Published:Updated:

தண்ணீர் தேவைக்கா...பேராசைக்கா?! - தண்ணீர் மாஃபியாக்களின் கதை (இறுதி அத்தியாயம்)

அனைவருக்கும் உணவு, உறைவிடம், சுகாதாரமான வாழ்விடம், சுத்தமான குடிநீர் கிடைத்தால் மட்டுமே அது நாகரிகமடைந்த சமுதாயமாகக் கருத வேண்டுமென்றால் நம் இந்தியச் சமுதாயம் இன்னமும் நாகரிகமடையவில்லை.

தண்ணீர் தேவைக்கா...பேராசைக்கா?! - தண்ணீர் மாஃபியாக்களின் கதை (இறுதி அத்தியாயம்)
தண்ணீர் தேவைக்கா...பேராசைக்கா?! - தண்ணீர் மாஃபியாக்களின் கதை (இறுதி அத்தியாயம்)

லகிலேயே சிறந்தது எது?

இதிலிருக்கும் உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு எது ஜீவாதாரமாக விளங்குகிறதோ, எதுவன்றி உங்களால் உயிர்த்திருக்க முடியாதோ, மனித சாம்ராஜ்ஜியத்தைப் பூமியைத் தாண்டியும் விரிவாக்குவதற்கு விஞ்ஞானிகள் எதைத் தேடுகிறார்களோ, அதுதான் உலகிலேயே சிறந்தது.

அந்த ஒன்றுதான் தண்ணீர். தண்ணீரைத் தேடி நாம் பிரபஞ்சம் முழுக்கத் தேடித் திரிகிறோம். எங்கு கிடைக்காதோ அங்கெல்லாம் தேடுகிறோம். ஆனால், அபரிமிதமாகக் கிடைக்குமிடத்தில் அதை அநாதரவாகக் கைவிட்டு விட்டோம். மனித இனம் மட்டுமல்ல  தண்ணீரின்றி எந்த உயிரினத்தாலுமே வாழ முடியாது. அதை உணர்வதற்கு நாம் பல நூறு நீர்நிலைகளை அழிக்க வேண்டியிருந்தது. உலகம் முழுக்கத் தண்ணீர் பற்றாக்குறையாலும் தண்ணீர் மாசுபாடுகளாலும் பல்லாயிரம் பேரை இழக்க வேண்டியிருந்தது. இந்த இழப்புகளுக்குப் பிறகு இப்போதாவது நம் தவறுகளை உணர்ந்துவிட்டோமா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதுதான்.

எந்தவொரு ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்திலும், வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் மிக முக்கியமானது. அந்த அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்றால் அந்தச் சமுதாயம் நாகரிமடைந்ததாகக் கருதப்படக் கூடாது. ஒரு மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தன் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவுமான சுதந்திரத்தை அச்சமுதாயம் அவனுக்கு வழங்கவேண்டும். அந்தச் சுதந்திரம் அவனுக்கான அன்றாடத் தேவைகளைத் தடையின்றி வழங்குவதிலிருந்து தொடங்கவேண்டும். வாழ்வது ஒவ்வொருவரின் உரிமை. அதற்கான உணவு, குடிநீர், சுகாதாரமான வாழ்விடம், கல்வி, மருத்துவம், உறைவிடம் ஆகியவற்றைத் தடையின்றி வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை. சர்வதேச மனித உரிமைகளில் இவையனைத்துமே மிக முக்கியமானவை. அவையே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் கூறப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை உரிமைகளைத் தவிர்த்திருந்தால் நம் அரசியலமைப்பே கட்டமைக்கப்பட்டிருக்காது. இந்தக் கூற்றுகளின்படி என்னைப் பொறுத்தவரை இந்திய நகரங்கள் எதுவுமே இன்னமும் நாகரிமடையவில்லை.

