Published:Updated:

"சரிந்த தென்னை மரங்களை மீண்டும் நடுவது சரியா?!" - விளக்கும் பேராசிரியர்

விழுந்த தென்னை மரங்களை மீண்டும் நடலாம் என நிறைய வாட்ஸ் அப் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எது எந்தளவு உண்மை?

"சரிந்த தென்னை மரங்களை மீண்டும் நடுவது சரியா?!" - விளக்கும் பேராசிரியர்
"சரிந்த தென்னை மரங்களை மீண்டும் நடுவது சரியா?!" - விளக்கும் பேராசிரியர்

ஜா புயல், டெல்டா மாவட்டங்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. இதில் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் என சரமாரியாக எல்லா இடங்களும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. டெல்டா பகுதியில் உள்ள பெரும்பான்மையான மரங்கள் சாய்ந்து விழுந்து கிடக்கின்றன. விவசாயிகள் நடுரோட்டில் தவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அம்மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கஜா புயலால் மண்ணில் வீழ்ந்து கிடக்கின்றன. 

இந்நிலையில், தென்னை மரங்கள் குறித்து வாட்ஸ்அப் குழுக்களில் சில தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. ஒரு பகுதியினர், தென்னை மரங்களை மீண்டும் நடுவதன் மூலம் தென்னையை உயிர்ப்பிக்க முடியும். சாய்ந்த எல்லா மரங்களையும் நம்மால் மீட்டுக் கொண்டுவர முடியும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே சூழலில் இன்னொரு சாரர், தென்னை மரத்தை மீண்டும் நட்டுக் காத்திருந்தால், அது பழைய பலனைத் தராது எனும் ரீதியில் மாற்றுக் கருத்தையும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் பெற, அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல் துறை உதவிப் பேராசிரியர் பாபு அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

``பாதிப்படைந்த தென்னை மரங்களை மீண்டும் நடுதல் சாத்தியமா?"

``மரத்தின் வயது, தன்மை (பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்), வேர்ப் பாதிப்பைப் பொறுத்து சாத்தியமாக்கலாம். தென்னை மரத்தின் வேர் சல்லிவேர். எவ்வளவு பெரிய தென்னை மரமாக இருந்தாலும், அதிகபட்சம் 3 மீ வரையே வேரைக் கொண்டிருக்கும். சாய்ந்த மரங்களை அதன் வேரோடு மீண்டும் குழிகளில் நட்டு வைக்கமுடியும்."

``மீண்டும் நடப்போகிற தென்னை மரங்களில் செய்யவேண்டியது என்ன?"

``விழுந்த எல்லா மரங்களிலும் 15-45 மட்டைகளைத் தேவையின் பொருட்டு தென்னை விவசாயிகள் வைத்திருப்பார்கள். இதில் நுனிக் குருத்து இரு மட்டைகள் மட்டும் வைத்துக் கொண்டு, ஏனைய மட்டைகளைக் கழித்து விட வேண்டும். "

``புதிய குழிகள் அமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?"

3 மீ நீளம், 3 மீ அகலம், 3 மீ ஆழம் அளவுள்ள புதிய குழியைத் தோண்ட வேண்டும். இப்புதிய குழியில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க காப்பர் ஆக்சி குளோரைடு வேதிப்பொருளை 1 லிட்டர் தண்ணிக்கு 3 மி.லி அல்லது 3 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இயற்கை முறையில் நட விரும்புபவர்கள் சூடோமோனாஸ் பயன்படுத்தலாம். ஒரு குழிக்கு 200 கிராம் சூடோமோனாஸ், 5 கிலோ மக்கிய மாட்டுச் சாணத்துடன் கலந்து தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் ஐந்து நாள்கள் நிழலில் வைத்துப் பின்னர் பயன்படுத்த வேண்டும். இந்த ஐந்து நாள்களில் சூடோமோனாஸ் பல்கிப் பெருகிவிடும். இதைக் குழியில் போட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இயற்கைப் பூஞ்சாணம் மண்ணில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தால் அதைச் சரிசெய்து விடும். தற்போது வாட்ஸ்அப்களில் பரவி வரும் தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.  

குழி, தயாரான பின்னர், சாய்ந்த தென்னை மரங்களை எடுத்து நட வேண்டும். குழியில் பாதியளவு மண்ணை நிரப்பிய பின்னர், ஹியூமிக் அமிலத்தை (கரிமருந்து) அரை கிலோ அளவுக்கு அடிமரத்தைச் சுற்றித் தூவி விடவேண்டும். பின் மீண்டும் குழி முழுவதும் மண்ணை நிரப்ப வேண்டும். பெரிய தென்னை மரத்தைத் தாங்கிப் பிடிக்குமளவு தூக்கி நட்டிருப்பதை உறுதி செய்யவேண்டும்.

``தென்னை மரத்தைத் தாங்கிப் பிடிக்க ஏதேனும் செய்ய வேண்டுமா?"

``மண்ணின் தன்மையைப் பொறுத்து, மரத்துக்கு முட்டுக் கொடுத்து கழிகளை ஊன்றலாம். மேலும் காற்று அடிக்கலாம், என்பதால் அடுத்த மூன்று மாதங்களுக்கு வேருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாதவாறு முட்டுக் கொடுக்கலாம்."

``நட்டு வைத்த தென்னை மரம் பிழைத்துக் கொண்டது என்பதை எப்படி அறிய முடியும்?"

``40-45 நாள்களில் தென்னை மரத்தின் மேலே துளிர் எடுக்க ஆரம்பிக்கும். அப்போதுதான் பிழைத்துக் கொண்டதை அறிய முடியும். அப்படி வந்துவிட்டால் மண்ணுக்கடியில் புதிதாக 20-25 புதிய வேர்கள் இறங்கியிருக்கிறது என்று அர்த்தம்."

``எல்லா தென்னை மரங்களுக்கும் இது சாத்தியமா? எந்தத் தென்னை மரங்களை மீண்டும் நட்டு வைக்க முடியாது?"

``ஐந்து வருடத்துக்கும் உட்பட்ட மரங்கள் எப்படிப் பாதிப்படைந்திருந்தாலும், இருபது சதவிகிதம்தான் வேர் நன்றாக இருக்கிறது என்றாலும் தாராளமாகக் காப்பற்ற முடியும். ஐந்து வருடத்துக்கு மேற்பட்ட மரம் எனில், வேர் 50 சதவிகிதத்திற்கு மேல் பாதிப்படைந்த மரங்களைக் காப்பாற்ற முடியாது. தென்னை மரத்தின் தண்டுப் பகுதியில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ, தண்டுப் பகுதியில் சிவப்புக் கூன் வண்டுத் தாக்குதலினால் ஏற்படும் சிவப்பு நிறம் ஒழுகி இருந்தாலோ, அம்மரங்கள் மீண்டும் வளர வாய்ப்பில்லை.

``பாதிப்படைந்த தென்னை மரங்கள் Vs புதிய தென்னங்கன்றுகள் எவை பொருளாதார ரீதியில் இலாபகரமானதாக இருக்கும்?"

``நெட்டைக் குட்டை நம்முடைய பாரம்பர்ய ரகம், அது 40-45 ஆண்டுகள் மகசூல் கொடுக்கும். இப்போதுள்ளவை குட்டை நெட்டை ரகம். இவை நான்கு வருடங்களில் காய்ப்புக்கு வந்து, 20-25 வருடங்களில் காய்ப்பு முடிந்துவிடும். இதை முதன்மையாகக் கொண்டு ஒரு தோப்பில் 50 சதவிகித மரங்கள்தான் விழுந்திருக்கிறது என்றால், விழுந்த மரங்களை மீண்டும் நட்டு அவற்றின் காய்ப்புக் காலம் வரை பாதுகாக்கலாம். ஆனால், 50 சதவிகிதத்திற்கு மேல் பாதிப்படைந்திருக்கிறது என்று சொன்னால், புதிதாக தென்னைகளை ஊன்றுவதே சரியானதாக இருக்கும்."

``பெரிய தென்னை மரங்கள் அருகே புதிய தென்னங்கன்றுகள் வளர்த்தால் சந்திக்க வேண்டிய சவால்கள் என்னென்ன?"

``புதிய தென்னங்கன்றுகளின் சூரிய ஒளித்தேவை, எண்ணிக்கை பராமரிப்பு, வயது மாறிப்போய் விடும், ஒன்று காய்ப்புக்கு வரும், மற்றொன்று காய்ப்புக்கு வராது, இது நிறைந்த மகசூல் தரும் பயிர் என்பதால், பயிர் எண்ணிக்கை மிகவும் முக்கியமானதாகும். தானே புயலின் போது, கடலூரில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் பெரும்பாலும் காய்ப்புகளற்றுப் போய்விட்டது. நான் கூட தென்னை விவசாயி தான். 463 தென்னை மரங்கள் தானே புயலில் பாதிக்கப்பட்டிருந்தது. மீண்டும் நடுகையில் குட்டை நெட்டை பலனளிக்கவில்லை. நெட்டைக் குட்டை ரகம்  இயல்புக்கு வரவே இரண்டாண்டுகள் எடுத்துக் கொண்டது. ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், புயல் பாதிப்புக்குள்ளான பின், ஜேசிபி, ட்ராக்டர், ஆட்கள், இவற்றின் கூலியைக் கணக்கிட்டுப் பார்க்கையில் பழைய தென்னைகளை மீண்டும் நட்டு, பாதுகாத்து வளர்ப்பதை விட புதிய தென்னங்கன்றுகளைப் பயிரிடுவதே சிறந்தது."