Published:Updated:

கோலார் சுரங்கம் முதல் இடைக்காலத் தடை வரை... நியூட்ரினோ திட்டம் கடந்த பாதை!

கோலார் சுரங்கம் முதல் இடைக்காலத் தடை வரை... நியூட்ரினோ திட்டம் கடந்த பாதை!

நியூட்ரினோவுக்கு இடைக்காலத் தடை... வழக்கின் முழு வரலாறும் பின்னணியும்! #A2ZNeutrinoHistory

கோலார் சுரங்கம் முதல் இடைக்காலத் தடை வரை... நியூட்ரினோ திட்டம் கடந்த பாதை!

நியூட்ரினோவுக்கு இடைக்காலத் தடை... வழக்கின் முழு வரலாறும் பின்னணியும்! #A2ZNeutrinoHistory

Published:Updated:
கோலார் சுரங்கம் முதல் இடைக்காலத் தடை வரை... நியூட்ரினோ திட்டம் கடந்த பாதை!

லகின் மிகச் சிறிய துகள் நியூட்ரினோதான் என்பதால் ஒளியின் வேகத்தில், சமயத்தில் ஒளியைவிடவும் வேகமாக ஊடுருவிச் செல்லும். நியூட்ரினோவைப் பிடித்து ஆராய்ச்சி செய்தால் பல அறிவியல் முடிச்சுகளை அவிழ்க்கலாமே என்ற எண்ணத்தில், உலகின் முக்கிய வல்லரசு நாடுகள் பலவும் நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன. நியூட்ரினோ ஆராய்ச்சியில், உலக அரங்கில் இந்தியாவுக்கும் முக்கிய இடம் உண்டு. கர்நாடகத்தின் கோலார் தங்கச் சுரங்கத்தில் 1962-ம் ஆண்டிலேயே நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டது இந்தியா. ஆனால், அதன் பின்னர் அந்த ஆராய்ச்சி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. பின்னர், மீண்டும் 1990-களில் நியூட்ரினோ முக்கியப் பேசுபொருளானது. 

இடம் தேர்வு

இந்தியாவில் நிச்சயம் ஒரு நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க இந்தியா முழுக்கச் சுற்றியது, ஆராய்ச்சியாளர் குழு. இமயமலையில் தொடங்கி, குஜராத், கோவா எனப் பல இடங்களைப் பரிசீலித்து இறுதியாக நீலகிரி மாவட்டத்தின் சிங்காராப் பகுதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அங்கு முதுமலைப் புலிகள் காப்பகம் இருப்பதால், அனுமதி மறுக்கப்படுகிறது. பின்னர் இறுதியாக, தங்கள் ஆராய்ச்சிக்குத் தேவையான கார்னோகைட் பாறைகள் (Charnockite Rock) இருக்கும் தேனி மாவட்டம், பொட்டிபுரம் பகுதியிலிருக்கும் அம்பரப்பர் மலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அங்குதான், நியூட்ரினோ ஆராய்ச்சி மையமான ஐ.என்.ஓ (Indian based Neutrino Observatory) அமைக்க பணிகள் துரிதப்படுத்தப்படுகின்றன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நியூட்ரினோ திட்டம்

அம்பரப்பர் மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்துக்குக் குடைந்து, இரண்டு லாரிகள் ஒரே சமயத்தில் செல்லும் அளவுக்கான அகலத்தோடும், 20 மீட்டர் உயரத்திலும் ஒரு பெரிய குகை அமைக்கப்படும். மலையின் நடுப்பகுதியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். ஆய்வுக்கூடத்தின் ஒரு பகுதியில், 51 ஆயிரம் டன் எடைகொண்ட, உலகின் மிகப்பெரிய காந்தத்தால் ஆன `அயர்ன் கலோரிமீட்டர்’ (Iron Calorimeter) எனும் நியூட்ரினோ உணர்கருவி (Neutrino Detector) அமைக்கப்படும். நியூட்ரினோக்களை இந்தத் தடுப்புகளின் உதவியோடு தடுத்து நிறுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இதுதான் திட்டத்தின் அடிப்படை. 

சர்ச்சைகள் ஆரம்பம்

ஐ.என்.ஓ அமைக்க 2011-ம் ஆண்டு ஜூன் 1 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்தது. `சூழலியலுக்குப் பெரும் சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது’ என்று, முதன்முதலாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தார் வைகோ. இந்தத் திட்டம் குறித்த ஆவணங்களைச் சூழலியலாளர்கள் ஆராயத் தொடங்கியபோது, முதல் கட்டத்திலேயே அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்தது. இந்தத் திட்டத்தைப் பிரிவு 1 (E) கீழ் விண்ணப்பித்திருந்தது ஐ.என்.ஓ. அதாவது, அணு மற்றும் அணுக்கழிவு மேலாண்மைப் பிரிவு. இந்தியா முழுவதிலுமிருந்து அணுக்கழிவு களை இங்குக் கொண்டுவந்து கொட்டவிருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுப் போராடத் தொடங்கினார்கள். ஆனால், அது எழுத்தர் செய்த பிழை (Clerical Error) என்று சாதாரணமாகக் கூறிக் கடந்தது, ஐ.என்.ஓ. இருந்தும் பிரச்னை தீரவில்லை.

சுற்றுச்சூழலியலாளர்களின் வாதம்

ஐ.என்.ஓ-வின் திட்ட அறிக்கையில், முதல் சில வருடங்களுக்கு இயற்கையான நியூட்ரினோக்கள் (Natural Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும். பின்னர், செயற்கை நியூட்ரினோக்கள் (Artificial Lab Made Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

ஃபெர்மி போன்ற வெளிநாட்டு ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து, நியூட்ரினோக்கள் கற்றைகளாக (Muon Colliders) நம் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பப்படும். அந்த நியூட்ரினோக்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்து, அந்த முடிவுகளை நாம் அந்த ஆராய்ச்சிக் கூடங்களுக்குக் கொடுக்க வேண்டும். இயற்கையான நியூட்ரினோ குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால், இந்த `மியூவான் கொலைடர்ஸ்’ (Muon Colliders) கதிரியக்கத் தன்மைக்கொண்டது. ஓர் ஆராய்ச்சிக்கான மூலப்பொருள் கதிரியக்கத் தன்மைகொண்டதாக இருக்கும்போது, அதை ஆராய்ச்சி செய்யும் கூடத்திலும் அதன் தாக்கம் ஏதாவது ஏற்படுமோ என்கிற பயம் இருக்கவே செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இந்த ஃபெர்மி லேப் உடனான ஒப்பந்தம் குறித்த எந்தத் தகவல்களையுமே மத்திய அரசோ, ஐ. என். ஓவோ எங்குமே குறிப்பிடவில்லை. ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்தின் இணையதளத்தில் இந்தத் தகவல்களை காணலாம்.

அம்பரப்பர் மலைப் பகுதியைச் சுற்றி வைகை, முல்லைப் பெரியாறு உட்பட 12 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே அணைகளால் அழுத்தப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில், இப்படியான ஒரு சுரங்கத்தைத் தோண்டும்போது பாதிப்பு ஏற்படும் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை சூழலியலாளர்கள் முன்வைக்கிறார்கள். 

நியூட்ரினோ திட்ட அறிஞர்களின் வாதம்!

``நாங்கள் எதையும் இங்கு மாசுபடுத்தப் போவதுமில்லை. வெட்டப்படும் கற்களில் 10% தான் நாங்கள் எடுத்துக்கொள்வோம். 90% தமிழக அரசுக்குத்தான். அதை அவர்கள் விற்று, வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே அமெரிக்காவுக்காகத்தான் என்பது போல் எல்லாம் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களோடு கூட்டு வைத்திருப்பது உண்மைதான். ஓர் அறிவியல் ஆராய்ச்சி என்றால், பல உலக நாடுகளோடு இணைந்து வேலை செய்யத்தான் வேண்டும். இதெல்லாம் பெரிய பிரச்னையா? அணு ஆயுதங்களை நியூட்ரினோக்கள் மூலம் கண்டறிந்து அதை வெடிக்கவும் செயலிழக்கவும் வைக்க முடியும். இது ஆபத்தானது என்றும் பிரசாரம் செய்கிறார்கள். அந்தக் கருத்து பொய்யில்லை. ஆனால், அது இன்று வரை ஒரு தியரி அளவில்தான் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டேயிருந்தால் இங்கு எதையுமே செய்யாமல், வளராமல் அப்படியே இருக்க வேண்டியதுதான்" என இந்தத் திட்டம் குறித்து மாற்றுக்கருத்தையும் முன்வைக்கின்றனர் ஆதரவு விஞ்ஞானிகள்.

நியூட்ரினோ வழக்குகளும், இன்றைய தீர்ப்பும்!

