Published:Updated:

இந்தியாவே... இல்லை இல்லை... உலகமே அலர்ட்... கங்கைக்கு ஆபத்து! #VikatanInfographics

நீரும் மீனும் தருவதோடு ஒரு நதியின் சூழலியல் சேவை முடிந்துவிடுவதில்லை. அதன் சேவைகளில் முக்கியமானதே அதன் சுற்றத்தைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் காப்பாற்றி வைப்பதே.

இந்தியாவே... இல்லை இல்லை... உலகமே அலர்ட்... கங்கைக்கு ஆபத்து!  #VikatanInfographics
இந்தியாவே... இல்லை இல்லை... உலகமே அலர்ட்... கங்கைக்கு ஆபத்து! #VikatanInfographics

ருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் உருவான தொழில்நுட்ப வளர்ச்சி பல தொழிற்சாலைகளைத் தோற்றுவித்தது. உற்பத்தித் துறையையும் நுகர்வும் அதிகமாகத் தொடங்கியது. நம் ஆசைகள், நம் பேராசைகள் நம்மைச் சுற்றி வாழ்ந்த மற்ற உயிர்களைப் பற்றிய சிந்தனையையும் அக்கறையையும் மழுங்கடித்துவிட்டது. தொழிற்சாலைகள் நவீனகால வேலைவாய்ப்புகளைத் தோற்றுவித்தது. அந்த வேலைவாய்ப்பு பரவலாக வாழ்ந்துகொண்டிருந்த மக்களை ஒரு மையத்தை நோக்கி ஈர்ப்பதாக இருந்தது. விளைவு, நகர்ப்புறங்களில் மக்கள்தொகையின் அபரிமித வளர்ச்சி. அனைவரையும் வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வதாகக் கூறிய உலகமயமாக்கல் நுகர்வுக் கலாசாரத்தை அதற்கான பாதையாக முன்வைத்தது.

வளர்ச்சி என்பது பொருளாதார நிலை உயர்வது மட்டுமே என்ற கண்ணோட்டம் வளரத்தொடங்கியது. சுற்றத்தையும் சூழலையும் நம் கண்கள் கவனிக்க மறுத்துவிட்டன. மனிதர்களின் அப்படியொரு பேராசைப் பசிக்குப் பலியான நதிதான் கங்கை. கங்கை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் என்றவகையில் அதை மீட்டெடுக்க வேண்டுமென்கிறோம். நதி மனிதர்களுக்கான நீராதாரம் மட்டுமில்லை. அது பல்வகை உயிரினங்களின் வாழிடம். அப்படிப் பல்லாயிரக்கணக்கான நீர்வாழ் உயிரிகளின் வாழிடமாக இருந்தது கங்கை. இன்று பல நூறாகக் குறைந்துவிட்டது. அந்த வாழிடம் இல்லாமலாகிக் கொண்டிருக்கிறது. அதில் வாழ்ந்த உயிரினங்களுக்கு அந்நதியே சமாதியாகிக் கொண்டிருக்கின்றது.

மக்கள்தொகை அடர்த்தி கங்கை நதிக்கரையோரம் மிக அதிகம். சராசரியாக உலகளவில் நதியோர மக்கள்தொகை சதுர கி.மீ-க்கு 13 பேர் மட்டுமே வசிக்கவேண்டும். அப்போதுதான் அங்கு சுற்றுச்சுழலைச் சமநிலையில் தக்கவைக்க முடியும். ஆனால், இங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 540 மக்கள் வாழ்கிறார்கள். அதிகபட்சமாக பீகாரில் 1102 பேர். இதுபோக நதி முழுக்க அணைகளும், தடுப்பணைகளும் அதிகம். நதியின் இயல்பான நீரோட்டம் திசைதிருப்பட்டுப் பெரிய குழாய்கள் மூலம் நீர்மின் நிலையங்களுக்காகக் கொண்டு செல்லப்படுகின்றது. இவையனைத்தும் அதன் சூழலியல் சமநிலையைக் குலைத்துப் பல்லுயிர்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. முக்கால்வாசி அழிந்தும்விட்டது. ஆறு அதன் இயற்கையான பாதையில் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். ஆனால் மனிதத் தலையீடுகள் உருவாக்கிய தடைகள் கடல்நோக்கி ஓடும் ஆற்றை ஆங்காங்கே குட்டைகளாகத் தேங்கிநிற்க வைத்துவிட்டன. அதன் நீர்வழிப்பாதையின் பல இடங்களில் நீரோட்டமே இல்லாமல் போய்விட்டது. ஹரித்வார், பிஜ்னோர், நரோரா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள தடுப்பணைகள் மட்டுமே 90% நீரோட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவை நீரோட்டத்தைத் தடைசெய்வது மட்டுமில்லை, பல லட்சம் உயிரினங்களின் வாழிடத்தைக் குப்பைக் குளங்களாக மாற்றிவிட்டன. அந்தக் குளங்களில் நதிநீரைவிடத் தொழிற்சாலைக் கழிவுகளும் அன்றாட நகர்ப்புறக் கழிவுகளுமே ஆட்சிபுரிகின்றன.

