Published:Updated:

`24,000 வருஷம் ஆகும்!' அமெரிக்காவைக் கலங்கடிக்கும் அணுக்கழிவு

`24,000 வருஷம் ஆகும்!' அமெரிக்காவைக் கலங்கடிக்கும் அணுக்கழிவு
`24,000 வருஷம் ஆகும்!' அமெரிக்காவைக் கலங்கடிக்கும் அணுக்கழிவு

அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க புதிய தொழில்நுட்பங்கள் இல்லாமல் அமெரிக்காவே திணறும்போது, இந்தியாவில் 22 அணு உலைகள் செயல்பட்டுக்கொண்டிருப்பதும், இன்னும் 20 அணு உலைகள் புதியதாக வரப்போவதும் சற்று கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.

மெரிக்கா 2,200 டன் அணுசக்தி கழிவுகளை ஒவ்வோர் ஆண்டும் அணுஉலைகள் மூலமாக தயாரித்துக் கொண்டிருக்கிறது. இவற்றை மறுசுழற்சி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்போம் என அந்நாட்டு அரசாங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு உறுதியளித்திருந்தது. ஆனால், அணுக்கழிவுகளை சேமிப்பதற்கான ஒரு பாதுகாப்பான இடம் இன்னும் அரசாங்கத்தால் ஒதுக்கப்படவில்லை. இப்போது பல இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் அணுக்கழிவு நாடெங்கிலும் கதிரியக்கத்தை உமிழ்ந்து வருகிறது. அவற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் சான் ஓனோஃபெர் அணுமின் நிலையம் ஒன்று.

இப்போது என்ன நடக்கிறது அங்கே?

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நகரம், சான் க்ளெமென்ட். அந்நகரத்தின் அற்புதமான கடற்கரையில் செயல்படாத சான் ஓனோஃபெர் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. மொத்தமாக மூன்று உலைகளைக் கொண்ட அம்மின் நிலையம் 2013-ம் ஆண்டு கைவிடப்பட்டது. ஆனால் இவற்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அணுக்கழிவுகளை இதுவரை என்ன செய்வதென்றே தெரியாமல் வைத்திருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் அணுக்கழிவுகள் உறங்கிக் கொண்டேதான் இருக்கின்றன. இதனால் இப்போது கிளம்பியிருக்கும் பிரச்னைதான் கொஞ்சம் பீதியைக் கிளப்பும் ரகமாக இருக்கிறது. கைவிடப்பட்டுள்ள அணு உலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அணு உலைக்கழிவுகள் அங்கு வேலை செய்யும் பணியாளர்களைப் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. 

இப்போது இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், இது அமைந்துள்ள இடம். பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ளது இது. இதன் 75 மைல் தொலைவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரமும், சான் டைகோ நகரமும் அமைந்துள்ளன. அணு உலை பகுதியில் 85 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் அம்மக்கள் வழக்கம்போல தங்கள் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்கள். இவ்வளவுக்கும் மையமாகத்தான் சான் ஓனோஃபெர் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. 

இந்த அணுஉலை இயங்கியபோது 1.40 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போது அணு உலைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அணுக்கழிவுகள் ஓய்வை முடித்துக் கொண்டு தனது பணியினைத் தொடங்கக் காத்திருக்கின்றன. இங்கேதான் பல டன் எடை கொண்ட அணுக் கழிவுகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றைக் குளிர்விப்பது நின்றுவிட்டால் அது விழித்துக் கொள்ளும். அப்போது நேரும் துயரங்கள் கொடூரமானதாக இருக்கும். இந்த அணுக்கழிவுகளில் உள்ள சீசியம் மற்றும் ஸ்ட்ரான்டியம் செயலிழக்க 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால் புளுட்டோனியம் செயலிழக்க 24 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அந்த 24 ஆயிரம் ஆண்டுகள் இந்த ஆலையை எந்த ஒரு பேரிடரும் தாக்காமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அணுக்கழிவுகள் முழுமையாகச் செயலிழக்கும். ஒரு அணு உலை ஆரம்பிக்கும்போது, குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று சொல்லி ஆரம்பிக்கப்படுகிறது. ஆனால், அதில் மீதமாகும் அணுக்கழிவுகளை அகற்ற 24 ஆயிரம் வருடங்கள் ஆகும் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுவது இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதைக் கணக்கிட்டால் அணு உலை மின்சாரமானது, மாற்று சக்தி மின்சாரத்தை விட பத்து மடங்கு செலவையே தரும். 

அணு உலைக் கழிவுகள் இதுவரை குளிர்ந்த தண்ணீரில் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அணு உலை நிர்வாகம், நேவாடாவில் உள்ள யுக்கா மலைப்பகுதிகளில் அணுக்கழிவுகளைச் சேமிக்கலாம் என்ற யோசனையை அமெரிக்க அரசின் முன் வைத்தது. ஆனால், இதனை நேவாடா மாநிலம் ஏற்க மறுத்தது. இதனையடுத்து அணுக்கழிவுகள் அங்கேயே வைக்கப்பட்டுள்ளன. இது மலைப்பகுதிகளில் வைக்கப்படுவதை விடவும், இப்போதுள்ள கடற்கரை பகுதி மிகவும் ஆபத்தானது. மிகப்பெரிய தவறும் கூட. 

கூடங்குளம்...!!!???

இதைப் பற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பேசும்போது, ``அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்திலுள்ள அணு உலைகள் 2013-ம் ஆண்டு உற்பத்தியை நிறுத்திவிட்டன. ஆனாலும் அணு உலைகளுக்குள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அணுக்கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறது அமெரிக்கா. அருகில் 50 லட்சம் மக்கள் வாழக்கூடிய லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் உள்ளிட்ட பல பெரிய நகரங்கள் இருப்பதால் இந்தக் கவலை அதிகமாகியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இதேபோல `கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை மேலாண்மை செய்யும் தொழில்நுட்பம் இல்லை' எனத் தேசிய அணு மின் கழகம் அறிவித்தவுடன், மக்களை அச்சுறுத்தக்கூடிய விஷயமாக ஏன் பார்க்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அணு உலைகள் எப்போதுமே உறங்கும் அணுகுண்டுகள்தான்" என்றார்.

அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க புதிய தொழில்நுட்பங்கள் இல்லாமல் அமெரிக்காவே திணறும்போது, இந்தியாவில் 22 அணு உலைகள் செயல்பட்டுக்கொண்டிருப்பதும், இன்னும் 20 அணு உலைகள் புதியதாக வரப்போவதும் சற்று கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு