Published:Updated:

``மீண்டுமொரு காலனியாதிக்கம்... என்ன காரணம்?!" - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 13

ஒரு நெஜப்பாவாசி தனது அன்றாட வாழ்வில் தேவைப்படும் தண்ணீருக்கென்று தனது சம்பளத்தில் பத்து சதவிகிதத்தைச் செலவழித்தாக வேண்டும். இருந்தும் அவர்களுக்குத் தண்ணீர் முறையாகக் கிடைப்பதில்லை. கிடைக்கும் தண்ணீரும் குடிக்கும் தரத்தில் இருப்பதில்லை.

``மீண்டுமொரு காலனியாதிக்கம்... என்ன காரணம்?!" - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 13
``மீண்டுமொரு காலனியாதிக்கம்... என்ன காரணம்?!" - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 13

டிப்படைத் தேவைகளின் முக்கியத்துவம் குறித்து நாம் விவாதிக்கப் போகிறோமென்றால் அதில் எப்போதும் தண்ணீருக்குத்தான் முதலிடம். ஆனால், எவ்வளவுதான் விவாதங்கள் நடத்தினாலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய, முடிவுக்குக் கொண்டுவரப்படாமலே இருக்கின்ற பிரச்னையும் தண்ணீர்தான். அத்தகைய தண்ணீரை ஒரேயொரு பன்னாட்டு நிறுவனம் 30,000 மக்களிடமிருந்து கவர்ந்துவிட்டது. அந்த நிறுவனம் கொக்கோ-கோலா. இது நடந்தது சென்ட்ரல் அமெரிக்காவின் எல் சால்வடாரில் (El Salvador).

நெஜப்பா (Nejapa). தலைநகரமான சான் சால்வடாருக்கு அருகிலிருக்கும் ஒரு குறுநகரம். மினரல் வாட்டர் தொழிற்சாலைகளும், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் நிறைந்திருக்கும் தொழில்நகரம். அங்கு வாழும் மக்களின் அன்றாட நீர்த்தேவைக்கு மிக முக்கியமானது சான் அண்டோனியோ (San Antonio) என்ற நதி. அது அங்கு வாழும் 30,000 மக்களின் குடிநீர்த் தேவை, விவசாயம், கால்நடைப் பராமரிப்பு என்று அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகித்துக்கொண்டிருந்தது. இன்று அதில் ஓடுவது கழிவுகள் நிறைந்த குடிக்கத் தகுதியற்ற மாசடைந்த நீர். விவசாயப் பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததும், தொழிற்சாலைகளால் எடுக்கப்பட்டு விடுவதால் விவசாயமும் அங்கு கேள்விக்குறியாகிப் போனது.

வெறும் 63 லட்சம் மக்கள் வாழும் நாட்டில் 10 லட்சம் பேர் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். கடந்த ஜூலை 2-ம் தேதி நெஜப்பாவிலிருந்து தலைநகரான சான் சால்வடார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகமாகும் தண்ணீர் நிறுத்தப்பட்டதிலிருந்து அங்கு இதுதான் நிலைமை. எண்ணிலடங்கா மக்கள் தண்ணீர் லாரிகளுக்குப் பின்னால் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் அனைவருக்கும் அனைத்து நாள்களும் தண்ணீர் கிடைப்பதில்லை. இன்று ஒருவருக்குக் கிடைத்துவிட்டால் நாளையும் அவருக்குக் கிடைப்பது சந்தேகமே. சில சமயங்களில் மாதத்தின் பாதி நாள்கள் லாரிகளில்கூடக் கிடைக்காமல் தண்ணீரே இல்லாமல் தவிக்கவேண்டிய சூழலும் நிறையபேருக்கு ஏற்பட்டுள்ளது.

நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் திருடுவதை இதற்குக் காரணமாகச் சொல்கிறது எல் சால்வடாரின் நீர் மேலாண்மை வாரியம். திருடுவது அவர்கள்தாம் என்று வாரிய அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களால் அதைக் கேள்வி கேட்க முடிவதில்லை. காரணம், மக்களின் தண்ணீரைத் திருட அரசாங்கம் நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளது. அனுமதியளிக்கப்பட்ட திருட்டைக் கேள்வி கேட்கவும் முடியாமல், மக்களின் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்த்துவைக்கவும் முடியாமல் தவிக்கின்றனர் கீழ்நிலை அதிகாரிகள். என்ன நெருக்கடி ஏற்பட்டாலும் அதில் பாதிக்கப்படுவதென்னவோ வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களே. நெருக்கடி அதிகமாகும்போது நடுத்தர மக்கள்வரை பாதிக்கப்படுவார்கள். அதனால் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படாத உயர்தரக் குடும்பங்களில் வாழ்பவர்கள் இந்தப் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

சுத்தமான குடிநீரும் கொஞ்ச நேரமாவது சுகாதாரமான இடத்தில் இருக்கவேண்டுமென்ற ஆசையோடுதான் பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை 300 பள்ளிக்கூடங்களை மூட வைத்துள்ளது. 2019-ம் ஆண்டு வரவிருக்கும் தேர்தலுக்கான பிரசாரமாகத் தண்ணீர் அடிப்படை உரிமைச் சட்டம் வாக்குறுதிதான் அனைத்துக் கட்சிகளாலும் சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் 2012-ம் ஆண்டே இந்தச் சட்டத்துக்குச் சட்ட வல்லுநர்கள் ஒப்புதல் அளித்துவிட்டனர். ஆனால், இன்னமும் அவர்களின் அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களின் உணவு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சட்டங்களைப் பேசும் பிரிவு 69-ல் இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப் படவில்லை.

``அவர்கள் எங்கள் தண்ணீரை எடுப்பதற்கு அனுமதி கேட்பதேயில்லை. ஆனால், அதே தண்ணீரைத் திரும்பக் கொண்டுவந்து எங்களிடமே விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதை மட்டுமே பயன்படுத்தியாக வேண்டிய அவசியத்துக்கும் எங்களைத் தள்ளியுள்ளார்கள்."

கொக்கோ-கோலாவின் கிளை நிறுவனமான சாப்மில்லர் (SABMiller) என்ற நிறுவனம் அங்கு குளிர்பானங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. மெக்சிகோவுக்குச் சொந்தமான ஒரு பன்னாட்டு நிறுவனமும் தற்போது நெஜப்பாவுக்குள் புகுந்துள்ளது. இது அங்கிருக்கும் நீர்நிலைகளிலிருந்து தண்ணீரை எடுத்து மினரல் வாட்டரை உற்பத்தி செய்துவருகிறது. நெஜப்பாவிலும், எல் சால்வடார் என்ற சிறிய நாட்டின் மற்றப் பகுதிகளிலும் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. பல கோடி ரூபாய் மதிப்புமிக்க சரக்குகளை அவை உற்பத்தி செய்கின்றன. அதில் எதுவுமே அந்நாட்டு மக்களின் அன்றாடச் செலவுகளுக்குள் அடங்கியதில்லை. அவற்றை நுகர இந்த மக்கள் தனியாகச் சம்பாதிக்கவேண்டும். அதிகமான சரக்குகள் வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதியாகின்றன. ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் இந்த மக்களால் அந்தச் சரக்குகளை நுகர முடியாதென்று. தன் சொந்த மக்களின் வளங்களைத் தாரைவார்த்துவிட்டு அமைதியாகச் செயலற்றுக் கிடக்கிறது எல் சால்வடார் அரசாங்கம்.

Photo Courtesy: WaterAid/ Jordi Ruiz Cirera

நெஜப்பா தண்ணீர் சுரங்கம் போன்றது. அதிகமான நீர்வளத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் அதில் எதுவும் அதன் மக்களுக்குக் கிடைப்பதில்லை. தலைநகரத்திலிருந்து 20 கி.மீ தூரமே இருக்கும் நெஜப்பா சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இன்று அது தொழிற்சாலைகளாலும், அதன் நீர்நிலைகள் தொழிற்சாலைக் கழிவுகளிலும் நிரம்பி வழிகின்றது. இப்போது அது மத்திய அமெரிக்காவின் மக்கள் தொகை அடர்த்தியான குறுநகரம். அளவான இயற்கை வளத்தின்மீது நடத்தப்பட்ட தடங்கலற்ற போட்டிகளின் தவிர்க்கமுடியாத சேதாரங்களாக, பன்னாட்டு நிறுவனங்களின் பணப் பசியின் அடையாளங்களாக நிற்கின்றது எல் சால்வடாரின் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நெஜப்பா. 