ஆறு அதன்போக்கில் பயணிக்கவேண்டும். அப்பொழுதுதான் சூழலியல் சமநிலையைத் தக்கவைக்க முடியும். வெப்பமண்டல ஆறுகள் உயிர்த்திருப்பதற்குக் கிளைநதிகளுக்கும் தலைமை நதிக்குமான தொடர்பு மிக முக்கியமானது. அதுதான் அதற்குத் தேவையான ஊட்டச்சத்து, அதில் வாழும் உயிரினங்களின் வாழிடப் பராமரிப்பு போன்றவற்றுக்குத் துணைபுரியும். அந்தத் தொடர்பைத் துண்டிக்கும் வகையில் வெள்ளநீர் தடுப்புக்கரைகள் அந்த இணைப்புகளுக்கிடையில் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அதனால் விளையும் சேதங்களைத் தடுப்பதற்காகவும் அதைக் கட்டியதாகச் சொல்கிறார்கள். அதனால் சதுப்புநிலங்களுக்கும் நதிக்குமான தொடர்பு அற்றுப்போய் காலப்போக்கில் நதியைச் சார்ந்து அந்நிலத்தில் வாழ்ந்த உயிரினங்களும் அழிந்துவிடுகின்றன. வெப்பமண்டல ஆறுகள் தனக்கான 90% நீரை வருடத்தில் மழைபெய்யும் அந்த 90 நாள்களில்தான் பெறுகின்றன. வெள்ளநீர் தடுப்புச்சுவர்கள் அமைப்பதால் மழைக்காலங்களில் ஆற்றின் உபரிநீரைத் தாங்கிநிற்கும் வெள்ளநீர் வடிகால் பகுதிகளில் நீர் தேங்குவது கிடையாது. அதனால் நிலத்தடிநீரும் சேமிக்கப்படுவதில்லை. ஆறுகளின் இயற்கையான பயணத்தைத் தடைசெய்வது அவற்றைச் சார்ந்திருக்கும் உயிரிகளையும், அந்த உயிரிகளின் செயற்பாட்டைச் சார்ந்திருக்கும் சூழலியல் சமநிலையையும் பாதிக்கும். அதுதான் கங்கையில் நடந்துகொண்டிருக்கிறது. அதன் பல்லுயிர்ச்சூழலை அழித்துக்கொண்டிருக்கிறது.

கங்கை மட்டுமல்ல. எந்த நதியின் பல்லுயிர்ச்சூழலுமே முழுமையாக ஆய்வுசெய்யவும் புரிந்துகொள்ளப் படவுமில்லை. அதிலும் நதி ஆரோக்கியமாக இருப்பதில் அங்கு வாழும் உயிரினங்கள் வகிக்கும் முக்கியமான பங்கு குறித்த ஆய்வுகள் மிகக் குறைவு. நீரும் மீனும் தருவதோடு ஒரு நதியின் சூழலியல் சேவை முடிந்துவிடுவதில்லை. அதன் சேவைகளில் முக்கியமானதே அதன் சுற்றத்தைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் காப்பாற்றி வைப்பதே. அன்றாட வாழ்வியலில் அங்கு வாழும் ஒவ்வொரு உயிரினமுமே அந்தச் சேவையில் கழிவுகளைத் தின்று தீர்ப்பது, நீரின் தூய்மையைப் பாதுகாப்பது, நீருக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை உற்பத்திசெய்வது போன்ற ஏதாவதொரு பங்கு வகிக்கும். ஆனால் நம் நாட்டில் நதிகளின் ஆரோக்கியமே கேள்விக்குறியாகிவிட்டது. பிறகு எப்படி தன்னைச் சார்ந்துவாழும் உயிர்கள் அழிவைநோக்கிச் செல்வதை அதனால் தடுக்கமுடியும். தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலையில் எங்கிருந்து தன் சுற்றத்தைக் காப்பாற்றுவது!

