக் கூறுகிறார்கள் இவர்கள்.

"கடலிலிருந்து பெறப்படும் உப்பில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபித்துள்ளன, தற்பொழுது எங்களது ஆய்வும் அதை உறுதிப்படுத்துகிறது" என்கிறார் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த உதவி பேராசிரியர் அம்ரிதான்ஷு ஸ்ரீவாஸ்தவ்.

"கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பாலானவை ஆறுகள் மூலமாகவும், கழிமுகப்பகுதிகள் மூலமாகவுமே உள்ளே நுழைகின்றன. எனவே, அதன் அருகே இருக்கும் நிலப்பகுதிகளை ஆராயும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம், விரைவில் இதற்கான திட்டம் தொடங்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார் புவியியல் அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன். இது எங்களுக்குக் கிடைத்திருக்கும் முதலாவது மற்றும் சுவாரஸ்யமான ஆய்வறிக்கை என்று கூறும் அவர் கரையோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் தேசியக் கடல்சார் தொழில்நுட்பம் இரண்டும் இணைந்து இந்தியக் கடல் பகுதிகளில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்கான திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றன என்றும் தெரிவித்திருக்கிறார்.

இப்படி உப்பில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலப்பதைத் தடுக்க சில வழிகள் உண்டு என்றும், மணல் வடிகட்டுதல் மூலம் ஓரளவுக்கு இதைத் தடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். மேலும் 85 சதவிகித பிளாஸ்டிக் துகள்களை எடையைக் கொண்டு கணக்கிடுவதன் மூலமாக நீக்கி விட முடியும் என்றும், வேறு சில ஆய்வக முறைகளும் இருப்பதாகக் கூறும் அம்ரிதான்ஷு ஸ்ரீவாஸ்தவ் அதைப் பெரிய அளவில் செயல்படுத்துவதற்கான முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு குப்பை லாரி அளவு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலந்துகொண்டிருக்கின்றன. கடந்த இருபது வருடங்களில் மட்டும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசு இருமடங்கு அதிகரித்துள்ளது. வரும் வருடங்களில் இது இன்னும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். `உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்' என்ற பழமொழியோடு சேர்த்து இனிமேல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தினால் உப்போடு சேர்ந்து பிளாஸ்டிக்கையும் திங்க வேண்டியிருக்கும் என்பதையும் மனிதர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.