Published:Updated:

ஐபோன்களுடன் உலவும் மாத்ஷே பழங்குடிகள்... அமேசான் காட்டில் இவர்கள் என்ன செய்கிறார்கள்?

ஐபோன்களுடன் உலவும் மாத்ஷே பழங்குடிகள்... அமேசான் காட்டில் இவர்கள் என்ன செய்கிறார்கள்?
ஐபோன்களுடன் உலவும் மாத்ஷே பழங்குடிகள்... அமேசான் காட்டில் இவர்கள் என்ன செய்கிறார்கள்?

ரண்டு சிறுவர்களோடு ஒரு முதியவர் அடர்த்தியான அந்தக் காட்டுக்குள் தலையில் டார்ச் லைட்டோடு எதையோ தேடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்ணில் அந்தத் தவளை தெரிந்தது. அவரோடு நாமிருந்திருந்தால் அந்தச் சிறுவர்களின் பார்வையில் தெரிந்த ஆச்சர்யம் நம்மையும் தொற்றிக்கொண்டிருக்கும். அதற்குக் காரணம் அவர் கண்ணில்பட்ட தவளைதான். விரல் நகத்தின் அளவே இருந்த அந்தத் தவளை அவ்வளவு இருட்டான சமயத்தில் வெறும் டார்ச் லைட் உதவியில் எப்படித்தான் அவர் கண்ணுக்குத் தெரிந்ததோ? "இந்தத் தவளையின் பெயர் ரானிடோமியா ஃப்ளாவோவிடாடா (Ranitomeya Flavovittata). இது இங்கு மட்டுமே (பெரு நாட்டிலிருக்கும் மத்திய அமேசான் பகுதி) வாழக்கூடியது. இந்தத் தவளைகள் சிற்றுயிர்களின் முட்டைகளை விரும்பி உண்ணும். இதைப் பார்த்தது நம் அதிர்ஷ்டம்" என்று அதைப் பற்றி உடன்வந்த சிறுவர்களுக்குப் பாடமெடுக்கத் தொடங்கினார். அதோடு சிறுவர்களை வைத்து ஸ்மார்ட்போன்களில் பல கோணங்களில் ஒளிப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

அந்த முதியவரின் பெயர் அண்டோனியோ மான்கிட் ஜிம்னெஸ். வடகிழக்குப் பெருவில் வாழும் மாத்ஷே பழங்குடிகளின் தலைவர். அவர்களின் ஷா மேன் (குரு). காட்டிலேயே வேட்டையாடி, வனப்பொருள்களைச் சேகரித்து வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் அவர் ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்தியதே கிடையாது. சொல்லப்போனால் நவீனகால 'நாகரிக' வாழ்க்கைக்குள் இந்த மாத்ஷே பழங்குடிகள் பல ஆண்டுகளாக வராமல் தனித்தே வாழ்ந்தனர். இன்னமும் ஓரளவு ஒதுங்கியே நிற்கிறார்கள். இது இருபத்தோறாம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் சில நன்மைகளும் ஆங்காங்கே கிடைக்கின்றன. அந்த நன்மைகளில் ஒன்றுதான் யாவரி நதியோரத்தில் அன்று ஜிம்னெஸ் நிகழ்த்திக் கொண்டிருந்தது.

