Published:Updated:

`தமிழ்நாடு கத்துக்கணும்!' பனைமர பாதுகாப்பில் அசத்தும் கம்போடியா

பனைமர பாதுகாப்பில் அசத்தும் கம்போடியா
News
பனைமர பாதுகாப்பில் அசத்தும் கம்போடியா

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது மீதம் இருப்பது வெறும் 5 கோடி பனை மரங்கள்தான்.

'பனை மரம்' தமிழகத்தின் மாநில மரம் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த அளவுக்குப் பனை மரங்கள் தமிழ்நாட்டில் அழிவினை சந்தித்து வருகின்றன. இன்னும் ஒரு பக்கம் அதனை ஈடுகட்டும் விதமாக சில குழுக்களாலும், அமைப்புகளாலும் பனை விதை விதைப்பு நடைபெற்று வருகிறது என்பது இப்போதைக்கு சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். தமிழ்நாட்டில் வீணாக நாம் பார்க்கும் பனை மரம்தான் கம்போடியாவின் அட்சய பாத்திரம் என்றால் நம்ப முடிகிறதா? 

கம்போடியாவில் திரும்பும் இடமெல்லாம் பனை மரமும் பதனியும்தான் கிடைக்கின்றன. கம்போடியாவின் தேசிய மரம் பனை மரம். இம்மக்கள் அடுப்பில் வைக்கும் பொருள்களைத் தவிர, அனைத்து பொருட்களிலும் பனை இருக்கும். வீட்டிற்கு வந்த விருந்தாளிகளுக்குத் தமிழ்நாட்டில் கூல்ட்ரிங்ஸ், சர்பத், டீ எனக் கொடுத்து வருகிறோம். ஆனால், கம்போடியாவில் பதநீரும், பனை இனிப்பு வகைகளும்தான் பலரும் கொடுத்து உபசரிக்கிறார்கள். இங்கே பூங்காக்களில் குரோட்டன் செடிகளையும், குட்டையான வெளிநாட்டு ரக மரங்களையும் வளர்க்கிறோம். அங்கே பனை மரங்கள் இல்லாத பூங்காக்களை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு கம்போடிய மக்களின் வாழ்வியலுடன் ஒன்றிப் போயிருக்கிறது. உலகில் ஒரு மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பயன்படும் என்றால், அது பனை மரமாகத்தான் இருக்கும் என்பது கம்போடிய மக்களின் சிந்தனை. அதனால்தான் என்னவோ பூங்கா வளைவுகள், சாலையோரங்கள் எனப் பல இடங்களில் இதனைக் காண முடியும். 

கம்போடியாவில் பெருமளவில் வணிகம் பனையை சார்ந்துதான் இருக்கிறது. வீட்டு சமையலறை பொருள்கள் முதல் வீடு கட்டுவது வரைக்கும் பனைதான் அங்கு எல்லாமே. அங்குச் சுத்தமான பனங்கருப்பட்டி, பனை வெல்லம் போன்ற பொருட்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும். இந்தப் பொருள்களைத்தான் கம்போடிய மக்களும் பெரிதளவில் விரும்புகின்றனர். கம்போடியாவில் கிராமங்கள் இன்னும் பனை ஓலை வீடுகளை விட்டு கான்கிரீட் வீடுகளுக்கு மாறவில்லை. பனை ஓலைத் தொப்பி, பனை ஓலை விசிறி, பனை கிழங்கு, பனம் பழம், பெட்டிகள், மரச் சாமான்கள் எனப் பல பொருட்கள் பனை மரத்தால் ஆனவை. ஒவ்வொரு பொருளிலும் பனை ஓலையை முன்னிலைப்படுத்தவும் அவர்கள் தவறவில்லை. உதாரணமாக, புல்லாங்குழலில் பனைமரத்தை ஊசியால் வரைந்து நெருப்பில் சுட்டு ஓவியமாக்கியிருக்கிறார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொதுவாகவே பதநீர் அருந்திய நபர்களுக்கு மூட்டுவலி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு இல்லாமல் இருக்கும் என்பது நம்பிக்கை. கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள், பல் சம்பந்தமான குறைபாடுகள் இருக்கவே இருக்காது. இதுபோல பல நோய்களைக் குணப்படுத்தி உடலுக்கு உறுதியைத் தரும். இன்றும் கம்போடிய மக்கள் உறுதியாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். பனை பொருள்களை அப்படியே விற்பனை செய்யாமல் மதிப்புக் கூட்டி செய்வதால் மக்களிடம் அவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது. பனை ஓலைத் தட்டுகள், கரண்டிகள், பாத்திரங்கள் ஆகியவைதான் கம்போடிய மக்களின் பெரும்பாலான உபயோக பொருள்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பனை மரங்களை கம்போடியாவில் அதிகமாக வளர்த்தும் வருகிறார்கள். இதுதவிர தென்னை மரங்களையும் அதிக அளவில் கம்போடியாவில் வளர்த்து வருகிறார்கள். இதேபோல, இந்தோனேசியாவிலும் பனை மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் போலவே கம்போடியாவில் கட்டுப்பாடின்றி காடழிப்பு நடைபெறுவது உலக அளவில் கவலையை ஏற்படுத்துகிறது. 1970- ம் ஆண்டு நாட்டின் 70 விழுக்காட்டுப் பரப்பில் இருந்த மழைக்காடுகள், 2007-ம் ஆண்டு வெறும் 3.1 விழுக்காட்டு பரப்பில் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இதனைக் காக்க கம்போடிய அரசும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில்தான் பனைகளை அழியாமல் அதிகமாக வளர்த்து வருகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது மீதம் இருப்பது வெறும் 5 கோடி பனை மரங்கள்தான். அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பகுதிகளில் கிட்டத்தட்ட 2 கோடி பனை மரங்களுக்கு மேல் அழிக்கப்பட்டு இருக்கின்றன. பனைகள் அழிவினை நோக்கிச் சென்றால் அப்படி ஒரு மரம் இருந்ததை வருங்கால சந்ததிகள் பனை மரங்களைப் பாடப்புத்தகத்தில் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அழிவின் விளிம்பில் இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பதோடு, புதிதாகப் பனை மரங்களை வளர்ப்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, நமது கடமையும் கூட. பனை மரங்களை வளர்க்கும், விதைக்கும் குழுக்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம். பனைமரத்தைப் பாதுகாப்போம்.