Published:Updated:

கிராமங்கள் அழிய நகரங்களே காரணம்..! எப்படி? - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் - 18

நகரங்களில் நிலத்தடி நீர் மோசமான அளவில் உறிஞ்சப்படுகிறது. குடியிருப்புகள் அதைச் சுயமாகச் செய்கிறார்கள். குறிப்பாக அரசுக் குழாய்கள் போதுமான நீரை விநியோகிக்கத் தவறும்போது.

கிராமங்கள் அழிய நகரங்களே காரணம்..! எப்படி? -  தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் - 18
கிராமங்கள் அழிய நகரங்களே காரணம்..! எப்படி? - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் - 18

ருபுறம் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் நீராதாரங்கள் மாசடைந்து கொண்டிருக்கின்றன. ஒன்று அதை அதிகப் பொருட்செலவில் சுத்திகரித்துப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நீர் மாசால் விளையும் சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவும் முக்கியமாக நம் குழந்தைகளைத்தான் அது அதிகமாகப் பாதிக்கின்றது. நம் பாவங்களுக்கு அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அது கூடாதென்றால் என்ன செய்ய வேண்டும்?

நகர அமைப்புகள் மீண்டும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமான திட்டங்களோடு புதிதாக உருவாக்கப்பட வேண்டும். அதுவும் தண்ணீர் பயன்பாடு கழிவுநீர் மேலாண்மை மற்றும் அப்புறப்படுத்துதல், அதைச் சுத்திகரிப்பு செய்தல் போன்றவற்றில் தெளிவான கட்டமைப்புகள் வேண்டும். 

ஏன்? இப்போதிருக்கும் நகரங்களுக்கு என்ன குறைச்சல்?

நகரங்கள் எதைச் செய்கிறதோ இல்லையோ, ஒன்றைச் சிறப்பாகச் செய்கின்றது. ஏழைகளையும் பணம் படைத்தவர்களையும் தரம் பிரித்து வைப்பது. இந்திய நகரங்களிலிருக்கும் குடிசைப்பகுதிகளின் நிலையும் அவர்களுக்குத் தேவையான நீர்விநியோக, கழிவு மேலாண்மை வசதிகள் இல்லாததுமே இதற்கான சாட்சி. இன்றைய நகரங்கள் இயற்கை வளங்களைத் தீவிரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நாம் அமைத்திருக்கும் நகர அமைப்புகள் முதலில் பொருளாதார ரீதியாகவும் நீர்வளத்திலும் சிறப்பாக விளங்கிய நாடுகளில் தொழிற்புரட்சியின்போது கொண்டுவரப்பட்டது. அது இந்திய நில அமைப்புக்கும் அதன் பொருளாதாரச் சூழலுக்கும் சரியான திட்டமா என்பதைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் கண்ணை மூடிக்கொண்டு நிர்ணயித்துவிட்டோம். இந்த நகரங்கள் நமக்கானதில்லை.

முன்பே சொன்னதுபோல் இந்தியா வேகமாக நகரமயமாகிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் அதிகமான மக்கள் கிராமங்களில்தான் வசிக்கிறார்கள். ஆனால் 30 சதவிகிதம் மக்கள் வசிக்கும் நகரங்கள் நாட்டின் 60 சதவிகிதம் நீரைப் பயன்படுத்துகிறார்கள். அது 70 சதவிகிதம் மக்கள்தொகை கொண்ட கிராமங்களின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவுதான் தொழில்மயமானாலும் நாட்டில் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக இருந்துகொண்டேதானிருக்கும். அப்படியிருக்க அவர்களோடு தண்ணீரை சமமாகப் பகிர்ந்துகொள்ள இன்றைய செயல்முறைகள் வழிவகுக்கவில்லை. அதோடு கிடைக்கும் நீரை நகரங்கள் தனக்குள்ளேயே சமமாகப் பங்கிட்டுக் கொள்வதில்லை. அதன் விளைவுதான் தண்ணீர் பற்றாக்குறையும், மாஃபியாக்கள் வருகையும், தண்ணீர் விலை உயர்வும். அதோடு கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சுமுகமான உறவும் நிலைத்திருப்பதில்லை.

சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் வாலாஜா ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தங்கள் தேவைக் கேள்விக்குறியாகிறது என்று அதைச் சார்ந்து வாழும் 25 கிராமங்களின் மக்கள் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் வீராணம் ஏரியைச் சார்ந்திருக்கும் விவசாயிகளும். இப்படியாக ஜாம்நகர், விசாகப்பட்டினம், சத்தீஸ்கர் போன்ற பகுதிகளிலும் நகரங்களைக் கிராமங்கள் முறைத்துக் கொண்டிருக்கின்றன. கிராம மக்களின் அனுமதியின்றியே அந்தப் பகுதிகளிலிருந்து நகரங்களுக்குத் தண்ணீரை இடம் மாற்றிக்கொண்டிருப்பது சமூகப் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது.

