Published:Updated:

செய்யூர் அனல்மின் நிலைய சுற்றுச்சூழல் அனுமதி ரத்து - பசுமைத் தீர்ப்பாயம்!

செய்யூர் அனல்மின் நிலைய சுற்றுச்சூழல் அனுமதி ரத்து - பசுமைத் தீர்ப்பாயம்!
செய்யூர் அனல்மின் நிலைய சுற்றுச்சூழல் அனுமதி ரத்து - பசுமைத் தீர்ப்பாயம்!

செய்யூரில் அனல்மின் நிலையம் அமைக்கவும் அதற்காகக் கரி இறக்குமதி செய்யத் துறைமுகம் கட்டவும் 2014-ம் ஆண்டு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. செய்யூர் பகுதி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு அனல்மின் நிலையம் கட்டுவதும் அதற்கான கரி உற்பத்தி செய்வதும் அந்தப் பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களும் சூழலியலாளர்களும் தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 

நான்காயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அந்த அனல்மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரி 100% இறக்குமதி செய்வதை மாற்றி 100% நிலக்கரியை உள்நாட்டிலிருந்தே பயன்படுத்திக் கொள்ளத் தகுந்தவாறு அனுமதியளிக்க வேண்டுமென்று தமிழகக் கடற்கரையோர மின்சாரக் குழுமம் (CTNPL) கேட்டிருந்தது. இத்தகைய திட்டத்தால் அதிகமான நிலம் மற்றும் நீரைப் பயன்படுத்த வேண்டும். அதோடு கரிமக் கழிவுகளும் அதிகமாகச் சேர்ந்து சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும்.

இந்தத் திட்டத்தை எதிர்த்து பனையூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த சரவணன், மாரிமுத்து ஆகியோர் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக அனல்மின் நிலையத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு, புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மற்றும் பொது வாக்கெடுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மீண்டும் முடிவெடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கு இன்று பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

உள்நாட்டிலேயே இதற்கான நிலக்கரி உற்பத்தி செய்ய முன்வைக்கப்பட்ட இந்தப் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால் அதற்கு மேலும் 700 ஏக்கர் நிலம் தேவைப்படும். அதோடு இறக்குமதியாகும் கரியைவிட உள்நாட்டுக் கரியின் ஆற்றல் குறைவு. ஆனால், இதனால் சேரும் கரிமக் கழிவுகள் மிக அதிகம். இந்தத் திட்டத்தால் செய்யூர் பகுதியின் நிலம், நீர் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இதை ரத்துசெய்ய வேண்டுமென்று மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த வாதங்களைக் கேட்ட பசுமைத் தீர்ப்பாயம் இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கும்முன் அதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டையும் அதில் செய்யவேண்டிய மாற்றங்களையும் முழுமையாக மறுஆய்வு செய்யுமாறு சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. இதனால் செய்யூர் அனல்மின் நிலையம் சுற்றுச்சூழல் அனுமதிபெற தமிழகக் கடற்கரையோர மின்சாரக் குழுமம் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.