Published:Updated:

``மாதம் 20,000 ரூபாய்!" தேனீ வளர்ப்பில் கலக்கலாம்

`வீட்டுக்கு ஒரு தேனீப் பெட்டி, வளர்ப்போருக்கு ஆயுள் கெட்டி' எனச் சொல்லியபடி தேனீ வளர்ப்பு குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் இவர்கள்.

``மாதம் 20,000 ரூபாய்!" தேனீ வளர்ப்பில் கலக்கலாம்
``மாதம் 20,000 ரூபாய்!" தேனீ வளர்ப்பில் கலக்கலாம்

``ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தேனீப்பெட்டி இருந்தால், அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை யாருக்கும் நோய்நொடிகள் வராது. தேனீக்கள் இருந்தால் வீட்டை, தோட்டத்தைச் சுற்றி நாம் போட்டிருக்கும் வெள்ளாமை, மரங்களில் அயல் மகரந்த சேர்க்கை நடந்து விளைச்சல் அமோகமாக நடக்கும். அதனால்தான், என் மனைவியோடு சேர்ந்து எனது 10 ஏக்கர் தோட்டத்தில் தேனீ வளர்த்து வருகிறேன்" என்று பூரிப்பாகச் சொல்கிறார் முருகேசன்.

கரூர் மாவட்டம், லிங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த முருகேசன். இவரது மனைவி ஜோதி. புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரி அருகில் கடந்த 35 வருடங்களாக டூவீலர் மெக்கானிக் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். அதோடு தனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் 30 வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் பார்த்தும் வருகிறார். சிறு வயதிலிருந்தே மரங்களில் கட்டி இருக்கும் தேன், கொம்புத் தேனை நண்பர்களோடு போய் எடுத்து வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில், `வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிக்கமுடியாத குழந்தைகளுக்குத் தேன் அருமருந்து. உடம்பு இளைக்க, உடம்பை ஏற்ற என்று பல பிரச்னைகளுக்கு தேன் நல்ல மருந்து' என்று தெரிய வந்திருக்கிறது. 

தொடர்ந்து நடந்தவற்றைப் பற்றி நம்மிடம் பேசினார் முருகேசன். ``தமிழ்ல எம்.ஏ படிச்ச ஜோதியை எனக்குத் திருமணம் பண்ணி வெச்சாங்க. எங்களுக்கு இன்ஜினீயரிங் படிக்கும் தமிழ் அன்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் லட்சுமி விஷ்ணுன்னு ரெண்டு பசங்க. நானும், என் மனைவியும் சேர்ந்துதான் 2006-ம் ஆண்டு வெறும் அஞ்சு பெட்டிகளோடு இயற்கை முறையில் தேனீ வளர்க்க ஆரம்பிச்சோம். அதுல சேகரமான தேனை, அக்கம்பக்கத்துல உள்ள ஊர்கள்ல மருந்துக்காகக் கேட்டு வர்ற மக்களிடம் கொடுக்க ஆரம்பித்தோம். எங்க வீட்டுநிலத்தில் கொய்யா, மா, தென்னை, நாவல் பழம், வேம்பு ஆகியவற்றோடு, கொடி முருங்கையையும் வெள்ளாமை பண்ணி இருக்கோம். அதோட கேணிப் பாசனம் மூலம் நெல், கம்பு, சூரியகாந்தின்னு பயிர் செய்வோம். அவ்வளவா மகசூல் இருக்காது. ஆனா, தேனீக்கள் வளர்க்க ஆரம்பித்த பிறகு, அமோக விளைச்சல் கிடைச்சது. தெறங்கிக் கிடந்த 400 தென்னைகளும் குலைக்கு 70 காய்கள் வரை காய்க்கிற அளவுக்கு மாறிட்டு. தேனீ வளர்ப்பை இன்னும் அதிகப்படுத்த கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் போய் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

அங்க கிடைச்ச அனுபவத்தைக் கொண்டு கடந்த 7 வருடங்களாக புதிய தொழில்நுட்பத்தினைப் புகுத்தி தேனீக்கள் வளர்த்து வருகிறேன். இப்போ பதினைந்து இடங்களில் 200 தேனிப்பெட்டிகளை வைத்து தேன் எடுக்கிறோம். நான் காலை அஞ்சு மணியிலிருந்து ஒன்பது மணி வரை தேனீ வளர்ப்பு விஷயத்தில் கவனம் செலுத்துவேன். அதன்பிற்கு, மெக்கானிக் ஷாப் போயிடுவேன். மாலை அஞ்சு மணிக்குப் பிறகு மறுபடியும் வருவேன். இடைப்பட்ட நேரத்துல என் மனைவி ஜோதிதான் கூலி ஆள்களை வைத்துக் கொண்டு இந்த தேனீ வளர்ப்பை சிறப்பாகச் செஞ்சுகிட்டு இருக்காங்க. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை போய் தேனைச் சேகரிப்போம். மாதம் 60 கிலோ வரை தேன் கிடைக்குது. ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்கிறோம். மெழுகை ஒரு கிலோ 800 வரை விற்கிறோம்.