இதற்கிடையில், பிப்ரவரி 14, 2015 அன்று ``பூவுலகின் நண்பர்கள்" அமைப்பின் சார்பாக சென்னையில் இருக்கும், ``தேசிய பசுமைத் தீர்ப்பாயம் - தென்மண்டலப் பிரிவில்" நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக ஒரு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்கிறார்கள். 
அதில், 2010-ல் ஐ.என்.ஓ, ஒரு `சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு' அறிக்கையைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அதை கோவையைச் சேர்ந்த ``சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம்" மேற்கொண்டது. இதில் இரண்டு பிரச்னைகள். 

ஒன்று, ``சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு" அறிக்கையைத் தயாரிப்பதற்கான மத்திய அரசின் அங்கீகாரம் சலீம் அலி ஆராய்ச்சி மையத்துக்குக் கிடையாது. 

இரண்டாவது, ``நியூட்ரினோ ஆய்வுக்காகத் தோண்டப்படும் சுரங்கத்தினால், அதற்கு வைக்கப்படும் வெடிகளால், வெடிகள் உடைத்து நொறுக்கும் பாறைகளால்... (Blasting Impact) என்ன மாதிரியான சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்படும் என்பதை ஆராய வேண்டும். ஆனால், எங்களால் அதைச் செய்ய இயலாது. நாங்கள் அதைச் செய்யவில்லை'' என்று சலீம் அலியின் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனில், 2.5 கிமீ சுரங்கம் தோண்ட, பல்லாயிரம் கிலோ வெடி மருந்துகள் கொண்டு, 6 லட்சம் டன் பாறைகள் வெடி வைத்துத் தகர்க்கப்படும்; இந்தத் திட்டத்தினால் ஏற்படும் ``Blasting Impact" குறித்த எந்த ஆய்வுகளுமே இதுநாள் வரை மேற்கொள்ளப்படவில்லை. 

சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற, மொத்தம் இருக்கும் 12 பிரிவுகளையும் செக்‌ஷன் A மற்றும் செக்‌ஷன் B என்று இரண்டாகப் பிரிக்கிறார்கள். செக்‌ஷன் B என்பது சாதாரணமான கட்டடங்களுக்குரிய பிரிவு. செக்‌ஷன் A என்பது சூழலியல் சிக்கல்களை ஏற்படுத்தலாம் அல்லது கவனத்துடன் பரிசீலிக்க வேண்டிய கட்டடங்களுக்கான பிரிவு. இதில், நியூட்ரினோ திட்டத்தை செக்‌ஷன் B பிரிவில்தான் விண்ணப்பித்திருந்தது ஐ.என்.ஓ. இந்தச் சட்டத்தின் பொது விதி என்பது..." சில திட்டங்கள் செக்‌ஷன் B பிரிவில் வந்தாலும் கூட, திட்டத்தின் இடம் தேசியப் பூங்காக்களுக்கு அருகில் அமைந்திருந்தால் அதை செக்‌ஷன் A வாக கருத வேண்டும்" என்று இருக்கிறது. நியூட்ரினோ ஆய்வகத்தைப் பொறுத்தவரை, அது கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவிலிருந்து 4.5 கிமீ தூரத்திலேயே அமைந்திருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ``இந்தத் திட்டத்தைக் கண்டிப்பாக செக்‌ஷன் A பிரிவில்தான் சேர்க்க வேண்டும். எனவே திட்டத்தை மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்யுங்கள்" என்று சொல்லி 20-03-2017 அன்று திட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டது, தேசிய பசுமை தீர்ப்பாயம். 

இதற்குப் பிறகு, ஐ.என்.ஓ மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்து (இந்த முறையும் செக்‌ஷன் B பிரிவில்தான் விண்ணப்பித்தது) பல சட்ட சிக்கல்களைக் கடந்து...இறுதியாக, மத்திய நிபுணர் குழு (Expert Appraisal Committee) அளித்த பரிந்துரையின் பேரில்... "நியூட்ரினோ திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகக் கருதி, உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும்" என்று 26-03-2018 அன்று உத்தரவிட்டது மத்திய அரசு. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பது சட்டத்தின் கீழும் ``சிறப்புத் திட்டம்" என்கிற ஷரத்து எதிலும் இல்லை, பிறகு எப்படிச் சிறப்பு திட்டமாகக் கருதி அனுமதி வழங்கமுடியும் என்று எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல், சட்டத்தை வளைத்து சுற்றுச்சூழல் சட்டங்களைப் புறந்தள்ளி நியூட்ரினோ திட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சுற்றுச் சூழல் அனுமதியை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் வழக்குத் தொடுத்தனர். அதில், ` `நியூட்ரினோ திட்டத்துக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். சட்ட விதிகளுக்குப் புறம்பாக இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. 