ஜிம்னெஸ் தன்னோடு மாத்ஷே இனத்தின் மற்ற மூத்தவர்களையும் சேர்த்துக்கொண்டார். சில யுவன், யுவதிகளையும் சிறுவர், சிறுமிகளையும் அழைத்துக்கொண்டார். ஒரு முதியவருக்கு இரண்டு இளைஞர்கள் வீதம் சுமார் பத்து குழுக்களாகப் பிரித்தார். பிரேசில், பெரு இரண்டு நாடுகளுக்கிடையிலுள்ள மத்திய அமேசான் காடுகளில்தான் அவர்களின் பூர்வீக நிலம் அமைந்துள்ளது. தினமும் அங்கிருந்து பல்வேறு இந்தக் குழுக்கள் ரோந்துப் பணிக்குக் காடுகளுக்குள் சுற்றத் தொடங்குவார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு ஸ்மார்ட்ஃபோன். இதுவரை ஐஃபோன் 5 கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஐஃபோன் 7-க்குச் சிறிது சிறிதாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். மூத்தவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துவதில் அவ்வளவு ஈடுபாடும் ஆர்வமும் இல்லை. வெளியுலகக் கலாச்சாரத்தோடு அதிகப் பழக்கம் வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இருக்கும் ஸ்மார்ட்ஃபோன் ஞானத்தை தன் திட்டத்துக்குப் பயன்படுத்த முடிவுசெய்தார் ஜிம்னெஸ். 

அமேசானைப் பற்றியும் அதன் பல்லுயிர்களைப் பற்றியும் நன்கறிந்தவர்கள் அந்தப் பழங்குடியின் மூத்த மனிதர்கள். இக்கால தொழில்நுட்பத்தை நன்கறிந்தவர்கள் இளைஞர்கள். முதியவர்கள் ஓர் உயிரினத்தைக் கண்டுபிடித்து அதைப் பற்றிய விளக்கங்களை இவர்களுக்குக் கற்பிப்பார்கள். இளைஞர்கள் முதியவர்கள் ஆசைப்படுவதுபோல் அந்த உயிரினங்களைப் பல கோணங்களில் அவற்றின் உடலமைப்பு, நிறம், சிறப்பு வேறுபாடுகள் போன்றவற்றை ஒளிப்படமெடுப்பார்கள். அதன்மூலம் தாங்கள் பார்த்து ரசித்து நுகர்ந்து வாழ்ந்த காட்டை அவர்களுக்கும் கடத்த அந்த முன்னோர்கள் விரும்பினார்கள். பெரும்பாலான இளைஞர்களும் சிறுவர்களும் நவநாகரிக கலாச்சாரத்தின்மீது மோகம் கொண்டிருந்தார்கள். அது இந்த முதியவர்களின் காடறிவை அடுத்த சந்ததிகளுக்குக் கடத்த ஒரு தடையாக இருந்தது. இன்று அந்தத் தடையையே அவர்கள் பாலமாக மாற்றி அதில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை வாழ்வித்துக் கொண்டிருக்கும் காட்டை ஒவ்வொரு தலைமுறையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு அந்தக் காட்டைப் பற்றியும் அதன் பல்லுயிர்ச்சூழல் குறித்தும் கற்பிக்க வேண்டியது அவசியம். அதை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஐபோன்களில் அவர்களால் ஆயிரக்கணக்கான ஒளிப்படங்களைச் சேகரித்து வைக்கமுடியும். அதோடு மாத்ஷே இளைஞர்கள் அவற்றைச் சூரிய ஒளியில் சார்ஜ் செய்யவும் எளிய வழிகளை விரைவில் கண்டுகொண்டார்கள். அமேசான் அடர்ந்த காடு அதற்குள் பயணிக்கும்போது அதைச் செய்யமுடியாது. அதனால் படகுகளில் நதிகளைக் கடக்கும்போதும், தங்கள் குடியிருப்புகளில் இருக்கும் சமயங்களிலும் அதைச் செய்துவிடுகிறார்கள். முதலில் மெதுவாக நகரக்கூடிய தேரைகள், பல்லிகள், போவா என்றவகை மலைப் பாம்புகள், நிலத்தாமைகளைப் பதிவு செய்கிறார்கள். அது இளைஞர்களுக்கு எளிமையாக இருக்கும். அதோடு ஆர்வத்தையும் தூண்டிவிடும். அதன்பிறகு சிரமப்பட்டுத் தேடவேண்டிய இடங்களிலும் கஷ்டப்பட்டுச் செயல்பட வேண்டிய இடங்களிலும்கூட முன்னர் தூண்டப்பட்ட ஆர்வமே அவர்களைச் செயல்பட வைத்துவிடும். ஒரு உயிரினத்தைக் குறைந்தது பத்து ஒளிப்படங்களாவது எடுத்துக் கொள்கிறார்கள். அப்போதுதான் பெயர் தெரியாத உயிரினங்களை மீண்டும் ஆராய்ந்து தெரிந்துகொள்ள முடியும். வெளிச்சம் குறைவாக இருக்கும் அந்த அடர்ந்த மழைக்காடுகளில்கூட ஆய்வுசெய்யத் தகுந்த அளவுக்குத் தெளிவான ஒளிப்படங்களை மாத்ஷே இளைஞர்கள் எடுக்கிறார்கள். சில சமயங்களில் சிற்றுயிர்களைப் பிடித்து அவற்றைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு விடவேண்டிய சூழ்நிலைகளும் அவர்களுக்கு ஏற்படுகின்றன. காட்டுயிர் ஒளிப்படக்கலையின் நெறிமுறைகள்படி அது தவறான பழக்கம்தான். இருந்தாலும் அதைச் செய்யும்போது மிகப் பக்குவமாகவும் மென்மையாகவும் கையாண்டுவிட்டு அதே இடத்தில் விட்டுவிடுகிறார்கள். 

