Published:Updated:

பூமி மூச்சு விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா... இங்கே பாருங்கள்!

வீடியோவை நன்றாகக் கவனியுங்கள். மரங்கள் தள்ளாடுகின்றன, காற்று ஊளையிட்டுச் சுழற்றியடிக்கின்றது. நிலத்தின் பெரும்பகுதி மேலெம்புவதும் இறங்குவதுமாக இருக்கிறது.

பூமி மூச்சு விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா... இங்கே பாருங்கள்!
பூமி மூச்சு விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா... இங்கே பாருங்கள்!

இந்த வீடியோவைப் பாருங்கள்...

மாயமில்லை மந்திரமில்லை. வி.எஃப்.எக்ஸும் இல்லை. உண்மையில் நடந்தது. ஆம், நிஜமாகவே பூமிதான் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. நம்பமுடியவில்லையா?

மரங்கள் சுவாசிப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பகலில் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியேற்றும். இரவில் அதையே தலைகீழாகச் செய்யும். அதைப் போலவே நிலமும் சுவாசிக்கும். சற்று வித்தியாசமாக. அதுதான் குபெக் காட்டிலும் நடந்தது. பூமி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. சுவாசித்துக் கொண்டிருக்கும் உயிருள்ள உணர்ச்சிப்பூர்வமான காடாகக் காட்சியளித்தது குபெக். அதில் எந்த ஏமாற்று வித்தைகளும் இல்லை. எந்த ராட்சத மனிதனும் மண்ணுக்கடியில் படுத்து குறட்டை விடவில்லை. மண்தான் சுவாசித்துக் கொண்டிருந்தது. கற்பனைப் புனைவுகளில் வருவதுபோல் அந்த வீடியோவில் தெரிவது மர மனிதனல்ல. உண்மையான மரம்தான். மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருப்பது அந்த மரம் அமைந்திருக்கும் நிலப்பகுதிதான்.

இதற்குமுன் இதுபோன்ற நிகழ்வு 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருமுறை நிகழ்ந்தது. அதற்கும் முன்பாக யாரேனும் பார்த்துள்ளார்களா என்பதற்கான பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. கனடிய வானிலை அமைப்பு (Weather Network) என்ற ஒரு ஊடகத்தின் நேயர் டோனி என்பவர் அதை அவர்களிடம் பதிவுசெய்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவர் பதிவுசெய்த அந்த நிகழ்வுக்குப் பிறகு தற்போது மீண்டும் அதுபோன்ற ஓர் அரிய நிகழ்வு கேண்டர்பரி பல்கலைக்கழகப் பேராசிரியர் டேனியல் ஹோலாண்ட் என்பவரால் டிவிட்டரில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

வீடியோவை நன்றாகக் கவனியுங்கள். மரங்கள் தள்ளாடுகின்றன, காற்று ஊளையிட்டுச் சுழற்றியடிக்கின்றது. நிலத்தின் பெரும்பகுதி மேலெம்புவதும் இறங்குவதுமாக இருக்கிறது. கிட்டத்தட்ட பூமி பெருமூச்சு விடுவதுபோல் இருக்கிறதா? பூமிக்கு பிரம்மாண்டமான நுரையீரல் இருப்பதும் போலவும் அந்த நுரையீரல் மண்ணுக்கடியில் இரைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறதா?

இந்த மாதத்தின் தொடக்கத்தில் குபெக்கிலுள்ள சாக்ரே கோயர் என்ற வனப்பகுதியில்தான் இது நடந்தது. அதைப் பார்க்கும்போது பூமி அதற்கான சுவாசப் பயிற்சியை மேற்கொள்வது போன்ற பிரமை ஏற்படுகிறது. ஆச்சர்யங்களை ஒதுக்கிவைத்து விடுவோம். இந்த நிகழ்வுக்கான காரணமென்ன? பூமி உண்மையாகவே சுவாசிக்குமா? ஒருவேளை குபெக்கின் லாரன்ஸ் நதியில் கொட்டப்படும் கழிவுகளால் அழிந்துகொண்டிருக்கும் டால்பின்களை நினைத்துத் துடிக்கிறதோ? இருக்கலாம். ஆனால், ஆதாரப்பூர்வமாகப் பூமியின் இந்தப் பெருமூச்சுக்கு வேறு காரணமும் உள்ளது. அறிவியலாளர்கள் கூறும் அந்தக் காரணம் விசித்திரமாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது.

