Published:Updated:

`குப்பையை தொட்டியில போடுங்க என் தெய்வமே!'- மீம்ஸ் போட்டு ஏரியைக் காக்கும் இளைஞர்கள்

`குப்பையை தொட்டியில போடுங்க என் தெய்வமே!'- மீம்ஸ் போட்டு ஏரியைக் காக்கும் இளைஞர்கள்
`குப்பையை தொட்டியில போடுங்க என் தெய்வமே!'- மீம்ஸ் போட்டு ஏரியைக் காக்கும் இளைஞர்கள்

நடிகர் வடிவேலு போட்டோவுடன், `குப்பையை அந்த தொட்டியில போடுங்க என் தெய்வமே' என்ற மீம்ஸ் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பொதுவாக பிரபலங்களை நக்கல் செய்வதற்கு மட்டுமே அதிகமாக மீம்ஸ் போடப்பட்டு வந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், வடுவூரில் உள்ள பிரமாண்ட ஏரியைக் காப்பதற்காகவும், தமிழகம் முழுவதும் புகழ்பெற வைப்பதற்காகவும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றாக இணைந்து மீம்ஸ் போட்டு இந்த புது முயற்சியை செய்திருக்கிறார்கள். அவர்களை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி வாழ்த்து கூறி வருகின்றனர்.

தஞ்சாவூர் மன்னார்குடி சாலையில் உள்ளது வடுவூர். விளையாட்டுக்குப் புகழ் பெற்ற இந்த ஊரில் 316 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி பறவைகள் சரணாலயமாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏரியைக் காப்பதற்காக வடுவூரைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக இணைந்து வடுவூர் நண்பர்கள் குழு என்ற பெயரில் பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அவர்களிடம் பேசினோம்.

``எங்க ஊரோட அழகே இந்த ஏரிதான். இங்கு லட்சக்கணக்கான  பறவைகள் வசிக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாகவே கோடை காலங்களில் எங்க ஏரி வறண்டு கிடக்கும். கடந்த ஆண்டும் இதேபோல் வறண்டு கிடந்தப்ப ஏராளமான பறவைகள் செத்துக் கிடந்துச்சு. இதைப் பார்த்து எங்க மனசு தாங்க முடியாமல் தவித்தது. அது மட்டும் இல்லாமல் சுற்று வட்டாரப் பகுதி முழுவதுக்கும்  நிலத்தடி நீர் குறையாமல் இருப்பதற்கு இந்த ஏரி முக்கிய காரணம். இப்படிப்பட்ட ஏரி வறண்டு அழியும் நிலையில் இருப்பதைப் பார்த்த நாங்கள் ஒன்றாக இணைந்து ஏரியை காக்க நினைத்தோம். முதற்கட்டமாக தூர் வாரி 30 வருடங்கள் ஆன ஏரியை தூர்வார முயற்சி எடுத்தோம். இதற்காக பல ஆர்ப்பாடங்களை நடத்தினோம். அதன் பலனாக ஏரியை தூர் வாரி அந்த மண்ணை விவசாயிகளுக்குப் பயன் பெறும் வகையில் விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு தூர் வாருவதற்கு அரசு அனுமதி கொடுத்தது.

அதன்படி நாங்கள் தூர்வாரும் பணியைத் தொடங்கி செய்து வந்தோம். பிரதானமான சாலை ஓரத்திலேயே ஏரி இருப்பதால் வாகனங்களில்  அதி வேகமாக செல்வார்கள் பயணிகள் வேகத்தை குறைக்கும் விதமாக அந்தச் சமயத்தில், `ஏரி தூர்வாரும் பணி நடைபெறுகிறது. மெதுவாக செல்லவும்' என ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலு வரும் காட்சியின் போட்டோவுடன் மீம்ஸ் போட்டு ப்ளெக்ஸ் வைத்ததோடு அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டோம். அது வைரலாக பரவியது. ஆற்றில் தண்ணீர் வந்தது உள்ளிட்ட காரணங்களால் தற்போது பத்து சதவிகிதம் மட்டுமே ஏரி தூர்வாரப்பட்டது. இந்த நிலையில், இப்போது நிரம்பி வழியும் ஏரியைக் காண வருபவர்கள் அதன் வழியாக செல்பவர்கள் சாப்பிட்ட குப்பைகள், குளிர்பான பாட்டில்களை அப்படியே ஏரி ஓரத்தில் போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால் ஏரி மாசடைகிறது. தூர்வாரியபோது ஒரு டிப்பர் லாரி அளவுக்கு குப்பைகள் எடுக்கப்பட்டது. மேலும், குடிமகன்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களைப் போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனாலும் ஏரியின் சுற்றுச்சூழல் கெடுகிறது.

இதை தடுப்பதற்காக எங்க குழு சார்பில் குப்பைத்தொட்டி ரெடி செய்து வைத்தோம். அப்படியும் மக்கள் குப்பைகளைத் தொட்டியில் போடவில்லை. இதனால்தான் நடிகர் வடிவேலு போட்டோவுடன் `குப்பையை அந்த தொட்டியில போடுங்க என் தெய்வமே' என்ற மீம்ஸோடு ஃப்ளெக்ஸ் வைத்து அதை முகநூலிலும் பதிவிட்டோம்.இந்த மீம்ஸ்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமானவர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். மக்களும் குப்பைகளைத் தொட்டியில் போட ஆரம்பித்துள்ளனர்'' என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். மேலும், ``எங்க நோக்கமே எங்க ஊரோட உயிராகவும் அழகாகவும் இருக்கிற இந்த ஏரியை தமிழகம் தாண்டி புகழ்பெற வைப்பதற்காகவும் ஏரியை காப்பதற்காகவும் மீம்ஸ் போட்டு இந்த புதுவித முயற்சியை செய்து வருகிறோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. கடந்த சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏரியை தூர் வாரி பராமரிக்க மூன்றரை கோடி நிதி ஒதுக்கினார். அது அறிவித்தபடி மட்டுமே இருக்கிறது. அந்த நிதி வந்தவுடன் எங்க ஏரியை  முழுமையாக தூர்வாரி பல மடங்கு வளர்ச்சியடைய வைப்பதற்காக காத்திருக்கிறோம்'' என்றனர்.