Published:Updated:

``ஜேம்ஸ் பாண்டு செய்ததையா பிரிட்டன் செய்கிறது?" -தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 12

படத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சேர்ந்த 007 என்ற ஒரு ரகசிய உளவாளி இயற்கை வளத்தை அந்நாட்டு மக்களிடமிருந்து பிடுங்குவதைத் தடுப்பதற்காகப் போராடுவார். அதுவே நிஜத்தில் மக்களிடமிருந்து பிடுங்குவதற்காகப் போராடுவார்.

``ஜேம்ஸ் பாண்டு செய்ததையா பிரிட்டன் செய்கிறது?" -தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 12
``ஜேம்ஸ் பாண்டு செய்ததையா பிரிட்டன் செய்கிறது?" -தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 12

ஜேம்ஸ் பாண்டு படங்களைப் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. அதன் வரிசையில் குவான்டம் ஆஃப் சொலாஸ் (Quantum of Solace) என்ற படமும் அனைவரும் அறிந்ததே. கதை இத்தாலி, ஆஸ்திரியா, பொலிவியா என்று பல நாடுகளில் பயணிக்கும். ஆனால், கதையின் மூலம் என்னவோ பொலிவியாவில்தான். ஒரு குறிப்பிட்ட தனியார் பெருநிறுவனம் பொலிவியாவிலிருக்கும் ஒரு பெரிய நீர்நிலையைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சி செய்யும். அதற்காக பொலிவியாவின் ராணுவ ஜெனரலை லஞ்சம் கொடுத்து அவர்கள் பக்கம் இழுத்திருப்பார்கள். அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று மட்டுமே. அந்நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்பு செய்யவேண்டும். அதன்மூலம் அவர் ஆட்சியைக் கைப்பற்றி இந்தத் தனியார் பெருநிறுவனத்துக்குச் சாதகமான சட்டங்களை அமலுக்குக் கொண்டுவர வேண்டும். இதைத் தடுப்பதற்குத்தான் ஜேம்ஸ் பாண்டு முயற்சி செய்வார்.

இதை அப்படியே கொஞ்சம் தலைகீழாகச் சிந்தித்தால் அதுதான் தென்னமெரிக்காவின் எதார்த்தமான அரசியல் சூழல். படத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சேர்ந்த 007 என்ற ஒரு ரகசிய உளவாளி இயற்கை வளத்தை அந்நாட்டு மக்களிடமிருந்து பிடுங்குவதைத் தடுப்பதற்காகப் போராடுவார். அதுவே நிஜத்தில் மக்களிடமிருந்து பிடுங்குவதற்காகப் போராடுவார். அவ்வளவுதான் வித்தியாசம். இப்போது இதை அப்படியே சிலியில் பொருத்திப் பார்ப்போம்.

வால்பரைஸோ. சிலியில் ஆண்டஸ் மலைத்தொடரிலிருந்து பசிபிக் கடற்கரைப் பகுதிவரை நீண்டிருக்கும் பகுதி. உலகின் அவோகாடோ தலைநகரமாகப் பார்க்கப்படுகிறது. இங்கு விளையும் அளவுக்கு அதிகமான அவோகாடோக்கள் உலகில் வேறெங்குமே விளைவதில்லை. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அவோகாடோவை ஆசையாகச் சுவைப்பதற்கு இப்பகுதியில் வாழும் மக்கள் தாகத்தில் வாடுகிறார்கள். இந்தப் பழங்கள் அடங்காத தாகம் கொண்டவை. ஒரு கிலோ அவோகாடோக்களை உற்பத்திசெய்ய 2000லிட்டர் தண்ணீரைச் செலவழிக்க வேண்டும். அது நான்குபேர் கொண்ட குடும்பத்தின் ஒரு வாரத்துக்கான குறைந்தபட்சத் தண்ணீர் தேவைக்குச் சமமானது.

