Published:Updated:

இறந்தவர் உடலிலிருந்து முளைத்த அத்திமரம்... 44 ஆண்டு அதிசயம்!

44 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரின் தடயங்கள் 2011-ல் கிடைத்தன. அதன் ஆய்வுமுடிவுகள் இப்போது வெளிவந்துள்ளன. அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியவந்திருக்கிறது.

இறந்தவர் உடலிலிருந்து முளைத்த அத்திமரம்... 44 ஆண்டு அதிசயம்!
இறந்தவர் உடலிலிருந்து முளைத்த அத்திமரம்... 44 ஆண்டு அதிசயம்!

த்திய தரைக்கடலில் (Mediterranean Sea) அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸில் ஒரு ஊரின் ஒதுக்குப்புறப் பகுதியில் அமைந்துள்ளது அந்தக் குகை. சாதாரணமாக ஒரு குகைக்குள்ளே செல்ல வேண்டுமென்றால் தீப்பந்தம் அல்லது விளக்கின் வெளிச்சத்தில்தான் செல்ல முடியும். அவ்வளவு இருள் கும்மியிருக்கும். ஆனால் சைப்ரஸில் உள்ள அந்தக் குகைக்குள் ஒரு அத்தி மரமே வளர்ந்துள்ளது. இம்மியளவு ஒளிபுகாத குகைக்குள் எப்படி ஒரு விதை முளைத்து மரமாகியிருக்கும். விதை முளைக்கச் சூரிய ஒளிதானே ஆதாரம். அதுவும் அந்த அத்தி மரம் குகையைத் தாண்டி வெளியேயும் வளர்ந்துள்ளது. குகை இருக்கும் பகுதியானது கரடு முரடான மலைப்பகுதி. அந்தப் பகுதியில் ஒரு அத்தி மரம் வளர்வதென்பது அசாதாரணமான விஷயம். இவ்வளவு ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்த அந்த மரத்தையும் அதன் தோற்றத்தையும் ஆய்வு செய்ய ஆய்வாளர் ஒருவர் அப்பகுதிக்குச் செல்கிறார். இந்த ஆய்வு நிகழ்வது 2011-ம் ஆண்டு. அத்தி மரத்தை ஆய்வு செய்யும்போது, மரத்தைச் சுற்றியும் அகழாய்வு மேற்கொள்கிறார். அப்போது அவருக்கு இன்னும் அதிர்ச்சியான சில விஷயங்கள் கிடைக்கின்றன. 

இந்தச் சம்பவம் இப்படியே இருக்கட்டும். 

அப்படியே 51 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம், 1960-ம் ஆண்டு சைப்ரஸ் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறுகிறது. சைப்ரஸ் குடியரசின் முதல் அதிபராக மூன்றாம் மகாரியஸ் (Makarios III) பதவியேற்கிறார். மத்திய தரைக்கடலில் அமைந்திருக்கும் முக்கியத் தீவு நாடான சைப்ரஸ் இரு முக்கிய இனக்குழு மக்களைக் கொண்டது. அவர்கள் சைப்ரஸின் கிரேக்கர்கள் (Greek Cypriots), சைப்ரஸின் துருக்கியர்கள் (Turkish Cypriots). அங்கு ஆரம்பம் முதலே கிரேக்கர்களின் கைகளே ஓங்கியிருக்கின்றன. அவர்களிடமே அதிகாரங்கள் இருக்கின்றன. பெரிதாக எந்தவொரு சண்டைகளும் இல்லையென்றாலும் நீறுபூத்த நெருப்பாக அவர்களிடையே பிரிவினை இருந்துவருகிறது. இனக்குழுக்களுக்கிடையேயான பிரச்னையே மிக முக்கியமான அரசியல் பிரச்னையாகவும் இருக்கிறது. இரு இனக்குழுக்களுடையேயான மிகப்பெரிய சண்டைக்கான சிறுபொறி 1963-ம் ஆண்டு ஏற்பட்டது. அதிபர் மூன்றாம் மகாரியஸ் அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தத்தைக் கொண்டு வந்தார். 13-வது திருத்தம்தான் கனன்று கொண்டிருந்த தணலை நெருப்பாக எரிய வைத்தது. 13-வது திருத்தம் கிரேக்கர்களுக்கு மேலும் அதிகாரத்தை அளிப்பதாக துருக்கியர்கள் அதனை எதிர்த்தனர். துருக்கியர்கள் பலர் அரசு வேலைகளை கூட ராஜினாமா செய்தனர். மிகப்பெரிய கலவரங்கள் வெடித்தன. இரு பக்கமும் இறப்புகள் அதிகமாயின. இராணுவம் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றது. துருக்கியர்களின் பாதுகாப்புக்காக துருக்கி இராணுவம் சைப்ரஸிற்குள் நுழைய பிரச்னை இன்னும் தீவிரமானது. 1963-ல் தொடங்கிய இந்தப் பிரச்னை கலவரமாக மாற, இரு நாடுகளிடையே போராக மாறி 11 ஆண்டுகள் வரை நீண்டது. 1974-ம் ஆண்டுதான் இதற்கு ஒரு முடிவு வந்தது. 