ஐபோன் மூலம் எடுத்த ஒளிப்படங்களை கூகுள் டிரைவ், க்ளௌட் போன்ற வசதிகளின் உதவியோடு வட அமெரிக்காவிலுள்ள ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அதன்மூலம் அவர்களின் ஆய்வுகளுக்கும் உதவி செய்யுமளவுக்கு ஜிம்னெஸ் மாத்ஷே மக்களை முன்னேற்றியுள்ளார். "அவர்கள் அனுப்பும் ஒளிப்படங்கள் அருமையாக இருக்கின்றன. அவற்றிலிருந்து நாங்கள் பல புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு அவற்றின் தரம் இருக்கிறது. எங்களுக்கே தெரியாத பல உயிரின வகைகளை அவர்களின் ஒளிப்படங்கள் எங்களுக்குக் காட்டுகின்றன. ஒரு உயிரினத்தைப் பற்றி அறிந்துகொள்ள எந்தெந்த கோணங்களில் அதன் ஒளிப்படங்கள் தேவை என்பதை அவர்கள் நன்கு அறிந்துவைத்துள்ளார்கள்" என்கிறார் ஜோஸ் பேடியல் என்ற ஊர்வன ஆராய்ச்சியாளர். நியூ யார்க்கில் அமைந்திருக்கும் இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகத்தில் பணிபுரியும் அவருக்கு மாத்ஷே மக்கள் அனுப்பிய காட்டுயிர் ஒளிப்படங்கள் மூலம் இதுவரை அறியப்படாத பல புது உயிரினங்களைத் தெரிந்துகொண்டுள்ளார்கள். அந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் மாத்ஷே பழங்குடிகள். உதாரணத்துக்கு ஹிப்ஸிபோவாஸ் (Hypsiboas) என்ற ஒருவகை மரத்தவளை. வெளிர் பச்சை நிறம்கொண்ட தெளிவாகத் தெரிகின்ற (அதன் சில உடற்பாகங்கள் வெளியே தெரியுமளவுக்கு) தோல்களுடைய அந்தத் தவளை முதன்முதலில் இவர்களால்தான் கண்டுபிடிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது. அதைப்போலவே சாலமண்டர் வகைப் பல்லிகளும் ஒரு புதிய இனத்தையும், சில தேரை வகைகளையும் அவர்கள் புதிதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இப்போது ஆய்வாளர்களிடம் மாத்ஷே மக்கள் அனுப்பிய அமேசான் உயிரினங்களின் ஒளிப்படங்கள் மட்டும் சுமார் 2000 இருக்கும். அவற்றை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதே ஒன்றியத்தின் (IUCN) உயிரின வகைப்பாட்டுப் பட்டியலில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