சிலி நாட்டில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை அந்த மக்களை அவோகாடோ விவசாயிகளை எதிர்த்துப் போராட வைத்துள்ளது. இந்த விவசாயிகள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் பன்னாட்டு விவசாயிகள். முக்கியமாக பிரிட்டன் விவசாயிகள். அவர்கள் சட்டவிரோதமாக நீர்நிலைகளில் குழாய்கள் அமைத்துத் தண்ணீரைத் திருடுகிறார்கள். மறைமுகமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். இப்படியாக நீர்நிலைகள், நிலத்தடி நீர் என்று அனைத்து நீராதாரங்களையும் தங்களின் லாபத்துக்காகத் திசைதிருப்பிவிட்டதால் அப்பகுதி மக்களின் அடிப்படைத் தண்ணீர் தேவை கேள்விக்குறியாகிவிட்டது. இப்போது அந்த மக்கள் லாரிகளில் விநியோகிக்கப்படும் மாசடைந்த நீரையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கிடைக்கும் நீரில் குடிப்பதும் சமைப்பதும் போக மிச்சத்தை வைத்துத் துணி துவைப்பதா பாத்திரங்களைக் கழுவுவதா என்று சிந்திக்கவேண்டும். இரண்டில் ஏதாவதொன்றைத்தான் செய்யமுடியும். அதற்குத்தான் நீர் மிச்சமிருக்கும். இரண்டையும் செய்யவேண்டுமென்றால் குடிநீரைத் தியாகம் செய்தாகவேண்டும்.

பிரிட்டன் சிலியிலிருந்து 1,34,000 மெட்ரிக் டன்கள் அவோகாடோக்களை ஏற்றுமதி செய்கிறது. சிலியின் மொத்த ஏற்றுமதி 224,000 மெட்ரிக் டன்கள். அதில் பாதிக்கும்மேல் பிரிட்டனுக்குச் செல்கின்றது. ஆண்டஸ் மலைத்தொடரைச் சுற்றியிருக்கும் நாடுகளை ஆண்ட்ரியன் நாடுகள் என்றழைப்பார்கள். பொதுவாக ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் அதன் விலை குறைவாகத்தானே இருக்கவேண்டும். ஆனால், ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளில் விற்கப்படும் அதே விலைக்குத்தான் அவோகாடோக்களை உற்பத்தி செய்யும் இந்த ஆண்ட்ரியன் நாடுகளிலும் விற்கிறார்கள். பெரு, பொலிவியா, சிலி போன்ற ஏழை நாடுகளில் இந்தப் பழத்தைச் சுவைப்பது பற்றிப் பெரும்பான்மை மக்கள் சிந்திப்பதுகூட இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அது ``பச்சைத் தங்கம்". பணக்காரர்களின் பழம்.

2011-ம் ஆண்டு சிலியின் நீர்மேலாண்மை வாரியம் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் ஒரு விசாரணையை மேற்கொண்டது. அதிலிருந்து 65 நிலத்தடிக் குழாய்கள் ஆறுகளிலிருந்தும் மற்ற நீர்நிலைகளிலிருந்தும் தண்ணீரைத் தனியார் பெருவிவசாய நிலங்களுக்குச் சட்டவிரோதமாகக் கொண்டுசெல்வது தெரியவந்தது. அதில் ஒன்றுக்குக்கூட அனுமதியில்லை. அதுமட்டுமன்றி அவர்கள் அளவுக்கதிகமான நீரைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

``தண்ணீர் எப்போதும் மஞ்சள் நிறத்திலும் அழுக்காகவும் தானிருக்கும். பல நேரங்களில் குளோரின் வாடை கடுமையாக அடிக்கும். தண்ணீரைக் காய்ச்சித்தான் குடிக்கிறோம். சில சமயங்களில் அதுவும் பயனற்றதாகி விடுகிறது. அப்போது பாட்டில் தண்ணீரைத்தான் வாங்கிக் குடிக்கிறோம். 2014-ம் ஆண்டு சில தன்னார்வலர்கள் அந்த நீரை ஆய்வுசெய்து பார்த்தார்கள். மனிதக் கழிவுகளில் காணப்படும் சில பேக்டீரியாக்கள் அதிலிருந்தது தெரியவந்தது."

இந்தச் செய்தி தெரியவந்தபோது மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெகுண்டெழுந்தார்கள். போராட்டங்கள் நடத்தினார்கள். நிச்சயம் சரிசெய்வதாக அரசு வாக்குறுதியளித்தது. இது நடந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டன, அந்த நீரைத்தான் அவர்கள் இன்னமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

