Published:Updated:

``யாருமே வரலை; நிவாரணத்தை வெச்சு ஒரு மரத்தைக்கூட அப்புறப்படுத்த முடியாத நிலைமை!" - டெல்டா மக்கள் வேதனை

``யாருமே வரலை; நிவாரணத்தை வெச்சு ஒரு மரத்தைக்கூட அப்புறப்படுத்த முடியாத நிலைமை!" - டெல்டா மக்கள் வேதனை
``யாருமே வரலை; நிவாரணத்தை வெச்சு ஒரு மரத்தைக்கூட அப்புறப்படுத்த முடியாத நிலைமை!" - டெல்டா மக்கள் வேதனை

`புயல்' எப்போதுமே டெல்டா மாவட்டங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் ஓர் வார்த்தை. 'புயலா அது எப்போதும் போல வரும்ங்க. மழையும் காத்துமா சுழட்டி சுழட்டி அடிக்கு. அப்புறம் ரெண்டு மூணு நாள்ல குறைஞ்சிடும். அம்புட்டுத்தான்' என்று சுறுக்கென முடித்துவிடும் நிலைமை 2018-ம் ஆண்டு 'கஜா' புயலில் இல்லை. கஜாவினால் டெல்டா மாவட்டங்களே உருக்குலைந்து போய் இருக்கின்றன. எஜமான்களாக வாழ்ந்து வந்த மக்கள் இன்றைக்கு அன்றாட பிழைப்புக்கே தள்ளாடும் நிலைமை. அதென்ன, 'எஜமான்கள்' எனக் கேள்வி எழலாம். ஆம், எஜமானர்கள்தாம். வெளியூரில் வேலை பார்க்கும் பிள்ளைகளை பொருளாதாரத்துக்காக சற்றும் எதிர்பாராமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள். அவை அனைத்துக்கும் காரணம் அவர்கள் பிள்ளைகளைப் போல் வளர்த்த மரங்களே. 

'மகள் பிறந்தப்போ இந்த மரத்தை நட்டு வெச்சோம். இப்போ ரெண்டு பேருக்கும் வயசு 23. வீட்ல இருக்குற தேக்கு மரங்களை வெட்டி வித்துக் காசாக்கித்தான் இவ கல்யாணத்தை நடத்தணும்' என்று வெறும் கனவாகிப்போன கதைகள் ஏராளமாக கஜாவுக்குள் ஒளிந்திருக்கின்றன. 'மரம்தானே அதை மீண்டும் நட்டு வைக்கலாம். டோன்ட் வொரி' என்று ஜஸ்ட் லைக் தட்டாக கடந்து வருபவர்களும் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை சிட்டி கார்ப்பரேட் கல்ச்சரில் வாழும் பலருக்கு எப்படி புரியும்?.

மரம் அவர்களது வாழ்வாதாரம், பூர்வீக சொத்து, ஆயுளுக்குமான சொந்தம். இப்படி சேர்த்து வெச்ச சொந்தத்தை அடியோடு குழிக்குள் இறக்கி வைக்கும் நிலைமையும், ஆசை ஆசையாய் பார்த்து வளர்த்த மரப்பிள்ளைகளும் இனி அவர்களுடன் இல்லை. 'ஒரு வாய் சோற்றுக்கு என்ன செய்வோம்' என்ற மனநிலையே இவர்களை மீண்டு வரமுடியாத நிலைக்குத் தள்ளிவிடும் போல் இருக்கிறது. இனி மரப்பிள்ளைகளை உருவாக்க குறைந்தது 20 வருடமாவது ஆகும். 

இந்த நிலை குறித்து தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளம்பரிதி என்பவர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். ``இன்னியோட 6 நாளாச்சு. அரசாங்கம் சார்புல யாரும் வரல. விழுந்த மரங்களை என்ன செய்றது, மின் இணைப்பு எப்போ சீர் செய்றது, மக்களுக்குத் தண்ணி வசதி எப்படினு இப்போ வரைக்கும் யாருமே எங்ககிட்ட பேசல. சாலை போக்குவரத்தை மட்டும் சரி செய்றதுக்கு JCB அனுப்பி வெச்சாங்க. அவ்வளவுதான். 

அவங்கவங்க வீட்ல விழுந்த மரங்கள அவங்களே சுத்தம் செய்யத் தொடங்கிட்டாங்க. இவங்க கொடுக்கப்போற நிவாரணத்தவெச்சு ஒரு மரத்த கூட அறுத்து அப்புறப்படுத்த முடியாதுங்கிறதுதான் இங்க இருக்குற நிலைமை. தண்ணியை மக்களே ஜெனரேட்டர் வெச்சு எடுத்துக்கிறாங்க. இதெல்லாம் தற்காலிகத் தீர்வுதான். மின் இணைப்பு சீராகுறதுக்கு குறைந்தது 20 நாள் ஆகலாம்னு சொல்றாங்க. அதுவரைக்கும் இருட்டுல எப்படி வாழப்போறோம்னு தெரில. மெழுகுவத்தி விலையெல்லாம் பத்து மடங்கு அதிகமாகியிருக்கு.

எங்க வீட்ல இருந்த மூணுல ரெண்டு பங்கு மரங்கள் விழுந்திடுச்சு. நிக்கிற மரத்துலயும் இனி காய்க்க வாய்ப்பில்ல. பிழைப்பு இதை நம்பித்தான் இருக்கு. மக்களுக்கு ஒவ்வொரு மரமும் உயிர்தான். எங்க பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதி, ஆத்துநீர் பாசனம் செய்ய முடியாத உட்பகுதி எல்லாமே நெல் சாகுபடிய விட்டு தென்னை வளர்ப்புக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கும் மேல ஆகுது. 90-களின் பிற்பகுதியில ஆரம்பிச்ச இந்த தென்னை விவசாயம்தான் பட்டுக்கோட்டை, பேராவூரணி மக்களுக்கு சோறு போட்டுச்சு. 

இப்போ இங்க மக்களோட கவலை எல்லாம் இனி என்ன பண்ணப்போறோம்ங்கிறதுதான். எல்லாமே 10-15 வருட உழைப்பு. வேறெதாச்சும் பயிர்னா மறுசாகுபடி பண்ணி உடனே விளைச்சல் பார்த்துடலாம். ஆனா, தென்ன மரத்துக்கு அது சாத்தியப்படாது. இப்போ இருக்குற நீர்வளத்துல விளைச்சலுக்கு 15 வருஷம் ஆகலாம். இப்போ, நாங்க வளர்த்த புள்ள எல்லாம் வேரொட சாஞ்சு நிக்கிது. நிறைய பேரோட வாழ்க்கையும்தான்’’ என்று வருந்தினார்.

இப்படி கால்நடைகளையும் மரங்களையும் இழந்து வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி நிற்கும் மக்களை சம்பந்தப்பட்டவர்கள் எப்போது கவனிப்பார்கள்?. 'சோழநாடு சோறுடைத்து' எனுமளவுக்கு செல்வம் ஏந்திய பூமி, தற்போது ஒருவாய் சோற்றுக்கு கையேந்தி நிற்கிறது.