Published:Updated:

"இந்த மழைக்குத் தாங்குமா நம்ம ஊரு!" - `ரெட் அலர்ட்' பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி

"இந்த மழைக்குத் தாங்குமா நம்ம ஊரு!" - `ரெட் அலர்ட்' பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி
"இந்த மழைக்குத் தாங்குமா நம்ம ஊரு!" - `ரெட் அலர்ட்' பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி

"நிவாரணம் மையம் என்பது மக்கள் மழைக்கு ஒதுங்குமிடம் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அங்கே ஆரோக்கியமான உணவுப் பொருள்கள், சுத்தமான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிவறை, ஆகிவற்றைக் கொடுப்பதற்கும் திட்டமிட்டு இருக்கிறோம்."

பெருமழைக் காலம் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும், அறிவிப்புகளும் தொடங்கிவிட்டன. `மீண்டுமொரு சாகச வாழ்க்கைக்குத் தயாராக வேண்டுமா?' என்கிற அதிர்ச்சி 2015 க்குப் பிறகு ஒவ்வொரு மழை சீசனிலும் மக்களுக்கு இருந்து வருகிறது. இந்த முறை `ரெட் அலர்ட்' என்கிற அறிவிப்புடன் இந்த மழைக்காலம் ஆரம்பித்திருப்பதால் மழைக் கவிதை எழுதக்கூட மனமின்றி கலக்கமடைந்து இருக்கிறார்கள் சென்னைக் குடிமக்கள். இந்தச் சூழலில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நிவாரண ஏற்பாடுகள் எந்த அளவுக்கு இருக்கிறது எனத் தெரிந்து கொள்வதற்காக இந்தப் பணிகளை தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சத்யகோபால் அவர்களிடம் பேசினேன்.. 

``இயற்கைச் சீரழிவுகளான சுனாமி, புயல், வெள்ளம் இதெல்லாம் வந்தபோது தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிக்கப்பட்ட இடங்கள் என்று சுமார் 4000 இடங்களைக் கண்டறிந்து இருக்கிறோம். குறிப்பிட்டு இங்கு மட்டும் பிரச்னைகள் ஏன் ஏற்பட்டன என ஆராய்ந்தோம். அதற்கான பணிகளைச் செய்துகொண்டு வருகிறோம். நிறைய ஆறுகளில் வண்டல் மண்ணைப் பிரித்தெடுத்து இருக்கிறோம். இதனால் ஆற்றில் அதிக நீரைச் சேமிக்க முடியும். இதற்கு முன்பு வெள்ளம் தேங்கிய பகுதிகள் இனி அந்த அளவுக்குப் பாதிக்கப்படாது என உறுதியாகச் சொல்ல முடியும். இதுதவிர, நெடுஞ்சாலைத்துறையிடம் சாலைகள் ஆக்கிரமிப்புகளையும், அடைப்புகளையும் அப்புறப்படுத்தச் சொல்லியிருக்கிறோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் 2015ல் ஏற்பட்ட பெருமழைதான் எங்களுக்கு இதை உடனடியாகச் செய்வதற்கு பெரும் பாடத்தைப் புகட்டியது."

``நிவாரணப் பணிகளுக்கான ஆயத்தங்கள் எந்த அளவில் இருக்கின்றன?" 

``நீச்சல், மரமேறுதல் ஆகியவற்றில் தேர்ச்சியடைந்த உள்ளூர்வாசிகளின் ஈடுபாடும் முக்கியமென்பதால் அவர்களையும் எங்கள் மீட்புப் படையுடன் இணைந்து உதவிபுரிய பயிற்சிகள் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் உடனே அணுகக்கூடிய ஒரு நபர் இருப்பார். தமிழ்நாடு முழுக்க இதுபோன்றவர்கள் 25 ஆயிரம் பேர் எப்போதும் ஆயத்தநிலையில் இருக்கும்படி செய்திருக்கிறோம். இதில் 6,500 பேர் பெண்கள் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டியது. இவர்கள் தவிர, பொதுப்பணி, தீயணைப்பு, விவசாயம், நகர்ப்புற வளர்ச்சி எனப் பல்வேறு துறைகளிலிருந்து ஒவ்வொருவர் இந்த மீட்புக் குழுவில் இருப்பார்கள். 5 பகுதிகளுக்கு ஒரு குழு எனத் தமிழகம் முழுக்க இவர்கள் இருப்பார்கள். இதுபோலவே, நிவாரண மையம் என்பது மக்கள் மழைக்கு ஒதுங்குமிடம் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அங்கே ஆரோக்கியமான உணவுப் பொருள்கள், சுத்தமான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிவறை, ஆகிவற்றைக் கொடுப்பதற்கும் திட்டமிட்டு இருக்கிறோம்." 

``ஆறுகளின் பராமரிப்பின்மை பெருவெள்ளத்துக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. அதன், இப்போதைய நிலைமை என்ன?" 

``சென்னையைச் சுற்றியுள்ள அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளிலிருந்து தண்ணீர் வெளியேறி ஊருக்குள் வராமல் இருக்கப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இந்த ஆறுகளையொட்டித் தூர் வாரப்படாத நீர்நிலைகள், நில ஆக்கிரமிப்பு, ஆற்றுப்பகுதிகளில் மக்கள் குடியேற்றம், கரை உடைந்து தண்ணீர் புகுந்தது, கரைக்கு மேலே தண்ணீர் தழும்பி ஊருக்குள் வந்தது எனப் பல பிரச்னைகள் கண்டறியப்பட்டன. இவையெல்லாம் ஒரே வருடத்தில் செய்து முடிக்கிற வேலைகள் இல்லை. நில ஆக்கிரமிப்பு செய்தவர்களை உடனடியாக அகற்ற முடியாது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதர வேண்டும். ஆனால், விரைவில் முடித்துவிடுவோம். இது தவிர, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பவர்களை வெளியேற்றும் பணி கடைசிக் கட்டமாக நடைபெற்று வருகிறது." 

``மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களைத் தெரியப்படுத்துவதில் இந்தமுறை அரசு வேகம் காட்டுமா?" 

``முன்னெச்சரிக்கையை வலுப்படுத்துவதற்கு புதியத் தொழில்நுட்பங்கள் தயாரிக்கும் பணி ஆரம்பித்துவிட்டது. எங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறோம். எங்கள் வலைதளமும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. தங்கள் பகுதியில் பிரச்னை இருந்தால் மக்கள் அதைப் புகைப்படம் எடுத்து எங்கள் வலைதளத்தில் பதிவிட்டால் உடனடியாக அங்கே சீரமைப்புப் பணி செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம். 1070 என்கிற எண் இருக்கிறது யார் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம். மக்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் அரசாங்கத்திலிருந்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும், அதற்கேற்றார்போல் தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கச் சொல்லும்போது அதை அவர்கள் தயவுசெய்து பின்பற்ற வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் எத்தனை பெரிய பேரிடர் வந்தாலும் சமாளிக்க முடியும்."

அடுத்த கட்டுரைக்கு