Published:Updated:

சூறாவளியால் வந்த புதுக்குழப்பம்... ஜப்பான் முழுக்கத் திடீரெனப் பூத்த செர்ரி பூக்கள்!

புயலடித்து ஓய்ந்த ஜப்பானில், கண்ணுக்கு இனிதாகப் பூத்துநிற்கின்றன செர்ரி பூக்கள்; ஆனால், மகிழ்வதற்கு பதில் வியப்புடன் பார்த்து நிற்கின்றனர் ஜப்பான் மக்கள்.

சூறாவளியால் வந்த புதுக்குழப்பம்... ஜப்பான் முழுக்கத் திடீரெனப் பூத்த செர்ரி பூக்கள்!
சூறாவளியால் வந்த புதுக்குழப்பம்... ஜப்பான் முழுக்கத் திடீரெனப் பூத்த செர்ரி பூக்கள்!

ஹிரோஷிமா, நாகசாகி என்று இரண்டு நகரங்களை அணு ஆயுதத்துக்கு விருந்தாக்கி பின் அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவாக வந்து அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் வேகமா வளர்ச்சிபெற்று வருகிற நாடு ஜப்பான். இப்படி அரசியல் மற்றும் ராணுவ ரீதியான அச்சுறுத்தல்களிலிருந்து தப்பித்த ஜப்பான் தற்போது இயற்கை சீற்றங்களில் சிக்கித் தவித்துவருகிறது. இயற்கை ஜப்பானை எப்போதும் அமைதியாக இருக்கவிடுவதில்லை. வருடத்துக்கு ஒரு முறை புயல், சூறாவளி, எரிமலை வெடிப்பு, மண் சரிவு, பூகம்பம் என்று எதையேனும் ஒன்றை ஏவி விட்டுவிடுகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் செப்டம்பரில் வந்தது `ஜெபி’ சூறாவளி. லட்சக்கணக்கான மக்களையும், பல்லாயிரக்கணக்கான வீடுகளையும் நிர்மூலமாக்கியது இந்தச் சூறாவளி. மேற்கு ஜப்பான் முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டது. இந்தச் சூறாவளியால் மக்கள் மட்டுமன்றி, தற்போது இயற்கையும் குழம்பி நிற்கிறது. அதனால் குறிப்பிட்ட பருவகாலத்துக்கு முன்பே ஜப்பானின் பல பகுதிகளில் செர்ரி பூக்கள் பூக்கத் தொடங்கியிருக்கின்றன. 

ஜப்பானைப் பொறுத்தவரை ஓர் ஆண்டின் மார்ச் முதல் மே வரை அங்கு வசந்தகாலம். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வெயில்காலம்.செப்டம்பர் முதல் நவம்பர் வரை இலையுதிர்காலம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மழைக்காலம். பொதுவாகவே வெயில் ஆரம்பித்துவிட்டால் வெப்பச்சலனம் ஏற்படும். அது வலுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், சூறாவளி என்று உருமாறும். பின்பு வெப்பத்தைக் குறைக்க மழை பெய்யும். அப்படி ஆரம்பித்ததுதான் இந்த `ஜெபி’ புயலும். எல்லாம் அடித்து ஓய்ந்த பின்னும் ஜப்பானில் வெப்பநிலை குறையாமல் அதிகரித்தது. 1993 `வான்சி’ சூறாவளிக்குப் பின் ஜப்பான் கண்ட மோசமான புயல் இது என்று சொல்லப்படுகிறது.

சூறாவளிக்காற்றால் இலையுதிர்கால மரங்கள் மட்டுமன்றி எல்லா மரங்களின் பசுமையும் சூறையாடப்பட்டன. பொதுவாக மரங்கள் இலையுதிர்காலத்தில் இலைகளைப் பழுக்கச்செய்து உதிர்த்துவிட்டு மழைக்காலத்தில் பசும் இலைகளை வளரச்செய்து வெப்பம் அதிகரிக்கும் போது சில ஹார்மோன்கள் சுரந்து மலர்களை அரும்பச் செய்யும். அந்த நேரத்தில் `ஹனாமி’ எனும் மலர்கள் திருவிழா நடைபெறும். சுற்றுலாப் பயணிகளின் வரவும் அதிகரிக்கும். ஆனால், இப்போது இந்தச் சூறாவளியால் எழுந்த வெப்பத்தின் காரணமாக  6 மாதங்கள் முன்னதாகவே செர்ரி பூக்கள் பூக்கத்தொடங்கி விட்டன. ஜப்பானின் புகுவோகா, ஒசாகா, நகோயா, டோக்கியோ. சென்டாய், ஹிரோஷிமா ஆகிய நகர வீதிகளில் உள்ள சுமார் 350 மரங்களில் செர்ரி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. அதைக் காண ஜப்பானின் மற்ற பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகள் செர்ரி பூக்கள் குலுங்கும் ஜப்பான் நகரவீதிகள் நோக்கி விரையத்தொடங்கியுள்ளனர். இந்த திடீர் மாற்றத்தால் அரசும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்த விரைந்து செயல்பட்டு வருகிறது.

இது குறித்து ஜப்பானின் மலர்கள் சங்கத்தைச் சேர்ந்த வாகா கூறும்போது `இதற்கு முன் செர்ரி மரங்களில் பூக்கள் பூக்கும் காலம் அதிகபட்சம் 2013-ல் 10-15 நாள் வரைதான் முன்னதாக வந்துள்ளது. இந்த ஆண்டுதான் 6 மாதங்கள் முன்னதாக வந்துள்ளது. பொதுவாக செர்ரி பூக்கள் ஆண்டுக்கு 1 முறைதான் பூக்கும். இந்த ஆண்டு இருமுறை பூத்துள்ளது. 2019 வசந்த காலத்தில் மீண்டும் மலருமா என்று காண ஆவலாக இருக்கிறோம்’ என்று கூறுகிறார். புயலடித்து ஓய்ந்த ஜப்பானில், கண்ணுக்கு இனிதாகப் பூத்துநிற்கும் செர்ரி பூக்களால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.