Published:Updated:

புதிய கங்கை நீர்வழிச் சாலை... சூழலியல் ஆபத்தும், சில முரண்களும்! #Sagarmala

கோவா, நீர் வழித் திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதியை எண் 7(இ)-ப்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் கங்கை நீர்வழிச் சாலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைதி காத்துக் கொண்டிருக்கிறது. 

புதிய கங்கை நீர்வழிச் சாலை... சூழலியல் ஆபத்தும், சில முரண்களும்! #Sagarmala
புதிய கங்கை நீர்வழிச் சாலை... சூழலியல் ஆபத்தும், சில முரண்களும்! #Sagarmala

டந்த 12-ம் தேதி வாரணாசியில் கட்டப்பட்டுள்ள ``பல்வகை போக்குவரத்து முனைய" (multi modal) திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. வாரணாசியில் அமைந்துள்ள இந்த முனையம் மூன்று வகையான போக்குவரத்து வசதிகளை இணைக்க இருக்கிறது. அதாவது சாலை, ரயில்வே மற்றும் கங்கை நீர்வழிச் சாலை மூன்றையும் இணைக்கும் முனையமாக மாறவிருக்கிறது. தேசிய நீர்வழிச் சாலை திட்டத்தில் கங்கை நீர்வழிச் சாலையும், வாரணாசி முனையமும் மத்திய அரசின் மிகமுக்கியமான திட்டங்களாகும். 

பிரதமர் மோடி, திட்டத்தைத் தொடங்கி வைக்கும்போது, பெப்சிகோ நிறுவனத்தின் துரித உணவுகளைச் சுமந்து வந்த சரக்குக் கப்பலை பெற்றுக் கொண்டார். கங்கைக் கரையில், பெப்சி நிறுவனம் தயாரித்த உணவு வகைகளைப் பெற்றுக்கொண்டது என்பது மட்டுமே இங்கு முரணல்ல, அதைவிட மிகப்பெரிய முரணானது உள்நாட்டு நீர்வழிச் சாலை திட்டம் என்கின்றனர், சூழலியலாளர்கள். உள்நாட்டு நீர்வழிச் சாலைத் திட்டம், மிகக்குறைந்த விலையில் சூழலுக்கு உகந்த போக்குவரத்து திட்டம் என்று அறிவித்துவிட்டு, வாரணாசி முனையமும், நீர்வழிச் சாலை திட்டமும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் உள்ள முரண்களிலேயே மிகப்பெரியது இதுதான், கடந்த பல ஆண்டுகளாக, கங்கை உள்ளிட்ட மற்ற நீர்வழிச் சாலை திட்டங்களைச் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நிறைவேற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உதவியாக இருக்கிறது. சூழலுக்கு உகந்தவை என்றும் சரக்குகளை, மிகக்குறைந்த விலையில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்லமுடியும் என்றும் அறிவித்துவிட்டு இத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நீர்வழிச் சாலையும் தன்னியல்பிலேயே இயங்கக் கூடியது, விரும்பத்தக்க வகையில் மாற்றினால் சாத்தியப்படாது. 

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவிலுள்ள 111 ஆறுகளும், அவற்றின் வழித்தடங்களும் 'தேசிய நீர்வழிச் சாலைகள்' என நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே, இந்தியாவின் கங்கை நீர்வழிச் சாலை உட்பட ஐந்து திட்டங்கள் 'தேசிய திட்டங்களாக' அறிவிக்கப்பட்டன. தேசிய நீர்வழிச் சாலை திட்டத்தின் முக்கியமான நோக்கம், 111 நீர் வழிகளையும் வர்த்தக ரீதியிலான பெரிய ஓடங்கள், சிறிய சரக்குக் கப்பல்கள், மக்கள் பயணப்படும் சிறிய கப்பல்கள் செல்லும் வகையில் மாற்றுவதாகும்.