நகரத்தின் பற்றாக்குறையை முறையாக நாம் சரிசெய்யவில்லை என்றால் இந்தப் பிரச்னைகள் எதிர்காலத்தில் மேலும் தீவிரமடைய வாய்ப்புகள் உண்டு. சூழ்நிலை மிக மோசமாகிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் நம் திட்டமிடல். அது நிகழ்காலத் தண்ணீர் பயன்பாட்டின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டதில்லை. நகரத்தின் தண்ணீர் தேவைக் குறித்த மதிப்பிடல் கடைசியாக 1999-ம் ஆண்டு நடந்தது. அதற்குப் பிறகு நீர் பற்றாக்குறை எதிர்காலப் பிரச்னைகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டதே தவிர இப்போதைய தேவை எவ்வளவு அதை எப்படி ஆரோக்கியமான முறையில் நிவர்த்தி செய்யலாம் என்பதைப் பற்றிப் பேச்சில்லை. இப்போது நாம் கவனம் செலுத்துவதெல்லாம் மற்ற பகுதிகளிலிருந்து தண்ணீரை நகரங்களுக்குக் கொண்டுவருவது மட்டுமே. அது ஒன்றும் இலவசமாக நடந்துவிடவில்லை. தண்ணீர் எடுக்கச்செல்லும் தூரம் அதிகமாக ஆக அந்தத் தண்ணீரின் விலையும் அதிகமாகும். கொண்டுவரும் தண்ணீரும் முழுமையாக வருவதில்லை. பாதியை வழியிலேயே தொலைத்துவிடுகிறோம். விநியோகச் செலவு உயர்வதுபோல் விநியோக அளவு உயர்வதில்லை. அதே பற்றாக்குறை.

நகரங்களில் நிலத்தடி நீர் மோசமான அளவில் உறிஞ்சப்படுகிறது. குடியிருப்புகள் அதைச் சுயமாகச் செய்கிறார்கள். குறிப்பாக அரசுக் குழாய்கள் போதுமான நீரை விநியோகிக்கத் தவறும்போது. அவர்கள் தவறுவது அதற்கு மட்டும் வழிவிடவில்லை. முடிந்தவர்கள் நிலத்தடி நீரை எடுக்கிறார்கள். இயலாதவர்கள், பொருளாதார நிலையில் கீழிருப்பவர்கள் பற்றாக்குறையில் தவிக்கிறார்கள். அவர்கள் தண்ணீர் மாஃபியாக்களிடமும் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்களிடமும் சிக்கிக் கொள்கிறார்கள். இத்தகைய பற்றாக்குறை மக்களின் அடிப்படை உரிமையான தண்ணீரைப் பெறுவதற்குத் தங்கள் வருமானத்தில் ஒரு பங்கை ஒதுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றார்கள். இது இன்று நகரங்களில் சர்வசாதாரணமாகிவிட்டது. தண்ணீர் தங்கள் அடிப்படை உரிமை என்பதை நாம் மறந்துவிட்டோம். அதையும் நாம் விலைக்கு வாங்கும் ஒரு சரக்காகக் கருதத் தொடங்கிவிட்டோம்.

நிலத்தடி நீர் எடுப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. எவ்வளவு நீர் எடுக்கப்படுகிறது என்பது பதிவு செய்யப்படுவதில்லை. அதோடு எந்த நகரமும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அதேசமயம் சேமித்து வைக்கவேண்டுமென்று சிந்தித்துத் திட்டமிடுவதில்லை. உள்ளூர் நீர்நிலைகள் நீர்த்தேவையில் எவ்வளவு முக்கியமானதென்று புரிந்துகொள்வதோ அவற்றின் மதிப்பை உணர்வதோ கிடையாது. அதற்குப் பதிலாக அவை ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்கான வாய்ப்புகளாகப் பார்க்கப்படுகின்றன. காலியாகக் கிடக்கும் நீர்நிலை குப்பைகளைக் கொட்டி பயன்படுத்த முடியாத நிலமாக மாற்றப்படுகின்றது. வெறும் குப்பைகொட்டும் நிலமாகக் கணக்கு காட்டப்படுகிறது. மீண்டும் அதைச் சுத்தம்செய்து ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் விற்கப்படுகின்றது. நகரங்களில் இப்படியாகப் பல நூறு சிறு குறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. சிறு குறு நீர்நிலைகளின் கதி இதுவென்றால் நதிகளுக்கும் அதைவிட மோசமான நிலை. நகரங்களினூடே பாயும் நதிகளின் வெள்ளநீர் வடிகால் பகுதிகளைக் குப்பைக் கிடங்குகளாக மாற்றி வைத்துள்ளார்கள். நகரம் என்றால் அதில் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களும் இல்லாமலிருப்பதில்லை. சில மக்கள் பல நிலங்களைக் கைக்கொண்டுவிடுவதால் பல மக்கள் இருக்க இடமின்றி நகரிலிருந்து தூக்கியெறியப் படுகிறார்கள். அவர்களுக்கும் இங்குதான் வாழ்வாதாரம். நகரை விட்டால் வேறு வழி கிடையாது. மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட வெள்ளநீர் வடிகால் பகுதிகள் புறம்போக்கு நிலங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. அத்தகைய நிலங்களில் குடிலமைத்துத் தங்கவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கான நீர்விநியோகம் சுகாதாரம் போன்றவை கவனிக்கப்படுவதில்லை.