முதலைகள், ஆற்று ஆமைகள், நீர்வாழ் பாலூட்டிகள், பல நூறு வகை மீன்கள், பாசி, பூஞ்சை, நீர்த் தாவரங்கள், நீர்ப்பறவைகள், நதியைச் சார்ந்து சதுப்புநிலத்தில் வாழும் பறவைகள், சிற்றுயிர்கள், தண்ணீர் பாம்புகள், நீர்வாழ் அட்டைகள், நுண்ணுயிரிகள் என்று பல நூறு உயிரினங்கள் கங்கையைச் சார்ந்திருக்கின்றன. கங்கை நமக்கு ஒரு நதி அவ்வளவுதான். இவற்றுக்குக் கங்கைதான் உலகம். இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமே உரியதில்லை. மற்ற உயிரினங்களுக்குத்தான் இங்கு அதிகப் பங்குண்டு. நம் பங்குபோக மற்றவர்களின் பங்கையும் திருடிக் கொண்டிருக்கிறோம். அப்படியொரு திருட்டில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதுதான் இந்தப் புனித நதியும்.

பல மில்லியன் லிட்டர் கழிவுநீர் குடியிருப்புகளிலிருந்தும், பல பில்லியன் லிட்டர் கழிவுகள் தொழிற்சாலைகளிலிருந்தும் கங்கையில் கலந்துகொண்டிருக்கிறது. அதென்ன ஆறா சாக்கடையா? மீன்கள், ஆமைகள், பாலூட்டிகள் வாழ்ந்த கங்கை இன்று பல நோய்க்கிருமிகளுக்கும், கொடிய காய்ச்சல்களை உற்பத்திசெய்யும் கொசுக்களுக்கும் வாழிடமாக மாறிவிட்டது. நதிநீர் முழுவதும் நுண்கிருமிகளாலும், வேதிமங்களாலும் மாசடைந்துள்ளது. அதுபோக நதிப்படுகையில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தில் பயன்படுத்தும் வேதிமப் பூச்சிக்கொல்லிகளும் அங்குதான் கலக்கின்றன. எல்டிரின், டையெல்டிரின், பி.ஹெச்.சி, ஹெச்.சி.ஹெச் போன்ற ஆபத்தான வேதிமங்களை விவசாயத்தில் பயன்படுத்துகிறார்கள். அவையும் ஆற்றில் கலக்கவே அவை மற்ற வேதிமங்களோடு வினைபுரிந்து ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் நதியில் வாழும் மீன் இனங்களைப் பாதிக்கின்றன. இருபதாம் நூற்றாண்டுவரை கங்கை 375 மீன் வகைகளுக்கு வாழிடமாக விளங்கியது. அதில் கெண்டை மீன்களில் மட்டுமே 34 வகைகளிருந்தன. இத்தனை வகைகள் தற்போது அங்கில்லை. வெகுசிலவே வாழ்கின்றன. 1958-ல் 44.5% மீன்கள் பிடிக்கப்பட்டன. அதுவே 1997-ல் வெறும் 8.3% ஆகக் குறைந்துவிட்டது. அப்போது ஒரு ஹெக்டேருக்கு 26.62கிலோ மீன்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது 2.55கிலோ மட்டுமே சராசரியாகக் கிடைக்கின்றது. அதுகூட அனைவருக்கும் கிடைப்பதில்லை. 

கிடைக்கும் மீன்கள்கூட ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. அதற்குக் காரணம் ஆற்றில் கலந்துவிடும் வேதிமங்கள். அவை புற்றுநோய் உண்டாக்கக்கூடியவை. மனிதத் தலையீடுகள் ஆற்றின் தூய்மையை மட்டும் கெடுக்கவில்லை, அவை அதன் உயிர்ச்சூழலையே மோசமாக்கி உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக்கிவிட்டது. கங்கையின் அழிவு இவற்றோடு நிற்கவில்லை. மீன்களை மட்டுமே சாப்பிடக்கூடிய கரியால் முதலைகள், கங்கை, சிந்து நதிகளில் மட்டுமே வாழக்கூடிய டால்பின் வகை என்று அனைத்துமே இப்போது அழிந்து கொண்டிருக்கின்றன. அழிவது ஒரு நதி மட்டுமில்லை. அதில் வாழும் மீன்கள், பாலூட்டிகள், அந்நதியைச் சார்ந்து வாழும் நீர்ப்பறவைகள், நதியில் வாழும் சிற்றுயிர்கள், அவற்றுக்கு உணவாகும் பாசி, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் என்று அனைத்துமே அதோடு சேர்ந்து அழிந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசின் நமாமி கங்கா திட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வுப்படி அதன் 2525கி.மீ நீளம்கொண்ட கங்கையில் 41% பகுதியில் பல்லுயிர்ச்சூழல் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதன் நிலை இன்னமும் இப்படியே தொடர்ந்தால் மீதமிருக்கும் உயிர்ச்சூழலும் அழிந்துவிடும்

ஆம், கங்கை சமாதியாகிக் கொண்டிருக்கிறது. அந்தச் சாக்கடைச் சமாதியில் அதையே நம்பியிருந்த பல்லுயிர்ச்சூழலுக்கும் கல்லறைகள் அமைக்கப்படும்.