இந்த அளவுக்கான கப்பல்கள் நீர்வழியில் பயணிக்க வேண்டுமானால் ஆறுகளின் ஆழம் 2 முதல் 4 மீட்டர் வரையும், அகலம் 45 முதல் 60 மீட்டர் வரையும் இருக்க வேண்டும். கங்கை உட்பட இந்தியாவின் மிகப்பெரிய நதிகள் எதுவும் இந்த அளவுக்கு ஆழம் கொண்டவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆறுகளை மேலும் வெட்டி, தூர்வாரினால் மட்டுமே ஆற்றின் ஆழத்தை ஏற்படுத்த முடியும். 
தூர்வாருதல் மூலமாக ஆற்றுப் படுக்கைகளின் தன்மை மாறிவிடும். அதனால் ஆற்றில் வசிக்கும் உயிரினங்கள் அதிகமான பாதிப்புகளுக்குள்ளாகும். தண்ணீரைக் கலக்கிவிட்டால் உள்ளே இருக்கும் விஷத்தன்மை கொண்ட நச்சுகள் வெளியே வரும். இந்த முனையம் அமைவதால் ஆறு எப்போதும் தூர்வாரப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஓடும் நதியானது வண்டல் மண்ணைக் கொண்டு வந்து ஆற்றின் அடிப்பகுதியில் படியவைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம்.

கப்பல்களிலிருந்து வெளியேறும் எண்ணெய், மசகு எண்ணெய், கப்பல் போக்குவரத்தால் ஏற்படும் ஒலி மாசு, தண்ணீரில் ஏற்படும் கலக்கம் என எல்லாமும் ஆறுகளில் வாழும் தாவரங்களையும் விலங்குகளையும் நிச்சயமாகப் பாதிக்கும். இப்போது அறிவித்திருக்கும் கங்கை நதி நீர்வழிச் சாலையில், நன்னீர் டால்பின்கள் 90 சதவிகிதம் வாழ்கின்றன என்கிறார், இந்தியாவின் தேசிய நீர் வாழ் விலங்கினமான டால்பின்கள் ஆராய்ச்சியாளர் கெல்கர். பீஹார் மாநிலத்தில் சுமார் 1,200 முதல் 1,500 டால்பின்கள் தூர்வாருதலாலும், கப்பல் போக்குவரத்தாலும் அதிகம் பாதிக்கப்படும்" என்கிறார். இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், ஆறுகளைச் சீர்கேட்டுக்கு உள்ளாக்கும் இதைப் போன்ற திட்டங்களுக்குச் சட்ட ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அனுமதித்ததன் மூலம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தன் பொறுப்பைத் தவற விட்டிருக்கிறது. 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006-ன் படி நாட்டின் சுற்றுச்சூழல் அனுமதி முறைமையில் `நீர்வழிகள்' அந்தப் பட்டியலில் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் எண் 7 (இ) பிரிவு படி 'துறைமுகங்கள், கடல் அலை தடுப்புகள், தூர்வாருதல்' ஆகியவை அடங்கும். 2016-ம் ஆண்டு கோவா, நீர் வழித்திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதியை எண் 7 (இ) படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் கங்கை நீர்வழிச் சாலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைதி காத்துக் கொண்டிருக்கிறது. 

இதுபற்றிப் பேசிய பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் சுந்தர்ராஜன், ``பிரதமர் மோடியின் உள்நாட்டு நீர்வழிச் சாலை திட்டம் கங்கை நதிக்கு அதிகமான கெடுதலைதான் கொண்டுவரும். நீர்வழிச் சாலை திட்டம் ஏற்கெனவே மோசமாகவுள்ள ஆற்றின் சூழல் அமைப்புகளை மேலும் மோசமாக்கும். அரசு சட்டப்படி செய்யவேண்டிய ஆய்வுகள் எதையும் செய்யாமல், சட்டத்தை வளைத்து திட்டங்களை நிறைவேற்றுகிறது. மத்தியில் ஆளும் அரசுக்கு, எதைப் பற்றியும் கவலைகள் கிடையாது என்பதை இதன் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம். சட்டரீதியாக உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் திட்டத்தை அனுமதித்திருப்பது கங்கை நதியை உயிருள்ள நதியாக ஓட வைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிரானது" என்றார்.