Published:Updated:

"கூடங்குளம் மின்உற்பத்தி என்ன சிதம்பர ரகசியமா?!" கொதிக்கும் எதிர்க்கட்சிகள்

கூடங்குளத்தில் நடைபெறுவது சிதம்பர ரகசியமாக இருக்கிறது. உலகமே அணு உலைகளின் எண்ணிக்கையை குறைப்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசோ அணு உலைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

"கூடங்குளம் மின்உற்பத்தி என்ன சிதம்பர ரகசியமா?!" கொதிக்கும் எதிர்க்கட்சிகள்
"கூடங்குளம் மின்உற்பத்தி என்ன சிதம்பர ரகசியமா?!" கொதிக்கும் எதிர்க்கட்சிகள்

தென்னிந்தியாவின் துயரமாக கூடங்குளம் மாறாமல் இருக்க இந்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக மற்றும் சூழல் இயக்கங்கள் இணைந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தின. நேற்று சென்னை பிரஸ் கிளப்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த தெஹெலான் பாகவி, ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் மற்றும் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் பேசும்போது, சென்ற மாத இறுதியில் கூடங்குளத்திலுள்ள இரண்டாவது அணு உலையின் பராமரிப்புப் பணிகள் முடிவுற்று, மறுபடியும் மின்னுற்பத்தியைத் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வருவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் தமிழக மின் துறை அமைச்சர் கூடங்குளத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட வரவில்லை என்று அறிவித்திருந்தார். செப்டம்பர் இறுதியில் தொடங்கிய உற்பத்தி 5 தினங்களுக்கு முன்னர் (ஆரம்பித்த சுமார் 15 நாள்களுக்குள்) பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் கடந்த 22-ம் தேதி காலை முதல் மின்னுற்பத்தி தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளனர். மேற்சொன்னவை எதுவும் புதிதல்ல. கூடங்குளத்தில் இவ்வாறு நிகழ்வது தொடர் கதைதான்" என்றார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசும்போது, ``தரம் குறைந்த உதிரிபாகங்கள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ளன என்று கூடங்குளத்துக்கு எதிரான போராட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டது. அணுஉலைகளால் மின்னுற்பத்தியைத் தொடர்ந்து நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், மின்னுற்பத்தியைத் தொடர்ந்து நடத்துவது ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதில் போய் முடியும் என்று சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே கூடங்குளம் அணு உலைகள் உலகத்தில் எங்குமே இல்லாத வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 50 முறை பழுதடைந்து நின்றுள்ளன. கூடங்குளத்தில் நடைபெறுவது சிதம்பர ரகசியமாக இருக்கிறது. உலகமே அணு உலைகளின் எண்ணிக்கை குறைப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த அரசோ அணு உலைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. பழுதடைந்த பாகங்களைக் கொண்டு கூடங்குளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு மட்டுமல்ல தென் மாநிலங்களுக்கான ஒரு ஆபத்து." என்றார்.

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, ``ஏற்கெனவே உள்ள பிரச்னைகள் போதாது என்று இப்போது `அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இல்லை' என்று தேசிய அணு மின் கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் `தேசத்தின் சொத்து' என்றும் கழிவுகளை மறுசுழற்சி மையங்களுக்குக் கொண்டு சென்று மறுசுழற்சி செய்து அணுக்கழிவு மேலாண்மை மையங்களில் பாதுகாக்கமுடியும் என்று சொல்லித்தான் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடைபெற்ற நேரங்களில் தேசிய அணு மின் கழகமும், மத்திய அரசும் சொல்லிவந்தன. 

இந்தியாவில் உள்ள இரண்டு அணுக்கழிவு மறுசுழற்சி மையங்களும் ``கனநீர் உலைகளில்" (heavy water reactors) இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் கொண்டவை. கூடங்குளம் போன்ற உலைகளிலிருந்து உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை மேற்சொன்ன மையங்களில் மேலாண்மை செய்யமுடியாது.

புகுஷிமா அணு உலை விபத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் அதன் கழிவுகள் அங்கேயே வைக்கப்பட்டதுதான். இப்போது கூடங்குளத்தில் அணுக்கழிவு மேலாண்மை மையம் கூடங்குளம் வளாகத்துக்குள்தான் அமைக்கப்படும் என்றும், ஆனாலும் அதற்குரிய தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை என்றும், அதனால் மேலும் நான்காண்டுகள் கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுள்ளது தேசிய அணுமின் கழகம். இதற்கு முன்னர் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், பல்வேறு கடிதங்கள் மூலமாக அணுக் கழிவு மையங்களை அமைக்க வலியுறுத்தியுள்ளது.

கூடங்குளத்திலுள்ள அணு உலைகளுக்குள் மேலும் மேலும் அணுக்கழிவுகளை சேர்த்து வைப்பது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியக்கூடும். கூடங்குளம் அணு உலை கழிவுகளை கையாளுவதற்கான தொழில்நுட்பம் மிகவும் அவசியமாகிறது. கூடங்குளம் அணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யக்கூடிய தொழில்நுட்பம் இந்தியாவில் கிடையாது. அதனால்தான் கழிவுகளை பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்கிற தேவையும் வருகிறது. இதுகுறித்த தமிழகக் கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து நடத்தும் விரிவான கூட்டம் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடத்தப்படும்" என்றார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் அனைவரும் வைத்த முக்கியமான 4 கோரிக்கைகள் இவைதாம்!

1. இதுவரை உலகத்தில் இல்லாத வகையில் 50 முறைக்கு மேல் பழுதடைந்து நின்றுள்ள 1-வது மற்றும் 2-வது உலைகளில் சுதந்திரமான குழுவைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். அதுவரை மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும்.

2. அணுக்கழிவு மேலாண்மை மையம் கூடங்குளம் வளாகத்துக்கு வெளியே அமைக்கும் வரை, முதல் இரண்டு அலகுகளில் உற்பத்தியை மேற்கொள்ளக் கூடாது

3. 3,4,5,6 என்று கூடங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவாக்கப் பணிகளை கைவிட வேண்டும்.

4. கூடங்குளம் போராட்டத்தில் போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.