Published:Updated:

’மிலிட்டரி பூச்சி’களை அழிக்க ஐ.நா.வின் திகீர் வியூகம்!

வேரோடு அழிப்பதற்கான கால அவகாசத்தை நாம் எப்போதோ கடந்துவிட்டோம். இனி அதைக் கட்டுப்படுத்துவதில்தான் நாம் கவனம் செலுத்தமுடியும்.

’மிலிட்டரி பூச்சி’களை அழிக்க ஐ.நா.வின் திகீர் வியூகம்!
’மிலிட்டரி பூச்சி’களை அழிக்க ஐ.நா.வின் திகீர் வியூகம்!

இதை ஒரு படையெடுப்பாக நினைத்துக் கொள்ளுங்கள்.

அவற்றுக்குக் கொஞ்சம்கூட இரக்கமே இருப்பதில்லை. சோளம், தினை, அரிசி என்று எதையும் விட்டுவைக்காமல் அழித்துவிடுகின்றன. அவை படைப்புழுக்கள் (Fall armyworms) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டுதான் முதன்முதலில் மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளுக்குள் இவை ஊடுருவின. ஊடுருவிய வேகத்தில் சிறிதும் இரக்கமின்றிக் கொஞ்சம்கூட விட்டுவைக்காமல் மொத்த பயிர்களையும் நாசமாக்கிக் கொண்டே கண்டம் முழுவதும் ஆக்கிரமித்தன. அவற்றால் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான விவசாயப் பயிர்கள் நாசமாகின. தற்போது ஆப்பிரிக்காவின் சஹாரா நாடுகளில் ஒன்றுவிடாமல் அந்தப் படைப்புழுக்கள் பரவி விட்டன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்னிந்தியாவிலும் ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்தில் ஈரோடு கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இவை சில இடங்களில் காணப்பட்டன.

வேரோடு அழிப்பதற்கான கால அவகாசத்தை நாம் எப்போதோ கடந்துவிட்டோம். இனி அதைக் கட்டுப்படுத்துவதில்தான் நாம் கவனம் செலுத்தமுடியும். இப்படிச் சொல்லும்போது பலருக்கும் வேதிமப் பூச்சிக்கொல்லிகளே நினைவுக்கு வரும். அத்தகைய பூச்சிக்கொல்லிகள் மனிதர்களுக்கும், சூழலுக்கும் கேடு விளைவிப்பவை. மனிதர்களுக்கு மட்டுமல்ல மற்ற நன்மை செய்யும் பூச்சிகளையும் பறவைகளையும்கூடக் கொன்றழித்துவிடும். அதோடு அவற்றையெல்லாம் அழிக்கும் பூச்சிக்கொல்லிகளிடம்கூட இவை தப்பித்துவிடுகின்றன. அதாவது அந்தப் பூச்சிக்கொல்லிகளால் இவற்றுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.

இவ்வளவு விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமம்தான். அதைச்செய்ய விவசாயிகளுக்கு அவற்றைக் கண்டறியவும் அவை உண்டாக்கும் அழிவுகளைக் கண்டறியவும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதுதான் இந்தச் செயலி. ஐக்கிய நாடுகள் அமைப்பு தற்போது ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தச் செயலியின் பெயர் FAMEWS (Fall Armyworm Monitoring and Early Warning System). இந்தப் படைப்புழுக்கள் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைச் செயலி மூலமாக விவசாயிகள் தங்கள் பயிர்களில் பரவியிருக்கும் இவற்றைக் கண்டுபிடித்துவிடலாம். அந்தத் தகவல்களை வைத்து நுரு (Nuru) என்ற பிரோகிராம் மூலமாக அவை பயிர்களில் ஏற்படுத்திய சேதங்களைக் கணக்கிடுவார்கள். இந்த நுரு பிரோகிராம் வெப்பமண்டல விவசாயத்துக்கான சர்வதேச நிறுவனம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் இணைந்து வடிவமைத்துள்ளது. இதைத் தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு ஃபோன்களில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தான்சானியா, காங்கோ, கென்யா போன்ற பெருவாரியான ஆப்பிரிக்க நாடுகளில் பேசப்படும் ஸ்வாஹிலி என்ற மொழியில் இது பெயரிடப்பட்டுள்ளது. 'நுரு' என்பதற்கு ஒளி என்று பொருள். சில ஒளிப்படங்களை நுருவில் பதிவுசெய்து அந்தப் படங்களில் இருப்பவற்றை மீண்டும் பார்க்கும்போது அது என்னவென்பதைக் கண்டறியும் அளவுக்கு அதைத் திறன் வாய்ந்ததாக வடிவமைத்துள்ளார்கள். அதனால் ஒவ்வொரு முறையும் அதைப் பயிர்களிடம் காட்டும்போது புதுப் பயிர்களையும் அதில் ஏற்பட்டுள்ள சேதங்களையும் நுரு பதிவுசெய்யும். பிறகு அந்தச் சேதங்களில் எது சாதாரண பூச்சிகள் ஏற்படுத்தியது எது படைப்புழுக்கள் ஏற்படுத்தியது என்பதைக் கண்டறியத் தன்னிடமுள்ள ஒளிப்படங்களோடு ஒப்பிடுகின்றது. அதோடு என்ன மாதிரியான சேதங்கள் என்பதையும் பதிவுசெய்கிறது. ஃபாமெவ்ஸ், நுரு இரண்டு செயலிகளும் இணையவசதி இல்லாமல்கூடச் செயல்படும். அப்படி வடிவமைத்தால் மட்டுமே இணையத் தொடர்பு சரியாகக் கிடைக்காத கிராமப் பகுதிகளில்கூட இவை உதவியாக இருக்கும். அதை வடிவமைத்ததின் நோக்கமும் நிறைவேறும். இணையம் இல்லையென்றாலும் அது தன் வேலையைச் செய்துவிடும். பிறகு இணையவசதி கிடைக்கும்போது உணவு மற்றும் விவசாய அமைப்புக்கு அந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும். இதன்மூலம் சர்வதேச அமைப்பும் படைப்புழுக்களின் பரவலைத் தரவுகளோடு கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.

