Published:Updated:

காவு வாங்க காத்திருக்கும் காட்டுத்தீ... தமிழக காடுகளின் பேரபாயம்! #Wildfire

இந்தியக் காடுகளில் 64% வனப்பகுதிகள் தீப்பற்றக்கூடியவை. தமிழகத்தின் காட்டுப்பகுதி மொத்தமுமே அந்த வகையைச் சேர்ந்தவைதாம். கோடைக்காலத்தில் சருகுகள் அதிகமாக இருப்பதால் விரைவாகப் பரவிவிட வாய்ப்புகள் அதிகம்.

காவு வாங்க காத்திருக்கும் காட்டுத்தீ... தமிழக காடுகளின் பேரபாயம்! #Wildfire
காவு வாங்க காத்திருக்கும் காட்டுத்தீ... தமிழக காடுகளின் பேரபாயம்! #Wildfire

லிஃபோர்னியா காட்டுத்தீ இரண்டு வாரங்களைக் கடந்து இன்னமும் எரிந்துகொண்டிருக்கிறது. 80க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் நிகழ்ந்துவிட்டன. லட்சக்கணக்கான ஏக்கர்கள் தீக்கிரையாகி நாசமடைந்துவிட்டன. காட்டுத்தீ என்பது உலகம் முழுவதும் அதிக அளவிலான காடுகளைக் கொண்ட நாடுகளில் ஒரு முக்கியப் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் காட்டுத்தீ எப்படி ஏற்படுகிறது? முற்றிலும் இயற்கையாகப் பற்றுவதுதான் காட்டுத்தீயா? அதைக் கட்டுப்படுத்த முடியுமா? காட்டுத்தீ என்றாலே அழிவு மட்டும்தானா? விரிவான அலசல் இங்கே.

னைமலை புலிகள் சரணாலயத்தின் எல்லைக்குட்பட்டது டாப்ஸ்லிப். 2016-ம் ஆண்டின் இறுதியில் அங்கு மிகப்பெரிய காட்டுத்தீ விபத்து ஏற்பட்டு, பல ஏக்கர் காடுகள் அழிந்தன. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது? நெருப்பு பிடித்ததற்கான காரணமென்ன? எதுவும் இதுவரை தெரியவில்லை. காட்டுத்தீ இயற்கையாக மட்டுமே நிகழ்வதில்லை. இயற்கைத் தூண்டுதல்களான மின்னல் வெட்டுதல், இடி விழுதல், கோடைக்காலக் காய்ந்த சருகுகளும், மரப்பட்டைகளும் உராய்ந்து புகைதல் போன்றவற்றால் ஏற்படும் காட்டுத்தீ வெறும் 10% சம்பவங்கள் மட்டுமே. மீதி 90% சம்பவங்கள் மனிதத் தலையீடுகளால், மனிதத் தூண்டுதல்களால், ஏன் மனிதர்களே பற்ற வைத்து விடுவதால் ஏற்படுகின்றன. அப்படி ஒன்றுதான் அங்கும் நடந்திருக்கிறது. நிச்சயம் அங்கு ஏற்பட்ட அந்தக் காட்டுத்தீ இயற்கையாக உருவானதில்லை. ஏனென்றால் அது ஏற்பட்ட சமயத்தில் இயற்கைத் தூண்டுதலுக்குத் தகுந்த எந்தச் சூழ்நிலையும் அங்கு வாய்த்திருக்கவில்லை. அதோடு, நெருப்பை அணைத்தபிறகு அங்கு மரங்கள் வெட்டப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் மூலமாகத் தெரியவந்தது.

