Published:Updated:

மெரினாவில் கரை ஒதுங்கிய அரியவகை உயிரினம்... என்ன காரணம்?

ப்ளூ பட்டன், நீரோட்டத்திலேயே அமைதியாக நீந்திச் செல்லக்கூடியவை. ஜெல்லி மீன்களைப்போல் கடல் ஆழங்களுக்கு இவற்றால் செல்லமுடியாது. கடலின் மேற்பரப்புக்குச் சிறிது கீழே வாழும் உயிரினங்களை உண்டு வாழ்பவை.

மெரினாவில் கரை ஒதுங்கிய அரியவகை உயிரினம்... என்ன காரணம்?
மெரினாவில் கரை ஒதுங்கிய அரியவகை உயிரினம்... என்ன காரணம்?

நேற்று காலை திடீரென வட்டவடிவம் கொண்ட கடல்வாழ் உயிரினங்கள் சென்னை மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கின. அவை என்னவென்று பலருக்கும் குழப்பம் நிலவியது. இந்தக் கடல்வாழ் உயிரினம் பார்ப்பதற்கு ஜெல்லி மீனைப் போலவே இருக்கலாம். ஆனால் இது ஜெல்லி மீன் வகையைச் சேர்ந்ததல்ல. ஆங்கிலத்தில் ப்ளூ பட்டன் ஜெல்லி மீன் (Blue button jelly fish) என்று அதன் உருவ அமைப்பைக் கொண்டு அழைக்கப்பட்டாலும் அது ஜெல்லி குடும்பத்தைச் சேர்ந்ததல்ல. கான்ட்ரோஃபோர் (Chondrophore) என்றழைக்கப்படும் பாலிப்ஸ் என்ற உயிரின வகையைச் சேர்ந்தது. 

ப்ளூ பட்டன் கடலின் மேற்பரப்பில் வாழக்கூடியது. வட்டமான உடல் பகுதியைச் சுற்றி கிளைகளாகப் பிரிந்த ஹைட்ராய்டு என்ற உடற்பகுதி வளர்ந்திருக்கும். அதைப் பயன்படுத்தி நீந்தக்கூடியது. அதிகபட்சம் மூன்று இன்ச் விட்டம்வரை வளரக்கூடியது வளரக்கூடியது. அதைச்சுற்றியுள்ள கிளைப் பிரிவுகள் ஜெல்லி மீன்களிலுள்ள நகரிழைகளைப் (Tentacles) போலவே இருப்பதால் அப்படியே அழைக்கப்படுகின்றன. இவையும் ஜெல்லி மீன்களைப் போலவே மேலே பட்டால் அரிப்பேற்படுத்தும் விஷத்தன்மை கொண்டதுதான். ஆனால், அவற்றின் விஷம் மனிதர்களைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு வீரியம் மிக்கதில்லை. ஆகவே இவற்றால் மனிதர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. 

ப்ளூ பட்டன் நீரோட்டத்திலேயே அமைதியாக நீந்திச் செல்லக்கூடியவை. ஜெல்லி மீன்களைப்போல் கடல் ஆழங்களுக்கு இவற்றால் செல்லமுடியாது. கடலின் மேற்பரப்புக்குச் சிறிது கீழே வாழும் உயிரினங்களை உண்டு வாழ்பவை. அதில் முக்கியமாக, முகட்டுப்பூச்சிகள் (Copepods), மேல் ஓட்டுக் கணுக்காலிகலின் லார்வாக்களை (Crustacean Larvae) உண்ணும். கடல் நத்தைகள், கடல் அட்டைகளால் அதிகமாக உண்ணப்படும் இவை கடல்வாழ் உயிரினங்களில் உணவுச்சங்கிலி வகைகளில் ஒன்றான நியூஸ்டான் (Neuston) என்ற உணவுச்சங்கிலியில் முக்கியமானது. அதன் உடலின் தட்டைப்பகுதிக்கு அடியில் அமைந்திருக்கும் வாய் வழியாகத்தான் சாப்பிடுவது, கழிவுகளை வெளியேற்றுவது என்று இரண்டையுமே செய்யும். அதுமட்டுமின்றி இவை இருபால் உயிரின வகையைச் சேர்ந்தவை. ஆண், பெண் இரண்டுக்கும் உரிய பாலுறுப்புகளும் ஒன்றிலேயே காணப்படும். அதனால், ஒரு ப்ளூ பட்டன் ஜெல்லி மீனால் இன்னொன்றின் உதவியில்லாமலே இனப்பெருக்கம் செய்துகொள்ள முடியும்.

செப்டம்பர் மாதம் அமெரிக்க கடற்கரையோரங்களைத் தாக்கிய ஃப்ளோரன்ஸ் புயல் பல சேதங்களை விளைவித்தது. அதற்கு அடுத்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் இரண்டாம் தேதி நியூ ஜெர்ஸி கடற்கரைகளில் இந்த ப்ளூ பட்டன் ஜெல்லிக்கள் ஆயிரக்கணக்கில் கரை ஒதுங்கின. சூசன் ஸ்கென்கெர் என்பவர் எடுத்த ஒளிப்படங்களின் மூலம் இது கரையொதுங்கியது வெளியுலகுக்குத் தெரியவந்தது. அதைப்பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள அவர் நியூ ஜெர்ஸி கடல்வாழ் உயிரின ஆய்வாளர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் தன் ஒளிப்படங்களைப் பகிர்ந்தார். அதைப்பார்த்த உயிரியலாளர் பால் பொலோக்னா (Paul Bologna), "இந்த வகை ஜெல்லி மீன்கள் பொதுவாக நம் நாட்டில் ஃப்ளோரிடா மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுவகின்றன. அநேகமாக ஃப்ளோரன்ஸ் புயல் இவற்றை அடித்துக்கொண்டு வந்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

இவை அதிகமாகப் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படுகின்றன. இந்த வகை மீன்களை நியூ ஜெர்ஸி கடற்கரையில் பார்த்தது அதுவே முதன்முறை என்று பொலோக்னா குறிப்பிட்டிருந்தார். 

நேற்றும் அதே வகையைச் சேர்ந்த ப்ளூ பட்டன் ஜெல்லி மீன்கள் சென்னை மெரினா கடற்கரையில் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கின. ஒவ்வொன்றும் அரை சென்டிமீட்டர் விட்டத்திலிருந்து அதிகபட்சம் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவே கொண்டிருந்தன. பெரும்பாலானவை காக்கைகளுக்கும் புறாக்களுக்கு உணவாகிவிட்டன என்றாலும் அவை இப்படிக் கரை ஒதுங்கியதன் காரணம் என்னவென்று புரியவில்லை. தற்போது கஜா புயலின் தாக்கத்தால் தமிழகமே தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் இவை கரை ஒதுங்கியிருக்கிறது. நியூ ஜெர்ஸியில் ஃப்ளோரன்ஸ் புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கியதைப் போலவே, இங்கும் கஜா புயலால் கடலின் நீரோட்ட வேகம் அதிகமாகி அதன் காரணமாக இவை அடித்துக்கொண்டு வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம், எண்ணூர் துறைமுகத்தில் கப்பலிலிருந்து இறக்கும்போது கச்சா எண்ணெய் கசிந்து நான்கு நாட்களாகியுள்ள நிலையில் அதன் தாக்கத்தால்கூட இவை இறந்து கரை ஒதுங்கியிருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகிறது.

இவற்றைத் தொடர்ந்து இந்த வகை உயிரினங்கள் கரையொதுங்கியதன் காரணத்தை இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் கடலியல் துறை ஆராய்ச்சியாளர் முனைவர். பத்மநாபன் என்பவரைத் தொடர்புகொண்டு கேட்டோம், "தற்போது ஏற்பட்டுள்ள புயல், காற்றின் வேகத்தை அதிகமாக்கியுள்ளது. அதனால் கடலின் நீரோட்ட வேகமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத்தான் இவை கரை ஒதுங்கியுள்ளன. இந்த மாதிரி அளவில் சிறிய கடல்வாழ் உயிரினங்கள் புயல் போன்ற காலநிலையின்போது கரை ஒதுங்குவது சாதாரண விஷயம்தான். இப்போது கரை ஒதுங்கியுள்ள இவையனைத்தும் குட்டிகள். வளர்ந்த ப்ளூ பட்டன் மீன்கள் இவற்றைவிட ஓரிரு இன்ச் பெரியதாக இருக்கும் அவ்வளவே. கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும்போது இவற்றைப் போன்ற குட்டிகளால் அந்த வேகத்தில் தாக்குப்பிடித்து நீந்தமுடியாது. அதனால் அவை நீரோட்டப் பாதையிலேயே நீந்தும். அதனால், அலைகளின் வேகத்துக்கு அடித்து வரப்பட்டுக் கரையொதுங்கி உள்ளன. இது சாதாரண ஒன்றுதான். பயப்பட வேண்டியதில்லை" என்றார்.

கடல் சூழலியல் ஆய்வாளர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களிடம் இதுதொடர்பாகப் பேசினோம், "இவை கடலின் மேற்பரப்பிலேயே வாழக்கூடிய உயிரினம்தான். கடலின் நீரோட்டப் போக்கிலேயே நீந்தக்கூடியவை. மெரினாவில் கரை ஒதுங்கியவற்றின் புகைப்படங்களைப் பார்க்கும்போதே அவை இறந்து இரண்டு மூன்று நாட்களாகி இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. உடலின் மேற்பகுதியில் உள்ள குடைபோன்ற அமைப்பு சதைப்பற்று உடையதாக இருக்கும். இவற்றில் அப்படியில்லை" என்றவரிடம் இந்த வகையை இதற்குமுன் பார்த்ததுண்டா என்று கேட்டபோது, "இவை அதிகமாகவும் சாதாரணமாகவும் இந்தியாவின் மேற்குக் கடலோரங்களில் கரையொதுங்கும். அங்கு இவை சாதாரண விஷயம். கிழக்குக் கடற்கரைகளில் குறிப்பாகச் சென்னை கடற்கரைகளில் இந்த வகைகளை அதிகம் பார்த்ததில்லை. ஒருவேளை நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.