Published:Updated:

செர்னோபில் மண்ணில் சோலார் பேனல்கள்... கூடங்குளம் கவனிக்க வேண்டிய ₹ 1.50 கணக்கு! #Analysis

செர்னோபில் மண்ணில் சோலார் பேனல்கள்... கூடங்குளம் கவனிக்க வேண்டிய ₹ 1.50 கணக்கு! #Analysis
News
செர்னோபில் மண்ணில் சோலார் பேனல்கள்... கூடங்குளம் கவனிக்க வேண்டிய ₹ 1.50 கணக்கு! #Analysis

அணுவின் ஆற்றல் நாம் அறியாதது அல்ல; அவற்றின் பாதிப்புகள் குறித்த அறியாமைதான் இங்கே பிரச்னை!

செர்னோபில் என்கிற நகரத்தின் பெயரைக் கேட்ட அடுத்த நொடியே, நம்முள் ஒருவித சொல்லமுடியாத, பயம் கலந்த பதற்றம் இன்றும் எழுகிறது அல்லவா? ஆம், முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த கோர விபத்து விட்டுச்சென்ற தாக்கத்தின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் அது. 25-26 ஏப்ரல் 1986 என்கிற தேதி, இருபதாம் நூற்றாண்டின் மிகக் கோரமான நாள்களில், முக்கியமானது.  

பராமரிப்பு பணி என்கிற வாடிக்கையான ஒரு விடயத்தின் போது, எதிர்பாராதவிதமாகக் கொஞ்சம் மனிதத் தவறும், வடிவமைப்புத் தவறும் சேர்ந்து ஒரு விபத்தை ஏற்படுத்தியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தொழிற்சாலை விபத்துகள் தினம் தினம் நடந்தாலும், அந்த விபத்து செர்னோபில் என்கிற ஓர் அணு மின் நிலையத்தில் நிகழ்ந்தது என்பதுதான், அந்த நாளை அந்த நூற்றாண்டின் ஒரு மோசமான விபத்து நாளாக மாற்றியது.  

உக்ரைன் நாட்டின் தலைநகரான கியெவ் நகரில் இருந்து 104 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செர்னோபில்  நகரம். அங்கு நான்கு அலகுகள் கொண்ட அணுமின் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த அன்று, ஒரு பாதுகாப்பு சோதனை திட்டமிடப்பட்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஒரு மின்வெட்டு, ஒரு மிகப்பெரிய நீராவி வெடிப்பை நிகழ்த்தியது. அது நடந்ததற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், சுருக்கமாகச் சொன்னால், அது வடிவமைப்பு கோளாற்றினாலும், மனிதத் தவற்றினாலும் ஏற்பட்டது எனலாம். அந்த நீராவி வெடிப்பில், 700 டன்களுக்கும் மேலாகக் கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட கிராஃபைட் தகடுகள் காற்றில் தீப்பற்றி எரிந்தன. அதில் ஏற்பட்ட கதிர்வீச்சின் உடனடித்தாக்கம் 140 கிலோமீட்டருக்கும்  மேலாக அடர்த்தியாகப் படர்ந்தது.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து செர்னோபில்லிருந்து 1100 கிலோ மீட்டருக்குத் தள்ளியிருக்கும், ஸ்வீடன் நாட்டில் உள்ள போர்ச்மார்க் என்கிற ஒரு நகரத்தில் இருக்கும் இன்னொரு அணுமின் நிலையத்தில், ஒரு பாதுகாப்பு உபகரணம் அபாய ஒலியை எழுப்பியது. அங்குள்ள பொறியாளர்கள், அணுமின் நிலையத்தில் ஏதேனும் விபத்து  நடந்து உள்ளதா என ஆய்வு செய்தபோது அவர்களுக்குக் கிடைத்த அதிர்ச்சிகரமான செய்தி என்னவெனில், அந்தக் கதிர்வீச்சு அவர்கள் நிலையத்தில் இருந்து வரவில்லை. மாறாக அது இரண்டு மூன்று நாடுகள் தள்ளி இருக்கும் உக்ரைனில் இருந்து வந்து உள்ளது என்பது. அதைக் கேட்டு ஆடிப்போனது அவர்கள் மட்டும் அல்ல, இந்த ஒட்டு மொத்த உலகமும்தான். ஆம், அணுக் கதிர்வீச்சின் தாக்கம் என்பது நாடுகள் பல கடந்தும் பாதிக்கும். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் பழைய சோவியத் யூனியன்,  பெலாருஸ், பிரான்ஸ், பல்கேரியா, இங்கிலாந்து, கிரீஸ் என நீண்டு கொண்டே போகும். 

செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட விளைவுகளைப் பட்டியலிடத்  தொடங்கினால், இரண்டு மூன்று புத்தகங்கள் எழுதலாம். சுருக்கமாகச் சொன்னால், விபத்து நடந்த பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவுக்கு, மனிதன் வாழ்வதற்குத் தகுதியற்ற இடமாக ஆனது. அங்குள்ள கதிர்வீச்சைக் கட்டுக்குள் கொண்டு வர, இன்னும் இருபதாயிரம் வருடங்கள் ஆகும் என்கிறது ஆய்வு முடிவுகள். இந்தக் கதிர்வீச்சின் காரணமாகத் தலைமுறை தலைமுறையாகப் பலரும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். கதிர்வீச்சின் காரணமாக புற்றுநோய் வந்து இறந்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டி விட்டது.  இந்த விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள, இந்த நாடுகள் செலவழிக்கும் பணம் என்பது கணக்கில் அடங்காது. உதாரணமாக பெலாருஸ் நாட்டின் செலவு மதிப்பீடு மட்டும் 30 ஆண்டுகளில் 235 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதுபோல் ஒவ்வொரு நாடும் தனது வருடாந்திர பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை இதற்காகத் தனியாக எடுத்து வைக்கிறது.  

விபத்து நடந்த இடத்தில் உடனடியாக, கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்க, மிகப்பெரிய கான்க்ரீட் மற்றும் 15,000 டன்களுக்கும் மேலான ரப்பர், மார்பிள், சியோலைட் போன்ற பல்வேறு  பொருள்களால் 206 நாட்களில், 90 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் ராணுவ ஊழியர்கள் கொண்டு, ஒரு மிகப்பெரும் கட்டிட அமைப்பைக் கட்டினார்கள். அதன்பின் 2007-2016 காலகட்டத்தில், முப்பது நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு அந்தக் கட்டிடத்திற்கு மேல் ஒரு ஒரு மாபெரும் குவிமாடத்தைக் கட்டி முடித்தார்கள்.  

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கடந்த வருடம் சம்பவம் ஒன்று நடந்தேறியது. அதுதான் மாற்றத்தை நோக்கிய பயணம். ஆம், வாழ்வதற்குத் தகுதியற்ற அந்த இடத்தை என்ன செய்யலாம் என யோசித்த அரசும் பொறியாளர்களும், அந்த இடத்தில் சூரிய ஒளித் தகடுகள் வைத்து, அதிலிருந்து மின்சாரம் எடுக்கலாம் எனத் தீர்மானித்தனர். அது சுலபம் அல்ல எனத் தெரிந்தும், அந்த முடிவை அவர்கள் எடுத்தார்கள். அதில் உள்ள சவால் என்னவெனில், அந்த மண் முழுதும் இன்னமும் கதிர்வீச்சின் தாக்கத்தை அதிகமாகக் கொண்டு உள்ளது. ஒரு கம்பு நட்ட, மண்ணைத் தோண்டினாலும், அந்த மண்ணிலிருந்து வரும் கதிர்வீச்சால் பாதிப்பு நிச்சயம். இருந்தாலும் சூரிய ஒளி மின்சாரத்துக்கான ஒப்பந்தத்தை அரசு வெளியிட்டது. யாரும் எதிர்பாராத வகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன. மனிதத் தவற்றினால் ஏற்பட்ட ஒரு விபத்தை, மனித மூளையின் ஆற்றல் கொண்டு சரி செய்ய வேண்டும் என்கிற வேட்கையின் வெளிப்பாடு இந்தத் திட்டம்..  

அந்த இடத்தில், அனைத்து விதமான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்தாலும், ஒருவர் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நின்று வேலை செய்யக்கூடாது, அணிந்த உபகரணங்களை அந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு எரித்துவிட வேண்டும் எனப் பல்வேறு நிர்பந்தங்கள். மண்ணைத் துளையிடாமல் இருக்க, ஆயத்தமான கான்க்ரீட் அமைப்புகள் உபயோகித்து, அதன் மீது சூரியத் தகடுகளை அமைத்தார்கள். இன்னும் இது போல் பல சவால்கள். இறுதியாக 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், 3,700-க்கும் மேற்பட்ட சூரிய ஒளித்தகடுகள் மூலம் 1 MW மின்சார உற்பத்தியை நிறுவிவிட்டார்கள். இதன் மூலம் 2,000 வீடுகளுக்கு மின்சாரம் அளிக்க முடியும். ஒப்பீட்டளவில் இது குறைவான மின்சாரம் என்றாலும், இது மிக நல்ல தொடக்கமே. இதை விரிவாக்கம் செய்ய அவர்கள் ஆயத்தமாக உள்ளார்கள். அங்கு உபயோகப் படுத்தாமல் இருக்கும் இடம் முழுதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தினால், இதை விட ஆயிரம் மடங்கு அங்கிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம்  என்கிற உயர்வான நோக்குடன் அவர்கள் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அங்கு முன்னரே உபயோகப் படுத்தப்பட்ட மின்சார விநியோக உபகரணங்கள், மின்மாற்றி போன்றவை அவர்களுக்கு ஏதுவாக உள்ளன. மேலும், சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதால், அது மாசு அடையாத மின்சாரமாக உள்ளது. அதைத் தாண்டி ரஷ்யாவின் எரிவாயுவை நம்பி இருப்பதை, உக்ரைன் விரும்பவில்லை. இப்படியாக உண்மையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் உக்ரைனுக்கு நம் மனம் உவந்த வாழ்த்துகளைக்  கூறலாம்.  

இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தைப் பற்றியும் சற்று பார்ப்போம். கூடங்குளத்தில், முதல் இரண்டு அணுஉலைகள் 17,270 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவர்களின் முறையான அறிவிப்புப்படி, முதல் அணு உலை 22 அக்டோபர் 2013 அன்றும், இரண்டாம் உலை 10 ஜூலை 2016 அன்றும் மின்சார உற்பத்தியைத் தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டது. இது எத்தனை முறை செயலிழந்துள்ளது என அணு விஞ்ஞானிகள் கேட்டால், கண்ணீர் விட்டுச் சிரிப்பார்கள். ஆரம்பிக்கப்பட்ட 2013-ல் இருந்து 2016-க்குள் அதுவாகவே 20 முறைக்கு மேல் தானாகவே செயல் இழந்துள்ளது (ட்ரிப் ஆகி உள்ளது). இதற்கு பெரும்பாலும், குறைந்த தரமுள்ள பொருட்களை உபயோகித்ததுதான் காரணம் என இந்திய அணுசக்தி நிறுவனத்திற்கு எதிரான வழக்கில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அது விசாரணையில் உள்ளது. இவ்வழக்கின் போது, வாதாடிய பிரஷாந்த் பூஷன் கூடங்குளம் உலை, செயல்பாட்டு காரணங்களுக்காக இதுவரை 70 முறை மூடப்பட்டுள்ளது என்று வாதிட்டது  இங்கே குறிப்பிடத்தக்கது.   

இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம், இந்திய அணுசக்தி நிறுவனம், ஒரு யூனிட்டுக்கான மின்சார விலையை 4.29 ரூபாய்க்கு 2015-ம் ஆண்டு நிர்ணயித்தது. தற்போது, கூடங்குளத்தில், மூன்று மற்றும் நான்காவது அலகுகளுக்கான தொடக்க வேலைகளை ஆரம்பித்து உள்ளார்கள். இதன் திட்ட மதிப்பீடு மட்டுமே 39, 747 கோடிகள் ஆகும். முதல் இரண்டு ஆலைகளைப் போல அதே திறன் உள்ள ஆலையை நிறுவ அதைவிட இரண்டு மடங்குக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இது திட்ட மதிப்பீடு மட்டுமே. திட்டம் முடியும்போது கணக்கிட்டால், இந்தத் தொகையின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இப்போது சொல்லமுடியாது.  

இதில் சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. அது, இந்தத்  திட்டத்தின் மூலம் கிடைக்கப் போகும் மின்சாரத்திற்கான விலை என்ன என்பதுதான்? திட்ட மதிப்பீடுகள் இரண்டு மடங்கு மேலே இருக்கும்போது, ஒரு யூனிட்டுக்கான மின்சாரத்தின் விலையும் கிட்டத்தட்ட 9 ரூபாய் வரை சென்று விடும் அல்லவா? சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் குறைவான விலையில் உள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, இந்தியாவில், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 2.44 ருபாய் என்ற நிலைக்கு வந்து விட்டது. இது வெறும் 1.50 ரூபாய் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறது.  

நிற்க. சற்றே இப்போது சிந்தியுங்கள். அணுமின் திட்டத்தைப் பொறுத்த வரையில், எந்தத் திசையில் இந்தியா பயணிக்கிறது என்று. யாருக்காக இந்தத் திட்டங்கள், எதற்காக இந்தத் திட்டங்கள்? இதற்கான பதிலைத் தர வேண்டிய மாநில, மத்திய அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? கேள்வி கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?  நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் இதைப் பற்றி அறிந்துள்ளார்களா? நாம் அறிந்து இருக்கிறோமா? 

ஓர் அணு  உலையில், ஏற்பட்ட இழப்பிற்கு உக்ரைனும், பெலாரசும் 30 வருடங்களுக்கும் மேலாக இன்னும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தை விலையாகக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. நம்முடைய எண்ணம் இங்கே கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம், வேறெங்கேனும் வையுங்கள் என்பதல்ல. அணுக்கழிவுகளை பாதுகாப்பாக பாதுகாக்கும் தொழில்நுட்பம் உலகில் எந்த நாடுகளிடமும் இல்லை என்பதால், எங்கேயும் வேண்டாம் என்பதே. அணுக்கழிவுகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பத்திரப்படுத்தி வைப்பது நடைமுறைச் சாத்தியம் இல்லை என்பதால், அணுஉலையால் என்றைக்கு இருந்தாலும் மனிதர்களுக்கு ஆபத்துதான்.

அணுவின் ஆற்றல் நாம் அறியாதது அல்ல; அவற்றின் பாதிப்புகள் குறித்த அறியாமைதான் இங்கே பிரச்னை!