மாதம் எல்லாச் செலவுகளும் போக ரூ.20,000-ம் வரை தேனீ வளர்ப்பில் வருமானம் கிடைக்குது. அரசு கடன் கொடுத்து உதவி செய்தால், 500- க்கும் மேற்பட்ட இடங்களில் தேனீ வளர்க்க முடியும். நாங்க தேனீ வளர்ப்பதின் காரணம் வியாபார நோக்கமல்ல. நல்ல தரமான இயற்கை தேனை மக்களுக்கு வழங்கி அவர்களின் உடல்நலத்துக்கு உதவுறதுதான். அக்கம்பக்கத்து ஊர்கள் மட்டுமன்றி, சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்து தமிழகம் முழுக்க தேனை ஆர்டர் செய்பவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வியாபாரம் பண்றோம். தேன் கூடு விஷயத்தில் ராணித் தேனீதான் முக்கியம். எனக்கும் அப்படிதான். இந்தத் தொழிலில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலும் எனக்கு உறுதுணையாக இருப்பது என் மனைவி ஜோதிதான்" என்றார் பெருமிதமாக.

அடுத்து பேசிய, அவரது மனைவி ஜோதி, நாங்க பார்க்கும் எல்லோரிடமும், `வீட்டுக்கு ஒரு தேனீப் பெட்டி, வளர்ப்போருக்கு ஆயுள் கெட்டி' என்ற சொற்றொடர் மூலம் விழிப்புஉணர்வை ஏற்படுத்துகிறோம். `ஒரே கல்லில் இரண்டு மாங்காய்'ன்னு பழமொழி சொல்வாங்க. ஆனா, தேனீ வளர்ப்பில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கலாம். அது எப்படியென்றால், தேனீ வளர்ப்பின் மூலம் தேன் கிடைக்கிறது; மெழுகு கிடைக்கிறது; கூடவே தேனீ வளர்ப்பதால், நாம் வயலில், தோட்டங்களில் போட்டிருக்கும் வெள்ளாமைகளில் மகரந்தச் சேர்க்கை நன்றாக நடந்து மகசூல் அதிகம் கிடைக்கிறது. தேனீக்கள் மூலம் விவசாயம் நல்லா நடக்கும். இதனால் வயலுக்குப் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கும் செலவு குறைவாகும்.

ஏனென்றால், இந்தத் தேனீக்கள் அந்த விவசாய நிலத்தில் உள்ள பூச்சிகளை கொன்று விடுகின்றன. தேனீக்களை மூட்டு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்குக் கொட்ட விடுறது மேலை நாடுகளில் மருத்துவ முறையா இருக்கு. இந்தத் தேனீ வளர்ப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, நிறைய விவசாயிகள் ஆர்வமா வந்து பார்த்துட்டுப் போறாங்க. இன்னும் சிலர் அவர்களும் தேனீ வளர்க்க ஆசைப்பட்டு, என்கிட்ட விவரம் கேட்டுக்கிட்டு போறாங்க. கரூர் மாவட்ட பெருவாரியான விவசாயிகளைத் தேனீ வளர்க்க ஊக்கப்படுத்த இருக்கிறேன். தேனீக்கள் அழிந்தால் இரண்டு வருட காலத்துக்குள் மனித இனம் அழியும் வாய்ப்பும் உண்டு என்று பூச்சியல் துறையின் ஆய்வு சொல்கிறது. 80 சதவிகிதம் பூச்சியியல் மூலம்தாம் மனித வாழ்க்கை வளம் பெறுகின்றது. பல தேன் விற்கும் கம்பெனிகள் கால் கிலோ 125 வரை விற்கிறாங்க. ஒரு கால் கிலோ வாங்கினால் இன்னொரு கால்கிலோ இலவசம்ன்னு அறிவிக்கிறாங்க. பல லட்சம் கிலோ தேனை இப்படி எப்படி அவர்களால் உருவாக்க முடியும்? அதெல்லாம் இயற்கை தேனே கிடையாது. மக்கள் இயற்கையா கிடைக்கிற தேனை மட்டுமே உமிழ்நீரோடு கரையும் அளவுக்குச் சப்பிச் சாப்பிட வேண்டும். அப்போதான் அது மருந்தாகும். அதனால், வீட்டுக்கு வீடு விவசாயிகள் ஒரு தேனீப் பெட்டியை வைத்து தேனீக்களை வளர்க்க அரசே சிறப்புத் திட்டம் தீட்டவேண்டும்" என்றார்.