இப்படியாக நகர நீர்நிலைகளின் மதிப்பை உணராத மேல்தட்டு மக்கள் தங்கள் பேராசைக்காகவும், வாழ்வாதாரத்துக்கு வேறு வழியில்லாத கீழ்தட்டு மக்கள் வாழிடத்துக்காகவும் என்று வேதனைக்குரிய வகையில் நகர நீராதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் மோசமான நகரத் திட்டமிடல்கள்.

இன்று நகரங்கள் சுமார் 30 சதவிகிதம் மின்சாரத்தைத் தண்ணீர் விநியோகத்துக்கே பயன்படுத்துகின்றன. நீர் விநியோகக் குழாய்கள் அமைப்பதற்கும், நிர்வகிப்பதற்கும், பராமரிப்பதற்கும் செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்குக் காரணம் குழாய்கள் நகரங்களுக்குள் அமைக்கப்படவில்லை. வெளியே சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து அமைக்கப்பட்டுள்ளன. தொலைவு அதிகமாகும்போது செலவும் அதிகமாகத்தானே செய்யும். அந்தச் செலவுக்குத் தகுந்த பயனும் கிடைக்கிறதா என்றால் இல்லை. நூறு கிலோமீட்டருக்கும் மேல் குழாய்களை அமைத்துவைத்தால் பாதுகாக்க முடியுமா? குழாய் வழியாக நகரத்தை வந்தடையும் முன்பே ஐம்பது சதவிகிதம் நீர் தொலைந்துவிடுகிறது அல்லது திருடப்பட்டு விடுகின்றது. செலவோ அதிகம், வரவோ குறைவு. விளைவு தண்ணீரின் விலை அதிகம். இந்த நிலையில், நகர நிர்வாகத்தால் கிடைக்கும் கொஞ்ச நீரை அனைவருக்கும் கொடுக்க முடிவதில்லை. யாருக்குக் கொடுப்பது யாரை விடுவதென்ற சிக்கல் வந்துவிடக் கூடாதென்றுதான் நகரங்களை இரண்டாகப் பிரித்து வைத்துள்ளார்களே! அதைப் பொறுத்தே விநியோகமும் நடைபெறும். மீதமிருப்பவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு முறை தண்ணீரை லாரிகளில் விநியோகிக்கிறார்கள். அதுவும் பல சமயங்களில் மாஃபியாக்களின் கையில். முறையாக விநியோகிக்கும் தண்ணீரைக்கூட நாம் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. காரணம் அது சுத்தமான குடிநீர் இல்லையாம். தனியார் குடிநீர் விநியோகத்துக்கு மாறிவிட்டோம். குடிக்கவும் சேர்த்து அரசு விநியோகிக்கும் நீரை இதர விஷயங்களுக்குச் சற்று அதிகமாகவே செலவழித்துச் சமன்செய்து கொள்கிறோம். அதுகூடக் கிடைக்காதவர்களின் நிலை? 

குறைவான நீர் விநியோகம் அதுவும் சுகாதாரமற்றதாகக் கிடைப்பதால் உடல்நலச் சீர்கேடுகளோடு வாழவேண்டிய அவலநிலை.

நகரத்துக்குள் பொருளாதாரத்திலும் சரி அடிப்படைத் தேவைகளிலும் சரி இந்தச் சமத்துவமின்மை ஏற்படுவதற்கு என்ன காரணம்? எங்கே தோற்றோம்?

திட்டமிடல். ஆம், தொடக்கத்திலேயே தோற்றுவிட்டோம். அனைவருக்குமானதாக நாம் திட்டமிடாததே இன்று தோற்றுப்போய் நிற்பதற்குக் காரணம். நகரத் திட்டமிடலில் தண்ணீர் விநியோகத்தைத் திட்டமிடும்போது இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. அவை, சமமான விநியோகம், தரமான விநியோகம். யாருக்கு எவ்வளவு தண்ணீர் தரப்படுகிறது என்பதைக் கணக்கு வைக்க வேண்டும். அது இல்லாததே அனைத்து சிக்கல்களுக்கும் அடிப்படை. தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதில் நாம் எங்குத் தோல்வியடைந்தோம்?

ஆம், தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையிலிருக்கும் மிகப்பெரிய இடைவெளியை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். அந்த இடைவெளியை நிரப்பியாக வேண்டும். நகரக் கட்டுமானத்தில் மறுதிட்டமிடல் தேவை.