மாத்ஷே பழங்குடிகளின் எல்லைக்குட்பட்ட வனப்பகுதி 12,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. அதற்குள் சதுப்புநிலங்கள், அடர்காடுகள், புல்வெளிகள், மலைப்பகுதி, சமதளப்பகுதி என்று பலவகைக் காடுகள் உள்ளன. அவற்றுள் பலவகை உயிரினங்கள் வாழ்கின்றன. பெரும்பாலும் ஊர்வன குறித்த ஆய்வுகளுக்கு மழைக்காலங்களில்தான் ஆய்வாளர்கள் செல்வார்கள். ஏனென்றால் அப்போதுதான் ஊர்வனப் பிராணிகளை அதிகம் பார்க்கமுடியும். ஆனால், கோடைக்காலங்களில்கூட சில புதிய வகை ஊர்வன உயிரிகளை இவர்கள் ஆய்வாளர்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார்கள். இவர்களின் இந்தக் காடறிதல் பயணம் உயிரினங்களின் மொத்த விவரங்களையுமே ஆய்வாளர்களுக்கு நல்குவதில்லை. அப்படித் தெரிந்துகொள்ள அவர்கள் இவர்களோடு பயணிக்கவேண்டும். அதோடு நாள்கள் போதாது ஆண்டுகள் தேவைப்படும். அத்தகைய ஆய்வுகளில் இந்தப் பழங்குடி மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் இப்போது விருப்பத்தின்பேரில் செய்பவர்களுக்கு நாளை இதுவே வருமானத்தைக் கொடுக்கும். அதற்கான முயற்சிகளில்தான் ஜோஸ் பேடியால் இறங்கியுள்ளார். ஆனால் அவர்தம் கருத்தில் ஒன்றை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த மக்களை ஓர் ஆய்வாளர் தலைமையேற்று நடத்திச் செல்லவேண்டுமென்று அவர் சொல்வது தவறு. இவர்களிடம் கற்றுக்கொள்ளத்தான் அவர்கள் வருகிறார்கள். அந்தக் காடறிதல் பயணத்தில் இவர்களே ஆசான்கள். ஆசான்கள் தான் எப்போதும் வழிநடத்த வேண்டும்.

Photo Credit: acateamazon.org

தங்கள் பதிவுகளை வைத்து பூர்விக மருத்துவ முறைகளுக்கு ஒரு என்ஸைக்ளோபீடியாவையே தயாரித்துள்ளார்கள். அதைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க அவர்ளின் கல்வியில் ஓர் பகுதியாகவே இணைத்துள்ளனர். இப்போது தங்கள் பூர்விக நிலத்தில் தங்களோடு வாழும் உயிரினங்களைப் பற்றிய என்ஸைக்ளோபீடியாவையும் தயாரித்துக் கொண்டுள்ளனர். ஜிம்னெஸ் உட்பட மாத்ஷே இன மூத்த குடிமக்கள் தங்கள் நிலத்தை ஓர் பெருமிதமாகவே கருதினார்கள். அதன் பெருமைகளை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த நினைத்தார்கள். ஆனால், இளைய தலைமுறை மூத்தவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்பதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அவர்களுக்குக் கேட்பதைவிட அனுபவிக்க வேண்டும். அதைச் சாத்தியப்படுத்தினார்கள் மூத்தவர்கள்.

அவர்கள் கற்பிக்கவில்லை. கற்றுக்கொள்ள வாய்ப்பு தந்தார்கள். இன்று மாத்ஷே இனத்தின் ஒவ்வோர் குழந்தைக்கும் தன் நிலத்தின் அருமை பெருமைகள் தெரியும். நாளை தம் நிலத்தை அந்நியர்களுக்குத் தாரைவார்ப்பதைப் பற்றி அவர்கள் நினைக்கக்கூட மாட்டார்கள். அதுதான் பழங்குடிகள். தானும் வாழ்ந்து தன்னைச் சுற்றியிருப்பவற்றையும் வாழ்விக்கும் தீர்க்கதரிசிகள்.