இந்தியக் காடுகளில் 64% வனப்பகுதிகள் தீப்பற்றக்கூடியவை. தமிழகத்தின் காட்டுப்பகுதி மொத்தமுமே அந்த வகையைச் சேர்ந்தவைதாம். வனப்பகுதிக்கு அருகிலிருக்கும் விவசாய நிலங்களில் மண்ணைச் செழுமைப்படுத்த பயிர்களுக்கு நெருப்பு வைத்துவிடுவார்கள். எரிந்து சாம்பலாகும் தாவரங்களின் சத்துகள் மண்ணுக்கு உரமாக மாறி மீண்டும் விவசாயம் செய்ய நிலத்தைப் பதப்படுத்தும். அந்த நெருப்பு காற்றின் வேகத்தில் வனப்பகுதியிலும் பரவி காட்டுத்தீ ஏற்படலாம். காட்டுக்குள் மலையேற்றம் செல்பவர்கள் பலரும் உள்ளே புகைபிடித்துவிட்டு அணைக்காமல் போடும்போது அது புகைந்து கொண்டேயிருக்கும். கோடைக்காலத்தில் சருகுகள் அதிகமாக இருப்பதால் விரைவாகப் பரவிவிட வாய்ப்புகள் அதிகம். இதுவல்லாமல், காட்டுக்குள் ஊடுருவிச் செல்லும் சாலைகளில் பயணிக்கும் லாரி ஓட்டுநர்களில்  பெரும்பாலானோர் உணவகங்களைத் தேடி அலைவதில்லை. போகும் வழியில் எங்காவது நிறுத்தி உடன் கொண்டுவரும் கோதுமை மாவை அடுப்புமூட்டிச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள். அப்படிச் செய்துவிட்டுச் செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் மூட்டிய நெருப்பை முறையாக அணைக்காமல் சென்றுவிடுவதால் காட்டுத்தீ ஏற்படுகின்றது. இந்த மாதிரியான காரணங்களால் ஏற்படும் காட்டுத்தீ சம்பவத்தைத் தவிர்க்க வனப்பகுதி வழியாகப் பயணிக்கும்போது எங்கும் நிறுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், பந்திப்பூர் புலிகள் சரணாலயம் போன்றவற்றை ஊடுருவிய சாலைகள் வழியாகப் பயணித்தபோது அந்தக் கட்டுப்பாட்டைப் பொருட்படுத்தாமல் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த கனரகவாகனங்களைப் பார்க்கமுடிந்தது.

இதுபோன்ற காரணங்கள் மட்டுமல்லாமல் மேலும் சில காரணங்களாலும் காட்டுத்தீ ஏற்படுகின்றது. அல்லது ஏற்படுத்துகிறார்கள். இயற்கையாகவே மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அதிலும் குறிப்பாக சத்தியமங்கலம், கோவை, ஆனைமலைக் காடுகளில் சந்தன மரங்கள் விளைகின்றன. அதேபகுதிகளில் சீமார்  புற்களும் வளர்கின்றன. அவற்றை எடுக்கச்செல்லும் மக்கள் கோடைக்காலங்களில் அதன் சருகுகளை எரித்துவிட்டு வருவார்கள். மீண்டும் மழைக்காலங்களில் அந்தப் புற்கள் மீண்டும் தளைந்து வளரும்போது அதை எடுத்துக்கொள்வார்கள். அவர்களைப் போலவே சந்தன மரங்களைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்களும் இந்தச் சீமார்  புற்கள் வெட்டும் கூட்டம் போலச் சென்று காட்டுக்குள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திவிடுகிறார்கள். கடத்திய பிறகு மரங்கள் வெட்டப்பட்ட அடையாளங்கள் இருந்தால் அப்பகுதியில் கண்காணிப்பு அதிகமாகிவிடும். மேலும் மரங்களைக் கடத்தமுடியாது. அதனால், சீமார்  புற்களைப் பற்றவைப்பதுபோல் மரம் வெட்டிய காட்டையும் சேர்த்துக் கொளுத்திவிடுவார்கள். மற்ற மரங்களோடு வெட்டிய மரத்தின் அடிமரக்கட்டைகளும் சேர்ந்து எரிந்துவிடுவதால் அங்கு மரக்கடத்தல் நடந்ததற்கான தடயங்களே இல்லாமல் போகின்றன. இந்த மாதிரியான சம்பவம்தான் டாப்ஸ்லிப்பிலும் நடந்துள்ளது.

இதுகுறித்துக் கோவையைச் சேர்ந்த காட்டுயிர் செயற்பாட்டாளர் மேக்  மோகன் என்பவரிடம் பேசினோம், "சீமார் புற்கள் தேடிக் காட்டுக்குள் அதிகமானோர் செல்வது இதுமாதிரியான சம்பவங்களுக்கு வித்திடுகிறது. அந்தப் புற்கள் பழங்குடிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுகிறது. அதைச் சேகரித்து சீமார்கள் தயாரித்து ஊருக்குள் விற்பார்கள். அதில் இப்போது பலரும் ஈடுபடுகிறார்கள். பழங்குடிகளைத் தவிர யாரும் காட்டுக்குள் சீமார்  புற்கள் பிடுங்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கவேண்டும்" என்றார்.

அதேபோல் தமிழகக் காடுகளில் சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடுபவர்களும், விலங்கு உறுப்புகளைக் கடத்துபவர்களும் காட்டுத்தீயைப் பற்றவைக்கின்றனர். மான்கள் இனப்பெருக்கத்துக்கான சமயங்களில், பெண் மானோடு இணைசேரப் போட்டியிடும் ஆண் மான்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளும். முழுமையாக வளர்ந்த கொம்புகளால் மோதிக்கொள்ளும்போது ஏதாவதொரு மானின் கொம்பு உடைந்துவிழும். கொம்புடைந்த மானைத் தோற்றுவிட்டதாகக் கருதி வென்ற மானைப் பெண் மான் தேர்வுசெய்து அதோடு இணைசேரும். அதுமட்டுமின்றி, மான் கொம்புகள் முழுமையாக வளர்ந்தபிறகு அதன் அடிப்பகுதியில் புதிய கொம்புக்கான குருத்து முளைவிடத் தொடங்கும். குருத்து முளைவிடும்போது அரிப்பு ஏற்படுவதால் மான்கள் பாறைகளில் தேய்த்துக் கொள்ளும்போதும் கொம்புகள் தானாகக் கீழே விழுந்து புதிய கொம்புகள் முளைக்கும். இப்படியாகக் கீழே விழும் கொம்புகளை யானை, புலி போன்றவற்றின் நடமாட்டங்கள் இருக்கும் காட்டில் சுமார் ஒரு அடிக்கும் குறையாத, அதற்கும் அதிகமான உயரம்கொண்ட செடிகளையும் புல்வெளிகளையும் கொண்ட நிலப்பரப்பில் நிதானமாகத் தேடிக் கொண்டிருப்பது இயலாத காரியம்.

அதனால், மான்களின் வாழிடங்களில் சிலவற்றைத் தேர்வுசெய்து அதை வட்டமாகப் பற்றவைத்து விடுவார்கள். காடு முழுமையாக எரிந்து முடிந்தவுடன், அந்தப் பகுதிகளுக்குச் சென்றுபார்த்தால் அனைத்துத் தாவரங்களும் சாம்பலாகி விடுவதால் எளிமையாகக் கொம்புகளைப் பொறுக்கிக் கொள்ளலாம். மான் கொம்புகள் முழுக்க முழுக்கச் சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. எவ்வளவுதான் நெருப்பிலிட்டுச் சுட்டாலும் அவை பாதிக்கப்படாது. அத்தகைய மான் கொம்புகளைத் திருடிச்செல்லவும் விலங்குக் கடத்தல்காரர்களால் காட்டுத்தீ ஏற்படுத்தப்படுகின்றது. இதைப்போன்ற காட்டுத்தீ சம்பவங்கள் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அதிகமாக உள்ளன. உதாரணத்திற்குக் கோடைக்காலங்களில் பழனி மலைத்தொடரில் மட்டுமே நான்கே நாட்களில் 14 முதல் 17 வரையிலான காட்டுத்தீ சம்பவங்களைப் பார்க்கமுடிகிறது.

கருமந்தி, சோலை மந்தி, சிங்கவால் குரங்கு போன்ற குரங்கு வகைள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழும் பறக்கும் அணில் போன்ற உயிரினங்களின் மாமிசங்கள், ரத்தம் போன்றவை மருத்துவ குணம் நிறைந்தது என்று நம்பி அதைச் சாப்பிடவும் தனிக்கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு இந்த உயிரினங்களின் மாமிசங்களை விற்கும் கும்பல்களும் இதுமாதிரியான காட்டுத்தீயை ஏற்படுத்தி அவற்றைக் கொன்று சடலங்களைச் சேகரித்துக் கொள்கிறார்கள்.