சென்ட்ரல் அமெரிக்காவிலேயே அதிகமான காடழிப்புக்கு ஆளானது எல் சால்வடார்தான். இயற்கைப் பேரிடர்களில் அதிகமான சேதங்களைச் சந்திப்பதும் இதே நாடுதான். எல் சால்வடாரிலிருக்கும் தொழிற்சாலைகளால் அந்நாட்டின் 90 சதவிகிதம் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்துவிட்டது. இப்போது தேசிய அளவில் தண்ணீர்ப் பஞ்சத்தால் சிரமப்பட்டு வருகிறது. நெஜப்பாவின் சான் அண்டோனியோ நதியும் அங்கிருக்கும் ஒரு நீர்த்தேக்கமும்தான் எல் சால்வடாரின் பெரிய மற்றும் மிக முக்கியமான நீராதாரம். இருபது வருடங்களுக்குமுன் இங்கு வரத்தொடங்கிய வெளிநாட்டு முதலீடுகளின் விளைவாகத்தான் அந்நாட்டுச் சூழலியலாளர்கள் இந்தப் பாதிப்புகளைப் பார்க்கிறார்கள்.

ஒரு நெஜப்பாவாசி தனது அன்றாட வாழ்வில் தேவைப்படும் தண்ணீருக்கென்று தனது சம்பளத்தில் பத்து சதவிகிதத்தைச் செலவழித்தாக வேண்டும். இருந்தும் அவர்களுக்குத் தண்ணீர் முறையாகக் கிடைப்பதில்லை. கிடைக்கும் தண்ணீரும் குடிக்கும் தரத்தில் இருப்பதில்லை. அதனால் அவர்கள் பாட்டில் தண்ணீரைச் சார்ந்திருக்க அதற்கும் தனியாகச் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்த மாதிரியான சிக்கல்களைச் சரிசெய்ய வேண்டுமென்று கேட்டும், இதற்குக் காரணமான தனியார் நிறுவனங்களை எதிர்த்தும் கடந்த மார்ச் மாதம் ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரை நோக்கிப் பேரணி நடத்தினார்கள். அவர்கள் வைத்தது ஒரேயொரு கோரிக்கை. தண்ணீரை அடிப்படை மனித உரிமையாக நிர்ணயித்துச் சட்டமியற்ற வேண்டும். அரசாங்கமும் அதற்கு வாக்குறுதியளித்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. அதனால் மீண்டும் ஜூலை 5-ம் தேதி எல் சால்வடார் பல்கலைக்கழக மாணவர்களால் பெரியளவிலான பேரணி நடத்தப்பட்டது. முன்பைவிட அதிகமான மக்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் பேரணி தலைநகரத்தைக் கொஞ்சம் அசைத்துவிட்டது. உடனடியாகப் புதுத் தண்ணீர் மசோதாவுக்கான வரைவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதிலும் சிக்கலான முடிச்சுகளைப் போட்டுவைத்துள்ளது அரசாங்கம்.

புதிய தண்ணீர் மசோதா மேலோட்டமாகப் பார்க்கும்போது தண்ணீர் பொதுவுடைமை என்று கூறுவதுபோல் தெரிகிறது. ஆனால், அதிலிருக்கும் உட்கூறுகள் மக்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய பொறுப்பை, தண்ணீர் விநியோகத்தைத் தனியார் கையில் கொடுக்கவும் வழிவகை செய்யுமாறு வடிவமைத்துள்ளார்கள். இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவரக் கூடாதென்று அந்நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மாறாக அவர்கள் கேட்டதுபோல் தண்ணீரை அடிப்படை உரிமையாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்பானியர்கள் அமெரிக்கா எனும் புது உலகத்தைக் கண்டுபிடித்துக் காலனியமைக்க வந்தபோது அவர்கள் உள்ளூர்வாசிகளின் நீராதாரத்தை அழித்து பற்றாக்குறையை ஏற்படுத்தினார்கள். அதன்மூலம் அந்த மக்களின் தேவைகளைக் கொடுத்து தங்களுக்குக் கட்டுப்பட வைத்தார்கள். இப்போது சென்ட்ரல் அமெரிக்காவில் அந்த வரலாறு மீண்டும் திரும்பிக்கொண்டிருக்கிறது. அந்த மக்கள் மீண்டுமொரு காலனியாதிக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தமுறை அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

- தொடரும்