ஆம், அனைவருக்கும் உணவு, உறைவிடம், சுகாதாரமான வாழ்விடம், சுத்தமான குடிநீர் கிடைத்தால் மட்டுமே அது நாகரிகமடைந்த சமுதாயமாகக் கருத வேண்டுமென்றால் நம் இந்தியச் சமுதாயம் இன்னமும் நாகரிகமடையவில்லை. ஏனென்றால் அவை எதுவும் கிடைக்காமல் அன்றாடம் அவற்றுக்கான போராட்டத்திலேயே வாழ்பவர்களும் இங்கு அதிக அளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தப் போராட்டங்களில் மிக முக்கியமானது தண்ணீருக்கான சுத்தமான குடிநீருக்கான போராட்டம். 1986-ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்ணீர், காற்று, நிலம் மற்றும் அவற்றுக்கிடையில் இருக்கும் தொடர்பு, அவற்றைச் சார்ந்திருக்கும் உயிரினங்கள் என்று தொடரும் சங்கிலித்தொடர் பாதுகாக்கப்பட வேண்டும். காற்றும் நீரும் இயற்கையின் ஆகப்பெரும் அன்பளிப்புகள். மனித இனத்துக்கு மட்டுமல்ல அத்தனை உயிர்களுக்குமே அது அத்தியாவசியமானது என்பதைத்தான் அந்தச் சட்டம் சொல்கிறது. சட்டமியற்றி 30  வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்றளவும் அதை நம் நகரக் கட்டமைப்புகள் கருத்தில் எடுக்காமலே செயல்பட்டு வருகிறது.

நம் நாகரிகச் சமுதாயக் கட்டுமானங்களில் ஒன்றை மறந்துவிட்டோம். மனிதர்களுக்கும் சூழலியலுக்கும் இடையில் பிரிக்கவே முடியாத பிணைப்பு உள்ளது. அந்தப் பிணைப்பை மறந்துவிட்டோம். அது நமக்களித்த கடமையை மறந்துவிட்டோம். நாம் மட்டுமன்றி நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்களின் அமைதியான வாழ்வுக்குத் தேவையான சூழலைப் பேணி காக்கவேண்டிய அந்தப் பொறுப்பை நாம் மறந்ததே இப்போதைய அழிவியலின் மூலகாரணம். அதை உணரத்தொடங்கிய பின்னர் சில முயற்சிகளை மேற்கொண்டோம். பல்வேறு சட்டத்திருத்தங்களும் புதிய சட்டங்களும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கொண்டுவரப்பட்டன. அவை சுற்றுச்சூழலை காற்றை நீரைக் காப்பாற்றுவதற்கு முக்கியத்துவமளித்தன. நீதித்துறை இதில் முக்கியப் பங்கு வகித்தது. 21, 48A, 51 A (g) போன்ற பிரிவுகள் சூழலியல் பாதுகாப்புக்காக உயிர்பெற்றன. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையிலும் இந்தச் சட்டங்களுக்கும், நடைமுறைக்கும் இடையில் எப்போதும் ஒரு முரண் எழுந்துகொண்டே உள்ளது.

பூமியின் 2.45 சதவிகிதம் நிலப்பகுதியைக் கொண்ட இந்தியா உலகின் மொத்த தண்ணீர் இருப்பில் 4 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், தண்ணீர் பற்றாக்குறையான நாடாகவே பார்க்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையுள்ள நாடாக நாமிருப்பதால் இங்கு அதை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் ஓர் ஒழுங்குமுறை தேவைப்படுகிறது. அந்த ஒழுங்குமுறையைப் பேணுவதற்காகச் சட்டங்களும் இயற்றப்பட்டன. குடிநீர் விநியோகம், விவசாயத்துக்கான பாசன வசதி, வெள்ள நீர் மேலாண்மை, நீர்ப் பாதுகாப்பு, நதிநீர் மாசுபாடு, நீர்நிலைகள் மேலாண்மை போன்ற அனைத்துமே அந்தச் சட்டங்களில் முக்கியமானவை. இவையனைத்தும் இன்று முறையாகச் செயல்முறையில் உள்ளதா என்பது வெள்ளிடைமலை.

தண்ணீர் ஒரு வரப்பிரசாதம். மனிதத் தலையீடுகளால் அந்த வரம் சாபமாக மாறுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நதியோரத்திலேயே வாழும் மக்கள் தாகத்தால் வாடுமளவுக்கு நாம் அதை அழித்துக்கொண்டிருக்கிறோம். தண்ணீர் அனைவருக்கும் குடிநீராவதே முதன்மையானது. அதைத் தவிர்த்து மற்ற பயன்பாடுகளுக்கு அதைத் திருப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மனிதன் உடலளவில் உயிர்ப்போடு வாழ்வது மட்டுமே இங்கு முக்கியமில்லை. அவன் தன்னளவில் ஆரோக்கியமான சுகாதாரமான வாழ்வை வாழ்வதற்கு அவனது அரசு வழிசெய்ய வேண்டும். அதை நாம் அனைவருக்கும் செய்யத் தவறிவிட்டோம். இந்தியாவில் நீர் சார்ந்த சட்டங்கள் பெரும்பாலும் மாநிலங்களைப் பொறுத்தது. நீர் விநியோகத்தை, விவசாயப் பாசனங்களை, குழாய் வழித்தடங்களை, நீர் நிலைகளைப் பராமரிக்கும் முழு அதிகாரத்தையும் சட்டம் மாநில அரசுக்குத்தான் வழங்கியுள்ளது. நீரின் தரத்தைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மாநகராட்சி நிர்வாகங்கள், பஞ்சாயத்துகளின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை அவர்கள் முறையாகச் செய்திருந்தால் இன்று நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை, நீர்நிலைகள் மாசுபாடு, அவற்றின் அழிவு ஆகியவை ஏற்பட்டிருக்காது. அதைச் சாதகமாகக் கொண்டு மக்களின் அடிப்படை உரிமையை வியாபாரமாக்கும் தண்ணீர் மாஃபியாக்களும் தோன்றியிருக்க மாட்டார்கள்.

இயற்கை வளங்களின் அறங்காவலரான மாநில அரசுகள் அவற்றைத் தனியார் வியாபாரிகளுக்கு விற்காமல் மக்களுக்கு முறையான திட்டமிடலோடு வழங்கியிருந்தால் இன்று தனியார் தண்ணீர் நிறுவனங்களின் வேலைநிறுத்தம் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்குமளவுக்குப் பூதாகரமாக உருவெடுத்திருக்காது. இதுமட்டுமல்ல, நீர் விநியோகத் திட்டமிடல்கள் சரியில்லாததும், நீர்நிலைகள் பராமரிப்பு முறையற்று போனதுமே இன்றைய அனைத்து நீர்சார்ந்த பிரச்னைகளுக்கும் குற்றங்களுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. நீர்சார்ந்த திட்டமிடலில் அரசு அறிவுபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதே நிதர்சனம். அதுவே கூவம், அடையாறு தொடங்கி கங்கைவரை பல நதிகளைச் சார்ந்து வாழும் மக்கள் மாஃபியாக்களையும் தனியார் தண்ணீர் நிறுவனங்களையும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது.

அடிப்படை உரிமைகள் குறித்து நமது சட்டங்கள் பேசுகின்றன. ஆனால், தண்ணீர் அனைவருக்குமான அடிப்படை உரிமை என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டாலும் அதை அடிப்படை உரிமைச் சட்டங்களில் ஓர் அங்கமாக இயற்றவில்லை. சுற்றுச்சூழலை, காடுகளை, காட்டுயிர்களை, ஏரிகளை, ஆறுகளைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறும் நமது சட்டங்கள் அதையே அரசாங்க நிர்வாகம் செய்யத் தவறும்போது அதைக் கேள்வி கேட்கவும் நெறிமுறைப்படுத்தவும் தவறிவிட்டது. சட்டங்கள் தண்ணீர் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தெளிவாகப் பறைசாற்றினாலும் நம் அரசு நிர்வாகங்கள் அதைக் கொள்கைகளிலும் செயல்களிலும் நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டன.

சட்டங்கள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என்று நிர்வாகரீதியில் நீர்வளத்தைக் காப்பாற்ற அனைத்து வகைப் பாதுகாப்புகளும் நம்மிடம் இருக்கின்றன. இருந்தும் நீர்நிலைகளின் இப்போதைய நிலை, நீர்விநியோகத்தின் இன்றைய நிலை, மக்களின் தண்ணீர் தேவை?

தண்ணீர்ப் பயன்பாடு தொடர்பான சட்டங்கள் 90% மாநில அரசுகளின் கையில் தானிருக்கின்றன. அவை இயற்றப்பட்ட சமயத்தில் சூழலியல் பிரச்னைகள் உருப்பெற்றிருக்கவில்லை. இன்றுபோல் அன்று தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கவில்லை. நீர்வளப் பாதுகாப்பைவிட நீர்வளப் பயன்பாடே முக்கியத்துவம் கொண்டிருந்த காலகட்டத்தில் தோன்றிய சட்டங்களையே இன்றும் நாம் நடைமுறையில் வைத்திருக்கிறோம். நீர்வளப் பாதுகாப்பில் புதுப்புது சட்டங்கள் அறிவியல்ரீதியில் ஆலோசிக்கப்பட்டு இயற்றப்பட வேண்டும். உலகமயமாக்கல் என்ற புதிய காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீர்க் கொள்கைகளை நாம் புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். முன்னெடுக்கப்படும் புதிய வளர்ச்சித் திட்டங்கள் அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் தீட்டப்படவேண்டும். 

பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் அத்தகைய கொள்கைகளையும் தண்ணீர்ச் சட்டங்களையும் இயற்றி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அது அவர்களுக்குப் பிரச்னையின் அளவையும் அதைத் தீர்ப்பதற்கான வழிமுறையையும் நல்கிக் கொண்டிருக்கிறது. சமூகமும் சூழலியலும் பிணைக்கப்பட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டாலொழிய நீர்வள மேலாண்மையையும், நீர்சார் பிரச்னைகளையும் ஆரோக்கியமான முறையில் நம்மால் தீர்க்கமுடியாது. அதற்குச் சட்டரீதியிலான முன்னெடுப்பு ஓர் ஆரம்பமாக இருக்கவேண்டும். இருப்பினும், சட்டங்கள் இயற்றுவது அவற்றைப் பாதுகாக்க ஓர் ஆயுதமாக விளங்கலாம். அந்த ஆயுதம் சிறப்பாகச் செயல்படுவது அதைக் கையாள்பவரின் திறனைப் பொறுத்தது. அத்தகைய திறன்கொண்ட நிர்வாகங்கள் அமையவேண்டும். 

இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்துமே தங்கள் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தண்ணீர் அடிப்படை உரிமையாகக் கருதப்பட வேண்டும். அதைச் செய்யாதவரை, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் மற்ற எந்த அடிப்படை உரிமைக்கும் அர்த்தமிருக்காது.

இன்று நகரவாசிகள் அனைவருமே ஒருவித இறுக்கத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு ஏற்படும் மாசுபாடு, நீர்ப் பற்றாக்குறை, சுத்தமான குடிநீருக்காகச் செய்யும் செலவு போன்றவை அவர்களை மனரீதியாகவும் கடுமையானவர்களாக சுயநலம் மிக்கவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. மனித இனத்தின் இன்றியமையா குணமான மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கிறது. எங்கும் சுயநலம் வியாபித்துச் சூழலை நரகமாக்கிக்கொண்டிருக்கிறது. இது மாறவேண்டுமென்றால் மக்களின் மனோநிலையும் வாழ்க்கைநிலையும் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் அமைய வேண்டுமென்றால் அதற்கு அவர்களின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இயந்திரத் தனமான வாழ்வில் சிக்கிக்கொண்டிருக்கும் நகரவாசிகளை இந்த உலகமயமாக்கச் சூழல் பணத்தை நோக்கி ஓடவைக்கிறது. எது வேண்டுமோ பணமிருந்தால் வாங்கிக் கொள்ளலாம் அதனால் அதைச் சம்பாதியுங்கள் என்று போதிக்கிறது. அந்த போதனை மக்களைத் தங்கள் அடிப்படை உரிமைகளையும் விலைக்கு வாங்க வைத்துவிட்டது. இங்கு வாழ்பவர்கள் பொருளாதாரத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு இயங்கும் இயந்திரங்களல்ல. இரத்தமும் சதையுமாக உயிருடன் உழைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள். அவர்களின் உணர்வுகளும் அந்த உணர்வுகளைப் பாதுகாக்கும் அடிப்படை உரிமைகளுமே இந்த இயந்திரமயச் சூழலில் நம்மை மனிதர்களாக வைத்திருக்கும். அதைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வோர் அரசின் கடமை. அதன்மூலம் மனித இனத்தின் ஆரோக்கியத்தையும் அதன் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமென்பது ஒவ்வோர் அரசாங்கமும் சிரமேற்கொள்ள வேண்டிய உறுதிமொழி. 

``இயற்கை நம் தேவைக்கு மட்டுமே அனைத்தையும் வழங்கியுள்ளது, நம் பேராசைக்கு அல்ல. அதில் தண்ணீரும் ஒன்று. சிலரின் பேராசைகளுக்குப் பலரின் தேவைகளைப் பலி கொடுப்பதைவிட, பலரின் தேவைகளுக்குச் சிலரின் பேராசைகளைப் பலிகொடுப்பதே சிறந்தது. அதுவே தர்மம்."

 

- முற்றும்.