முதலில் நுரு செயலி கஸாவா என்ற ஆப்பிரிக்கப் பயிருக்காகத்தான் வடிவமைக்கப்பட்டது. அதில் ஏற்படும் சேதங்களைக் கணக்கிட உருவாக்கப்பட்ட இந்தச் செயலியின் சிறப்பான செயற்பாடு அதை இந்த படைப்புழுக்களுக்கு எதிராகக் களமிறக்கவும் தூண்டியது. அதை மேலும் நவீனப்படுத்த தொழில்நுட்பவியலாளர்கள் முயன்று வருகின்றனர். நுரு, ஃபாமெவ்ஸ் இரண்டு செயலிகளையும் ஒரே செயலியாக மாற்றவும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.  அது விவசாயிகளுக்கும் எளிமையாக இருக்கும். அதோடு தரவுகளும் ஒரே இடத்தில் சேகரிக்கப்படும்.  தற்போது ஐம்பது செடிகளுக்குப் பத்துச் செடி வீதம் இந்தச் செயலியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மக்களுக்கு இந்த விழிப்பு உணர்வைக் கொண்டுபோய் சேர்க்கும் தன்னார்வலர்களால் மட்டுமே தற்போது இவை பயிர்களின்மீது பரிசோதிக்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டுக்குள் அனைத்து விவசாயிகளும் இதை அவர்களே செய்து கொள்ளுமளவுக்கு விரைவாக விழிப்பு உணர்வுசெய்ய ஐ.நா முயன்று வருகிறது.

இந்த செயலியைப் பயன்படுத்தப் போகும் விவசாயிகளுக்கு இதைப் பயன்படுத்தத் தெரிந்தும், இதைச் செய்வதன் முக்கியத்துவம் புரிந்துமிருந்தால் அவர்களால் சேகரிக்கப்படும் தரவுகள் பல பலன்களை நல்கும். நுரு செயலியைப் பயன்படுத்துவது மிகக் கடினமான சிக்கலான விஷயமில்லை. விவசாயிகள் அந்தச் செயலியை செயற்படுத்திவிட்டு, தங்கள் கைப்பேசிகளைச் செடிகள்மீதும் பயிர்கள்மீதும் காட்டினாலே போதும். அதன்பிறகு நுருவே உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்லிக் கொண்டேயிருக்கும். அதாவது, "நீங்கள் இப்போது செடி 1-ல் இருக்கிறீர்களா! இதில் நான் முடித்துவிட்டேன் செடி 2-க்குச் செல்லலாம்" என்பது போல. பயிர்கள் படைப்புழுக்களால் தாக்கப்பட்டிருந்தால் அந்தப் புழுக்கள் எந்த இடத்தில் படிந்திருக்கிறதோ அங்கு ஆரஞ்சு நிறப் பெட்டிகளைப் போட்டு அடையாளம் காட்டும். அதன்மூலம் விவசாயிகள் செடி தாக்கப்பட்டிருப்பதை அறிந்துகொள்ளலாம். அதன்பிறகு அவற்றை அழிக்கவும் பயிர்களைக் காக்கவும் என்ன மாதிரியான முயற்சிகளைச் செய்ய வேண்டுமென்ற அறிவுரைகளை நுரு வழங்கும். இவற்றை இணைய வசதி இல்லாமல்கூடச் செய்துவிடும். இணைய வசதி கிடைத்தவுடன் தன் தகவல்களை நுரு வைத்திருக்கும் அனைத்துப் பயனாளிகளுக்கும் தெரியும்படி பகிர்ந்து பல்வேறு வகைத் தீர்வுகளை நல்கும்.