இந்தப் பிரச்னை முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு 1974-ம் ஆண்டு ஜுன் மாதம் துருக்கியரான அஹ்மத் ஹெர்குனேவை (Ahmet Herguner) கிரேக்கர்கள் அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்கின்றனர். துருக்கியர்கள் தற்காப்புப் படையில் (Turkish Resistance Organisation) இருந்த அஹ்மத் ஹெர்குனேவை அவரது குடும்பமும் நண்பர்களும் அப்போதுதான் கடைசியாகப் பார்த்தனர். அதன்பிறகு காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டார் அஹ்மத். 11 ஆண்டுகள் நடந்த கலவரத்தில் அஹ்மத்தைப் போன்று நிறைய பேர் காணாமல் போயினர். பலரைப் பற்றிய சிறிய தகவல்கள்கூட இன்றுவரை கிடைக்கவில்லை. 

இப்போது முதல் சம்பவத்துக்கு வருவோம். 

அத்தி மரத்தின் ஆய்வுக்காக அகழாய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளருக்கு அதிர்ச்சியாக சில எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்தன. மொத்தம் 3 பேருடைய எலும்புக்கூடுகள் அவை. சிதைந்த நிலையில் இருந்துள்ளன. அவற்றில் ஒன்று அக்மத் ஹெர்குனேவின் சிதிலமடைந்த எலும்புக்கூடு. அவரது சகோதரி 87 வயதான முனுர் ஹெர்குனேவின் (Munur  Herguner) டி.என்.ஏ மாதிரிகளை வைத்து உறுதி செய்தனர். அஹ்மத் காணாமல் போன பின் சில ஆண்டுகளுக்குத் தேடிய குடும்பத்தினர் பிறகு சோர்ந்துவிட்டனர். ஆனால், இப்போது அத்தி மரத்தின் மூலம் அஹ்மத்தின் நிலை தெரியவந்துள்ளது. இதில் இன்னோர் ஆச்சர்யம் என்னவென்றால் அஹ்மத் வயிற்றிலிருந்துதான் அந்த அத்திமரம் வளர்ந்துள்ளது என அவரது குடும்பத்தாரும் இன்னும் பலரும் தெரிவிக்கின்றனர். அஹ்மத் இறப்பதற்குச் சிறிது நேரத்துக்கு முன் அத்தி பழத்தைச் சாப்பிட்டுள்ளார். அதிலிருந்துதான் இந்த அத்திமரம் வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

இறந்தவரின் வயிற்றிலிருந்த விதை மரமாக வளர முடியுமா, என்ற கேள்விக்கு மண் அறிவியல் பேராசிரியர் ஜே நொலர்( Jay Noller) விளக்கமளித்துள்ளார். சாதாரணமாக விலங்குகளோ பறவைகளோ பழங்களைத் தின்று சரிவரச் செரிமானம் ஆகாத விதைகளை வெளியேற்றுகிறது. அவற்றிலிருந்தும் மரங்கள் வளர்கின்றன. இதே போன்று மனிதர்களுக்கும் நடக்கச் சாத்தியங்கள் இருக்கின்றன. மேலும் இந்தச் சம்பவத்தில் அத்தி விதை இறந்தவரின் வயிற்றுக்குள்தான் இருந்திருக்கும் என்ற கட்டாயம் இல்லை. அவரது சட்டை பையிலோ அல்லது கைகளிலே அல்லது உடலின் வேறு எங்கு இருந்திருந்தாலும் விதை மண்ணில் விழுந்து முளைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அத்தி மரத்தின் விதை அந்தக் கரடுமுரடான மலைப்பகுதிக்கு எப்படி வந்தது என்பதே புதிரானது. இதுபோன்ற கூற்றுகளால் அந்தப் புதிருக்கு விடை காண முயல்கின்றனர். 

