Published:Updated:

அட்லாண்டிக்கை அச்சுறுத்திய கடல் தரை அழிவு... இதோ இந்தியாவில்...

அட்லாண்டிக்கை அச்சுறுத்திய கடல் தரை அழிவு... இதோ இந்தியாவில்...

மனிதர்களால் வெளியேற்றப்பட்ட கார்பன்கள் கடல் தரையில் பெருமாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. அந்த மாற்றங்கள் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.

அட்லாண்டிக்கை அச்சுறுத்திய கடல் தரை அழிவு... இதோ இந்தியாவில்...

மனிதர்களால் வெளியேற்றப்பட்ட கார்பன்கள் கடல் தரையில் பெருமாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. அந்த மாற்றங்கள் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.

Published:Updated:
அட்லாண்டிக்கை அச்சுறுத்திய கடல் தரை அழிவு... இதோ இந்தியாவில்...

ல்லாயிரம் கோடி ஆண்டுகளில் பல வகை உயிரினங்கள் உலகில் வாழ்ந்து அழிந்துள்ளன. அவையனைத்தும் ஏதேனும் ஒருவகை காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக ஏற்பட்ட பேரிடர்களால்தான் அழிந்தன. அந்தக் காலநிலை மாற்றங்கள் இயற்கையாக நிகழ்ந்தவை. இன்றும் அப்படியொரு காலநிலை மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அது இயற்கையாக நிகழவில்லை. மனிதத் தூண்டுதல்களால் இயற்கை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் காலநிலை மாற்றத்தை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அது இயற்கையின் ஆதிக் குழந்தையான கடலையும் பாதித்துக்கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் கடல் தரை கரைதல்.

1960-களில் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகளால் இறந்த கடற்பறவைகளின் எண்ணிக்கை அவற்றின் மொத்த எண்ணிக்கையில் ஐந்து சதவிகிதம். தற்போது அதைவிட 12 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 40 வருடங்களில் உலகின் 60 சதவிகிதம் உயிரினங்கள் அழிந்துவிட்டன. அதற்குக் காரணம் மனித இனத்தின் அளவுக்கு அதிகமான ஆற்றல், நில, நீர் நுகர்வுகள். நீண்ட காலமாக இயற்கையை நாம் மிகச் சாதாரணமாக நினைத்துவிட்டோம். இனி அப்படியிருக்கக் கூடாது. வளிமண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவு கடந்த ஏப்ரல் மாதம் 8,00,000 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகிவிட்டது. அந்த அளவுக்கு நாம் கரிம வாயுவை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். 2050-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே பத்து மடங்கு அதிகமாகலாமென்று சில ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. அதன் விளைவுகளைப் பல வழிகளில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அதில் மற்றுமொரு விளைவுதான் கடலின் தரைப்பகுதி கரைந்துகொண்டிருப்பது.

காலநிலை மாற்றம் கடல் வரை மட்டுமல்ல அதன் தரை வரையும் பாய்ந்துவிட்டது. பூமியின் தட்பவெப்பநிலையை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் பசுமை இல்ல வாயுக்களே அதற்கும் காரணம். ஆம், அவைதாம் கடல் தரையையும் கரைத்துக்கொண்டிருக்கிறது. புதிதாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு கடந்த வாரம் வெளியானது. அதன் முடிவுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. கடல் தரை கரைந்து கொண்டிருக்கிறது. அதுவும் சில பகுதிகளில் மிக வேகமாக...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``கடல், மனித இனம் வாழ்வதற்குத் தகுந்த சூழலை உருவாக்கிக் கொடுத்து நம்மை வாழ்வித்துக் கொண்டிருக்கும் ஓர் அளப்பறிய சக்தி. இன்று அந்த சக்தி தேய்ந்து சீரழிந்துகொண்டிருக்கிறது. நாம் அதை மேலும் அழித்துக்கொண்டிருக்கிறோம். அதுவே நாம் அதற்குச் செய்யும் நன்றிக்கடன்."

கடலை நாம் கார்பன் தொட்டியென்று அழைக்கலாம். அந்த அளவுக்கு நாம் வெளியிடும் கார்பன்களைச் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தில் நாம் வெளியேற்றும் கார்பன்களில் பாதியைக் கடல்தான் கிரகித்துக்கொள்கிறது. கார்பன் தண்ணீரில் அமிலத் தன்மையை அடைகின்றது. பிறகு, கடலுக்குள் இறந்துபோன சிப்பி உயிரினங்களிலிருந்து கால்சியம் கார்பனேட்டோடு வினைபுரிகிறது. அதன்மூலம் கார்பன் மட்டுப்பட்டு பைகார்பனேட்டாகக் கடல் தரைக்குள் புதைந்துவிடுகிறது.

பல மில்லியன் வருடங்களாகத் தனக்குள் கார்பனைச் சேமித்து வைக்கக் கடல் இந்த முறையைத்தான் பின்பற்றுகின்றது. மனிதர்கள் புதைபடிம எரிபொருள்களை எரிக்கத் தொடங்கும்வரை. நாம் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியபின் முன்பைவிட அதிகமாக இன்னும் அதிகமாக கார்பன்கள் வெளியேறி வளிமண்டலத்திலும் கடலிலும் கலக்கத் தொடங்கியது. நாசா ஆய்வின்படி தற்போது வெளியாகும் கார்பன்களில் சுமார் 48 சதவிகிதத்தைக் கடல் கிரகித்துக்கொண்டிருக்கிறது. அதன் திறனையும் மீறிய அளவு அதற்குள் செலுத்தப்படுகின்றது. 

Photo Courtesy: NOAA Fisheries

தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வில் 18-ம் நூற்றாண்டு முதல் தற்போதுவரை கடலின் அமிலத்தன்மை உயர்ந்துள்ளனதன் வரைபடம்.

கார்பன் அளவு அதிகமாக ஆக கடல் அமிலத்தன்மை எய்திக்கொண்டே போகும். அப்போது கடல் தரையிலிருக்கும் கால்சியம் கார்பனேட்டுகள் விரைவாகக் கரைந்துகொண்டேயிருக்கும். கடல் தரையிலிருக்கும் கால்சியம் கார்பனேட் எவ்வளவு வேகமாகக் கரைந்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிய அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் (Princeton University) சேர்ந்த ராபர்ட் கீ (Robert Key) என்பவர் ஓர் ஆய்வு மேற்கொண்டார். வளிமண்டலம் மற்றும் கடலியல் விஞ்ஞானியான அவர் கடல் நீரோட்டம், கடல் தரையில் கலந்திருக்கும் கால்சியம் கார்பனேட் அளவு மற்றும் கடல்நீரின் உப்பு அளவு, வெப்பநிலை போன்ற அலகுகளை வைத்துத் தன் ஆய்வை நடத்தினார். தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த கடலின் சூழலோடு இவர்தம் ஆய்வில் சேகரித்த தரவுகளை ஒப்பிட்டார். 

ஆய்வு முடிவில் பல இடங்கள் மிக ஆபத்தான நிலையிலிருப்பது தெரியவந்தது. மனிதர்களால் வெளியேற்றப்பட்ட கார்பன்கள் கடல் தரையில் பெருமாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. அந்த மாற்றங்கள் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதி வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி. நாம் உருவாக்கிய கார்பன்கள் அங்கு கடல் தரையில் கலந்திருந்த 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கால்சியம் கார்பனேட்டைக் கரைத்துவிட்டது. இந்தப் பிரச்னை எங்கோ இருக்கும் அட்லாண்டிக் கடலில்தான் என்று எண்ண வேண்டாம். இந்தியாவின் இந்தியப் பெருங்கடலிலும் இதன் பாதிப்புகள் தற்போது தொடங்கியுள்ளது. இதேபோல தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளிலும் அதிகளவில் கரைந்துகொண்டுள்ளது. இந்தப் பகுதிகளிலுள்ள வேகமான நீரோட்டம், உறிஞ்சப்படும் கார்பன்கள் கால்சியம் கார்பனேட்டைச் சீக்கிரமாகவே கரைக்க உதவுகிறது. அளவுக்கு அதிகமான கரிம வாயு வெளியேற்றத்தை நாம் செய்யச் செய்ய கடல் தரையிலுள்ள கால்சியம் கார்பனேட் கரைவதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

வட அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலுள்ள கடல்தரையில் 300 மீட்டர் ஆழம்வரை கால்சியம் கார்பனேட் மொத்தமும் கரைந்துவிட்டது. இந்த நிலை நீடித்தால் அதன் கடல்தரையில் கார்பன்களோடு வினைபுரிய கால்சியம் கார்பனேட்டே இருக்காது. அப்படி நடந்தால் கடல்நீரில் கலந்து அமிலத்தன்மையை அடையும் கார்பன்களைச் சமன்படுத்த எதுவுமில்லாமல் போகும். இதனால் கடலில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றிய தெளிவான ஆய்வுகளை இன்னும் தொடங்கவில்லை. ஆனால், கடலின் அமிலத்தன்மை அதிகரித்தால் அது உயிர்கள் வாழத்தகுதியற்றதாகக் கடலை மாற்றிவிட வாய்ப்புகள் அதிகம். அது கரைந்து ஆழம் அதிகமாவது கடலில் அதன் திறனுக்கும் அதிகமான கார்பன் சேர்ந்துகொண்டிருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

Photo Courtesy: Glenn Dunshea

``கார்பனேட் அதிகமிருந்த கடல்தரை கரையத் தொடங்கிவிட்டது. அது உலகின் மொத்த கடல் தரைக்கும் பரவச் சில பத்தாண்டுகள் அல்லது ஒன்றிரண்டு நூற்றாண்டுகளே போதுமானது. இது ஆழ்கடலின் நிலவியலையே மாற்றிவிடும். பூமியின் 60 சதவிகிதம் ஆழ்கடல்தான். அதன் சுற்றுச்சூழல் அழிந்துகொண்டிருக்கிறது. அதற்கு நாம்தான் காரணம். ஆம், ஆறாவது பேரழிவு தொடங்கிவிட்டது" என்கிறார் ராபர்ட் கீ.

பல மில்லியன் ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்த செயற்பாட்டை நாம் நிறுத்தப்போகிறோம். வருங்கால ஆய்வாளர்கள் இந்தப் பெருமாற்றத்துக்கும் அதனால் விளையப்போகும் பேரிடருக்கும் நம்மைத்தான் குற்றஞ்சாட்டப் போகிறார்கள். சில ஆய்வாளர்கள் இப்போதே நம் காலத்தை மானிடப் பேரழிவுக் காலமாக, அதாவது ஆறாவது திரள்நிலைப் பேரழிவாகச் சொல்லுகிறார்கள். பூமியை மனிதர்கள் சீரழித்துக்கொண்டுள்ளார்கள் என்பதை உணர்ந்த முதல் தலைமுறை நாம்தான். அதைச் சரிசெய்ய வேண்டிய தலைமுறையும் நாம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism