Published:Updated:

``புவி வெப்பமயமாதல் குறித்து முதலில் கவலைப்பட வேண்டியது அவர்களே!" - பேராசிரியர் ஜெயராமன்

தற்போது அமெரிக்கா மட்டுமே பாரீஸ் ஒப்பந்தத்தில் இணையாமல் தனித்து நிற்கிறது. இதில் மிக முக்கியப் பங்கு வகிக்க வேண்டிய அமெரிக்கா இதிலிருந்து விலகி நிற்பது காலத்தின் முரண்தான்.

``புவி வெப்பமயமாதல் குறித்து முதலில் கவலைப்பட வேண்டியது அவர்களே!" - பேராசிரியர் ஜெயராமன்
``புவி வெப்பமயமாதல் குறித்து முதலில் கவலைப்பட வேண்டியது அவர்களே!" - பேராசிரியர் ஜெயராமன்

மிழ்நாடு அறிவியல் இயக்கம், பருவநிலை மாற்றம் தொடர்பான ஐபிசிசி அறிக்கை பற்றிய கருத்தரங்கம் ஒன்றினை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அதில், மும்பை டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தின் ஹேபிடட் ஸ்டடீஸ் துறையின் பேராசிரியர் ஜெயராமன் அந்த அறிக்கை குறித்தும், உலக நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் உரையாற்றினார். 

ஐபிசிசி அமைப்பு 1988-ம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தற்போது வரை ஐந்து முழு அறிக்கைகளையும் அவ்வப்போது சில சிறப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் அனைத்து உலக நாடுகளும் கலந்துகொண்டு உலகவெப்பத்தை 2ºC (செல்சியஸிற்கு) அதிகமாகாமல் 1.5ºC என்கிற அளவிலேயே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். அதே மாநாட்டில், ஐபிசிசி அமைப்பு 2018-ம் ஆண்டு 1.5ºC என்பதைப் பற்றி ஓர் அறிக்கை அளிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தனர். இதன் அடிப்படையிலேயே இந்தச் சிறப்பு அறிக்கை வந்திருக்கிறது.

பேராசிரியர் ஜெயராமன் பேசுகையில், ``ஐபிசிசி-யின் சிறப்பு அறிக்கை உலகத்தின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் எதிர்காலத்திலும் தாக்கம் செலுத்தக்கூடியதாக அமைந்துள்ளது. காலநிலை மாற்றம் என்கிற பதமே சற்றுச் சிக்கலானது. இந்தப் பிரச்னையில் அறிவியலுக்கும் அரசியலுக்கும் இடையே தொடர்பு உள்ளது. காலநிலை மாற்றம் என்பது ஒரு விதத்தில் நன்மையாகவும் இருக்கலாம்; தீமையாகவும் இருக்கலாம். அமெரிக்க தத்துவவியலாளர் நோம் சாம்ஸ்கி கூறியதைப் போல உலகுக்கு இரண்டு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருந்தன. அவை அணு ஆயுதமும், புவி வெப்பமடைவதும்தான். இதில் ஒன்று கண்முன்னே இருந்தது; மற்றொன்று உருவாகிக் கொண்டிருந்தது. இரண்டுமே உலகிலிருந்து மனிதக் குலத்தையே மொத்தமாகத் துடைத்தெறிவதற்கான சாத்தியங்களைக் கொண்டது. புவி வெப்பமடைவது என்பது ``பசுமை இல்ல விளைவினால்” Green House Effect (கார்பன் டை ஆக்ஸைடு உட்பட பசுமை இல்ல வாயுக்கள் என வரையறுக்கப்பட்டுள்ளவை வெளியேறுவதனால் ஏற்படக்கூடிய மாசு) ஏற்படக்கூடியது.

இங்குப் பரவலாகக் கூறப்படுவதைப் போல பசுமை இல்ல வாயுக்கள், புவி வெப்பமடைதல் ஆகியவற்றுக்கும் ஓசோன் படலத்துக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அதுபோலவே பூகம்பம் மற்றும் சுனாமிக்கும் புவி வெப்பமடைவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எரிமலை வெடிப்பு கூட ஒரு விதத்தில் புவிவெப்பமயமாதலுக்குச் சாதகமான விஷயம்தான். மிகப்பெரிய அளவில் எரிமலை வெடிப்பு நிகழ்கிற போது உலக அளவில் கார்பன் ஈர்ப்பில் அதன் தாக்கங்களை உணர முடிகிறது. நிலங்களைப் பயன்படுத்துவதில் அதிக அளவில் ஏற்படுகிற மாற்றத்தினால் கார்பன் ஈர்ப்பு ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு புவி வெப்பமடைகிறது.