60 சதவிகிதம் அவோகாடோக்கள் ஐரோப்பாவுக்கு மட்டுமே ஏற்றுமதியாகின்றது. அதில் சிறிதளவுகூட அந்நாட்டு மக்களின் நுகர்வுக்கு ஈடாவதில்லை. ஆனால், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் அவோகாடோக்களைச் சந்தோஷமாகச் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது சுகாதாரமானது, ஆரோக்கியமானது. அவர்களுக்கு அந்தச் சுகாதாரமான அவோகாடோக்களைக் கொட்டிக் கொடுப்பதற்கு சிலி நாட்டுக் குடிமக்கள் கழிவுகள் கலந்த நீரைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிலியில் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தொழில் தர்மம் பற்றியெல்லாம் கவலையில்லை. அவர்களுக்குத் தேவை லாபம். அந்த லாபத்துக்காக எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும் திருடுவார்கள். இயல்பாக இருக்கும் இயற்கையைத் திருடிக்கொள்ளத்தான் அவர்கள் அங்குச் சென்றுள்ளார்கள். அந்நாட்டு மக்கள் அதனால் அனுபவிக்கும் விளைவுகளைச் சரிசெய்வதற்கல்ல. அது அவர்களின் வேலையுமில்லை. அதைச் செய்துகொள்ளத்தான் அரசாங்கம் இருக்கிறது. அரசாங்கத்தாலும் முடியாதபோது அதற்குக் கடனுதவி அளிப்பார்கள். அதற்குக் கைமாறாக மேலும் அதிகமாக வளத்தைச் சுரண்டிக் கொள்வார்கள். விளைவு, மேலும் மோசமான சூழலியல் மற்றும் பொருளாதார நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்.

நாங்கள் அவற்றை உற்பத்தி செய்வதற்குக் காரணம் மக்கள் அவோகாடோவை விரும்பிச் சாப்பிடுவதால்தான் என்கின்றன சில பன்னாட்டு நிறுவனங்கள். ஐ.நா மாமிச உணவு சாப்பிடுவதால் வெளியாகும் பசுமை இல்ல வாயுக்கள் அதிகம் வெளியாகிறது என்று அறிவித்தபோது மேலைநாடுகளில் பெரும்பான்மை மக்கள் சைவப் பிரியர்களாக மாறத்தொடங்கினார்கள். அது மாமிச உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தனியார்களைப் பாதித்தது. அப்போது அதே அளவு லாபத்தைத் தரக்கூடிய சைவ உணவுகளை அவை விளையும் நாடுகளிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யத் தொடங்கியதும் அதை விரும்பிச் சாப்பிட மக்களை ஊக்குவித்ததும் அதே பன்னாட்டு நிறுவனங்கள்தாம். கிட்டத்தட்ட மாமிசத்துக்குத் தேவைப்படும் அதே அளவு நீர்தான் அவோகாடோக்களும் தேவைப்படுகிறது. அதை வாங்குவதற்கு ஆகும் செலவே இந்தப் பழங்களுக்கும் ஆகின்றது. ஒருவேளை இந்தப் பழங்களைச் சாப்பிடுவதை மக்கள் தவிர்த்துவிட்டால் இதேபோல் வேறு ஏதேனும் நிலப்பகுதியில் விளையும் வேறொரு லாபகரமான உணவுப்பொருளைத் தேடிச் சென்றுவிடுவார்கள். இந்த மாதிரியான உணவுப் பொருட்களைச் சாப்பிடவே கூடாதென்று சொல்லவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்கள் அந்த விளைபொருளையும் அதில் செய்யப்படும் உணவுப் பொருள்களையும் மட்டுமே சாப்பிடத் தூண்டுவதால் அந்தத் தேவையை ஈடுசெய்ய அதீத உற்பத்தி அவசியமாகிறது. அதன் விளைவு அந்த உணவுப் பொருள்கள் விளையும் நாடுகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் பற்றாக்குறை.

இந்தப் பிரச்னை அவோகாடோக்களோடு நின்றுவிடவில்லை. தண்ணீர் விட்டான் கொடி என்றழைக்கப்படும் அஸ்பாரகஸ் (Asparagus) என்ற தாவர உணவு பெரு நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு அதி தீவிரமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால் பெரு மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு ஆளாகின்றார்கள். இதைப் பலரும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். உணவு உற்பத்தி தண்ணீர்ப் பற்றாக்குறையை உண்டாக்குகிறது என்று நிறுத்திவிட்டால் மக்களுக்கு உணவு எங்கிருந்து கிடைக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். உணவு உற்பத்தி மிக முக்கியம். ஆனால், அதில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டுமென்பதற்காக மக்களை ஒரே உணவைச் சார்ந்திருக்க வைக்காதீர்கள். அப்படிச் சார்ந்திருக்க வைப்பது சிலி மாதிரியான மோசமான வெளிநாட்டு விளைவுகளோடு உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சேர்த்தே பாதிக்கும்.

- தொடரும்