மழைக்காலத்தின் போதும், புயற்காற்று அடிக்கும்போதும் மண்ணின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் அதன் இறுக்கம் தளர்ந்து நெகிழ்ந்து போயிருக்கும். அதனால் மரத்தின் வேரோடு மண்ணுக்கு இருக்கும் பிணைப்பும் தளர்ந்துபோகும். மரத்தின் உச்சியில் வேகமாகச் சுழன்றடிக்கும் காற்று அதை இழுத்துச் செல்லுமளவுக்கு வேகம் கொண்டிருக்கும். அந்த இழுவையின் ஆற்றல் வேர்வரை பரவி வேரை இழுத்துச் செல்கிறது. மண்ணோடு அதற்கு இருக்கும் இறுக்கம் தளர்ந்து போயிருப்பதால் வேர்கள் தம் பிடிப்பை இழந்து மேலெழும்புவதால் மண்ணும் அதனோடு மேலே எழும்புகிறது.

இது காற்றின் வேகத்துக்கும், வேரின் பிடிப்புக்கும் இடையே நடக்கும் ஒருவித மோதல். அதில் பெரும்பாலும் வெற்றி பெறுவது மண்ணும் வேரும்தான். காற்றின் வேகம் மிகக் கடுமையாகவும் நீண்ட நேரத்துக்கும் இருக்கும்போது சில மரங்கள் இந்தச் சண்டையில் தோற்றுப் போகின்றன.

ஆனால், இது வழக்கமாக அனைத்து பகுதிகளிலும் நடப்பதுதான். அப்படியிருக்க அந்த அடிப்படைகளை மட்டுமே இப்படியொரு நிகழ்வுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது. அது நம்பும்படியாக இருக்கப் போவதுமில்லை. காடு சுவாசிப்பதைப் பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா? மரங்கள் சுவாசிப்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொள்ளுங்கள். வளிமண்டலத்தின் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. அதேபோலத்தான் மண்ணும் சுவாசிக்கிறது. மண்ணுக்குள் பல்லாயிரம் சிற்றுயிர்களும் நுண்ணுயிர்களும் வாழ்கின்றன. அவை தாவரங்களின் வேர்களிலும் காய்ந்த சருகுகளிலும் இலைகளிலும் கூட்டாகச் சேகரிக்கப்பட்டிருக்கும் கார்பன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்கின்றன. அதிலிருந்து கார்பனை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை வெளியேற்றி விடுகின்றன. அந்த வாயு மேற்பரப்புக்கு வந்து வளிமண்டலத்தில் கலந்துவிடும். காட்டில் மரங்களால் சேகரிக்கப்படும் கார்பன்கள் இப்படித்தான் மண்ணுக்குக் கடத்தப் படுகின்றது. இப்படியாக மண்ணுக்குள் வாழும் உயிர்கள் மண்ணைச் சுவாசிக்க வைக்கின்றன. நிலத்தின் இந்தச் சுவாசம் சீராக இருக்கும்போது மண்ணுக்கான வளங்கள் பேணப்படும். அதிகமானால் மண் தன் பிடிப்பை இழந்து நிலத்தை பலவீனமடையச் செய்யும். அதுதான் கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதற்கு முக்கியக் காரணம் காலநிலை மாற்றமும் வெப்பமயமாதலும். பூமியின் வெப்பநிலை உயர்வதால் சராசரி அளவைவிட அதிகமாகக் கரிம வாயு வெளியேறுகிறது. அது மண்ணின் இறுக்கத்தை அதிகமாகவே தளரச் செய்கின்றது. மண் தளர்ச்சியடையும்போது வேரோடு அதற்கிருக்கும் பிடிப்பும் நெகிழ்ந்துவிடும். அப்படியொரு காரணத்தினால்தான் பூமியின் சராசரி சுவாசம் இப்படி இறைஞ்சலாகியுள்ளது.

ஆம். பூமியும் நம்மைப்போல் சுவாசிக்கின்றது. அதை நாம் உணரமுடியாது அவ்வளவே. அதன் அத்தகைய சீரான சுவாசம் காலநிலை மாற்றத்தால் தற்போது பிரச்னைக்கு உள்ளாகியுள்ளது. நிலத்துக்கு அடியிலிருக்கும் காற்றோட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது. அந்தப் பெருமூச்சைத்தான் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும், குபெக்கிலும் மனித இனம் உணர்ந்துள்ளது.