திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த அணுஉலைகள் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஆண்டுக்கு ஒருமுறை நிறுத்தப்படும். அதன்படி அணுஉலையின் முதலாவது அலகு கடந்த ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டது. இதனால் அந்த அணுஉலை அலகில் மின் உற்பத்தி நடைபெறவில்லை.
அணுஉலை 2-வது அலகில் மட்டும் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த அணுஉலையும் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி பராமரிப்புப் பணிக்காக திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த அணுஉலை செப்டம்பர் 26-ம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. தொடக்கத்தில் 300 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து அணுஉலை 2வது அலகில் மின்னுற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் அந்த அணுஉலை உடனடியாக நிறுத்தப்பட்டு பழுதை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராஜனிடம் பேசுகையில், ``அணு உலை வேண்டும் என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது அமைதியாக இருக்கிறார்கள். அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சியின் தலைவர் பொன்ராஜ், மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாம் உள்ளிட்ட பலரும் கூடங்குளம் அணு உலையை அப்போதிருந்தே ஆதரித்து வந்தனர். ஆனால், இப்போது பொன்ராஜ் கூட அதைப் பற்றி பேச முயல்வதில்லை. ஒவ்வொரு முறையும் பராமரிப்புக்காக நிறுத்துவதாகச் சொல்கிறார்கள். ஆனால், சர்வதேச விதியின்படி இரண்டு மாதம்தான் பராமரிப்புக்காக நிறுத்த வேண்டும். ஆனால், இவர்கள் நான்கு மாதங்களுக்கும் மேல் நிறுத்துகிறார்கள். ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறிய நிலையில், இதுவரை அந்த அளவுக்கு மின் உற்பத்தி நடக்கவில்லை. கிட்டத்தட்ட 50 முறைகளுக்கு மேல் அணு உலை பழுதாகி நிறுத்தப்பட்டுள்ளது. அணு உலை தொடர்ந்து மூடப்படுவதும் திறக்கப்படுவதும் மர்மமாகவே உள்ளது. அதனால் தமிழக அரசோ இந்திய அரசோ அணு உலை மர்மத்தை விளக்க வேண்டும்'' என்றார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது அணுஉலையின் 2வது அலகும் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு மொத்தமாக 2,000 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. அணுஉலையின் பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் அது சரி செய்யப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.