Published:Updated:

தொப்புள் கொடியிலும் நச்சுத் துகள்கள்... கருவில் இருக்கும் சிசுவையும் விடாத காற்று மாசுபாடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தொப்புள் கொடியிலும் நச்சுத் துகள்கள்... கருவில் இருக்கும் சிசுவையும் விடாத காற்று மாசுபாடு!
தொப்புள் கொடியிலும் நச்சுத் துகள்கள்... கருவில் இருக்கும் சிசுவையும் விடாத காற்று மாசுபாடு!

காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் நம் கையை மீறிச் சென்றுகொண்டிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தாய்க்கும் சேய்க்கும் இடையே சுவாசப் பரிமாற்றம் தொப்புள்கொடியின் வழியாகவே நடைபெறும். அந்தத் தொப்புள்கொடியே காற்றுமாசுபாட்டால் பாதிக்கப்பட்டால் எதிர்கால குழந்தைகளின் நிலை என்னாவது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விஷயம் தெரியவந்துள்ளது. அதாவது, மாசுபாடு அடைந்த காற்றிலுள்ள சிறுசிறு துகள்கள் கருவுற்றிருக்கும் தாயின் சுவாசக்குழாய் வழியாக உள்நுழைந்து, பின்னர் நுரையீரலை அடைந்து பின்பு தொப்புள் கொடியை அடைவதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டுக்கும், கர்ப்பப்பை பாதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது ஏற்கெனவே பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம். ஆனால், காற்று மாசுபாடு எவ்வாறு கருப்பையைச் சேதப்படுத்துகிறது என்பது மட்டும் தெரியாமலேயே இருந்தது. எனவே இதைப் பற்றி அறிந்துகொள்வதற்காக இங்கிலாந்தில் உள்ள 5 தாய்மார்களை வைத்து புதிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், 5 பேரின் தொப்புள்கொடியிலுமே நச்சுத்துகள்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இப்படித் தொப்புள்கொடியை அடையும் துகள்கள் விரைவிலேயே தாயின் கர்ப்பப்பையை அடைந்து, அதைச் சேதப்படுத்துவதற்கும் நிறைய சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வில் ஈடுபட்ட லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் லிசா மியாஷித்தா இதுகுறித்து கூறும்போது, ``இது ஒரு கவலை தரக்கூடிய பிரச்னை. மாசுபாடு அடைந்துள்ள காற்றை சுவாசிக்கும் தாய்மார்களின் கர்ப்பப்பையும் பாதிப்படையும். இந்த இரு நிகழ்வுக்கு இடையேயான தொடர்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. கூடுமானவரை கர்ப்பம் அடைந்துள்ள பெண்கள் அதிகம் மாசுபாடு அடையாத வழிகளிலே பயணிப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது" என்கிறார்.

காற்று மாசுபாடு குறித்து முன்பு செய்யப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகள் கூறியுள்ள தகவலின்படி, இது குழந்தையின் முன்கூட்டிய பிறப்பு மற்றும் குறைவான எடையுடன் குழந்தை பிறப்பு, சில குழந்தைகளின் உடல் நிலையில் வாழ்நாள் முழுவதுமான மாற்றத்தையும் இது ஏற்படுத்தி விடுவதாகத் தெரிவித்துள்ளனர். இதுதவிர காற்று மாசுபாடு அடைந்துள்ள நகரத்தில் வாழும் பெரும்பாலான தாய்மார்களின் உடல் நிலையும் மோசமாக உள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

மேலும் காற்று மாசுபாட்டில் கலந்துள்ள நச்சுத்துகள்கள் நுரையீரல் மட்டுமன்றி மனிதனின் பல உடல் உறுப்புகளையும் பாதிப்படையச் செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் செய்த ஆய்வில் இந்த நச்சுத்துகள்கள் மனிதனின் அறிவு ஆற்றலை பாதிப்படையச் செய்வதாகவும், மனித மூளையிலும் இந்த நச்சுத் துகள்களை காண முடிவதாகவும் 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர். மேலே நாம் பார்த்த புதிய ஆய்வானது ஐந்து தாய்மார்களை வைத்து நடத்தப்பட்டது. அவர்கள் யாருக்கும் புகைப்பழக்கமும் இல்லை; மேலும், அவர்கள் ஐவருமே குழந்தையை மிக ஆரோக்கியமான முறையில் பெற்றெடுத்துள்ளனர். ஆனால், அவர்களின் தொப்புள்கொடியில் நச்சுத்துகள்கள் இருந்துள்ளன. அவர்களின் மேக்ரோபேஜ் செல்களைத் தனிமைப்படுத்தி ஆய்வு செய்தபோது அதில் மிக நுண்ணிய பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களும், அதனுடன் நச்சுத்துகள்களும் இருந்துள்ளன.

ஒரு நுண்ணோக்கி பயன்படுத்தி, அவர்களின் 3,500 செல்கள் மத்தியில் 72 நச்சுத் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் துகள்கள்  வடிவத்தை ஆய்வு செய்ய ஒரு சக்திவாய்ந்த எலக்ட்ரான் நுண்ணோக்கி பயன்படுத்தப்பட்டது. அதில் அந்தத் துகள்கள் நுரையீரலில் உள்ள மேக்ரோபேஜ் செல்களில் காணப்படும் நுணுக்கமான துகள்களைப் போலவே தோற்றமளிக்கின்றன எனவும், இந்தக் கறுப்பு நச்சுத்துகள்கள் நஞ்சுக்கொடியின் வழியாகச் சென்று இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன என்பதையும் கண்டுபிடித்தனர். 

இந்த ஆய்வு ஞாயிறன்று பாரிஸில் உள்ள ஐரோப்பிய சுவாச அமைப்பு (ERS) சர்வதேச மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. கருப்பையில் குழந்தைகள் எவ்வாறு நச்சுத் துகள்களால் பாதிக்கப்படுகிறது மற்றும் எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து ஈரோஸ் தலைவர் மற்றும் கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸ் செஸ்ட் மருத்துவமனையில் உள்ள பேராசிரியர் மினா காகா கூறுகையில், ``கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவர்கள் மற்றும் பொது மக்களிடையே காற்று மாசுபாட்டினால் கருவின் மீது ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்கிறார். கருவின் பாதிப்பு தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய மாசுபாடு வரம்புக்கு அப்பால் ஏற்படலாம் என்று குறிப்பிட்டார். உலகளாவிய சுகாதாரத்தில் காற்று மாசுபாட்டின் தாக்கத்தைக் குறைப்பதற்காகத் தூய்மையான காற்றுக்குக் கடுமையான கொள்கைகள் தேவைப்படுகிறது. ஏனென்றால் ஏற்கெனவே தற்கால இளைஞர்கள் சுகாதாரச் சீர்கேட்டால் பலவிதமான பிரச்னைகளை எதிர்கொண்டுவருவதை நம்மால் நேரடியாகக் காணமுடிகிறது.

யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் அந்தோணி சமீபத்தில் குழந்தைகளுக்குக் காற்று மாசுபாட்டின் ஆபத்து பற்றி எச்சரித்தார். காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நுரையீரலைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் வளரும் மூளைகளை நிரந்தரமாகச் சேதப்படுத்தலாம்; இதனால், அவர்களின் எதிர்காலம் கூட கேள்விக் குறி ஆகலாம் எனக் கூறியுள்ளார். ஐரோப்பிய சுவாச அமைப்பு (ERS) மாநாட்டில் வழங்கப்பட்ட தனி ஆய்வு, நீடித்த ஆஸ்துமா கொண்ட குழந்தைகள் நல்ல உடல் நிலையில் உள்ள குழந்தைகளை காட்டிலும் குறைவாகவே கல்வி கற்பதாகக் கண்டறியப்பட்டது. ஆஸ்துமா நீண்டகாலமாகக் காற்று மாசுபாட்டோடு தொடர்பு கொண்ட ஒன்று.

நம்முடைய பூமியை ஒப்படைக்கப்போவது, எதிர்காலச் சந்ததியினரிடம்தான். ஆனால், அவர்கள் கருவிலேயே நச்சுக்காற்றை சுவாசிக்கச் செய்யும் அளவுக்கு இப்போதே காலம் கைமீறிவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு