Published:Updated:

``ஆடு மேய்ச்சாதான் நாங்க உயிர் பிழைக்கவே முடியும்!"- போர்ச்சுகல் காட்டுத்தீ விபரீதங்கள்

``நீ ஆடு மேய்க்கத்தான் லாயக்கு" இன்னமும் இந்தச் சொற்களை வசைப்பேச்சுகளாகப் பயன்படுத்துவதை நம் நாட்டில் பார்க்கமுடிகிறது. அது தவறு என்பதை போர்ச்சுகல் மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். நாம் புரிந்துகொள்வது எப்போது?

``ஆடு மேய்ச்சாதான் நாங்க உயிர் பிழைக்கவே முடியும்!"- போர்ச்சுகல் காட்டுத்தீ விபரீதங்கள்
``ஆடு மேய்ச்சாதான் நாங்க உயிர் பிழைக்கவே முடியும்!"- போர்ச்சுகல் காட்டுத்தீ விபரீதங்கள்

ங்கு இருநூறு ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றின் மேய்ப்பர் டேனிய ஃபெர்னான்டெஸ் என்ற 61 வயதான முதியவருக்கு அது மேய்ச்சல் நிலமில்லை என்பது தெரியும். தெரிந்துதான் அங்கு மேய்த்துக்கொண்டிருந்தார். தெற்கு போர்ச்சுகலின் மலைத்தொடரில் அவை மேய்ந்து கொண்டிருந்த இடம் ஊருக்கும் வனப்பகுதிக்கும் இடையிலிருக்கும் எல்லைக் காடு. காட்டுத்தீ ஏற்பட்டால் அங்கிருந்துதான் ஊருக்குள் பரவும். இடம்மாறும் ஆடுகளைக்கூட விசிலடித்தும் உரக்கக் கத்தியும் அந்த அடர்ந்து வளர்ந்த வனத் தாவரங்களை நோக்கி அனுப்பிக்கொண்டிருந்தார். 

பசியோடுள்ள ஆடுகளுக்கு அந்த எல்லைக் காட்டுத் தாவரங்களை அவர் உணவாக்குவது போர்ச்சுகல் வனத்துறை அதிகாரிகளுக்கும் தெரியும். தெரிந்தாலும் அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. அதோடு ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். போர்ச்சுகல் அரசாங்கத்தின் அனுமதியோடுதான் டேனியலைப் போன்ற மேய்ப்பர்கள் இதைச் செய்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மேய்ப்பது காட்டுக்குள்ளிருக்கும் மேய்ச்சல் நிலத்திலல்ல. அது வன விலங்குகளுக்கானது. இவர்கள் மேய்ப்பது வனத்தையும் ஊரையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் வளர்ந்திருக்கும் செடிகளை. அவைதாம் காட்டுத்தீ ஏற்பட்டால் ஊருக்குள் பரவ முக்கியக் காரணியாக விளங்குகிறது. அதையெல்லாம் அழித்துவிட்டால் காட்டுத்தீ ஊருக்குள்ளும் சேதம் விளைவிக்காது என்று நினைக்கிறார்கள்.

அரசாங்கம் இதற்காகவே ஆடு மேய்ப்பவர்களை வேலைக்கு எடுக்கிறது. அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஆடுகளை வளர்க்கக் கொடுக்கிறது. அந்த அரசாங்க மேய்ப்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று மட்டுமே. அவற்றை ஓட்டிச்சென்று எங்கெல்லாம் ஊருக்கும் காட்டுக்கும் இடையில் பரந்திருக்கும் நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டுப் பராமரிக்க வேண்டும். அந்த ஆடுகள் மொத்தமாகச் சாப்பிட்டுத் தீர்க்க வேண்டும். அதுவும் கோடைக்காலம் வருவதற்குள். அதன்மூலம் கடந்த ஆண்டுவரை காட்டுத்தீ சம்பவங்களால் ஊருக்குள் ஏற்பட்ட விபத்துகளும் உயிர்ப்பலிகளும் இனி நடக்காமல் தவிர்க்கலாம். பெருமளவிலான காட்டை வருடாவருடம் சாம்பலாக்கிச் செல்லும் காட்டுத்தீ அவர்களைச் சமூக சூழலியல் காட்டுயிர் என்று அனைத்து வகையிலும் சேதங்களை விளைவிக்கின்றன. கடந்த வருடம் 106 பேர் காட்டுத்தீயால் உயிரிழந்துள்ளனர். அது ஓர் எச்சரிக்கை மணியாகத் தோன்றவே உடனடியாகவும் நீடித்த தீர்வாகவும் திட்டங்களைத் தீட்ட முடிவுசெய்தது அந்நாட்டு அரசாங்கம்.