இந்தப் பரிசோதனைகளைச் செய்யும்போது எப்போதும் காலநிலை ஒரே மாதிரியாக இருக்குமென்று சொல்லமுடியாது. காற்றின் வேகம் கடுமையாக இருக்கலாம், மழை பெய்யலாம். அத்தகைய சூழ்நிலைகளில்கூட விரைவாகச் சேதங்களைக் கண்டறியும் அளவுக்கு நுரு செயலியை மேம்படுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். தற்போது ஓர் இலையில் உள்ள ஓட்டைகளைக் கணக்கிட அது எடுத்துக்கொள்ளும் நேரம் 0.6 நொடிகள் மட்டுமே. இதைவிடக் குறைவான நேரமே எடுத்துக்கொள்ளும் வகையில் சீக்கிரமே மேம்படுத்தப்படும். புதுப் புது தரவுகள் கிடைக்கக் கிடைக்க அதை வைத்துப் பூச்சிகளைக் கண்டறியும், தீர்வுகளைப் பரிந்துரைக்கும் திறனைத் தானே அதிகப்படுத்திக் கொள்ளும் திறமைகொண்டது நுரு. அனைத்து விவசாயிகளாலும் ஆண்ட்ராய்டு ஃபோன் வாங்க முடியுமா என்பதையும் சிந்திக்க வேண்டும். அனைத்து சிறு குறு விவசாயிகளும் சராசரி ஒளிப்படத் திறனோடு கூடிய ஆண்ட்ராய்டு ஃபோன் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. அத்தகையவர்கள் வேறு விவசாய நண்பர்களின் உதவியுடன் மட்டுமே தகவல்களைப் பெறவும் தங்கள் விவசாய நிலத்தை ஆய்வுசெய்யவும் முடியும்.

இதற்குமுன் 45 நாடுகளில் கஸாவா, உருளைக் கிழங்கு போன்ற பயிர்களைப் பரிசோதிக்க நுரு பயன்பட்டுள்ளது. அதனால் அதன் திறனைச் சந்தேகப்பட வேண்டியதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்வாஹிலி போன்ற மொழிகளில் இதைத் தற்போது பயன்படுத்தலாம். அதில் மேலும் பல பிராந்திய மொழிகளுக்கு இடமளிப்பது விவசாயிகளுக்கு வசதியாக இருக்கும். அதற்கும் வழிசெய்ய வேண்டுமென்பதைப் வகையில் பயனாளிகள் கோரிக்கையாகப் பதிவு செய்தால் போதும். அந்தக் கோரிக்கையில் குறிப்பிடும் மொழிகளைச் சேர்ப்பதற்கு எளிய வழிமுறைகளை வைத்துள்ளதாகவும் வடிவமைப்பாளர் குழுவின் தலைவர் டேவிட் ஹ்யூக்ஸ் தெரிவித்துள்ளார்.

இப்போது அந்த படைப்புழுக்கள் படை இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. ஏற்கனவே நுரு, ஃபாமெவ்ஸ் ஆகிய செயலிகள் இரண்டும் ஹிந்தி மொழியில் உள்ளது. அதேபோல் தென்னிந்திய மொழிகளுக்கும் அவை பதிவிறக்கம் செய்து மாற்றப்பட்டால் தென்னிந்திய விவசாயிகளுக்குப் பேருதவியாக இருக்கும். இந்தச் செயலியின் சிறப்பு என்னவென்றால் புதிதாக ஒரு நாட்டில் அதைப் பயன்படுத்த எந்தவித மெனக்கெடல்களும் தேவையில்லை. அந்நாட்டு மொழிகளைப் பதிவு செய்தாலே போதும்.

எப்போதுமே புதிதாக வரும் தொழில்நுட்பங்களைக் கையாள்வது மூத்தவர்களுக்குச் சிரமமாகவே இருக்கும். அதுவும் 40-67 வயதுள்ளவர்களுக்கு. ஆனால், அவர்களும் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளுமளவுக்கு இந்தச் செயலிகள் இருப்பது இவற்றின் தனிச்சிறப்பு. அவர்களுக்குப் பயிற்சியளிக்க ஆப்பிரிக்கத் தன்னார்வலர்களும் விவசாயக் கல்லூரிகளும் ஈடுபட்டுள்ளனர். இங்கும் அதேபோல் ஈடுபட வேண்டும். அதோடு பெரும்பாலான விவசாயிகள் இன்னமும் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டுக்குள் வரவில்லை. அதோடு ஒவ்வொரு செடியாக இப்படிச் சோதித்துக்கொண்டே போவது நடைமுறையில் எந்த அளவுக்குச் சாத்தியமென்று நடைமுறைப் படுத்தினால்தான் தெரியும்.

சர்வமும் செயலிகளுக்குள் அடங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணாடிகளில் தேய்க்கும் விரல் ரேகைகளில் சுருங்கிவிட்டது உலகம். அந்த வசதிகளைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்குமே இருக்கிறது. அந்தக் கடமைகளில் ஒன்றுதான் இந்தச் செயலிகளைக் கொண்டுசேர்ப்பது.