Published:Updated:

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வனபூஜை... எங்கே, ஏன், எதற்கு?

``எங்களை, எங்கள் கால்நடைகளைக் காக்கும் இயற்கை அன்னையே, வனதேவதையே, எங்கள் சுயநலத்துக்காக உங்களை வெட்டமாட்டோம். இது சத்தியம்" என்று சத்தியம் செய்கிறார்கள்.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வனபூஜை... எங்கே, ஏன், எதற்கு?
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வனபூஜை... எங்கே, ஏன், எதற்கு?

ன்று இயற்கையைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் கரங்கள்தாம் ஆக்டோபஸ்களாக எட்டுத்திக்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. காடுகளை, மலைகளை, இயற்கை எழிலைத் தனியார்கள் மட்டுமன்றி அரசும் வளர்ச்சித் திட்டங்களின் பெயரில் பாழ்படுத்தி வருகிறது. மலைகளை, காடுகளை வேண்டியமட்டும் போட்டி போட்டுக்கொண்டு `மொட்டை'யடிப்பதால், காடுகளில் வசிக்கும் விலங்குகள் இரை தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன. இதனால், உயிர்சுழற்சி, இயற்கைத் தகவமைப்பே மாறுகிறது. ``இயற்கை மீது யாருக்கும் கரிசனம் இல்லை. அதன் விலை கொடூரமானதாக இருக்கப் போகிறது" என்று சூழலியாளர்கள் அபாயச் சங்கை ஊதத் தொடங்கி இருக்கிறார்கள். 

இந்நிலையில், தங்களுக்கும், தங்கள் கால்நடைகளுக்கும் உயிர் வளர்க்க அச்சாணியாக இருக்கும் மலைக்காடுகளுக்கு நன்றி சொல்ல, `வனபூஜை' என்ற பெயரில் விழா எடுத்து அசத்துகிறார்கள் ஒரு கிராம மக்கள். பூஜையின்போது, `உன் வனத்திலிருந்து ஒரு மரத்தையும் வெட்டமாட்டோம்' என்று உறுதிமொழியும் எடுத்துக் கொள்கிறார்கள்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் மாவட்டத்தின் தென் எல்லை கிராமமாக உள்ள தெற்கு அய்யம்பாளையத்தில்தான் இந்த அதிசயம். இந்த வனபூஜைக்குக் குறிப்பிட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையோ வனபூஜை செய்கிறார்கள். 

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு வனபூஜையைக் காணச் சென்றோம். 

இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளப் பெண்களுக்கு அனுமதி இல்லை. முழுக்க முழுக்க இந்தக் கிராமத்து ஆண்கள் மட்டும் தென் எல்லையில் உள்ள சேவாப்பூர் அருகில் உள்ள மலைக்குப் போய், விழா எடுக்கிறார்கள். இந்த மலைத் தொடரானது தெற்கு அய்யம்பாளையம் உள்ளிட்ட பதினெட்டு கிராமங்களை மையமாக வைத்து, வட்ட வடிவில் அமைந்திருக்கிறது. தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஆண்கள் பூஜை சாமான்கள், அரிசி, பருப்பு,வெல்லம் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் சகிதம் வாகனங்களில் தெற்கு எல்லையாக உள்ள மலையடிவாரத்துக்குப் போகிறார்கள். அங்கே சிதறிக் கிடக்கும் கற்களை எடுத்து, அவற்றை சாமிகளாக்கி, நீராட்டி, கையோடு எடுத்துச் சென்ற பச்சை தென்னை மட்டைகளைப் பந்தல்போல் அமைத்து, அதற்குள் நட்டு வைக்கிறார்கள். அங்கே வைக்கப்பட்ட `திடீர்' சாமிகளுக்கு மலர் அலங்காரம், தென்னைக் குருத்து அலங்காரம் செய்கிறார்கள். அதன்பிறகு, எதிரே உள்ள திடலில் பொங்கல் வைக்கப்படுகிறது. 

சாதம், சாம்பார் என உணவும் தயார் செய்யப்படுகிறது. அந்த உணவுகளை வைத்து வனதேவதைகளின் முன்பு தேங்காய் உடைத்துப் படைக்கிறார்கள். சுற்றி நிற்கும் ஆண்கள் குலவைச் சத்தம் எழுப்புகிறார்கள். பிறகு, எல்லா ஆண்களும் அந்தச் சாமிகளுக்கு முன்பு குழுமி, ``எங்களை, எங்கள் கால்நடைகளைக் காக்கும் இயற்கை அன்னையே, வனதேவதையே, எங்கள் சுயநலத்துக்காக உங்களை வெட்டமாட்டோம். இது சத்தியம்" என்று சத்தியம் செய்கிறார்கள். அதன்பிறகு விருந்து நடக்கிறது. சமைத்த உணவு பரிமாறப்படுகிறது. மீதமுள்ள உணவையும், பொங்கலையும் பிரசாதமாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள். வனபூஜை திருவிழா இப்படியாக நிறைவுக்கு வருகிறது. 

திருவிழா பணிகளில் தீவிரமாக இருந்த முத்துசாமி என்பவரிடம் பேசினோம்.

``கடவூர் ஒன்றியமே வறட்சி மிகுந்த பகுதி. சுற்றிலும் மலை இருப்பதால், வானம் பார்த்த பூமியாக உள்ளது. மழை பெய்தால்தான் வெள்ளாமை என்கிற நிலைமையில்தான் இங்குள்ள சம்சாரிகள் இருக்கிறோம். அதனால், எங்கள் நிரந்தர வருமானமே கால்நடைகளை வைத்துத்தான். அந்தக் கால்நடைகளுக்கு உணவளித்து மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவது இந்தப் பகுதியைச் சுற்றி இருக்கும் மலைகள்தான். இந்த மலையில் உசிலை, விராலி, செமுனா, இண்டு முள், தெரளி, சுளுந்தை, வெடத்தலயான்னு பல மரங்கள் முளைத்துக் கிடக்கும். அதை மேய வச்சுதான் ஆடு மாடுகளை வளர்க்கிறோம். 300 வருஷங்களா எங்க முன்னோர்கள் மாட்டு வண்டி கட்டிக்கிட்டுப்போய் கால்நடைகளையும் தங்களையும் வாழ வைக்கும் வனத்தைக் கடவுளாக பாவித்து வணங்கி நன்றி சொல்லிட்டு வருவாங்க. நல்ல விசயத்துக்காகச் செய்கிற திருவிழா என்பதால், இப்ப நாங்களும் இதை விடாமல் நடத்திக்கிட்டு வர்றோம். ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை இந்தத் திருவிழாவை நடத்துறோம். வனத்தைப் பெண் தெய்வமாக நாங்கள் வணங்குவதால், ஆண்கள் மட்டுமே இந்தத் திருவிழாவில் பங்கேற்கணும்னு முன்னோர்கள் வழிமுறையை வகுத்து வெச்சுருக்காங்க. எந்த வறட்சியிலும் எங்க கால்நடைகளை கரை

சேர்த்து, எங்களை வாழ வைப்பது இந்த மலைகள்தாம். அதற்கு நன்றி சொல்லும் இந்தத் திருவிழாவைத் தொடர்ந்து நடத்திக்கிட்டே இருப்போம்" என்றார்.

பாலசுப்ரமணி என்ற இளைஞர், ``எனக்குக்கூட ஆரம்பத்தில்,`இதென்ன திருவிழா'ன்னு சாதாரணமாத்தான் தோணுச்சு. ஆனா, இன்றைக்கு வளர்ச்சிங்கிற பேர்ல அழிக்கப்படுற இயற்கை வளங்களை, அதனால் ஏற்படுற தீமைகளைக் கண்கூடாகப் பார்க்கும்போது, இயற்கையைப் பாதுகாக்க, இயற்கைக்கு நன்றி சொல்ல திருவிழா எடுக்கும் எங்க ஊர் மக்கள் அதிசயப் பிறவிகளாக தெரிய ஆரம்பிச்சாங்க. சும்மா நன்றி சொல்ல மட்டும் அங்கே போகாமல், `எங்களைக் காபந்து பண்ணும் இயற்கை தெய்வமே, உன்னை எந்நாளும் மறக்கமாட்டோம். உன் வனத்தில் ஒரு மரத்தைக்கூட வெட்டமாட்டோம்'ன்னு உறுதியும் எடுத்துக்கிறாங்க. அந்தச் சத்தியத்தை உறுதியா கடைப்பிடிக்கவும் செய்றாங்க... " என்று நெகிழ்கிறார்.