Published:Updated:

``சந்தோஷம்தான், ஆனா?!" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிபுரம்? #SpotReport

``சந்தோஷம்தான், ஆனா?!" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிபுரம்? #SpotReport
News
``சந்தோஷம்தான், ஆனா?!" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிபுரம்? #SpotReport

முன்னர் வேலை ஆரம்பித்த இடங்களில் இப்போது புதர் மண்டிப்போய் கிடந்தன. அருகிலேயே மிகப்பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இம்மையம் ஆரம்பித்தால் ஆற்றில் இருக்கும் நீர் முழுமையாக நியூட்ரினோ ஆய்வு மையத்துக்குக் கிடைக்கும்.

ழகிய மலை சூழ்ந்த பகுதி அது. மாலை வேளையில் கால்நடைகள் மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த நேரம். சூரியன் தனது ஒளியைச் சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டிருந்த வேளை. `நியூட்ரினோ' எனும் ஒற்றை வார்த்தையைக் கேட்டு, கடந்த 8 ஆண்டுகளாகச் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கும் கிராமத்துக்குள் நுழைந்தோம். இப்போது அக்கிராமத்தின் பெயர் உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். அக்கிராமத்தின் பெயர் `பொட்டிபுரம்'. தேனி மாவட்டம், உத்தமபாளையம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்து, கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது வரை பெரும்பாலானோருக்கு இத்திட்டம் பற்றித் தெரிந்திருக்கலாம். இப்போது விதிக்கப்பட்டுள்ள தடைக்குப் பின்னர் அக்கிராம மக்கள் என்ன மாதிரியான மன நிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தேன். 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் - பாளையம் சாலையில், நரசிங்காபுரம் தாண்டியவுடன் வலது புறம் தேவாரம் சாலையில் பயணிக்கும்போது, சாலையோரம் நின்றிருந்த பெரியவரிடம் பொட்டிபுரம் போக வழி கேட்டோம். பொட்டிபுரம் என்றவுடன் கண்கள் விரிய வாகனத்தை முழுமையாக நோட்டம் பார்த்தார். ``நீங்க யாரு?.. எங்க இருந்து வர்றீங்க" என்று எதிர்க் கேள்வி கேட்டார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், கொஞ்சம் நிம்மதியடைந்தவராக ``தம்பி நேராப் போங்க. சின்ன பொட்டிபுரம் வரும்... அதைத் தாண்டுனா.. பொட்டிபுரம்தான்" என்றபடி வழிகாட்டினார். வாகனம் சின்ன பொட்டிபுரத்துக்குள் நுழையும்போது, பல இடங்களில் `நியூட்ரினோவை தடை செய்' என்ற வாசகம் எழுதி தங்கள் எதிர்ப்பினை மக்கள் பதிவு செய்திருந்தனர். இறுதியாக பொட்டிபுரம் கிராமத்துக்குள் நுழைந்தோம். வாடகை கார் என்பதால் ஊர் மக்கள் சற்று மிரட்சியுடன் பார்க்க ஆரம்பித்தனர். அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, நியூட்ரினோவுக்காக ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்த இடத்தைப் பற்றிக் கேட்டோம். இந்தப் பாதையில நேரா போங்க என மக்கள் வழிகாட்டினர். அதன்படியே த.புதுக்கோட்டை கிராமத்தைத் தாண்டி, தார்சாலையிலிருந்து மண்சாலையில் வாகனத்தைச் செலுத்தினோம். கிராமத்துக்குச் செல்லும் வரை சரியில்லாத சாலை, நியூட்ரினோ திட்டத்துக்காக காட்டுக்குள் ஏர்போர்ட் ரன்வே போல (இரண்டு இடங்களைத் தவிர) அமைக்கப்பட்டிருந்தது. நியூட்ரினோவுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த இடங்களில் வெள்ளைக் கற்களால் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கம்பி வேலியானது கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டருக்கும் மேல் இருக்கிறது. இந்த நீளத்துக்குள் பெரிய விலங்குகள் எதுவும் நுழைய முடியாது. முன்னர் வேலை ஆரம்பித்த இடங்களில் இப்போது புதர் மண்டிப்போய் கிடந்தன. அருகிலேயே மிகப்பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இம்மையம் ஆரம்பித்தால் ஆற்றி நீர் முழுமையாக நியூட்ரினோ ஆய்வு மையத்துக்குக் கிடைக்கும். மேலும், கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்த நிலங்களின் ஓரம் கிராம மக்களின் ஆடுகளும், மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. 

அங்கே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த முத்து என்பவரிடம் இந்த நிலம் குறித்துக் கேட்டோம். இந்த நிலம்தாங்க எங்க சாமி. இதுலதாங்க சுத்துப்பட்டுல இருக்குற ஆடுகளும், மாடுகளும் மேயும். எங்க அப்பா காலத்துல இருந்தே பார்த்துக்கிட்டு இருக்கேன். இங்கதான் விவசாயம் செய்யுறாங்க. இதுலதாங்க எங்க எல்லாரோட வாழ்வாதாரமே இருக்கு. இப்போ தடை கொடுத்துருக்காங்கனு கேள்விப்பட்டேன். எங்க எல்லோருக்கும் சந்தோஷமா இருக்கு. ஆனா, இந்த சந்தோஷம் எவ்ளோ நாள் இருக்கும்னு தெரியலை" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். 
வேலை நடந்துகொண்டிருந்த இடத்தில் இப்போது முட்கள் புதைந்து இருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஊருக்குள் வந்து வீதியில் பேசிக்கொண்டிருந்த மக்களிடம் பேசினோம். ``போன எட்டு வருஷமாவே நாங்க நிம்மதியா இல்லை. இப்போ இடைக்காலத் தடை தீர்ப்பு வந்து கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்திருக்கு. நியூட்ரினோ திட்டத்தைப் பத்தி எதுவுமே அரசாங்கம் வெளிப்படையா பேச மாட்டேங்குது. அரசாங்கம் சொல்ற தகவல்களும் தப்பாத்தான் இருக்கு. இங்க சுத்துப்பட்டுல இருக்குற, தி.புதுக்கோட்டை, சின்ன பொட்டிபுரம், சிலை மலை, ராமகிருஷ்ணாபுரம், தேவாரம்னு எனப் பல கிராம மக்களும் இந்த மலைய நம்பித்தான் பொழப்பை நடத்திக்கிட்டிருக்கோம். எல்லோரும் ஒண்ணா சேர்ந்துதுதான் இந்தத் திட்டத்தை எதிர்க்குறோம். ஆரம்பத்துல எங்க கிட்ட கையெழுத்து வாங்கினப்ப கூட எங்ககிட்ட எதுவும் சொல்லாமத்தான் கையெழுத்து வாங்கினாங்க. எங்க கிராமத்துக்கு வர்ற ரோடு கூட சின்னதாத்தான் இருக்கு. ஆனா, இந்தத் திட்டத்துக்காக மலைப்பகுதியில போட்ருக்குற மண் ரோடு 20 அடி அகலத்துல போட்ருக்காங்க. இந்தத் திட்டம் ஆரம்பிக்குற இடத்துலயே ஆறு ஒண்ணு இருக்கு. அதுக்கு பக்கத்துல பெரிய கிணறு ஒண்ணும் கட்டியிருக்காங்க. அந்த ஆத்து தண்ணிதான் இந்த கிராமங்களை கொஞ்சம் காப்பாத்துது. அதுவும் இல்லைனா, இங்க இருக்குற நிலமெல்லாம் தரிசாயிடும். இந்த மையத்தால எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் ஒண்ணும் நல்லது நடக்காது" என்கிறார்கள், பொட்டிபுரம் மக்கள். ஒரு வாடகை கார் வந்தாலே சற்று மிரட்சியுடன்தான் பார்க்கிறார்கள், அக்கிராம வாசிகள்.  

நியூட்ரினோ திட்டத்தைப் பொறுத்தவரை அரசுக்கு, பொட்டிபுரம் மலைப்பகுதி என்பது சாதாரண பூமி. அம்மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அதுதான் சாமி என்பது அவர்கள் பேச்சில் தெரிந்தது. நியூட்ரினோ திட்டம் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சீர்கேட்டை ஏற்படுத்தும் என 2011-ம் ஆண்டு முதன்முதலில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் வைகோதான். அதன்பின்னர்தான் இவ்வழக்கில் நியூட்ரினோ திட்டத்தை அணுக்கழிவு பிரிவில் ஐ.என்.ஓ விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்திட்டத்தில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி இன்று இடைக்காலத் தடை வரை வந்து நிற்கிறது. 

இதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.