Published:Updated:

மழைப்பொழிவைத் தொடர்ந்து வறட்சி... வெள்ளம் பாதித்த மாநிலங்களின் நிலை!

சா.ஜெ.முகில் தங்கம்

கேரளாவில் மட்டுல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதே நிலைதான். மிகப்பெரிய வெள்ளமும் அதைத்தொடர்ந்து வறட்சியும் ஏற்பட்டு வருகிறது. எந்த வருடங்களிலும் இல்லாத மாற்றம் இப்போது ஏற்பட்டு வருகிறது.

மழைப்பொழிவைத் தொடர்ந்து வறட்சி... வெள்ளம் பாதித்த மாநிலங்களின் நிலை!
மழைப்பொழிவைத் தொடர்ந்து வறட்சி... வெள்ளம் பாதித்த மாநிலங்களின் நிலை!

டந்த ஆகஸ்ட் மாதம் நூறாண்டுகளில் எவரும் காணாத வெள்ளம் கேரளாவையே புரட்டிப் போட்டது. இயல்பு வாழ்க்கை என்ன, இருக்கும் இடம்கூட மூழ்கிப் போனது. என்ன செய்வது எனத் தெரிவதற்குள் 400க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. வரலாறு காணாத வெள்ளத்துக்கு, இயற்கையைச் சூறையாடியது, முன்னறிவிப்பின்றி அணைகளைத் திறந்தது, இப்படி ஒவ்வொன்றாகக் காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. கேரள மக்களின் மறுகுடியேற்றமே இன்னும் முழுமையாக நடக்கவில்லை. அதற்குள் வெள்ளம் கரைபுரண்டோடிய இடங்களில் எல்லாம் தண்ணீரின் அளவு சட்டெனக் குறைந்து வருகிறது. பல இடங்களில் வறட்சி ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. வெறும் 10, 15 நாள்களுக்காக முற்றிலும் முரணான மாற்றம் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கேரளாவில் மட்டுல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதே நிலைதான். மிகப்பெரிய வெள்ளமும் அதைத்தொடர்ந்து வறட்சியும் ஏற்பட்டு வருகிறது. எந்த வருடங்களிலும் இல்லாத மாற்றம் இப்போது ஏற்பட்டு வருகிறது.

கேரளாவின் ஆறுகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்து வருகிறது. கிணறுகளின் நீர்மட்டமும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. மேலும் நிலத்தடிநீரின் அளவும் கூட மிகவும் குறைந்துள்ளது. கேரளாவில் பல்லுயிர்த்தன்மை அதிகமாக இருக்கக்கூடிய பகுதி  வயநாடு, கடந்த மாத வெள்ளத்தில் அந்தப் பகுதியும் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டது. வயநாடு பகுதியில் பல்வேறு பழங்குடியின கிராமங்களும் ஊர்களும் வெள்ளத்தில் மூழ்கின. ஆனால் அப்பகுதியிலும் தற்போது நீரின் அளவு குறைந்து வருகிறது. சில நாள்களுக்கு முன் அதிக எண்ணிக்கையிலான மண்புழுக்கள் நிலத்துக்கு மேல் வந்து மொத்தமாக இறந்துள்ளன. நிலமானது வறண்டு போகும்போதுதான் மண்புழுக்கள் இறந்துபோகும். மேலும் அந்தப் பகுதியின் மண்கூறு அமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் இப்படி நடக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். பெரியாறு, பரதபுழா, பம்பை, கபினி என வெள்ளம் கரைகடந்து ஓடிய கேரளாவின் பல்வேறு நதிகளில் தற்போது வறண்டு போய் நீர்மட்ட அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. வரலாறு காணாத வெள்ளம் அந்தப் பகுதியின் நிலவியல் கூறுகளையே முற்றிலுமாக மாற்றியுள்ளது எனக் கூறுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

கேரளாவில் மட்டுமல்ல மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், குஜராத், அஸ்ஸாம், நாகலாந்து என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த வருடம் பெருமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்த இடங்களும் தற்போது வறண்ட பிரதேசமாக மாறி வருகின்றன. பருவகாலத்தின் மழை முடிவதற்குள்ளாகவே வெள்ளம் முடிந்து வறட்சி ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது. தற்போதைய பருவகாலத்தில் வெள்ளம் ஏற்பட்ட மாநிலங்களின் சராசரி மழைப்பொழிவை எடுத்து பார்த்தால் இன்னும் அதீத பயம்தான் ஏற்படுகிறது. ஏனென்றால் வெள்ளம் பாதித்த மாநிலங்களில் இந்த ஆண்டின் மழைப்பொழிவு சராசரி மழைப்பொழிவின் அளவை விடக் குறைவாகவே உள்ளது. கேரளா, ஒடிசாவைத் தவிர. குறைவான மழைப்பொழிவினால் எப்படி வெள்ளம் ஏற்பட்டது என்ற கேள்வி எழுகிறதா. இனிமேல் இப்படித்தான் நிகழும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் முன்னமே எச்சரித்துள்ளனர். அதாவது குறைந்த நாள்களில் அதீத மழைப்பொழிவும் திடீரென அதீத வறட்சியும் ஏற்படும். சுற்றுச்சூழல் மாற்றங்கள் உச்சமாக இருக்கும் என்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா முழுவதும் பெய்த மழைப்பொழிவானது கடந்த 5 வருடங்களின் மழைப்பொழிவை விட 6.4% அதிகமானது. பருவகாலத்தில் இந்த ஆகஸ்ட்தான் பொன்னான காலம் என்கின்றனர். ஆனால் மொத்தப் பருவகாலத்தில் இந்தியா முழுவதும் பெய்த மழைப்பொழிவின் அளவானது சராசரி மழைப்பொழிவை விட 8% குறைவாக உள்ளது. தற்போது அது இன்னும் குறைந்து 10% ஆகிவிட்டது. இதனால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 91 முக்கிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. அவற்றில் 50 நீர்த்தேக்கங்களின் அளவு அதிகரித்துள்ளன.

பூவுலகின் நண்பர்களைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் அதீத மழைப்பொழிவு, அதீத வறட்சி குறித்து கூறும்போது, ``இனிவரும் காலங்களில் குறைந்த நாள்களில் ஒட்டுமொத்த மழையும் கொட்டித்தீர்ப்பதும், அதீத வறட்சி வருவதும் சுற்றுச்சூழல் மாற்றம் இல்லை. அவை மனிதனால் ஏற்படுத்தப்பட்ட புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றத்தின் விளைவுகளே. இப்படியான அதீத காலநிலைக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தகாலத்தில் அதீத மழைப்பொழிவால் கிடைக்கும் நீரைச் சேமித்து வைத்து அதனை மீண்டும் பயன்படுத்துவது முக்கியமான யோசனை. நெதர்லாந்தின் ரோட்டர்டோம் நகரில் ஏதேனும் பொது இடங்கள் கட்டமைக்கப்பட்டால் அதற்குக் கீழ் நீர்த்தேக்கங்ள் உருவாக்கப்படுகின்றன. பூங்கா, பஸ் ஸ்டாப் என எவை உருவாக்கப்பட்டாலும் அதற்குக் கீழ் நீர்த்தேக்கம் இருக்கும். அதீத மழைப்பொழிவு, வறட்சிக்கு எல் நினோ காரணமாகச் சொல்லப்பட்டாலும் காலநிலை மாற்றமே முக்கியக் காரணம். இதற்கேற்ப தகவமைத்துக் கொண்டு இயற்கையைத் தக்க வைக்க வேண்டும்" என்கிறார்.

சராசரி மழைப்பொழிவை விட அதிகம் பெய்த பகுதிகளிலும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இப்படிக் கட்டுப்பாடற்ற காலநிலை மாற்றங்கள் எல்லோரையும் எச்சரித்து வருகிறது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரு வாரத்தில் பெய்வதும் இப்படித்தான். இதையெல்லாம் கவனித்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் பல்லாயிரக்கணக்கான கன அடி நீரை இழக்க வேண்டி வரும். அவைதான் அந்த வருடத்துக்கான ஆதாரம். இல்லையென்றால் வறட்சியும் ஏற்படும்.