Published:Updated:

300 கிராம் எடை... 45 செ.மீ நீளம்... பாரி போருக்குப் பயன்படுத்திய தேவாங்கு பற்றி தெரியுமா?!

300 கிராம் எடை... 45 செ.மீ நீளம்... பாரி போருக்குப் பயன்படுத்திய தேவாங்கு பற்றி தெரியுமா?!
300 கிராம் எடை... 45 செ.மீ நீளம்... பாரி போருக்குப் பயன்படுத்திய தேவாங்கு பற்றி தெரியுமா?!

300 கிராம் எடை... 45 செ.மீ நீளம்... பாரி போருக்குப் பயன்படுத்திய தேவாங்கு பற்றி தெரியுமா?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முல்லைக்குத் தேர் கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்த மன்னர் பாரி. இயற்கை மீது அளவில்லாத நேசம் கொண்ட அவர், எதிரிகள் மீது போர் தொடுக்கத் தேவாங்கு என்கிற விலங்கைப் பயன்படுத்தினார் என்ற அரிய தகவல் ஆனந்தவிகடனில் சு.வெங்கடேசன் எழுதிவரும் வேள்பாரி தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவாங்கை எந்த திசையில் அமர வைத்தாலும், அது வடக்குப் பக்கம் திரும்பி அமரும் என்ற ஆச்சர்ய தகவலும் அந்தத் தொடரில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலக அளவில் அழிந்து வரும் பாலூட்டி இனமான தேவாங்கு  அதிக அளவில் கரூர் மாவட்டம் கடவூர் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். மனித இனத்தின் முன்னோடி என்று கருதப்படும் இந்தத் தேவாங்கு செந்தேவாங்கு, சாம்பல் நிறத்தேவாங்கு என்ற இரு வகைகளாக உள்ளது.

இதுபற்றி, நம்மிடம் பேசிய கடவூர் பகுதி சமூக ஆர்வலர் பாலா, ``தேவாங்கு பற்றி அறிய அறிய ஆச்சர்யம் ஏற்படுது. உலக அளவில் அழிந்து வரும் இனமாக இதை இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐ.யூ.சி.என்) அறிவித்துள்ளது. ஆனால், அந்தத் தேவாங்கு இனம் அதிக அளவில் கடவூர் மலைப்பகுதிகளில் வாழ்கிறது. ஒரு வளர்ந்த சாம்பல் நிறத் தேவாங்கு 300 கிராம் எடையும், 45 சென்டிமீட்டர் நீளமும் கொண்டதாகவும் இருக்கும்.

இந்தத் தேவாங்கை வைத்து பாரி மன்னன் எப்படி போருக்குப் பயன்படுத்தினார் என்று ஆச்சர்யம் மேலிடுகிறது. குரங்கு வகையைச் சேர்ந்த இந்தச் சாம்பல் நிறத் தேவாங்குகள் திருச்சி, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதிகள் இணையும் அய்யலூரில் அதிகம் வசிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், கடவூர் மற்றும் அதன் அருகில் உள்ள இலையுதிர்காடுகள், மலைக்குன்றுகள், விவசாயத் தோட்டங்களில், மலைக்காடுகளில் அதிக அளவில் வசிக்கின்றன. இதனால், சமீபத்தில் ஐ.யூ.சி.என் அமைப்பு கரூர், திண்டுக்கல் மாவட்டங்களின் இந்த எல்லைப் பகுதிகளை சாம்பல் நிறத் தேவாங்குகளின் இருப்பிடமாக அறிவித்துள்ளது.

கரூரில் வனப்பகுதிகள் குறைவாக இருக்கின்றன. அதனால்தான், இந்த மாவட்டத்தில் பருவமழை மிகக் குறைவாகப் பொழிகிறது. கடந்த 80 வருடங்களுக்கு முன்பு 63,000 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்டதாக கடவூர் மலை இருந்தது. 1980-களில் அரசுடைமையாக்கப்பட்டு அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கடவூர் மலை வந்தபிறகு, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனப்பகுதிகளில் வசித்து வந்த தேவாங்குகள் கடவூர் மலைப்பகுதிக்கு இடம்பெயர்ந்தன.

இவை மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், புதர்கள் போன்ற இடங்களில் வாழும் தன்மை கொண்டது. இலையுதிர்காடுகள், முட்புதர்காடுகளில் காணப்படும் தாவர வகைகளான திருகுக்கள்ளி, முள் கிழுவை, வெப்பாலை, பொரசு, உசில், வெல்வேல் போன்ற மரக்கிளைகளிலும் விரும்பி வசிக்கக்கூடியவை. 

இந்தத் தேவாங்குகள் தட்டான்பூச்சி, வெட்டுக்கிளி, வண்டுகள் போன்ற பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். இவற்றைச் சாப்பிட தேவாங்குகள் அடிக்கடி மலையை விட்டு கீழிறங்கி விவசாயத் தோட்டப் பகுதிகளுக்கு வருகை தரும். இவற்றைத் தவிர இலைகள், செடி, கொடிகளில் உள்ள கொழுந்து இலைகளையும் உணவாக உட்கொள்ளும். இரவில் மட்டுமே தேவாங்குகள் இரையைத் தேடி பயணிக்கும். பகலில் ஓய்வெடுத்துக்கொள்ளும். கோடைக் காலங்களில் மட்டும் இனப்பெருக்கம் செய்யும் தேவாங்குகள், இரண்டு குட்டிகளை ஈன்றெடுக்கும். தேவாங்கு அந்தக் குட்டிகளை 6 மாதங்கள் வரை பாலூட்டி தன்கூடவே வைத்துக்கொள்ளும். 169 நாள்கள் வரை கருத்தரிப்புக் காலத்தைக் கொண்ட தேவாங்குகள், அதிகபட்சம் 15 வருடங்கள் வரை உயிர்வாழும். முன்பு பறம்பு மலையில் அதிக அளவில் தேவாங்குகள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதைத்தான் வேள்பாரி மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தேவாங்குகளை மலைப்பாம்புகளும், கழுகுகளும் உணவாக உட்கொள்ளும். 

தேவாங்கு இந்தியா, இலங்கையில் அதிகம் வாழ்கின்றன. இதன் ஒவ்வொரு பாகமும் மருத்துவத்துறையில் அதிக அளவில் பயன்படுகிறது என்று சொல்லப்பட்டு, அதிக அளவில் வேட்டையாடப்படுகிறது. இந்தத் தேவாங்கில் எடுக்கப்படும் எண்ணெய் தொழுநோயை போக்குவதாகச் சொல்லப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தேவாங்கை ஊக்க மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.

தேவாங்குக்கு அமெரிக்கா, ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஏக கிராக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால், தேவாங்கை கடவூர் பகுதியிலும் மர்ம நபர்கள் வேட்டையாடும் கொடுமை நடப்பதாக மலையடிவார மக்கள் சொல்கிறார்கள். அதனால், கடவூர் வனப்பகுதியில் தேவாங்கைப் பாதுகாக்கும் பொருட்டு சரணாலயமாக அறிவிக்க வலியுறுத்தி அரசுக்குத் தொடர் கோரிக்கை வைத்து வருகிறோம்.  இந்த மலையில் இயற்கையாக வாழறும்பு உள்ளிட்ட சுனைகள் இருக்கின்றன. அதனால், இந்த மலைப்பகுதியைச் சுற்றுலாத்தலமாக அறிவிக்கச் சொல்லியும் வலியுறுத்தி வருகிறோம். யாரும் அதற்குச் செவிசாய்க்கவில்லை" என்றார் விரக்தியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு