Published:Updated:

'அடுத்து இவை உருவாக 3 மில்லியன் ஆண்டுகள் தேவை!'- அழிவின் விளிம்பில் பாலூட்டிகள்

மிக விரைவாக நம் கண்முன்னால் காணாமல் போகும் விலங்கினங்கள், அதே வேகத்தில் இந்தப் பூமிக்கு திரும்பி வருவதில்லை.

'அடுத்து இவை உருவாக 3 மில்லியன் ஆண்டுகள் தேவை!'- அழிவின் விளிம்பில் பாலூட்டிகள்
'அடுத்து இவை உருவாக 3 மில்லியன் ஆண்டுகள் தேவை!'- அழிவின் விளிம்பில் பாலூட்டிகள்

'சுற்றுச்சூழலைப் பொறுத்தவரையில் இது உலகிற்கே மோசமான காலகட்டம்' என்பதைச் சமீபத்தில் வந்த ஐ.பி.சி.சி அறிக்கை தெளிவாக சொல்லிவிட்டது. இதைத் தொடர்ந்து அறிவியல் விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்களுடைய கருத்துகளை பரிமாறியபடி இருக்கின்றனர். இந்த நேரத்தில் நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள மறுக்கிறோம் அல்லது மறக்கிறோம். சுற்றுச்சூழலுக்கான உயிர்ச்சங்கிலி என்ற பொதுவான விஷயத்தை ஏதாவது ஒரு இடத்தில் உடைக்கும்போது அதனுடைய பின்விளைவுகள் படுமோசமானதாக இருக்கும். அதைத்தான் ஐ.பி.சி.சி அறிக்கையும் சொல்லியிருக்கிறது. இதுதவிர இப்போது விலங்குகள் பற்றி வந்திருக்கும் புதிய ஆராய்ச்சியும் கொஞ்சம் பீதியைத்தான் கிளப்புகிறது. 

"பூமி ஒரு பெரிய அழிவுக்கு உட்பட்டுள்ளது. அடுத்த 50 ஆண்டிற்குள் மனித நடவடிக்கைகளால் பல பாலூட்டி இனங்களும்,  அதன் வசிப்பிடங்களும் அழியப்போகின்றன. இந்த நிலைமை சீராக 3 முதல் 5 மில்லியன் ஆண்டுகளாகும்" என்ற ஒரு புதிய ஆய்வின் முடிவை வெளியிட்டிருக்கிறார்கள், டென்மார்க்கைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள். 

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (The International Union for the Conservation of Nature) இதைப்பற்றி, 'பூமி தனது ஆறாவது பேரழிவிற்குள் நுழைகிறது. அடுத்த 100 ஆண்டுகளில் அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளில் 99.9 சதவிகிதமும், ஆபத்து நிறைந்த உயிரினங்களில் 67 சதவிகித விலங்குகளும் அழியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பின்படி வரும் காலங்களில் உலக சூழலில் அதிக அளவிலான விலங்குகளும், தாவர இனங்களும் அழிவினைச் சந்திக்கும். 

கடந்த 450 மில்லியன் ஆண்டுகளில், ஐந்து முறை பெரிய அளவில் சூழ்நிலை மாற்றங்களும், மறுமலர்ச்சியும் நிகழ்ந்துள்ளன. அதாவது, நம் மொத்த பூமியின் வாழ்வியல் முறையும் மாற்றப்பட்டு, அப்போதுள்ள தாவரங்களும் மிருக இனங்களும் அழிக்கப்பட்டு புதியவை உருவாகி இருக்கின்றன. இப்படிப்பட்ட பேரழிவுகள் அரங்கேறிய ஒவ்வொரு முறையும், அதன் தொடர்ச்சியாக பரிணாம வளர்ச்சி நிகழ்ந்து பேரழிவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியுள்ளன. 

அந்த ஐந்து பேரழிவுகளைத் தொடர்ந்து தற்போது பூமி தன் ஆறாவது பேரழிவிற்குத் தயாராகி வருகிறது. ஆனால், முன்னர் நடந்ததுபோல இந்த முறை பேரழிவு நிகழக் காரணம், இயற்கையல்ல, மனிதர்களும் அவர்களின் மனித நேயமற்ற செயல்பாடுகளும்தாம்.

பி.என்.ஏ.எஸ் (PNAS) என்ற பத்திரிகையில் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 'டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், எவ்வளவு விரைவான அழிவு நிகழ்கிறது என்பதைக் கணக்கிடுகின்றனர். ஆறாம் பேரழிவிற்குப்பின், பூமி தன்னை மீட்டுருவாக்கம் செய்ய 3-5 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளுமாம். தற்போது மாறி வரும் காலநிலையால் இப்போது உள்ள உயிரினங்கள் உயிர் பிழைக்க முடியாது. அவற்றிற்கு பதிலாக அதே இனத்தைச் சேர்ந்த புதிய உயிரினங்கள் வெளிப்படும். ஆனால், புதிய உயிரினங்களின் வெளிப்பாடு பழைய உயிரினங்களின் இடைவெளியை நிரப்ப அதிக காலம் எடுத்துக் கொள்ளும். இந்த விகிதாச்சாரம்தான் பாலூட்டிகளின் அழிவிற்கு முக்கியமான காரணம். 

ஆராய்ச்சி பாதுகாப்புகளுக்கு உதவ முடியும்!

இந்த ஆபத்து மிகச்சிறிய விலங்கினங்களுக்கு மட்டுமல்ல; காண்டாமிருகம் போன்ற பெரிய விலங்கினங்களுக்கும் உண்டு. தற்போது அழிந்து கொண்டிருக்கும் கறுப்பு காண்டாமிருகங்களே இதற்கு உதாரணம். "பெருமளவில் காட்டு உயிரினங்கள் வளர்ந்து வரும் ஒரு உலகில் நாம் இப்போது வாழ்கிறோம். ஆனால், அவை வேகமாக துடைத்தெரியப்பட்டு வருகின்றன." என்கிறார், ஆர்ஹஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெகன்-கிரிஸ்டன் ஸ்வென்னிங். இதுபோல சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஆய்வு முடிவுகள் அனைத்துமே அதிர்ச்சியளிக்கக்கூடியவையாகவே இருக்கின்றன. ஆனால், இதில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் தற்போது இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் கால அளவு. அதன் மதிப்பை உணர்ந்து மிக விரைந்து செயல்பட வேண்டும் என்பதையே இதுபோன்ற ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. அப்போதுதான் இந்தப் புவியின் பல்லுயிர்ச்சூழலை நம்மால் சீராக பாதுகாக்க முடியும்.