இடைக்காலத் தடை!

இந்த வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த அக்டோபர் 9-ம் தேதி நிறைவடைந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழக்கு தொடர்பாக இன்று (2-11-18) தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், மத்தியச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்குத் தடை இல்லை. தேனி நியூட்ரினோ ஆய்வக மையம் அமைக்க இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் தொடர்ந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. வன உயிரினங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பது குறித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு வாரியத்திடம் அனுமதி வாங்கிய பின்னர்தான், இந்தத் திட்டத்தைத் தொடர முடியும்" என்று குறிப்பிட்டிருக்கிறது. 

இதுபற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். ``மத்திய அரசின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் அமைச்சகம் எப்போதெல்லாம் பிரிவு ``B" கீழ் அனுமதி வழங்கமுடியும் என்று சட்டம் சொல்கிறது?

1. மாநிலத்தில் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிறுவனம் செயல்படாமல் இருக்கும் சமயங்களில்

2. பொது நிபந்தனைகள் பொருந்தும் திட்டங்கள்

மேற்சொன்ன இரண்டும் இல்லாத நிலையில் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த விண்ணப்பத்தை நிராகரித்திருக்க வேண்டும். இதைத்தவிர பல்வேறு காரணங்களையும் மேற்கோள்காட்டி இந்த வழக்கு நடைபெற்றது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திட்டத்துக்காக இடைக்கால தடையை வழங்கி எங்கள் கோரிக்கையை நிராகரித்து சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல சட்டத்துக்குப் புறம்பானது கூட. மாநில உரிமைகளைப் பறித்து மாநில அரசின் நிபுணர் குழு எழுப்பிருந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மத்திய அரசு வழங்கிய அனுமதியை, மாநில அரசு, தீர்ப்பாயத்தில் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த எதிர்ப்பையும் மாநில அரசு தெரிவிக்காமல் இருந்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தத் தீர்ப்பு சட்டத்தை மதிக்காமல் அரசுகள் சிறப்புத் திட்டம் என்கிற பெயரில் எந்தத் திட்டத்தை வேண்டுமென்றாலும் நிறைவேற்றலாம் என்கிற போக்கை நாட்டில் உருவாக்கிச் சட்டத்தின் ஆட்சி நடைபெறாமல் போவதற்கு வாய்ப்பாகிவிடும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். ஏற்கெனவே தேசிய வனவிலங்கு வாரியம் அனுமதி வழங்கவேண்டும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ``நிறுவுதலுக்கான ஒப்புதல்" வழங்கவேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி வாங்காமல் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ம.தி.மு.க பொதுச்செயலர் திரு.வைகோ தடை ஆணை பெற்றுள்ளார்.

தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு நீர்த்தேக்கங்கள் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க இந்தத் திட்டத்தை எதிர்க்கவேண்டும். காலநிலை மாற்றம் குறித்த ஐ.பி.சி.சி அறிக்கை வந்த பிறகு எல்லாவற்றையும் விடக் காடுகளையும் மலைகளையும் பாதுகாப்பதே பிரதானமாகிறது. இந்தச் சூழலில் அந்தப் பகுதியிலுள்ள மக்களிடம் கருத்தே கேட்காமல் நடைபெற இருக்கும் இந்தத் திட்டத்தை எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசின் முதல்வராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இருக்கும் வரை இந்தத் திட்டத்துக்கான அனுமதியை வழங்கவில்லை. தமிழக அரசு இந்தத் திட்டத்துக்கான அனுமதியை வழங்கக் கூடாது என்றும், தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் இந்தத் திட்டத்துக்கான எதிர்ப்பை ஓங்கி ஒலிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

திட்டத்துக்காக வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையும், மேற்குத் தொடர்ச்சி மலை குறித்த முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்கிற தீர்ப்பாயத்தின் உத்தரவும் மக்களின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துவைத்தாலும் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாதது வருத்தமளிக்கிறது. இந்த ஜனநாயக நாட்டில் எந்தத் திட்டம் என்றாலும் மக்களிடம் கருத்தைக் கேட்க வேண்டும் என்பது விதி. மக்களிடம் கருத்தைக் கேட்கவேண்டிய தேவை இல்லை என்று சொல்வது ஜனநாயக விரோதச் செயல் மட்டுமல்ல, மக்கள் விரோதமும் கூட" என்கிறார், பொறியாளர் சுந்தர்ராஜன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism