Published:Updated:

சென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்?

நிலத்தடி நீர்வளம் குறைந்துவிட்ட பகுதிகளில் எடுக்கக் கூடாது. உரிமம் பெறாதவர்கள் நிலத்தடி நீர் எடுக்கக் கூடாது. வணிக நோக்கில் எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி முடிவு செய்ய வேண்டும்.

சென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்?
சென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்?

சென்னை நிலைகுலைய வேண்டுமா, அதன் இயக்கம் ஸ்தம்பிக்க வேண்டுமா?

அது நடப்பதற்கு ஒன்றைச் செய்தாலே போதுமானது. அதற்குக் கிடைக்கும் தண்ணீரை நிறுத்துங்கள். அதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. 

எங்கே தொடங்கியது இந்தப் பிரச்னை?

கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அது தமிழகத்தின் நிலத்தடி நீர்வளம் குறைந்துகொண்டே வருவதையும் அதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகு மிகப்பெரிய தண்ணீர் பிரச்னையையும் கருத்தில்கொண்டு வழங்கப்பட்ட உத்தரவு. அதை எதிர்த்து தமிழக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர். தொலைநோக்கு சிந்தனையுடன் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்ப்பது ஏன்? அதைப் புரிந்துகொள்ள முதலில் அந்த உத்தரவின் சாராம்சம் என்னவென்பதைப் பார்ப்போம்.

நிலத்தடி நீர்வளம் குறைந்துவிட்ட பகுதிகளில் எடுக்கக் கூடாது. உரிமம் பெறாதவர்கள் நிலத்தடி நீர் எடுக்கக் கூடாது. வணிக நோக்கில் எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி முடிவு செய்ய வேண்டும். அதுபோக, நிலத்தடி நீர் எடுக்க உரிமம் கோரும் இடத்தில் அதன் நிலத்தடி நீர்வளத்தை ஆய்வுசெய்த பிறகே உரிமம் வழங்க வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு முன் அது எடுக்கப்படும் அளவைக் கணக்கிடுவதற்கு மீட்டர்கள் பொருத்த வேண்டும். அதைப் பொருத்திவிட்டார்களா என்பதை உறுதி செய்த பிறகே உரிமம் வழங்க வேண்டும், செய்யாதவர்களுக்கு நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் வழங்கக் கூடாது.

இவையெல்லாம் நீர்வளம் குறைவான பகுதிகளில் எடுக்கப்படும் நீர்நிலைகளில் எடுத்தால் அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். அதற்கு 378, 379 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து திருட்டாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மாதிரியான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களது உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும். அவ்வாறு நடக்காமல் தடுப்பதற்குத் தனி கண்காணிப்புக் குழு அமைத்து தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதை உடனடியாக அமல்படுத்துமாறு உயர் நீதிமன்ற நீதிபதி S.M.சுப்பிரமணியம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் வலியுறுத்தினார். 

தமிழகத்தின் மற்ற பகுதிகளைவிட மிக அதிகமாக நிலத்தடி நீரைச் சார்ந்திருக்கிறது சென்னை மாநகராட்சி. அதை விநியோகிக்கும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து இன்று மூன்றாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நீர் தேவைக்கு அவர்களையே நம்பியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஐ.டி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் இன்று தண்ணீர் பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளனர். ஞாயிறு அன்று விநியோகிக்கப்பட்ட தண்ணீர் இரண்டு நாள்களுக்குத் தாக்குப்பிடித்தது. அதுவும் இன்று தீர்ந்துபோகவே சென்னை முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. பழைய மாமல்லபுரம் சாலையிலிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், குடியிருப்புகள் அவற்றின் நீச்சல் குளங்கள் போன்ற அனைத்துக்குமே அவர்கள் தண்ணீர் லாரிகளைத்தான் நம்பியிருந்தார்கள். இந்த வேலைநிறுத்தம் அவர்களைப் பாதிக்கின்றன. அண்ணா சாலையிலிருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யு 'பராமரிப்பு காரணங்களுக்காக' என்று கூறி மூடப்பட்டிருந்தது. அது தண்ணீர் பற்றாக்குறையால்தான் மூடப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. 

தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தால் நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது இந்த மாதிரியான பிரச்னைகள்தாம். அதையும் தாண்டிய மோசமான சிக்கல்கள் இந்தச் சென்னையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதுவும் முதல் நாளிலிருந்தே. சென்னை மாநகரம் பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் பன்னாட்டு நிறுவனங்களும், வில்லாக்களும் மட்டுமே கொண்டதல்ல. 1,279 நகர்ப்புறக் குடிசைப்பகுதிகள் இங்குள்ளன. 70 லட்சம் பேர் மக்கள் தொகையுள்ள சென்னையின் 16 லட்சம் மக்கள் அந்த 1,279 குடிசைப் பகுதிகளில்தான் வாழ்கிறார்கள். அதிலும் ஐஸ்ஹவுஸ், பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி போன்ற பகுதியில் வாழும் பெரும்பான்மை மக்கள் தங்கள் அன்றாட நீர்த் தேவைக்கே தண்ணீர் லாரிகளைத்தான் நம்பியிருக்கிறார்கள். ஒருநாள் தண்ணீர் லாரி வரவில்லையென்றாலும் அவர்கள் அருகிலிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளிடம் தண்ணீர்கேட்டுக் குடங்களை ஏந்தி நிற்க வேண்டிய அவலநிலை. ஏனென்றால் அவர்களுக்கென்று தனித்த நீர்விநியோக வசதிகளை இன்னமும் அரசு அமைத்துக்கொடுக்கவில்லை. தண்ணீர் லாரி வேலைநிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது இவர்கள்தாம். அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர்களும், உதவித் தேவைப்படுபவர்களும்கூட மால்களோ, ஐ.டி நிறுவனங்களோ இல்லை இவர்கள்தாம்.

"378, 379 போன்ற வழக்குகளில் நிலத்தடி நீர் எடுப்பதைத் திருட்டாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களுக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காகக் குறைந்த கட்டணத்தில் இதைச் சேவையாக செய்துவருகிறோம். சென்னை நிர்வாகத்திடம் வெறும் 800 லாரிகளே இருக்கின்றன. அதை வைத்துக்கொண்டு மொத்த நகரத்துக்கும் விநியோகிக்க முடியுமா? மொத்தம் 4,500 லாரிகள் மூலம் நீர் விநியோகம் செய்துவருகிறோம். நீரே இல்லாத நிலத்தில் யாராவது தண்ணீர் எடுப்பார்களா? நாங்கள் எடுப்பதெல்லாம் நகரத்துக்கு வெளியே வீடுகளே இல்லாத இடத்திலிருக்கும் நீர்நிலைகளிலும் விவசாயக் கிணறுகளிலும்தான். நாங்கள் நீதிமன்றத்தை எதிர்க்கவில்லை. அவர்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நிலத்தடி நீர் எடுக்காமல் வேலையை நிறுத்திவிட்டோம் அவ்வளவே" என்கிறார் எஸ்.எஸ்.டி.எம் தண்ணீர் லாரி நிறுவன உரிமையாளர் செல்வகுமார்.

"மக்களின் குடிநீர் தேவைக்காகத்தானே நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம். நிலத்தடி நீர் எடுக்கக் கூடாதென்றால் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய வேறு திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கிறது. இப்போதுகூட நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை. நீதிமன்றத்தை மதித்து நிலத்தடி நீர் எடுப்பதை நிறுத்திவிட்டோம் அவ்வளவுதான்" என்கிறார் தமிழ்நாடு கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி. அனைத்து உரிமையாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. சிலர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சட்டபூர்வமாக இதை முன்னெடுக்க முடிவுசெய்துள்ளனர். 

சென்னையின் நீர் விநியோகத்தில் தண்ணீர் லாரிகளும், மினரல் வாட்டர் கேன்களுமே ஆதிக்கம் செய்கின்றன. அவர்கள் இல்லையென்றால் இங்கு தண்ணீர் பற்றாக்குறை பல விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. அதுகுறித்து பூவுலகு சுந்தர்ராஜனிடம் பேசினோம், "தண்ணீரை அடிப்படை உரிமையாகப் பார்க்காமல் விற்பனைப் பண்டமாகப் பார்த்ததன் விளைவுதான் தற்சமயம் நடைபெறும் 'டேங்கர் லாரிகளின்' வேலைநிறுத்தம். காலநிலை மாற்றத்தோடு நம்மை அச்சுறுத்தும் இன்னொரு விஷயம் "நிலத்தடிநீர் பேரிடர்". தற்சமயம், நம்முடைய விவசாயத்துக்குத் தேவைப்படும் நீரில் 70% பூர்த்திசெய்வது நிலத்தடி நீர் ஆதாரங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீரின் அளவில் 90% பூர்த்திசெய்வதும் நிலத்தடி நீரே. அதே நேரம் நம்முடைய குடிநீர் ஆதாரங்களும் அழிக்கப்பட்டதன் விளைவாக இப்போது நமக்குத் தேவையான குடிநீருக்கு 30% நிலத்தடி நீரைத்தான் நம்பியுள்ளோம். தமிழ்நாட்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி அதிகமான தொழிற்சாலைகளை இந்நிலத்தில் காலூன்ற வைத்தது, அதன் தேவையில் 90% நீர் பூமிக்கடியில் இருந்து உறிஞ்சப்பட்டது, இது கடந்த பல பத்தாண்டுகளில் ஏற்பட்ட விளைவு. நாம் நிலத்தடிநீர் பேரிடரை சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்பது முற்றிலும் உண்மை. இன்றில்லாவிட்டாலும் நாளை அந்த உண்மை நமக்கு முகத்தில் அறையும், அப்போது காலம் கடந்திருக்கும்."

தண்ணீர் என்பது அடிப்படை உரிமை. அதை வியாபாரம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால், இன்று தண்ணீர் வியாபாரம் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வளர்ந்து நிற்கிறது. அரசாங்க நிர்வாகத்தால் அதைச் செய்ய முடியாததே இதற்குக் காரணம். நம் நகரக் கட்டமைப்புகள் நீண்டகாலத் தேவைகளுக்குத் தகுந்தவாறு கட்டமைக்கப்படவில்லை. நிலையான வளர்ச்சியின் முதல்படி அனைவருக்கும் தண்ணீர் விநியோகம் முறையாகக் கிடைப்பதே. அதைக்கூடச் செய்ய முடியாமல் தனியார்களை நம்ப வேண்டிய நிலையில்தான் நம் நகரக் கட்டமைப்புத் திட்டங்களைத் தீட்டியுள்ளார்கள். நகரங்கள் மீண்டும் திட்டமிடப்பட வேண்டும். அவை மறுசீரமைத்துக் கட்டமைக்கப்பட வேண்டும்.

இது குறித்து நிலத்தடி நீர் ஆய்வாளர் சரவணனிடம் பேசும்போது, "20 வருடங்களுக்கு முன்பு ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கினால் அது ஒரு கௌரவத்தின் குறியீடாக இருந்தது. ஆனால் இன்று தண்ணீர் பாட்டில் தேவைக்குரிய ஒரு விஷயமாக மாற்றப்பட்டுவிட்டது. அரசின் அலட்சியத் தன்மையே இதற்குக் காரணம். சொல்லப்போனால் அரசுதான் இந்தத் தண்ணீர் மாஃபியாவை வளரவிட்டது. தண்ணீர் என்பது ஒவ்வொரு குடிமகனுடைய அடிப்படைத் தேவை. அரசுதான் அதைக் கொடுக்க வேண்டும். சென்னையைப் பொறுத்தவரையில் நிறைய இடங்களில் நிலத்தடி நீரே கிடையாது. ஆனால், சென்னையில்தான் தொடர்ந்து வளர்ச்சி முகாம்கள் (Development Zone) அமைக்கப்படுகின்றன. நிலத்தடி நீரை எங்கு எடுக்க வேண்டும் எங்கு எடுக்கக் கூடாது என்ற விதிமுறைகளை அரசு வகுத்திருந்தாலும் அதைச் செயல்படுத்துவதற்கோ சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுக்கும்போது அதைத் தடுப்பதற்கோ முறையான அளவீடோ கண்காணிப்புக் குழுவோ அரசிடம் இல்லை. அத்தகைய குழுவை அமைக்கச் சொல்லித்தான் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஐ.டி நிறுவனங்கள் அனைத்தும் டேங்கர் லாரி தண்ணீரைத்தான் ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்தால் அனைத்து நிறுவனங்களையும் மூட வேண்டி வரும். தண்ணீரை வணிகமயமாக்கிவிட்டோம். அதை மாற்ற வேறு வழியில்லை. ஆனால், அவற்றில் சில ஒழுங்குமுறைகளையாவது செய்வதுதான் தொலைநோக்குடைய ஒரு செயலாக இருக்கும். இதை டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் அரசு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்" என்றார்.   

அரசு இனியாவது அதைப் புரிந்துகொண்டு, மக்களின் அடிப்படை உரிமை இடையூறின்றி அவர்களுக்குக் கிடைக்க வழிசெய்யுமா?

இதனிடையே சற்றுமுன் கிடைத்த தகவல்படி தமிழ்நாடு கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள் சங்கம் மட்டும் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர். டேங்கர் லாரி உரிமையாளர்கள் மட்டும் தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.