Photo Courtesy: AP Photo/Armando Franca

எப்போதும் செய்யும் முயற்சிகளையே மேற்கொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக நின்றார்கள். இந்த முறை திட்டங்கள் வித்தியாசமானதாக இருக்க வேண்டும். இல்லையேல் வழக்கத்தைப்போல் இம்முறையும் தோல்விகளே கிடைக்கும். அந்தத் தோல்விகள் பல சேதங்களுக்கு வழிவகுக்கும். காடு மற்றும் கிராமப்புற முன்னேற்றத்துறை அமைச்சகம், `` பொருள் மற்றும் உயிர்ச்சேதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதே உடனடியாகச் செய்யவேண்டியது. காடு தன் சேதங்களைத் தானே சரிசெய்துகொள்ளும். ஆனால், நாம் அப்படியில்லை. அதற்கான நடவடிக்கைகளைத்தான் முழுவீச்சில் செயற்படுத்த வேண்டும்" என்று பரிந்துரைத்தது. அரசு அதை ஏற்றுக்கொண்டது. ஆனால் எப்படித் தடுப்பது?

இயற்கைக் காட்டுத்தீ சம்பவங்களே ஆண்டுக்கு 150-க்கும் அதிகமாக நிகழும் போர்ச்சுகல் காடுகளுக்கு அருகிலிருக்கும் கிராமங்களில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின்றன. அத்தகைய பேரிடரைத் தடுப்பது எப்படி? மிகப்பெரிய சவால்தான். ஆனால், செய்தாக வேண்டும். செய்தார்கள். என்ன செய்தார்கள்?

பல்வேறு திட்டங்கள் ஆலோசனையின்போது முன்வைக்கப்பட்டன. அதில் மிகக் குறைவாகவே செலவாகும் இந்தத் திட்டம் செயல்முறையைத் தேர்வுசெய்தார்கள். காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஆடுகளின் உதவியை நாடுவதை அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் சில தென்மேற்குப் பகுதிகளும் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகின்றன.

ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை போர்ச்சுகலில் காட்டுத்தீ அதிகமாக ஏற்படும் காலகட்டம். அந்தச் சமயங்களில் கிராமப்புற எல்லைகளிலும், காடுகளுக்குள் ஊடறுத்துச் செல்லும் சாலையோரங்களிலும் வளர்ந்திருக்கும் செடிகளையும் புல்வெளிகளையும் சுத்தம் செய்ய இவர்கள் ஆடுகளைப் பயன்படுத்துகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆடுகளை மக்களிடம் கொடுத்துப் பராமரிக்க வைத்தார்கள். அவர்கள் அவற்றை அந்த நிலங்களில் மேயவிட்டு காட்டுத்தீ ஊருக்குள்ளும் சாலைகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு முதலில் அவற்றுக்கு அருகில் தீ பிடிக்கக்கூடிய தாவரங்கள் இருக்கக்கூடாது. அதைத்தான் அந்த ஆடுகள் செய்கின்றன. காடுகளை ஊடறுக்கும் சாலையிலிருந்து 10 மீட்டர் தூரத்துக்கும், ஊருக்கும் விவசாய நிலங்களுக்கும் அருகிலிருக்கும் காடுகளை 50 மீட்டர் தூரத்துக்கும், காடுகளுக்கு அருகிலிருக்கும் வசிக்கும் குடியிருப்புகளில் உள்ள வீடுகளைச் சுற்றி 100 மீட்டர் அளவுக்கும் மொத்தமாக ஆடுகள் மேய்ந்துவிட வேண்டும். நாடு முழுவதும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆடு மேய்ப்பர்கள் இந்த விகிதத்தில் சுத்தம் செய்ய வேண்டும். அதன்மூலம் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கும், காட்டுத்தீயும் கட்டுக்குள் கொண்டுவரப்படும். அதுபோக அவசரக்காலக் குடியிருப்பு வசதிகளும், மக்களை இடம்மாற்றுவதற்குப் பாதுகாப்பான வழித்தடங்களும் இன்னொருபுறம் தயார் செய்யப்படுகின்றன. காட்டுத்தீ ஏற்பட்டால் அந்தக் காட்டைச் சுற்றியிருக்கும் கிராம மக்களை எச்சரிக்கத் தேவாலய மணிகளை ஒலிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இவைபோக ஏற்படும் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 10,700 தீயணைப்பு வீரர்களைத் தயார்நிலையில் வைத்துள்ளனர், 12 தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் விமானங்கள், 41 ஹெலிகாப்டர்கள் வாங்கப் போகிறார்கள். 

Photo Courtesy: AP Photo/Armando Franca

போர்த்துகீசிய விவசாயிகளும் போதுமான நிதிவசதி இல்லாமல் சிரமப்பட்டதால் அவர்களாலும் காடுகளைச் சரியாகப் பராமரிக்க முடிவதில்லை. அதனால் விரைவாக வளரக்கூடிய லாபம் தரக்கூடிய யூகலிப்டஸ் மரங்களை வளர்த்துப் பயன்பெற்று வந்தனர். ஆனால், யூகலிப்டஸ் வகைகள் எளிதில் தீப்பற்றக் கூடியவை. அவை பந்தத்தைப்போல் கொழுந்துவிட்டு எரியும். அத்தகைய மரங்களைத் தவிர்த்து கோர்க், ஹோல்ம் ஓக், செஸ்ட்நட் போன்ற அவர்களின் நாட்டுமரங்களை வளர்க்க விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கின்றது அரசாங்கம். இவை அவ்வளவு எளிதாகத் தீப்பிடிக்காது. அதோடு தன்னளவில் விரைவாகத் தீப்பிடிக்காமல் போவதால் அதைத் தாண்டி காட்டுத்தீ பரவுவதையும் குறைத்துவிடுகிறது.

இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், இந்தச் செயல்முறைகளைப் பரவலாகப் புழக்கத்துக்குக் கொண்டுவர பல ஆண்டுகள் தேவைப்படுமென்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கிராம வாழ்க்கையை மறந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களிடம் இத்தகைய கிராம வாழ்வை மீண்டும் கொண்டுசேர்ப்பது சில மாதங்களில் செய்துமுடிக்கும் செயலல்ல.

1980-களில் போர்ச்சுகல் காட்டுத்தீ சுமார் 75,000 ஹெக்டேர் காட்டுப்பகுதிகளை அழித்தது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு அதுவே இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது. தற்போது அங்கு ஏற்படும் அத்தகைய சம்பவங்களால் சுமார் 150,000 ஹெக்டேர் காடு ஒவ்வோர் ஆண்டும் கருகிக் கொண்டிருக்கின்றன. காலநிலை மாற்றத்தால் கோடைக்கால வெப்பமும் வறட்சியும் அதிகமானதே இதற்குக் காரணம் என்கிறார்கள் அந்நாட்டு ஆய்வாளர்கள்.

செர்ரா டோ கல்டெய்ரா என்ற மலைத்தொடரின் ஓரத்தில் அமைந்திருப்பதுதான் மொய்டா டா கெர்ரா என்ற குக்கிராமம். போர்ச்சுகலின் கடலோரத் தலைநகரமான லிஸ்பானிலிருந்து தெற்கே 250கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. அங்குதான் முன்னர் பார்த்த டேனியல் ஃபெர்னான்டஸ் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். முன்பு அவரைப்போல் நிறையபேர் அதைச் செய்துகொண்டிருந்தார்கள். அதில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர். உயிர்வாழும் அவரையொத்த மூத்த தலைமுறைகளும் இதை விட்டுவிட்டனர். இளைஞர்களுக்கு இதில் ஈடுபடச் சுத்தமாக விருப்பமில்லை. கோடைக்காலத்தில் வரும் நோர்டாடா என்ற வடக்குநோக்கிய காற்றுதான் அதிகமான காட்டுத்தீக்கு அங்கு காரணமாக இருக்கிறது. அது இந்த வருடமும் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள அவரும் அவரின் மனைவி அனிதாவும் அரசாங்க நிதியுதவியோடு ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Photo Courtesy: AP Photo/Armando Franca

டேனியல், ``முன்பெல்லாம் நீ ஆடு, மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று அசிங்கப்படுத்துவார்கள். இன்று அதையே நிதியுதவி தந்து செய்யத் தூண்டுகிறது அரசாங்கம். ஏனென்றால் அவற்றின் உதவியும் இருப்பும் நமக்கு எவ்வளவு முக்கியமென்று இப்போதுதான் புரிந்துகொண்டார்கள். இந்த ஜீவன்களின் அருமை இப்போதாவது அவர்களுக்குப் புரிந்ததே!" என்கிறார்.

இன்னமும் இந்தச் சொற்களை வசைப்பேச்சுகளாகப் பயன்படுத்துவதை நம் நாட்டில் பார்க்கமுடிகிறது. நாம் புரிந்துகொள்வது எப்போது?