திருவண்ணாமலைப் பகுதியில் ஃபயர் வாட்சர் (Fire Watcher) என்ற பெயரில் தீயணைப்புத் துறையோடு இணைந்து காட்டுத்தீ அணைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் திரு.அருணிடம் பேசினோம். "காட்டுத்தீ இயற்கையின் ஆற்றல்மிக்க ஒரு சக்தி. அவற்றால் நீர்நிலைகளைக் கடந்தும் பரவமுடியும். தனக்கான பாதையை அமைத்துக்கொண்டு, காற்றின் திசையில் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது. காட்டுத்தீ பரவுவதற்கு மூன்று விஷயங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. அவை நெருப்புக்கான தூண்டுதல், ஆக்ஸிஜன் மற்றும் எரிபொருள். இந்த மூன்றையும்தான் நெருப்பு முக்கோணம் என்று வனத்துறையைச் சேர்ந்தவர்கள் சொல்வார்கள். இந்த மூன்றும் எங்கு அதிகமாகக் கிடைக்கிறதோ அந்தத் திசை நோக்கியே தீ பயணிக்கும். இதில் ஏதாவதொன்று அதற்குக் கிடைக்காமல் தடுப்பதே காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தப் போதுமானது. கோடைக்காலங்களில் காட்டுத்தீ பொதுவான ஒன்றுதான். திருவண்ணாமலைப் பகுதி அதிகமாக வறண்டக் காடுகள் என்பதால் இங்கு அதிகமாக நடைபெறுகின்றன. இது வாழ்வியல் தொடர்பான முக்கியப் பிரச்னை . உடலில் எரிகிற நெருப்பை அணைக்கமுடியாமல் துடித்துக்கொண்டிருந்த முள்ளம்பன்றிகள் இன்னமும் கண்களிலேயே நிற்கின்றன. நிலத்தில் கூடமைத்து முட்டையிட்டு அடைகாக்கும் பாம்புகள் அப்படியே எரிந்துபோயுள்ளன. பெரும்பாலான உயிரினங்கள் தப்பித்துவிடுகின்றன.

ஆனால், சிற்றுயிர்கள் அதிகச் சேதங்களைச் சந்திக்கின்றன. இதனால் பெரிய மரங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. முழுமையாக எரிந்தாலும் மீண்டும் கிளைவிட்டுவிடும். ஆனால், ஐந்து அடிக்கும் குறைவான உயரத்திலுள்ள சின்னச் சின்னத் தாவரங்கள் முற்றிலுமாக அழிந்துவிடுகின்றன. இயற்கையாக உருவாகும் காட்டுத்தீ பட்டுப்போன காடுகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கு உதவுகின்றன. ஆனால் மனிதத் தலையீடுகளால் உருவாகும் காட்டுத்தீ அதன் வளத்தையே குறைக்குமளவிலான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. நாங்கள் இதுவரை சுமார் 80 காட்டுத்தீ சம்பவங்களில் போராடியுள்ளோம். அதில் நான்கு வருடங்களுக்குமுன் அடியண்ணாமலை என்ற பகுதியில் இடி தாக்கியதால் நடந்த ஒன்று மட்டுமே இயற்கையாக உருவான காட்டுத்தீ சம்பவம். இது ஒரு முக்கியப் பிரச்னை. அதைக் கட்டுப்படுத்த வனத்துறைக்கு உதவியாகச் செயல்படுவதும்  அவர்களோடு இணைந்து மக்கள் மத்தியில் போதுமான விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறோம்" என்றார்.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும், அதை உருவாக்கும் இத்தகைய சட்டவிரோதக் குற்றங்களைத் தடுக்கவும் வனப்பாதுகாப்புச் சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதை நடைமுறைப்படுத்தப் போதுமான தீத்தடுப்புக் காவலர்களோ, வேட்டைத் தடுப்புக் காவலர்களோ இல்லையென்பதுதான் நிதர்சனம். வனத்துறையிலிருக்கும் காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமலே இருப்பதும் இந்தக் குற்றங்களைத் தடுக்கமுடியாமல் இருப்பதுதான் வனத்துறை திணறுவதற்கு முக்கியக்காரணம். பல பீட்களாகப் ( Beat) பிரிக்கப்பட்டிருக்கும் வனச்சரகத்தில் ஒரு பீட்டுக்குக் அதிகபட்சம் மூன்றிலிருந்து ஐந்து காவலர்களே இருக்கின்றனர். சில சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுக்குப் பரந்திருக்கும்  ஒரு பீட்டை வெறும் நான்கைந்து காவலர்களே முழுமையாகக் கண்காணிப்பது இயலாத காரியம். 17,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தமிழகக் காடுகளைக் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க 1274 வனப் பணியாளர்கள், 2361 வனக் காவலர்கள், 1580 வனக் கண்காணிப்பாளர்களே இருக்கிறார்கள்.

நாட்டுக்குள் இருப்பதைப் போலவே காட்டின் நில அமைப்பும் இருப்பதில்லை. பத்துபேர் செய்யவேண்டிய வேலையை அதில் பாதிப்பேர் மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பீட்டுக்குக் குறைந்தது 20 வனக்காவலர்களாவது இருந்தால்தான் வேட்டைக் கண்காணிப்பிலிருந்து காட்டுத்தீ கட்டுப்படுத்துதல் வரை விரைவாகச் செயல்பட முடியும். ஒரு சில காவலர்களையே வைத்து மொத்தக் காட்டையும் கண்காணிப்பதென்பது சாத்தியமில்லாதது. இதுபோன்ற வனக்காவலர்கள் பற்றாக்குறையே குரங்கணி விபத்தின்போது விரைவாகச் செயல்பட முடியாமல் போனதற்கும் காரணம். அதே நிலை இன்னமும் நீடிக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் தீத்தடுப்புக் காவலர்களோ, தீயணைப்புப் படையோ காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளுக்கு வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தப் போதுமான முயற்சிகளை எடுப்பதில்லை. அதுவாகவே அணையும்வரைக் காத்திருந்துவிட்டுச் சென்றுவிடுகிறார்களென்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது.  அதேபோல் பணியிலிருக்கும் சிலர் நெருப்பை அணைக்கத் தெரியாமல் சில சமயங்களில் தீவிரப்படுத்தியும் உள்ளனர். வேட்டைத்தடுப்புக் காவலர்களாகப் பணிபுரிபவர்களும் வனத்துக்குள் காட்டுத்தீ ஏற்பட்டுவிட்டால் அதை அறிவித்துவிட்டு உதவிக்கு ஆள்வரும்வரைக் காத்திருக்கும்போது வரத் தாமதம் ஆவதால் அவர்களே பணியிலிறங்கி முயல்கின்றனர். இதனால் பல சமயங்களில் உயிர்ச்சேதங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

காட்டுத்தீயால் ஏற்படும் வனச்சேதங்கள் குறித்துப் புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர். குமரகுருவிடம் பேசினோம், "காட்டுயிர்களைப் பொறுத்தவரை இந்த மாதிரியான சமயங்களில் விரைவாகத் தப்பித்துவிடும். காற்றின் வேகத்தோடு இணைந்து நெருப்பும் மிக வேகமாகப் பயணிக்கும். அந்த வேகத்தில் குட்டிகளாலும், சிற்றுயிர்களாலும் தப்பிக்கமுடியாது. அதனால் அவைதாம் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. உயிரினங்களைப் பொறுத்தவரை 80% தப்பித்துவிடும், 20% அழிந்துவிடும். தாவரங்களைப் பொறுத்தவரை 20% தப்பித்துவிடும், 80% முற்றிலுமாக அழிந்துவிடும். தீ விபத்தின்போது 20 மீட்டருக்கும்  மேல் உயரம்கொண்ட மரங்கள் முழுமையாக எரிவதில்லை. அவற்றின் இலைகளும், கிளைகளும் எரியுமே தவிர மையத் தண்டு அப்படியேதான் நிற்கும். அதனால், அந்த மரங்கள் மீண்டும் செழித்துவிடும். அதிகமாகப் பாதிப்பதும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாவதும் புல்வெளிகளே. ஆழமான வேர்களைக் கொண்ட தாவரங்களைப் பொறுத்தவரை அவற்றின் மேற்பரப்பு மட்டுமே முற்றிலுமாக எரியும், அடிவேர்களில் அதன் சத்துகள் அப்படியே இருக்கும். அதனால் அவை மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால், யானைப் புற்களெல்லாம் 6 அடிவரை வளரக்கூடியது. அவை அடிப்பகுதிவரை முழுமையாக எரிந்துவிட்டால் மீண்டும் வளர்ந்துவர நீண்டநாட்கள் பிடிக்கும்.

எரிந்து சாம்பலாகும் தாவரங்கள் பொட்டாசியம் சத்து நிறைந்ததாக இருக்கும். தமிழகக் காடுகளைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய காட்டுத்தீ ஏற்பட்டாலும் செடி, கொடிகள், புற்கள், மரங்கள் போன்றவற்றின் உயிர்ச்சத்து மண்ணுக்கடியில் அதன் வேர்களில் பாதுகாப்பாகத் தானிருக்கும். நெருப்பால் மேற்பரப்பு பாதிக்கப்படுமேயொழிய மண்ணின் அமைப்பை அதற்கடியில் பரந்திருக்கும் வேர்கள் இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கும். அது மண்வளத்தை மீண்டும் மேம்படுத்திக் காட்டை மறுபடியும் உயிர்ப்பித்துவிடும். நம் வனப்பகுதிகளில் இருக்கும் தாவர வளங்களைப் பொறுத்தவரை காட்டுத்தீ முழுமையாக எரிந்து அணைந்தபிறகு மீண்டும் வளர்வதற்கு ஒரு மழை பெய்தாலே போதும். அதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம், அதற்கான நேரத்தைத் தந்து அந்தக் காட்டைத் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டியது மட்டுமே."

2017-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 907 தீ விபத்துகள் நடந்துள்ளன. அதில் 4425 ஏக்கர் காடுகள் அழிந்துள்ளன. இருப்பதிலேயே அதிகமான காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டது வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில்தான். வேலூரில் மட்டுமே 235 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 1,024.75 ஏக்கர் காடுகள் அழிந்துள்ளன. இதுதொடர்பாக வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரி கௌஷல் என்பவரைத் தொடர்புகொண்ட போது, "வேலூர் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு 111 தீ விபத்துகளே நடந்துள்ளன. அதில் 482.375 ஏக்கர் வனப்பகுதி அழிந்துள்ளது. தற்செயலாக நிகழும் விபத்துகளைத் தடுப்பதற்காகவும், கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் நெருப்பு லைன்கள் ( Fire Lines) அமைத்துவிடுவோம். அதாவது, சாலையோரங்களில் 3 முதல் 5 மீட்டர் வரையுள்ள செடி கொடிகளை நாங்களே நெருப்பு வைத்து எரித்துவிடுவோம். அதனால், சாலையோரங்களில் எந்தத் தாவரங்களும் தீ பற்றும் வகையிலிருக்காது. இதனால் ஒருவேளை யாராவது சமையல், புகைபிடித்துப்  போடுதல் செய்தாலும் அந்த நெருப்பு காட்டைப் பாதிக்காது. அதுமட்டுமில்லாமல் மக்களையும் காட்டைப் பாதுகாப்பதில் பங்களிக்க வைக்க முயல்கிறோம். அதோடு சிறிய அளவிலான வனப் பொருட்களையும் மக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறோம். இதன்மூலம் அவர்களே அதில் ஈடுபடும்போது அதன் மீதான  அக்கறையும் அவர்களுக்குச் சற்று அதிகமாகும்" என்றவரிடம் இதுவரை எத்தனைப்  பேர் குற்றச் சம்பவங்களால் நிகழும் தீ விபத்துகளுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கேட்டபோது, "இந்த ஆண்டில் அதிகபட்சம் 3 அல்லது 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பார்கள். மனிதத் தலையீடுகளால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவோம். ஆனால், வனத்துக்கு அருகிலேயே அதிகமான மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானதில்லை" என்றார். அதிகமான தீ விபத்துகள் ஏற்படும் பகுதியில் வெறும் நான்கைந்து பேரே அதற்காகக் கைது செய்யப்படுகிறார்கள் என்பதும் வனத்துறையின் செயற்பாடுமீது பல சந்தேகங்களை எழுப்புகிறது. ஆள் பற்றாக்குறையும், இருப்பவர்களும் போதிய திறனோடு செயல்படுபவர்களாக இல்லாததுமே இதற்கு மிக முக்கியக் காரணங்களாக அப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது.

குரங்கணி விபத்தைப்போல் மனிதர்களுக்குச் சேதங்கள் விளைந்தாலொழிய காட்டுத்தீ குறித்த விவரங்கள் மக்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துவதில்லை. நம்மைவிடவும் அதிக முக்கியத்துவம் கொண்ட, சூழலுக்குப் பல நன்மைகளைச் செய்யும் உயிரினங்களும் தாவரங்களும் நம் செயல்களால் தொடர்ச்சியாகப் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய மனிதத் தலையீடுகளாலும், மனிதக் குற்றங்களாலும் நிகழும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி மத்திய வனத்துறை தேசிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுக் கொள்கை மாதிரியை வடிவமைத்தது. அதை அனைத்து மாநில வனத்துறைகளுக்கும் அனுப்பி கருத்துகளைக் கேட்டதோடு அதை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரவும் கூறியது பசுமைத் தீர்ப்பாயம். அதுகுறித்து தமிழ்நாட்டின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் திரு. மல்லேஷப்பாவைச் சந்தித்துப் பேசினோம்.

"தமிழக வனத்துறை அந்தக்  கொள்கையின் மாதிரியை அலசிப்பார்த்துச் சில ஷரத்துகளை நடைமுறையில் அமலாக்குவதில் ஈடுபட்டுள்ளோம். அதன்மூலம் நடைமுறைச் சிக்கல்களையும், சாத்தியங்களையும் ஆலோசித்துக்  கூடிய விரைவில் அதை மத்திய அரசுக்கு மறுபரீசிலனைக்கு அனுப்புவோம். அங்கிருந்து ஒப்புதல் வந்தவுடன் விரைவில் அந்தக் கொள்கை அமலுக்குக் கொண்டுவரப்படும். விலங்கு வேட்டை மற்றும் கடத்தல், மரக் கடத்தல் போன்றவற்றைக் கண்காணிக்கப் போதுமான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதற்கான அறிவிப்புகளும் வெளியாகிவிட்டன. நாசா செயற்கைக்கோளின் துணையோடு ஜி.பி.எஸ் மூலமாக எங்காவது காட்டுத்தீ ஏற்பட்டால் அந்தப் பகுதியின் அதிகாரிக்குத் தகவலை உடனடியாகக் குறுஞ்செய்தியாக அனுப்பும் அளவுக்கு நாம் தொழில்நுட்ப முறையில் முன்னேறியுள்ளோம். ஆனால், அதிகாரிகள் காட்டுக்குள் ஆய்விலிருந்தால் அங்கு நெட்வொர்க் கிடைப்பதில்லை. வெளியில் வந்தபிறகே குறுஞ்செய்தி அவர்களைச் சென்றடைகிறது. அதே சமயம் சில சம்பவங்கள் மிக உயரமான பகுதிகளில் ஏற்படும்போது அந்த இடத்தை அடையவே 6 மணிநேரங்கள்வரை ஆகின்றது. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும் அதைச் செய்தவர்களைப் பிடிப்பதிலும் இதுபோன்ற சில நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன. இருந்தும் இயன்றவரைத்  தமிழக வனத்துறை மற்ற மாநிலங்களைவிடச் சிறப்பாகச் செயல்பட முயன்று வருகிறது" என்றார்.

ஃபீனிக்ஸ் என்னும் கிரேக்கப் புராணப் பறவை, தன் சாம்பலில் இருந்தே மீண்டும் பிறந்துவரும் பறவை. தீயிலிட்டு எரித்தாலும் மறுபிறவியெடுத்து மீண்டுவரும் அதன் இயல்பு இயற்கையில் காட்டுக்குரியது. ஆனால், அந்த இயல்பு இயற்கையான செயற்பாடுகளைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கே உள்ளது. மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தால் புதுப்பிறவியெடுக்கும் திறன்கொண்ட அந்தக் காடுகூடச் சுடுகாடாக மாறிவிடும். பல்லுயிர்ச் சூழலும் இயல்தாவர வளங்களும் நிறைந்த தமிழகக் காடுகள் காடாகவே இருப்பதா? சுடுகாடாக மாறுவதா?