Published:Updated:

தாமதமாக வந்த எச்சரிக்கை; இந்தோனேசியாவில் தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

தாமதமாக வந்த எச்சரிக்கை; இந்தோனேசியாவில் தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை
தாமதமாக வந்த எச்சரிக்கை; இந்தோனேசியாவில் தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப்பகுதியை (Sulawesi island) 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுலவேசி தீவின் வடமேற்கு கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியது. 20 அடி உயரத்துக்கு எழும்பிய சுனாமி அலைகள் பலு நகரத்தில் பல்வேறு உயிர்களைக் காவு வாங்கியது. மேலும் ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக மாற்றியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பலு (Palu) நகரத்தில் இரண்டு ஹோட்டல்களின் இடிபாடுகளில் மட்டும் 150 -க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்க ராணுவத்தினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவசரக்காலத்தைக் கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தால் தொலைதொடர்பு கருவிகளும் செயலிழந்து விட்டன. இதனால் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களைச் சென்றடைவது கடினமாக இருக்கிறது. 

விழாக்காலம் என்பதால் பலு கடற்கரையில் வழக்கத்தைவிட அதிகமான மக்கள் திரண்டிருந்தனர். ஆனால், 20 அடி உயரத்துக்கு எழும்பி வந்து கடற்கரையைத் தாக்கியது சுனாமி. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கங்களும் கடல்கொந்தளிப்பும் இயல்பாய் நிகழக்கூடியதுதான். ஆனால், இவ்வளவு பெரிய சுனாமி வர இருப்பதை இந்தோனேசிய வானியல் மற்றும் புவி இயற்பியல் அமைப்பு (BMKG) முன்கூட்டியே சொல்லவில்லை. சுனாமி தாக்கி 34 நிமிடங்கள் கழித்துதான் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஏஜென்சியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, ``பலு நகரக் கடற்கரைக்கான தரவுகள் எங்களிடம் இல்லை. அதனால் அருகில் இருக்கும் மற்ற தரவுகள் மூலம் சிறிய அலைகளைக் கொண்ட சுனாமியே உருவாகும் என நினைத்திருந்தோம்" என்கின்றார். பலு நகரம் மற்றும் அதைச் சுற்றிலும் 17,000 பேர் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் உள்ளனர். 540 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விவோடோ பேரழிவுப் பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.