Photos : CENTRAL EUROPEAN NEWS

அஹ்மத்துடன் மேலும் இருவர் அந்தக் குகையில் இருந்திருக்கின்றனர். சிதைந்த சடலங்கள் கிடைத்த பிறகு போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மூவரும் டைனமைட் வெடிகுண்டு விபத்து மூலம் கொல்லப்பட்டுள்ளனர். அதன் மூலமே குகை உடைந்து சூரிய ஒளி உட்புகுந்துள்ளது. இவ்வாறுதான் அத்திமரம் வளர்வதற்குச் சூரிய ஒளி கிடைத்துள்ளது.

1963-ம் ஆண்டிலிருந்து 1974-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் நடந்த சைப்ரஸ் பிரச்னையில் 2,00,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டுப் புலம்பெயர்ந்தனர். பலரும் இதனால் அகதிகளாகினர். இந்தக் காலகட்டத்தில் காணாமல் போன 2002 பேரைக் கண்டுபிடிப்பதற்காக 1981-ம் ஆண்டு சைப்ரஸில் காணாமல் போனோர் பற்றிய குழு (The Committee on Missing Persons in Cyprus (CMP)) ஒன்றை ஐநா சபை அமைத்துள்ளது. காணாமல்போன நபர்களின் பட்டியலை தயாரிப்பது மற்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து அவர்களைக் கண்டுபிடிப்பது போன்றவைதாம் இந்தக் குழுவின் பணி. காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து இரத்தமாதிரிகளை எடுத்துக்கொண்டு கிடைக்கக்கூடிய சடலங்களின் டி.என்.ஏ மாதிரிகளைக் கொண்டு அந்த நபரை அடையாளம் காண்கின்றனர். கடந்த 12 வருடங்களில் இந்தக் குழு 890 பேரை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளது.

11 ஆண்டுகள் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் நடந்த சண்டையில் துருக்கியர்கள் சைப்ரஸின் வடக்குப் பகுதியில் ஒன்றுதிரண்டு வடக்கு சைப்ரஸ் எனும் தனி நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர். இப்போது வரை துருக்கியைத் தவிர உலக நாடுகள் எவையும் அங்கீகரிக்காத நாடாக இருந்து வருகிறது வடக்கு சைப்ரஸ். 

முதலாம் உலகப் போரும் இரண்டாம் உலகப் போரும் சிறிய கொலையில் ஆரம்பித்தவைதாம். ஏற்கெனவே தனன்று கொண்டிக்கும் பகையையும் பழி உணர்வையும் தூண்டிவிட அந்தச் சிறிய கொலை போதுமானதாய் இருக்கிறது. போர்களும் கலவரமும் ஆயிரமாயிரம் உயிர்களை பலி கேட்பவை. ஆனால், அஹ்மத்தின் கதையில் நிகழ்ந்திருப்பது கவிதை போன்றது. தனது இனக் குழுவுக்கான சண்டையில் உயிர்நீத்தவனின் உடலிலிருந்து ஒரு மரம் உருப்பெற்றிகிறது. அது அவனுக்கான நினைவுச் சின்னமாகவும் இருக்கிறது. அதே நேரம் அறிவியலின் விந்தையாகவும் இருக்கிறது. இன்றும் நம் நாட்டுப்புறக்கதைகளில் மரமாக உருப்பெற்ற மனிதர்களும் வழிபாடுகளும் நிறைந்துதான் இருக்கின்றன. மொத்தத்தில் இயற்கைதான் நமக்கான அமைதியை பல்வேறு வழிகளில் வலியுறுத்துகிறது.