இங்கு விவாதம் எல்லாம் எவ்வளவு கார்பனை நாம் வெளியிட முடியும் என்பதைச் சுற்றியதாகவே இருக்கிறது. உலகத்தில் மனிதனின் இருப்புக்கு கார்பனும் அவசியமாகிறது. செவ்வாய் கிரகத்தில் கார்பன் இல்லாததால்தான் வெப்பத்தை தன்னிடத்தில் தக்க வைக்கமுடியாமல் வெளியேற்றிவிடுகிறது. ஆனால், வீனஸ் கிரகத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட வெப்பம் அதிகமாக உள்ளது. இதற்கு அங்கு நடைபெறுகிற பசுமை இல்ல விளைவுகள்தான் காரணம். எனவே கார்பன் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

புவி வெப்பமயமாதல் என்பது தொழில் புரட்சி தொடங்கிய 1870-கள் தொடங்கி தற்போது வரை அதிகரித்துள்ள வெப்ப அளவைக் குறிக்கிறது. ஐ.நாவில் ஒவ்வொரு நாடும் தன்னிச்சையாக முன்வந்து தாங்கள் கார்பன் வெளியீட்டைக் குறைத்து புவி வெப்பமயமாதலைத் தடுக்க மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பைப் பற்றி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பர். அவ்வாறு ஒவ்வொரு நாடும் குறிப்பிட்டுள்ள அளவுகளில் கட்டுப்படுத்துவதாக வைத்துக் கொண்டாலுமே 2030-களில் புவி வெப்பம் என்பது 1.5 ºC என்கிற அளவைத் தாண்டிவிடும். எனவே தற்போதைய சூழலில் 1.5ºC அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சாத்தியமற்றதாகிவிட்டது. 2.0º C அளவுக்குள் கட்டுப்படுத்துவதே மிகவும் கடினமானதாக தெரிகிறது. தற்போது உலக மக்கள் தொகையில் 11% மட்டுமே கொண்ட அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும்தான் 41% அளவுக்கான கார்பனை வெளியிட்டுள்ளது. வெறும் ஆறு சதவிகிதம் மக்கள் தொகை கொண்ட ஜப்பான் உள்ளிட்ட மற்ற உலக நாடுகள் 17% கார்பனை வெளியிடுகின்றன. சீனா மட்டுமே 15% அளவிலான கார்பனை வெளியிடுகிறது. இவை அனைத்தும் போக 64% உலக மக்கள் தொகை கொண்ட இந்தியா உள்ளிட்ட மற்ற வளர்கின்ற நாடுகள் வெளியிடுவது வெறும் 27% அளவிலான கார்பன் மட்டுமே.

ஐபிசிசி என்பது 192 உலக அரசாங்கங்கள் இணைந்து தங்களுக்கு உள்ளாக உருவாக்கிக் கொண்டவை. அதன் தலைமையும் அவ்வாறே தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஐபிசிசி வெளியிடுகிற நான்கு கட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு அனைத்து நாட்டு அரசாங்கங்களும் ஒப்புக் கொண்ட பிறகே வெளியிடப்படுகிறது.

இந்த அறிக்கையில் உள்ள மற்றுமொரு சிக்கல் என்னவென்றால் சுற்றுச்சூழலில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள கார்பனை உறிஞ்சுவதற்கான செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதுதான். ஆனால் அத்தகைய பிரமாண்டமான தொழில்நுட்பத்துக்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் புவி வெப்பமடைவதால் ஏற்படும் கடல்மட்ட உயர்வினால் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று 1.5º C அளவில் ஏற்படுகிற கடல்மட்ட உயர்வினால் உலகம் முழுவதும் 69 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதுவே 2.0º C என்கிற அளவில் இருந்தால் 79 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது. அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகத் தீவிரமான இயற்கைச் சீற்றங்களைப் பொறுத்தவரையில் 1.5º C மற்றும் 2.0º C இரண்டிற்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது. எனவே 1.5º C என்கிற அளவுக்குள் புவி வெப்பத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். இதன்மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ளனர்.

புவி வெப்பத்தைக் குறைப்பது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரச்னை கிடையாது.  உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய பிரச்னை. இதில் இந்தியாவின் பங்கு என்பது மிகவும் குறைவு. புவி வெப்பமயமாவதைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் பங்கு என்பது மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தான் ஒப்புக்கொண்ட பல்வேறு விஷயங்களையும் முழுமையாக நிறைவேற்றும் நிலையில் உள்ளது. புவி வெப்பமயமாதல் பிரச்னையைத் தீர்க்கமாக அணுகுவதற்கு வளர்ந்த நாடுகளில் வலுவான தலைமை வேண்டும். இதில் வளர்ந்த மேற்குலக நாடுகள்தான் முதல் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் வரலாற்றில் ஒருபோதும் அவ்வாறு நிகழ்ந்ததில்லை” என்றார்.

2015-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தான போது நிகரகுவா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் மட்டுமே அதில் அதிகாரபூர்வமாக இணையாமல் இருந்தன. அவையும் பின்னர் இணைந்துவிட்டன. டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். தற்போது அமெரிக்கா மட்டுமே பாரிஸ் ஒப்பந்தத்தில் இணையாமல் தனித்து நிற்கிறது. இதில் மிக முக்கியப் பங்கு வகிக்க வேண்டிய அமெரிக்கா இதிலிருந்து விலகி நிற்பதுதான் காலத்தின் முரண்.